சிவகங்கையின் வீரமங்கை | 21 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 21 | ஜெயஸ்ரீ அனந்த்

வேலு நாச்சியாரின் கூரான கத்தி அவ்விளம் பெண்ணின் ஹிருதயத்தை ஆழமாகப் பதம் பார்த்தது. “வீல்…” என்ற அலறலுடன் அவள் தரையில் வீழ்ந்து மடிந்தாள். க்ஷணநேரத் தாக்குதலைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் “ஹோ…” என்று தன்னையறியாமல் அலறியும் விட்டனர்.

அவளுடன் வந்தவர்கள் இத்தகைய நிகழ்வைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் பயத்தில் மேடையை விட்டு மெதுவாக வெளியேறினர்.

“வேலு, நீ என்ன காரியம் செய்தாய்? நம்மால் காரியசித்தி பெற வந்தவர்களை நீ இவ்வாறு செய்வது முறையன்று. உனது செயல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.” சக்கரவர்த்தி சசிவர்ண தேவர் கவலைக் கொண்டு கர்ஜனை செய்கையில் சற்றே அவரை இடைமறித்த இளவரசர், “தந்தையே, கலக்கம் வேண்டாம். இப்பெண்ணுக்கு நாச்சியார் பரிசளித்த சன்மானம் பாராட்டுக்குரியதுதான். நான் இதை செயல்படுத்த எண்ணியிருந்த நேரத்தில் நாச்சியார் முந்திக் கொண்டது எனக்கு பெருமையளிக்கிறது ” என்றார் இளவரசர் முத்துவடுகநாதர்.

“என்ன சொல்கிறாய் மைந்தனே? புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக கூறு”

“வந்தவர்கள் துரோகிகள் தங்களின் உயிரை எடுப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள்…” என்றதும் கூட்டத்திலிருந்தவர்கள் “ஐய்யகோ….” என்று பயத்தில் தங்களுக்குள்ளாகவே சொல்லிக் கொண்டனர்.

“என்ன..? இப்பெண் துரோகியா..? அழகிய நடனத்தை அரங்கேற்றிய இந்த மங்கை நயவஞ்சகியா?” என்றார் சக்கரவர்த்தி.

“ஆம்… தந்தையே… இவள் நாகக்கன்னி.” என்ற இளவரசரின் பதில், ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்த மக்களுக்கு இச்சொல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

“இவள் நாகக்கன்னிகையாம்.” என்று ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளாகச் சொல்லிக் கொண்டனர்.

“நாகக்கன்னி என்றால்..?” தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டனர்.

“குழந்தை பிறந்தது முதல் துளித்துளியாக அதன் உடம்பில் நஞ்சைச் செலுத்தி முற்றிலும் விஷம் கொண்ட கொடிய சர்ப்பத்தைப் போல் வளர்க்கப்படுபவள் தான் இந்த நாகக்கன்னி அத்தகைய பெண்ணை எதிரியை அழிக்க கையாளுவதும் ஒருவகை ராஜதந்திரம். இத்தகைய நாகக்கன்னிகைகளின் நகக்கீறல்களோ எச்சிலோ பட்டால் எதிராளி மடிவது நிச்சயம்.” என்றான் நாகக்கன்னியை பற்றி தெரிந்தவன் ஒருவன்.

“அடேங்கப்பா… இத்தகைய ராஜ்ஜியத்தில் தான் எத்தகைய ராஜதந்திரம்?.. நல்ல வேளை, நம் சக்ரவர்த்திக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை. சரியான நேரத்தில் நம் இளவரசி அவரைக் காப்பாற்றி விட்டார். ம்கூம்…” என்ற நிம்மதிப் பெருமூச்சுக்கள் நிறைந்த ஒலிகள் ஆங்காங்கே கேட்டது.

அச்சமயம் நாகக்கன்னிகையுடன் வந்த குழுவினர் தப்பி ஓட முயலுகையில், சில மனிதர்கள் அவர்களை துரத்திச் சென்று பிடித்து வீரர்களின் வசம் ஒப்படைத்தனர். அந்தத் துரோகிகளில் தலையாய ஒருவனை இளவரசர் முத்துவடுகநாதர் முன் நிறுத்தினர் வீரர்கள்.

அவனைக் கண்டதும், கண்களில் சினம் தெரிக்க, எதிரே நின்றவனிடம் சிம்மக் குரலில் கர்ஜித்தார்.

“சொல்… யார் உங்களை இவ்விடம் இப்பாதகச் செயலைச் செய்ய அனுப்பியது?.”

பிடிபட்டவன பதில் ஏதும் கூறாமல் சிலையாக நின்றிருந்தான்.

அது இளவரசருக்கு மேலும் சின்னத்தை உண்டு பண்ணியது.

“வீரர்களே, இத்துரோகிகளை கழுவினில் ஏற்றிக் கசையடி தாருங்கள். இவர்கள் உண்மையைக் கூறும் வரை கசையடியை நிறுத்தாதீர்கள்” என்றார் அனல் கக்கும் விழியுடன் இளவரசர்.

இளவரசரின் உத்தரவின்படி துரோகிகள் கழுவினில் ஏற்றப்பட்டு, வீரர்கள் அவர்களுக்கு உறு கொண்ட கசையினால் பளீர் … பளீர் என்று கசையடி தந்தனர்.

கசையடியின் வலி தாங்காது கோழைகள் இரண்டு அடிக்கே உண்மையை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர்.

“இளவரசே… எங்களை மன்னித்து விடுங்கள். எங்களை நவாப் தான் இங்கு அனுப்பி சக்கரவர்த்தியின் உயிரைப் பறிக்கச் சொன்னது.” என்றவுடன் கூட்டத்தினர் சிலர் கற்களை அத்துரோகிகள் மீது வீசத் தொடங்கினர்.

“சற்றுப் பொறுங்கள்” என்று கையசைத்த இளவரசர், உடனடியாக நீதிக் கல் வரவழைக்கப்பட்டு அதில் அமர்ந்து துரோகிகளுக்குத் தீர்ப்பை வழங்கினார்.

“மரியாதைக்குரிய மகா ஜனங்களே… இத்தகைய துரோகிகளுக்கு என்ன தண்டனை தரலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார்.

சிலர் , அவர்கள் உயிர் போகும் வரை கசையடி என்றும், துரோகிகளின் தலையை யானையால் இடறச் செய்ய வேண்டும் என்றும், அஞ்ஞாத வாசம் என்றும் பலவிதக் குரல்கள் எழுப்பட்டன. ஆனால் எவர் ஒருவரும் அவர்களை மன்னிக்கும் படி கோரவில்லை.

இதிலிருந்து அரசர் சசிவர்ண தேவர் மீது மக்கள் அளவு கடந்த அன்பை செலுத்தி வந்ததை அங்கிருந்த மற்ற சிற்றரசர்களும் தெரிந்து கொண்டனர்.

மக்களின் விருப்பப்படி துரோகிகளைச் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டதும் வீரர்கள் அவர்களை இழுத்துக் கொண்டு சென்றனர்.

“இளவரசி… தக்க நேரத்தில் சக்கரவர்த்தியைக் காப்பற்றினீர்கள். தங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனாவேன். எவ்வாறு அவள் நாகக்கன்னிகை என்பதைத் தெரிந்து கொண்டீர்கள்?” என்றார் இளவரசர்.

“அவள் கால் விரல்களைக் கொண்டு தான். இதோ பாருங்கள் அவளின் இரு காலிலும் கட்டை விரலுக்கு அடுத்த விரல் இல்லை. கவனித்தீர்களா?” என்றாள்.

“ஆம். நல்ல காரியம் செய்தீர்கள். “

“இளவரசி வேலுநாச்சியார் வாழ்க.. வாழ்க… ” என்று இளவரசர் முத்துவடுகநாதர் ஒலி எழுப்பவும், கூடியிருந்த அனைவரும் எழுப்பிய “வாழ்க வாழ்க..” என்ற கோஷம் விண்னை முட்டியது.

இவற்றிற்கு ஈடு தரும் வகையில் வெற்றிவேல், வீரவேல் என்ற கோஷமும் எழுந்தது.

இத்தகை நிகழ்வு மக்களிடையேயும், விருந்தினரிடையேயும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்து வந்த கூத்து கும்மி, தெம்மாங்கு இசை போன்ற கோலாகலத்தில் நடந்தவற்றை மறந்திருந்தனர்.

கொடுங்குன்றநாதர் முன்னிலையில் இளவரசர் முத்துவடுகநாதருக்கும் இளவரசி வேலுநாச்சியாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.

–தொடரும்…

ganesh

1 Comment

  • ஒவ்வொரு பகுதியும் சுவாரசிய நிகழ்வுகளை உள்ளடக்கி வாசிப்பின் ரசனையில் ஈர்த்து வைக்கிறது
    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...