கோமேதகக் கோட்டை | 19 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 கோமேதகக் கோட்டை | 19 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

ந்திரப்பாய் பூதக்காட்டைக் கடந்து வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்தது. ”சூர்ப்பனகா..! நாம் இவ்வளவு வேகமாக வந்து விட்டோம்..! குதிரையில் வந்து கொண்டிருந்த நம் வீரர்களின் நிலை என்னவென்று உன் மந்திரசக்தியால் உணர்ந்து சொல்..!” என்று வித்யாதரன் கேட்டான்.

மந்திரக் கோலை புருவ மத்தியில் நிறுத்தி கண்களை மூடி மந்திரங்களை உச்சாடனம் செய்து தியானித்த சூர்ப்பனகா மெல்ல கண் திறந்தாள்.

”வித்யாதரா..! நம் வீரர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். காட்டுக்குள்ளே ஓர் அரக்கனால் நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள்..!” என்றாள்.

”அவர்களை எப்படி மீட்பது..? மீண்டும் நாம் அங்கே போய் மீட்டுவர நேரம் ஆகுமே..?” வித்யாதரன் கேட்க…

சூர்ப்பனகா புன்னகைத்தாள். “நாக பாசத்தை உடைக்க வல்லது மயூர மந்திரம்..! பாம்புக்கு எதிரி மயில்கள்தான்..! கருடனும் கூட என்றாலும் மயூர மந்திரம் மிகவும் சிறப்பாக வேலை செய்யும். நான் இங்கிருந்தே மயூர மந்திரத்தைப் பிரயோகம் செய்கின்றேன்! அவர்கள் கட்டிலிருந்து விடுபடுவார்கள்..!” என்றாள்.

“சூர்ப்பனகா.! அருமையான யோசனை..! உன் உதவியை எப்போதும் மறக்க மாட்டேன்..! உடனே மந்திரம் சொல்லி அவர்களை விடுவித்து விடு..!”

மந்திரப்பாயை கீழிறக்கி, ஓரிடத்தில் அமர்ந்த சூர்ப்பனகா மயூர மந்திரம் பிரயோகம் செய்ய ஆரம்பித்தாள்.

சத்திரத்தில் இருந்த குதிரைப்படைத் தலைவனும் வீரர்களும் பொழுது விடிந்தும் விழித்தெழ முடியாமல் அப்படியே படுத்துக் கிடந்தனர். அவர்களை நாகபாசம் சுற்றி வளைத்து இருந்தமையால் அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை..! ஏதோ சதியில் சிக்கிவிட்டோம் என்று மட்டும் உணர்ந்தார்கள். அப்படி அவர்கள் அங்கே சிக்கியிருக்கும் வேளையில் திடீர் என்று ஒரு மயில் அங்கே பறந்து வந்து அமர்ந்தது பின்னர் தோகை விரித்து ஆடத் துவங்கியது. அது ஆட ஆட கட்டுண்டு கிடந்த வீரர்களிடம் அசைவு தெரிந்தது.

வீரர்களை கட்டி வைத்திருந்த நாகம் மயிலைக் கண்டு பயந்து விலகி ஓட ஆரம்பித்தது. இதனால் அதன் கட்டுத் தளர்ந்து அதன் உடலில் இருந்து பாம்புகள் பிரிந்து வெளியேற ஆரம்பித்தது. வெளியேறிய நாகங்களை மயில் கொத்தி துரத்த ஆரம்பித்தது. இந்தப் போராட்டம் சுமார் ஒரு நாழிகை நேரம் நடந்தது. இப்போது நாகங்கள் முழுவதும் விலகியிருக்க, மயிலின் ஆட்டம் நின்றது. அது பறந்தும் சென்றது.

குதிரைப்படைத் தலைவனும் மற்றவர்களும் சடுதியில் எழுந்து குதிரைகளில் ஏறினார்கள். “நல்லவேளை..! மயிலாக வந்து நம்மை முருகப்பெருமான் காப்பாற்றினார்..! அவருக்கு நன்றி..! வாருங்கள் புறப்படுவோம்..! வித்யாதரர் நம்மைத் தேடுவார்.” என்ற தலைவன் புரவியை விரட்டினான்.

சூர்ப்பனகா மந்திர உச்சாடனத்தை நிறுத்தினாள். ”வித்யாதரா, மயூர மந்திரம் வீரர்களை விடுவித்துவிட்டது. இப்போது அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். நம்மைச் சூழ்ந்த ஆபத்துகள் விலகிவிட்டது. இனி கோமேதகக் கோட்டைக்கு சென்று ராட்சதனை வெல்ல வேண்டிய ஒன்று மட்டும் தான் பாக்கி இருக்கிறது. நாம் கீழைக் கடல் எல்லைக்கு சென்று வீரர்கள் வரும் வரை காத்திருப்போம்!” என்றாள்.

மீண்டும் மூவரும் மந்திரப்பாயில் ஏறி கீழைக் கடல் எல்லைக்குச் சென்றனர். கீழைக்கடல் ஆக்ரோஷமாகப் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அதன் அலைகள் கரைகளில் மோதி மணலை அரித்து எடுத்துச் சென்று கொண்டிருந்தது. அங்கே மந்திரப்பாயில் சென்று இறங்கினர் மூவரும்.

வித்யாதரன் பாயைச் சுருட்டி இடுப்பில் செருகிக் கொண்டான். சித்திரக்குள்ளனை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். ”சூர்ப்பனகா நாம் கடற்கரையில் சிறிது ஓய்வெடுப்போம்..! வீரர்களும் ரணதீரனும் வரட்டும்..!” என்றான்.

அன்றையப் பொழுது கழிந்தது. கடற்கரை மணலில் துண்டு விரித்து படுத்துக் கிடந்தான் வித்யாதரன். இரவுப்பொழுதில் குதிரைப்படைகள் வந்து சேர்ந்தன.

வித்யாதரன் அவர்களை வரவேற்றான். “குதிரைகளை இந்த ஊரில் ஏதாவது லாயம் இருப்பின், அங்கு சென்று கட்டி வையுங்கள்..! நீங்கள் மட்டும் தயாராக இருங்கள். ரணதீரன் நாவாயுடன் வரும் சமயம் அதில் ஏறி அவர்களுடன் பயணித்து கோமேதகக் கோட்டைக்கு வந்து சேருங்கள்.” என்றான்.

ன்றைய விடியல் பொழுதில் ரணதீரன் நாவாய் ஒன்றில் சில வீரர்களுடன் வந்து சேர்ந்தான். கரையில் இருந்த வீரர்களுக்கும் வித்யாதரனுக்கும் தீப்பந்தம் அசைத்து தகவல் சொன்னான்.

வித்யாதரன் தன்னிடம் இருந்த வீரர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தான். ”வீரர்களே..! நாம் ஒரு முக்கியப் பணியில் ஈடுபட உள்ளோம்..! நம் நாட்டு இளவரசியை மீட்கும் உயரிய பணி அது. நம் கடமையும் கூட இதில் நாம் எந்த சோதனைக்கும் உள்ளாகலாம்..! உயிரையும் கூட இழக்க வேண்டியிருக்கும். அதனால் பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும். ரணதீரன் சில வீரர்களோடு நாவாயில் வந்துள்ளார். இங்குள்ள நூறு வீரர்களில் முதலில் ஐம்பது வீரர்கள் மட்டும் கடலில் குதித்து நீந்தி அந்த நாவாய்க்கு சென்றுவிடுங்கள். மீதமுள்ள ஐம்பது வீரர்கள் இங்குள்ள பரதவர்களுடன் இணைந்து மீன் பிடிப்பவர்கள் போல கட்டு மரங்களில் கடலுக்குள் செல்லுங்கள். கோமேதகக் கோட்டை அருகில் செல்லாமல் தூரத்தே சென்று கண்காணியுங்கள். நானும் சித்திரக்குள்ளனும் சூர்ப்பனகாவும் மந்திரப்பாயில் பறந்து வருகிறோம்..! நாவாயில் உங்களைச் சந்திக்கிறேன்..!” என்றான்.

அப்போது குதிரைப்படைத் தலைவன் கேட்டான். ”வித்யாதரரே! உங்களுக்குத்தான் கூடுவிட்டு கூடுபாயும் கலை தெரியும். உடன் மந்திரசக்தி வாய்ந்த சூர்ப்பனகாவும் இருக்கின்றார். மந்திரப்பாயில் பறந்து உள்ளே சென்று இளவரசியை தூக்கி வந்துவிடலாமே..! எதற்கு இத்தனை முஸ்தீபுகள்..?”

இதைக்கேட்டு வித்யாதரன் நகைத்தான். ”மந்திரப்பாயின் மூலம் பறந்து கோட்டைக்குள் நுழைந்துவிட முடியும் தான். ஆனால் கோட்டையில் எத்தனை அரக்கர்கள் இருக்கிறார்கள்..? நான் தனி ஒருவனாக அத்தனை பேரையும் சமாளிக்க முடியுமா..?”

”அந்த ராட்சதன் ஒருவனே நம் வீரர்கள் அனைவரையும் முழுங்கி விடுவான்! எனவேதான் அவனைப் போக்குக் காட்டி அவன் ஏமாறும் சமயம் பார்த்துத் தாக்கி அழிக்க வேண்டும். கோமேதக கோட்டையில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்க வேண்டும். கோட்டையின் நுழை வாயில் எப்போது திறக்கிறது என்று பார்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்னொரு வேலையும் உங்களுக்கு இருக்கிறது அதைப் பிறகு சொல்கிறேன். இப்போது நீ ஐம்பது வீரர்களுடன் ரணதீரன் கொண்டுவந்த நாவாய்க்குச் செல்!” என்றான்.

“உத்தரவு..!” என்று பணிந்த குதிரைப்படைத் தலைவன் தன்னுடன் 50 வீரர்களை அழைத்துக் கொண்டு கடலில் குதித்து நீந்த ஆரம்பித்தான்.

நாவாயில் நின்று கொண்டிருந்த ரணதீரன் வீரர்கள் கடலில் குதித்து நீந்தி வருவதைப் பார்த்தான். நாவாயை நகராமல் அப்படியே நிறுத்தும் படி கட்டளையிட்டான். வீரர்கள் ஒவ்வொருவராக நீந்தி நாவாயில் ஏறி தம் உடைகளை பிழிந்து காய வைத்தனர். நாவாயில் இருந்து கொஞ்சம் புதிய ஆடைகளைக் கொடுத்து அவர்களை அணிந்து கொள்ளச் சொன்னான் ரணதீரன்.

குதிரைப்படைத் தலைவன், ரணதீரனை வணங்கி, “ரணதீரரே..! எங்களை நாவாயில் உங்களுடன் பயணித்து கோமேதகக் கோட்டையைக் கண்காணிக்கச் சொல்லி வித்யாதரன் உத்தரவிட்டுள்ளார். நாம் பொழுது முழுவதும் விடிவதற்குள் கோமேதகக் கோட்டை அருகே சென்று கண்காணிப்பைத் தொடங்குவோம்..!” என்றான்.

ரணதீரன் குதிரைப்படைத்தலைவனை கையமர்த்தினான். “வீரரே, உங்கள் நாமம் என்னவென்று அறிந்து கொள்ளலாமா..? அப்படியே உங்கள் படையில் உள்ள அத்தனை பேரையும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.” என்றான்.

”ஐயா..! என் பெயர் இளம்பாரி..!” என்றான் குதிரைப் படைத்தலைவன்.

”அப்படியே உன் வீரர்களை அழைத்து அறிமுகம் செய்து வை.” இளம்பாரி தன் வீரர்கள் அனைவரையும் அழைத்து ரணதீரனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

”உங்கள் ஒவ்வொருவரையும் நான் ஒவ்வொரு சமயமும் வீரனே என்று அழைக்க முடியாது! அப்படிப் பொதுவில் அழைத்தால் யாரை அழைக்கிறேன் என்ற சந்தேகமும் உங்களுக்கு ஏற்படும். அதனால்தான் பெயர்களைக் கேட்டேன். ஆனால் எல்லோர் பெயரும் என் நினைவில் பதிய சில நாட்கள் ஆகலாம். ஆகவே நான் கை காட்டி அழைக்கும் சமயம் உங்கள் பெயரைச்சொல்லிக் கொண்டு என் முன் வந்து நிற்கவேண்டும். இப்போது விடியல் பொழுது! ராட்சதர்களின் பலம் விடியலில் குறைவாகவே இருக்கும். விடிந்து சூரியன் உதித்துவிட்டால் அவர்கள் வெளியேவர மாட்டார்கள். அதே சமயம் இருட்டுகின்ற சமயத்தில் வெளிப்பட்டு மக்களை துன்புறுத்துவார்கள்.”

”இங்கேயிருந்து இன்னும் 50 கடல் மைல் தொலைவில் கடலுக்கு நடுவே கோமேதகக் கோட்டை அமைந்துள்ளது. நாம் இப்போது புறப்பட்டு அந்த இடத்தை இன்னும் மூன்று நாழிகைப் பொழுதில் அடைந்து விடலாம். ஆனால் கோமேதகக் கோட்டையைச் சுற்றி இரண்டு கடல் மைல் அளவுக்கு நாம் நெருங்க முடியாது. அப்படி நெருங்கினால் அவர்கள் நம்மை பிடித்துவிடுவார்கள்.”

”அப்படியானால்! நாம் அவர்களை எப்படி கண்காணிப்பது?”

”உங்களில் யார் யாருக்கு ஆழ்கடல் நீச்சல் தெரியும்?”

சில வீரர்கள் முன் வந்து நின்றனர்.

”நாம் கோமேதக கோட்டைக்கு 5 கடல் மைல் தொலைவில் நம் நாவாயை நிறுத்திவிட்டு மீன் பிடிப்பது போல பாவனை செய்து கொண்டிருப்போம். மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பரதவர்களை ராட்சதன் ஏதும் செய்வதில்லை! சில சமயம் அவர்கள் பிடித்த மீன்களை உணவுக்குப் பிடுங்கிச் செல்வதைத் தவிர அவர்களைப் பெரிதாக துன்புறுத்துவது இல்லை. எனவே நாம் மீன்பிடிப் படகுப் போல அங்கே பாவனை செய்து கொண்டு இருப்போம். அந்தச் சமயம் ஆழ்கடல் நீச்சல் தெரிந்த வீர்ர்கள் சிலர் கடலில் குதித்து ஆழ்கடல் வழியாகவே கோட்டையை நெருங்க வேண்டும். கோட்டையைக் காவல் காக்கும் வீரர்கள் கண்ணில் மண்ணைத்தூவி இளவரசியை அடைத்து வைத்திருக்கும் இடத்தை அறிய வேண்டும்.”

”நல்ல யோசனை..! அப்படியே செய்வோம்.!”

ரணதீரன் கட்டளையிட, நாவாய் கோமேதகக் கோட்டை நோக்கிப் பயணப்படத் துவங்கியது.

நாவாய் பயணப்பட்ட விடியல் பொழுதுக்கு முந்தைய இரவில் ராட்சதன் வில்லவபுரத்திற்குத் தன் கூட்டத்தினர் சிலரோடு சென்றான்.

அன்று ராட்சதன் வரும் தினம் என்பதால் அவனுக்கான உணவுப் பண்டங்களை ஒரு மைதானத்தில் குவித்து வைத்து இருந்தனர். ராட்சதன் அந்த உணவுப்பண்டங்களை சிறிதும் லட்சியம் செய்யாமல் அங்கே இருந்த ஒரு வீரனை அழைத்தான்.

“அடேய்..! போய் உங்கள் மன்னனை அழைத்து வா.. அவனுடன் நான் பேச வேண்டும்..!” என்றான்.

“மன்னர் இப்பொழுது உறங்கிக் கொண்டிருப்பார். அவரை எழுப்ப முடியாது..!” என்று அந்த வீரன் பதில் சொல்லியதும் அவனை அப்படியே கையில் பிடித்துத் தூக்கி தன் முகத்தருகே நிறுத்தி, “அடேய், நான் யார் என்று தெரியாமல் விளையாடாதே..! உன்னை அப்படியே விழுங்கி விடுவேன். உன் நாடும் மக்களும் துன்பப் படுகையில் மன்னருக்கு உறக்கம் தேவைப்படுகிறதா..? விஜயேந்திரன் தூங்கி இருக்க மாட்டான். அவன் மகள் என் கோட்டையில் அல்லவா இருக்கிறாள்..? அதை நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பான். போ..! போய் கூட்டி வா..!” என்றான்.

அந்த வீரன் ஒரே ஓட்டமாய் ஓடி அரண்மணைக்குச் சென்று விஷயத்தைச் சொன்னதும் விஜயேந்திரன் பதட்டப்பட்டுக் கொண்டு ராட்சதன் இருக்குமிடத்திற்கு ஓடியே வந்தார்.

”ராட்சதனே..! உனக்குத்தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு உணவுப் பண்டங்களை அனுப்புகிறேனே..! இன்னும் என்ன வேண்டும்..?”

விஜயேந்திரன் கேட்கவும், ”உன் மகள் தான் வேண்டும். அவளை நான் மண்ந்து கொள்ள வேண்டும். இந்த உலகை ஆள வேண்டும்..!” என்றான் ராட்சதன்.

“என்னது..?”

”உன் மகளை முழு மனதோடு எனக்குத் திருமணம் செய்து கொடு..! உன் நாட்டுப் பக்கம் இனி தலைவைத்துப் படுக்க மாட்டேன்..! உன் நாடும் மக்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..! அதற்கு விலையாக உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடு..!”

ராட்சதனின் வார்த்தைகள் மன்னரின் காதுகளில் நெருப்பைக் காய்ச்சிக் கொட்டியது போல விழுந்தது. காதுகளைப் பொத்திக் கொண்டார்.

அவர் புஜங்கள் துடித்தது! கண்கள் சிவந்தது. “அடேய் ராட்சதா… உன் ஆசைக்கு ஓர் எல்லை இல்லையா..? என் குமாரி சிறு பிராயத்தினள். அவளைப் போய் உன்னைப் போன்ற ஒரு மாமிச மலைக்குத் திருமணம் செய்து கொடுக்க நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்..!” உறுதியாகச் சொன்னார் மன்னர்.

ராட்சதன் கண்களில் கனல் பறந்தது.

”நீ திருமணம் செய்து கொடுக்காவிட்டால் இனி உன் மகளை மறந்து விட வேண்டியதுதான்..! அவளை பாதாளச் சிறையில் அடைத்து வைத்துள்ளேன்..! யாராலும் அவளைக் காப்பாற்ற முடியாது..!” ராட்சதன் கர்ஜித்தான்.

“நீ தான் இப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்..! உன்னை வெல்ல ஒருவன் பிறந்து விட்டான்..! இந்த நேரம் அவன் கோமேதகக் கோட்டையை நெருங்கியிருப்பான்..! உன் மரணமும் நெருங்கிவிட்டது. முடிந்தால் உன்னைக் காத்துக் கொள்..! என்றார் மன்னர் விஜயேந்திரன்.

–கோட்டை வளரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *