விபூதியை அழித்த ஸ்டாலின், வானமுட்டி பெருமாளை வழிபட்ட துர்கா ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலில் வீதியில் வந்தபோது அவர் நெற்றியில் அர்ச்சகர்கள் இடப்பட்ட விபூதியைத் துடைத்தார் என்கிற சர்ச்சை எழுந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. அதற்கும் அவர் பதில் சொல்ல வில்லை.

தேர்தலுக்காக முருகன் கை வேலை சிலர் வழங்கியபோது தாங்கிப் பிடித்தார். ‘தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பெருபான்மையினர் இந்துக்கள்’ என்று அறிக்கைவிட்டார். தன் மனைவி துர்கா கோயில் கோயிலாகச் சென்று ஆண்டவனைத் தரிசித்து வருவதையும் தடுப்பதில்லை. இதிலிருந்து அவர் ஆன்மிகத்துக்கு எதிரானவராகத் தெரியவில்லை. கடும் நாத்திகவாதியாகவும் தெரிவில்லை. ஆனால் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் மிகப்பெரிய பக்தர். ஸ்டாலின், தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவர் கோயில் கோயிலாகச் சென்று  புகழ்பெற்ற ஆலயங்களின் தெய்வங்களை வணங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் தன் வீட்டிலேயே குட்டி கோயில் வைத்து வழிபட்டு வருகிறார்.

தி.மு.க. தலைவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் இருந்தவரை துர்கா ஸ்டாலின் இந்த மாதிரி ஆலய வழிபாட்டை இந்தளவுக்குப் பெரிய அளவில் செய்ததில்லை. தற்போது ஸ்டாலின் நேரடியாக முதல்வரான பிறகு தன் குடும்ப பெண்களுடன் அடிக்கடி ஆலயங்களுக்குச் சென்று சைவ-வைணவ கோயில்கள் என்றில்லாமல் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வருகிறார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதற்கான பயணத் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செய்து தருகிறார். அப்படி சமீபத்தில் பயணப்பட்ட ஒரு பிரசித்திப் பெற்ற கோயில்தான் வானமுட்டி பெருமாள் கோயில்.

மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தில் உள்ளது வானமுட்டி பெருமாள்  என்கிற சீனிவாசப் பெருமாள் கோவில். இந்தக் கோயிலுக்குத்தான் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வந்திருந்து சிறப்பு வழிபாடு செய்தார்.

இக்கோவிலில் பெருமாள் ஒரே அத்தி மரத்தில், திருக்கோயில் பெயருக்கேற்றார் போல 16 அடி உயரத்தில், 6 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான தோற்றத்தில் சங்கு, சக்கர கதா அபயஹஸ்தத்துடன், பிப்புல மகரிஷிக்குக் காட்சி தந்தவண் ணம், நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

இங்கு வந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம், சர்வ வியாதிகள் நிவர்த்தியாகிவிடும் என்பது ஐதீகம். கோடி பாவங்களையும் விமோசனமாக்கும் ‘கோடிகத்தி பாவ விமோசனபுரம்’ என்ற கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோயிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (6-9-2022) மாலை நடைபெற்ற மூன்றாம் கால யாகசாலை பூஜையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவில் நிர்வாகத்தினர் பூர்ண கும்பம் கொடுத்து அவரை வரவேற்றனர். அவரு டன் தொழிலதிபர் விஜயகுமார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

கோயிலின் சிறப்பு

அத்தி மரத்தினால் சிலை செய்யப்பட்டு, இயற்கை மூலிகைகள் மூலம் வர்ணம் தீட்டப்பட்டுள்ள பெருமாள் 1000 ஆண்டுகளைக் கடந்தவர்.

இந்த வானமுட்டி பெருமாள் திருக்கோயிலில் கிபி 7ம் நூற்றாண்டு, 10ம் நூற் றாண்டு ஆகியவற்றில் கிரந்த மொழியில் எழுதப்பட்ட 3 கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. 3ம் குலோத்துங்க சோழன் இந்தக் கோயிலுக்கு மானியங்கள், திருக்கோயில் பணிகள் செய்ததாகக் கல்வெட்டு மூலம் வரலாறு அறியப்படு கின்றது.

இந்தத் திருக்கோயிலில் உள்ள அனுமன் சிலையின் உடலைத் தட்டினால், ஏழு சுர சப்தங்கள் கேட்கிறது. ஆஞ்சநேயரின் உடலின் பல்வேறு இடங்களில் தட்ட, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சப்தம் கேட்கின்றது.

இந்தத் திருக்கோயிலில் வழிபட்டால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயி லின் அத்தி வரதர், திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள், நரசிம்மர் ஆகிய மூவரையும் ஒரு சேர வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

கோயில் அமைவிடம்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சோழன்பேட்டை கிராமத்திற்கு அருகில், காவிரிக்கரை அருகே ஆலயம் அமைந்துள்ளது. மயிலாடு துறையிலிருந்து வானாதிராஜபுரத்திற்குச் செல்லும் மினி பேருந்துகள் கோயில் வழியாகச் செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!