தலம்தோறும் தலைவன் | 17 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 17 | ஜி.ஏ.பிரபா

17. தீர்த்தனகிரி ஸ்ரீ சிவக்கொழுந்தீஸ்வரர்

ஊசலாட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இருவினை அறுத்து என்னை

ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளியாக்கி

பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெருங்கருணையால்

ஆசை தீர்த்து அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே

திருவாசகம்

ம் வாழ்க்கைப் பாதை எங்கே செல்கிறது?

நீண்டு செல்லும் அப்பாதையில் எங்கே போகிறோம் என்று தெரியாமல்தான் பயணம் நடக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என்று தெரியாது.

ஆனால் எல்லையற்ற ஒரு பெரும் சக்தி தன் பரம கருணையால் நம் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. வழி காட்டுகிறது. இறைவன் துணை நிற்பான் என்ற நம்பிக்கையே வழி காட்டும் விளக்காக இருக்கிறது. நேரில் காண முடியாத அந்தக் கருணையை நாம் உணரத்தான் முடியும்.

இறை சக்தியை நாம் உணரத்தான் முடியும். நீரில் மூழ்கியவன் காற்றுக்குத் திணறுவதைப் போல் அவன் அருளுக்கு ஏங்க வேண்டும். வருவான் என்ற நம்பிக்கையுடன், பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அந்த மழை நம் மேல் எப்போது வேண்டுமானாலும் பொழியலாம். கையேந்திக் காத்திருக்க வேண்டும்.

ஞானம் என்னும் அறிவு இலாத நாம் மூலப் பொருளைக் காண இயலாது. ஆனால் ஈசனை நினைத்தால் பேரானந்தப் பெருவெள்ளத்தை நமக்குக் காட்டியருளுவான். இதனையே மாணிக்கவாசகர்

இருகை யானையை ஒத்து இருந்தது என் உளம்

கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே

வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு

ஒருவனே சிற்றிலேன் சிறப்பான் உண்ணவே

என்கிறார்.

நீ என்னைத் தேடி அலைய வேண்டாம், நானே உன்னைத் தேடி வருகிறேன் என்கிறார் பரம்பொருள். அதனால்தான் தன்னை அழைக்கும் பக்தர்கள் இருப்பிடம் தேடி ஓடி வந்து குடி கொள்கிறான் ஈசன். அழைத்ததும் ஓடி வரும் அருள் வெள்ளம் அல்லவா அப்பன்.?

வ்வகையில் தீர்த்தன கிரியில் விவசாயம், கலைகள் செழிக்க சிவக் கொழுந்தீஸ்வரராக சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார் ஈசன். தன் பக்தர்களின் குறை தீர்க்க வந்த ஈசன் தீர்த்தனகிரி ஈசன்.

முன்பு இப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு சிவபக்தரும் அவர் மனைவியும் தினமும் சிவனடியாருக்கு உணவு அளித்த பின்பே தான் உணவு எடுத்துக் கொள்ளும் நெறியைப் பின்பற்றி வந்தனர். விவசாயத் தம்பதிகளான அவர்கள் ஆழ்ந்த சிவ பக்தி கொண்டவர்கள்.

ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு எந்தச் சிவனடியார்களும் வரவில்லை. உணவு அளிக்க வழியில்லாத நிலையில் தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உணவு அளிக்கலாம் என்று சென்றார்கள். அங்கும் எந்தப் பணியாளர்களும் இல்லை. என்ன செய்வது என்று திகைத்து நின்ற போது ஒரு முதியவர் அங்கு வந்தார். அவரிடம் உணவை ஏற்கச் சொல்லிக் கேட்ட போது “உழைக்காமல் எதையும் ஏற்க மாட்டேன்” என்கிறார் முதியவர். எனவே தங்கள் தோட்டத்தை உழும்படிக் கூறினார் விவசாயி.

சரி என்று முதியவர் உழுவதற்காக நிலத்தில் இறங்கினார். வீட்டிற்குச் சென்று உணவை எடுத்துக் கொண்டு விவசாயி திரும்பும் பொது, தினைப் பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. ஆச்சர்யமடைந்த விவசாயி இது எப்படிச் சாத்தியம்? என்று வியப்புடன் முதியவருக்கு கொன்றை மரத்தின் அடியில் உணவு பரிமாறினான்.

சாப்பிட்டு முடிந்ததும் அங்கு முதியவர் மறைந்து சிவன் காட்சி அளித்தார். பரவசத்தில் மூழ்கிய விவசாயி தனக்கென்று எதுவும் கேட்கவில்லை. அங்குள்ள மக்களுக்காகக் கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈசன் சுயம்புவாக எழுந்தருளினார்.

இவர் மீது ஒவ்வொரு பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நேரடியாக விழுகிறது. இங்கு வந்து விவசாயிகள் இவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் விவசாயம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்கிறது. தினைப்பயிராய் விளையச் செய்ததால் இவ்வூருக்கு திருத்திணை என்று பெயர். ஈசன் பணியாளராக வந்து சேவை செய்ததால் இவ்வூர் ஈசனை வணங்கினால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. உணவுக்குப் பஞ்சம் இராது.

சிவன் நீர் இறைத்து உழுத தலம். இங்கு ஐயன் சுயம்புவாக சதுரவடிவ பீடத்துடன் காட்சி தருகிறார். ஈசன் பயன்படுத்திய ஏர், நீர் இறைத்த கலம் இப்போதும் இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறார். விவசாயி உணவு பரிமாறியபோது ஈசன் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து உணவு உண்டதால் இந்தக் கோலம் என்று புராணம் கூறுகிறது.

இங்கு நடராஜர் ஆனந்த தாண்டவக் கோலத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். திருமால், பிரம்மாவின் இசைக்கு ஏற்ப நடனமாடும் அற்புதக் காட்சி இங்கு மட்டுமே காண இயலும். பிரம்மா மத்தளம் வாசிக்க, திருமால் தன் சங்கை வாயில் வைத்து ஊதும் அபூர்வ தோற்றம் காண வேண்டிய ஒன்று. எனவேதான் கலைகளில் சிறப்படைய விரும்புகிறவர்கள் இத்தலத்து ஈசனை வணகுவது சிறப்பு பலன் என்கிறார்கள்.

ன்னை ஒப்பிலாநாயகி தனிச் சன்னதியில் கருணை வழியும் கண்களுடன், அன்பின் ரூபமாகக் காட்சி அளிக்கிறாள். அம்பிகையை கருந்தடங்கண்ணி, நீலதாம்பிகை என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். ஈசனைப் போலவே இவளுக்கும் மூன்று கண்கள் இருக்கிறது. அன்னையைப் பற்றி சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் ஒன்று தீர்த்தனகிரி.

கடலூர் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. தலவிருட்சமாகக் கொன்றையும், ஜம்புவ தடாகம் தீர்த்தமாகவும் உள்ளது. முன்வினையின் காரணமாக ஜம்பு -கரடி- வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் சிவக்கொழுந்தீஸ்வரரை வணங்கி இங்குள்ள தடாகத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதால் இத்தடாகத்திற்கு சம்பவ தீர்த்தம் என்று பெயர்.

எல்லாச் சிவன் கோவில்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே இருப்பார். மனிதர்களின் பாவக் கணக்கை எழுதும் இவர் இங்கு தன் மனைவியுடன் சேர்ந்து அருள் பாலிக்கிறார்.

தேவர்கள், ஞானிகள், பல வருடங்கள் தவம் செய்தும் கிட்டாத ஈசனின் காட்சி பக்தி நிரம்பிய ஒரு சாதாரண விவசாயிக்குக் கிட்டியது. இதையே சுந்தரர்,

நீறுதாங்கிய திருநுதலானை நெற்றிக் கண்ணனை

நிறைவளை மடந்தை கூறுதாங்கிய கொள்கையினானைக்

குற்றம் இல்லியைக் கற்றை அம் சடை மேல் ஆறு தாங்கிய அழகனை

அமரர்க்கு அறிய ஜோதியை வரிவராய் உள்ளும் சேறு தாங்கிய

திருத்திணை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனமே”

என்கிறார் தன் பதிகத்தில்.

மூன்று நிலை ராஜகோபுரம் பழமையைச் பறை சாற்றுகிறது. அதன் முன் பிரதோஷ நந்தி காட்சி அளிக்கிறார். அவரின் முன்னே முப்பத்தி ஐந்து துவாரங்கள் கொண்ட சாளரம் வசீகரிக்கிறது. வைகாசியில் பதிமூன்று நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒன்றலா உயிர்வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்தரு மாநிதி

இயற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும்

பொய்யெனவே நினை உளமே குன்றுலாவிய புய்முடையானைக்

கூத்தனைக் குலாவிக் குவலயத்தோர் சென்றெலாம் பயில

திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனமே”

என்கிறார் சுந்தரர் தன் பதிகத்தில்.

உலக வாழ்க்கை எனும் மாயையின் கையில் சிக்கி, அழியும் பொருள்களின் மீது ஆசை வைத்து ஓடுகிறோம். நம் வாழ்க்கை நிலையானது என்று செல்வம், சொத்துகள் சேர்க்கிறோம். ஆனால் இதுவெல்லாம் பொய் என்று நினைப்பதில்லை.

ஈசனின் பாதங்களை நினைத்து, அவனிடம் ஒடுங்க நினைப்பது மட்டுமே உண்மையான, அழிவற்ற செல்வம் என்று நினைப்பதில்லை. காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா,மாயனார் குயவன் செய்த மண்பாண்ட ஓடடா என்ற பாடல் படி, நம் உடல் வெறும் மண்பானை. இதற்குள் ஜீவக்காரகராக ஈசனே நிரம்பி இருக்கிறார். உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் கூறுவது போல், வெறும் உடலை வளர்த்து, இதற்கு ஆடை, அணிகலன்கள் அணிவித்து அழகு பார்க்கிறோம். ஆனால் உள்ளிருக்கும் உயிரை அழகு படுத்துவது ஈசனின் நாமங்கள்.

ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரமே இந்த உயிர் வாழ்க்கையை அழகு படுத்துகிறது. அதை உணர்ந்து கொள். அழியும் பொருள்கள் மீது ஆசை கொள்ளாதே. திருத்துணை நாதனை சென்று சேர் மனமே என்கிறார் சுந்தரர்.

சிவக்கொழுந்தீஸ்வரர் வாழும் இவ்வாழ்க்கையையும் அழகு செய்வார். வாழ்தலுக்கு அவசியமான உயிரையும் நல்ல எண்ணங்கள், சிந்தனைகளால் அழகு செய்து தன்னை அங்கு நிலை நிறுத்திக் கொள்வார்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...