தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலஷ்மி
திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலஷ்மி. இவரது தந்தை கணக்கப்பிள்ளையாக (கர்ணம்) பணியாற்றி யவர். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ராஜலஷ்மி, தன் கேட்கும் பாடல்களை அப்படியே திரும்பப் பாடுவார். நாடகங்களைப் பார்த்து விட்டால், அதில் நடித்தவர்களைப் போலவே இவரும் நடித்தும் காட்டுவார். அத்தனை அபாரமான கேள்வி ஞானம் வாய்க்கப் பெற்றிருந்தார் ராஜலஷ்மி. ஏழு வயதில் இவருக்கு பால்ய விவாகம் (குழந்தைத் திருமணம்) நடைபெற்றது. கணவர் பெயர் முத்துமணி. புரிதல் இல்லாத வயதில் நடந்த அந்த திருமணம் வெற்றிகரமாக தொடரவில்லை. ஒரு வருடத்தில் அது முறிந்தும் போனது.
இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தந்தை மரணமடைய, தாயார் மீனாட்சி அம்மாளுடன் திருச்சி மலைக்கோட்டைக்கு குடிபெயர்ந்தது ராஜலஷ்மியின் குடும்பம். ஒரு வெகுஜன பொழுதுபோக்கு சாதனமாக நாடகக் கலை மிளிர்ந்த அக்காலத்தில், நாடகக் குழுக்கள் ஒரு குருகுலம் போல செயல்பட்டன. எல்லோரும் ஒரே இடத்தில் தங்கி, ஊர் ஊராகப் போய் நாடகங்கள் நடத்து வார்கள். சிறுவர்களான நடிகர்களுக்கு தாய் தந்தை எல்லாம் அந்த கம்பெனி நாடக வாத்தியார்கள்தான். கலை மீதான இயல்பான ஆர்வமும், குடும்ப வறுமையும் ராஜலஷ்மியை நாடகம் நோக்கிப் பயணப்பட வைத்தது.
அப்பொழுது சி.எஸ்.சாமண்ணா என்பவர் சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத் திருந்தார். அப்பொழுது பிரபலமாக விளங்கிய அவரது நாடகக் கம்பெனியில் சேர்ந்தார் ராஜலஷ்மி. அவர் அக்குழுவில் சேர்ந்த கதை சுவாரஸ்யமானது.
பெண்கள் பொதுவெளியில் வரத்தயங்கிய அக்காலத்தில், நாடகத்தில் பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆளில்லாததால், நாடகங்களில் ஆண்களே பெண் வேஷம் போட்டு நடிப்பதுதான் வழக்கமாக இருந்தது.
தன் நாடகக் குழுவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்து, தன் முன்னே நின்று கொண்டிருந்த ராஜலஷ்மியை கம்பெனியில் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாத சாமண்ணா, அவரை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். அப்பொழுதுதான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. நாடக ஒத்திகை முடிந்து மாடியில் இருந்து இறங்கிவந்துகொண்டிருந்த நாடகப் பேராசிரியர் ஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள், “துணிச்சலாக நாடகங்களில் நடிக்கிறேன் என்று வந்திருக்கும் இந்தப் பெண்ணை நாம் ஆதரிக்கவேண்டும் இந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் கம்பெனிக்கு இவளால் நல்ல பெயர் கிடைக் கும்” என்றார். அசரீரி போன்ற அந்த வார்த்தைக்கு மறுபேச்சின்றி சாமண்ணா தம் குழுவில் ஒருவராக ராஜலஷ்மியை சேர்த்துக்கொண்டார்.
“அன்று சுவாமிகள் ஆசி கூறி எனக்கு இடமளித்ததால்தான் புகழ்பெற்றதுடன்; உண்ண உணவுக்கும் உடுக்க உடைக்கும் இருக்க இடத்துக்கும் குறைவில் லாமலிருக்கிறேன்” என்று பின்னாளில் ஒரு சினிமா பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்தார் ராஜலஷ்மி. நாடக கம்பெனியில் ராஜலஷ்மிக்கு கொடுக்கப்பட்ட முதல் வேடம் ‘பவளக்கொடி’ நாடகத்தில் புலந்திரன் வேடம். மாதச் சம்பளம் ரூ. 50 அந்தக் காலத்தில் இது பெரும்தொகை. சில வருடங் களில் அந்தக் குழுவை விட்டு விலகி கே. எஸ்.செல்லப்பா கம்பெனியில் ரூ.75 சம்பளத்தில் சேர்ந்து நடித்தார்.
தொடர்ந்து கே.பி.மொய்தீன் நாடகக் குழு, தசாவதாரம் கன்னையா நாடகக் குழு என்று ராஜலஷ்மியின் நாடகப் பயணம் தொடர்ந்தது. கே. எஸ்.செல் லப்பா, கே.பி.மொய்தீன் சாகிப், தசாவதாரம் புகழ் கண்ணையா போன்ற நாடக ஜாம்பவான்களின் கம்பெனிகளில் ஏராளமான நாடகங்களில் கதாநாயகன், கதாநாயகி இரட்டை வேடம் என பல கதாபாத்திரங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார் ராஜலஷ்மி.
கன்னையா நாயுடுவின் நாடகக் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் பிரபல நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா. ராமாயண நாடகத்தில் கிட்டப்பாதான் ராமர். ராஜலஷ்மி சீதை. அதாவது நாடகத்தின் கதாநாயகி. அதன்பின் ‘ஸ்பெஷல்’ நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய ராஜலஷ்மி, சென்னையில் நடத்தப்பட்ட ‘பவளக்கொடி’ நாடகத்தில் எம்.கே.தியாகராஜபாகவதருடன் ஜோடி சேர்ந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
நாடகக் கலையின் அடுத்த பரிணாமமாக, 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் ஊமைப்படங்கள் திரையிடப்பட்டன.
ஊமைப்படத்தில் நடிக்க விருப்பம் கொண்ட ராஜலஷ்மிக்கு, அவரது நாடக பிரபல்யத்தால் அப்படி ஒரு வாய்ப்பும் எளிதாக கிடைத்தது. 1929ஆம் ஆண்டு கோவலன் அல்லது The Fatal Anklet என்ற பெயரில் ஏ.நாராயணன் என்பவர் ஒரு ஊமைப் படம் தயாரித்தார். அதில் 18 வயதான ராஜலஷ்மியை மாதவி யாக நடிக்க வைத்தார். ராஜலஷ்மியின் சினிமா சகாப்தம் தொடங்கியது இந்த திரைப்படத்திலிருந்துதான்.
இதனையடுத்து புகழ்பெற்ற இயக்குநர் ராஜா சாண்டோவின் அசோசியேடெட் பிலிம் கம்பெனியில் சேர்ந்தார். சாண்டோ தயாரித்த உஷா சுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய மௌனப்படங்களில் டி.பி. ராஜலஷ்மி நடித்து புகழ்பெறத் தொடங்கினார். ஊமைப்படங்களின் காலம் முடிந்து, பம்பாயில் பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’வை தயாரித்தவர் அர்தேசிர் இராணி. இவர் பிராந்திய மொழிகளிலும் படம் எடுக்க விரும்பினார். அந்த வரிசையில் இவர் தயாரிக்கவிருந்த தமிழ் படத்தில் பேசி நடிக்க ஒரு தமிழ் நடிகை தேவைப்பட்டார். நடிகையைத் தேடிய ஆர்தேஷிர் இராணி டி.பி.ராஜலஷ்மியை தனது ‘காளிதாஸ்’ படத்தில் நடிக்க வைத்தார்.
1931ஆம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ ராஜலஷ்மி கதாநாயகியாக நடித்து வெளியானது. படத்தின் ஒரு பாடலைக் கொடுத்து பாடச் சொன்னார்கள். தியாகபிரம்மம் வாழ்ந்த திருவையாறு மண்ணில் பிறந்தவர் ஆயிற்றே. பாடி அசத்தினார். நன்றாக இருக்கவே இன்னொரு பாடலைக் கொடுத்து ஆடிக்கொண்டே பாட வேண்டுமென் றார்கள். ‘எனக்கு ஆட வராதே’ என்றார் ராஜலஷ்மி. ‘உன்னால் முடியும், திறமை இருக்கிறது. முயன்றால் முடியாததா.?’ என்று ஊக்கம் அளித்தார் படத்தின் டைரக்டர். ‘மன்மத பாணமடா, மாரினில் பாயுதடா’ என்ற அந்தப் பாடல், மதுரை பாஸ்கரதாஸ் சுவாமி எழுதியது.
தம் திறமை மீது நம்பிக்கை கொண்ட ராஜலஷ்மி, ‘ஆடித்தான் பார்ப்போமே…’ என்று தனக்குத் தெரிந்த அளவில் ஆடியிருக்கிறார். அதுவே சிறந்த நடனமாக அமைந்துவிட்டது. ராஜலஷ்மியின் முதல் திரையுலக பிரவேசம் இத்தனை சாகஸங்களுடன் நிகழ்ந்தது.
‘காளிதாஸ்’ படத்தில் இன்னொரு சுவாரஸ்யம் உண்டு. அதில் கதாநாயகி டி.பி. ராஜலஷ்மி தமிழில் பேசுவார்; பாடுவார்; கதாநாயகன் தெலுங்கில் பேசுவார். மற்ற சில நடிகர்கள் இந்தியில் வசனம் பேசுவார்கள். ஆக இப்படி பல மொழிப்படமாக அது அமைந்துவிட்டது. எது எப்படியோ அதுவே தமிழின் முதல் பேசும் படம் என்று திரைப்பட வரலாற்றில் பதிவாகிவிட்டது.
தென்னிந்திய நாடக மேடையில் கீர்த்தி வாய்ந்து சிறந்து விளங்கும் மிஸ் டி.பி.ராஜலஷ்மி முதன்முதலாக சினிமாவில் தோன்றுவதை, நாடக மேடை யில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும். தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பேசும் படம், சில வாரங்கள் இங்கு செல்லும் என்று எளிதில் கூறலாம். காளிதாஸ் படத்தின் கதை இதுதான். தேஜோவதி நாட்டு விஜயவர்மனின் மகள் வித்யாதரி தன் மனதிற்கு பிடித்த கணவனை நினைத்துப் பாடிக் கொண்டிருந்தாள். தகப்பனும், மந்திரியும் கேட்டு அவளருகே சென்றனர். மந்திரி, தன் குமாரனை விவாகம் செய்துகொள்ளும்படி வேண்டினான். ஆனால் அது மறுக்கப்படவே, மந்திரி வேறு ஒருவனைத் தேடிவரக் கிளம்பினான்.
ஒரு நாள் காட்டில் இடையன் ஒருவன் மர நுனிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவதைக் கண்டு, இவனே அவளுக்குத் தகுந்தவன் என்று எண்ணி அவனை வித்யாதரிக்கு மணம் செய்வித்தான். மறுநாள், தான் மோசம் போனதை அறிந்து தன் புருஷனை அழைத்துக் கொண்டு காளிக் கோயிலுக்குச் சென்று வித்யாதரி துதித்தாள். காளி பிரசன்னமாகி அவர்களை ஆசிர்வதித்து, அவனுக்குக் காளிதாஸன் எனப் பெயரையும் அளித்தாள். நாடக மேடையில் இவரது பாட்டுகளில் சிறந்ததாகிய தியாகராய கிருதிகளான “எந்தரா நீதனா”, “சுரராகசுதா” என்ற இரு பாட்டு களையும் ஹரிகாம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் கேட்கலாம். பாடல்களில் வார்த்தைகள் தெளிவாக இருப்பது படத்தின் மேன்மையை அதிகரிக்கிறது. மிஸ் ஜான்ஸி பாயும், மிஸ்டர் ஆர்டியும் செய்த குறத்தி நடனமும் இதில் அடங்கியிருக்கிறது. அவசியம் காணத் தகுந்தது என்று காளிதாஸ் படத்திற்கு ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை விமர்சனம் எழுதியது.
‘காளிதாஸ்’ படம் மற்றொரு விதத்திலும் முக்கியத்துவம் பெற்றது. படத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பாடல்கள் இடம்பெற்றன. “இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை” என்பதாக அப்பாடல் வரிகள் இருந்தது. இன்னொரு தேசியப் பாடல் ‘ராட்டின மாம் காந்தி கை பாணமாம்’ என்பது, காளிதாஸ் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பத்திரிகையாளர்கள் டி.பி. ராஜலக்ஷ்மி வசனம் பேசி, பாடி, ஆடி நடிக்கும் சிறந்த திரைப்படம் என்று புகழ்ந்து எழுதினார்கள்.
இயல்பாகவே கலைத்துறை மட்டுமன்றி தேச உணர்வும் ராஜலட்சுமியிடம் மேலோங்கி நின்றது. அக்காலத்தில் தேசிய பாடல்களை தேசபக்தியுணர்வுடன் ராஜலட்சுமி நாடக மேடைகளில் பாடுவது வழக்கம். தேசபக்தி பாடல்களை நாடக மேடைகளில் பாடியதற்காக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற அனுபவமும் அவருக்கு உண்டு. 1933இல் ‘வள்ளித் திருமணம்’ என்ற பெயரில் பம்பாயில் ஒன்றும் கல்கத்தாவில் ஒன்றுமாக இரண்டு சினிமாப் படங்கள் தயாரிக்கப்பட்டன. கல்கத்தா படத்தில் சி.எம்.துரை என்பவர் முருகன், டி.பி.ராஜலக்ஷ்மி வள்ளி. அந்தப் படத்தில் தினைப்புனம் காக்கும் காட்சியில் ராஜலக்ஷ்மி பாடிய “வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா, விரட்டி அடித்தாலும் வாரீகளா” என்ற பாடல் வரிகள் வெள்ளையர் ஆட்சியை கண்டித்து எழுதப்பட்ட பாடல்.
அது வள்ளித்திருமணம் படத்தில் நாசூக்காக பாடப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கோவை சாமிகண்ணுவின் சென்ட் தயாரித்த படம் வள்ளித் திருமணம். இப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. அதிக வசூலான முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
‘வள்ளித் திருமணம்’ படம் திரைப்படம் வெளியாகிய சூட்டுடன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார் ராஜலட்சுமி. ஆம் அந்தப் படத்தில் நாரதராக நடித்திருந்த டி.வி.சுந்தரம் எம்பாருடன் காதல் வயப்பட்ட அவர் இந்தப் பட வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர், அவரைத் திருமணம் செய்து கொண் டார். 1933ஆம் ஆண்டு தம் சொந்தப்படமான சத்தியவான் சாவித்திரியை வெளியிட்டார். படம் 3 வாரத்துக்கு மேல் ஓடியது. மதுரை ராயல் டாக்கீஸ் காரர்கள் தயாரித்த கோவலன் படத்தில் வி.ஏ.செல்லப்பா கோவலனாகவும் டி.பி.ராஜலஷ்மி-மாதவியாகவும் நடித்தனர்.
1935ல் ‘குலேபகாவலி’ எனும் திரைப்படம் வெளிவந்தது. அப்படத்தில் செல்லப்பாவும், ராஜலஷ்மியும் நடித்தனர். அதே ஆண்டில் ‘லலிதாங்கி’, ‘அரிச்சந்திரா’ ஆகிய இவர் நடித்த படங்கள் வெளிவந்தன. ரசிகர்கள் அவரை ‘சினிமா ராணி’ என்று கொண்டாடினார்கள். முதன்முதலாக தமிழ்நாட்டில் ஒரு சினிமா கலைஞருக்கு என ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது டி.பி.ராஜ லஷ்மிக்குத்தான் என்பது ஆச்சர்யமான தகவல்.
1936ல் இவர் சொந்தமாக எடுத்த ‘மிஸ் கமலா’ எனும் படத்திற்கு கதை, வசனம், பாடல்களை எழுதியதோடு இயக்கவும் செய்தார். கதாநாயகி கமலாவும் அவர்தான். மிஸ் கமலா படத்தில், குறிப்பிடத்தக்க விஷயம், பிரபல நாதஸ்வர வித்வான். டி..என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர வித்வா னாக இதில் நடித்ததுதான். இந்தப் படம்தான் டி..என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்திற்குப் பின்புதான் டி..என்.ராஜ ரத்தினம் பிள்ளை ‘காளமேகம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் 1940ல் வெளிவந்தது.
தம் திரையுலக அனுபவம் குறித்து 1956ம் ஆண்டு பிரபல சினிமா பத்திரிகை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார் ராஜலட்சமி. 1931ஆம் வருஷத்தில் பேசும் படங்களை பரீட்சார்த்தமாகத் தயாரிக்க வேண்டுமென்று பம்பாய் இம்பீரியல் கம்பெனியார் முயற்சி செய்து, அதற்குத் தமிழ் நடிகை தேவை யென்று தேடியபோது, அந்தச் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்தப் படத் தில் நான் என்ன செய்தேன் தெரியுமா? இரண்டு கீர்த்தனைகளையும், இரண்டு தேசிய கீதங்களையும் பாடினேன். குறத்தி டான்ஸ் ஒன்று ஆடினேன். அந்தப் பரீட்சையில் அவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதோடு நானும் வெற்றி பெற்றேன் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அன்றிலிருந்து நான் ஒரு பேசும் சினிமா நடிகையாகிவிட்டேன். இப்படி ஆரம்பமான என் நட்சத்திர வாழ்க்கை தொடர்ந்து ஓய்வில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ‘வள்ளித் திருமணம்’ எனக்கு நல்ல பெயரைச் சம்பாதித்து கொடுக்கவே கல்கத்தாவில் முகாம் போட்டு தொடர்ந்து பத்து படங்களில் நடித்தேன். அனுபவம் எனக்கு அருமையான ஆசானாக அமைந்தது. ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்டால் கூட அவ்வளவு அனுபவம் எனக்கு ஏற்பட் டிருக்காது. அந்தச் சமயத்தில் நான் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தேன். அதுதான் ‘மிஸ் கமலா’. அதன் கதை வசனம் பாடல்கள் டைரக்ஷன் அனைத் தையுமே நான் கவனித்துக் கொண்டேன்.
தொடர்ந்து ‘மதுரை வீரன்’, ‘இந்தியத் தாய்’ ஆகிய படங்களையும் தயாரித் தேன்.
1954ல் பத்திரிக்கை ஒன்றிற்கு டி.பி.ராஜலஷ்மி அளித்த ஒரு பேட்டியில், அந்தக் காலத்தில் 80 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடலாம். தயாரிக்கும் காலம் 45 நாட்கள் போதும் என்று சொல்லியிருக்கிறார். ரூ.10 ஆயிரத்தில் பத்து நடிகர்கள், 2 ஆர்கெஸ்ட்ரா, ஒரு டைரக்டர் தவிர தானும் நடித்திருப்பதாகச் சொல்லும் அவர் தங்களுக்கான மேக்கப் தாங்களே போட்டுக் கொண்டதாகவும், நடிகர்கள் சாப்பாட்டுச் செலவுக்காக 12 அணாவும் (75 பைசா) இடைவெளியில் ஒரு டீ மட்டும் கொடுப்பார்களாம். இது ஹீரோவானாலும் சரி, சிப்பாய் வேடமிடுபவரானாலும் சரி இவ்வளவுதான் என்றும் தெரிவித்துள்ளார். இன்று இவைகளை ஒப்பிட்டால் வியப்புதான் ஏற்படும்.
சினிமா பிரபல்யம்
பணம் என சேர்ந்தாலும் ராஜலஷ்மி தன் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அதைத் தக்கவைக்க விரும்பாதவர். தனக்கென்று சில வரைமுறைகளை அவர் ஆரம்பத்திலேயே வகுத்துக்கொண்டார். ‘நந்தகுமார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதில் கிருஷ்ணனின் தாய் யசோதா வேடம் தரப் பட்டது. யசோதைக்குப் புராண காலத்தையொட்டி ஒரு கச்சை கட்டிக்கொண் டால் போதும். ரவிக்கை தேவையில்லை என்று அப்படத்தின் இயக்குநர் ஏ.வி.எம்.செட்டியார் கூறினார்.
இப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்த நடிகை இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் தமிழ் பதி்ப்பில் ராஜலஷ்மி ரவிக்கைக்குப் பதில் கச்சை அணிய மறுத்துவிட்டார். புராணக் கதையில் கச்சை அணிவதுதான் பொருத்தம். ரவிக்கை அணிந்தால் செயற்கையாக இருக்கும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். தன் முடிவில் மிகவும் உறுதியாக நின்ற ராஜலஷ்மி, தன்னை கட்டாயப்படுத்தினால், படத்தில் தான் நடிக்கத் தயாரில்லை என்று உறுதிபட சொல்லிவிட்டார். முடிவில் ‘நந்தகுமார்’ திரைப்படத்தில் தமிழ் யசோதா ரவிக்கை அணிந்துதான் தோன்றினார்.
ஏற்கனவே ‘மிஸ் கமலா’ படத்திற்கு கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என்று எல்லா துறைகளிலும் கிடைத்த அனுபவத்தின் பயனாக 1939ல் ‘மதுரை வீரன்’ படத்தையும் அவர் உருவாக்கினார். இந்தப் படத்தில் அவரே பாடல்களையும் எழுதினார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அப்படத்தில் வி.ஏ.செல்லப்பாவுடன் இணைந்து பாடிய ‘ஆசை வச்சேன் உந்தன்மேலே’ என்ற பாடலும் ‘கூடினோமே கூட்டு வண்டிக்காளைப்போல’ என்ற பாடலும் அக்காலத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது.
குறிப்பாக கிராமபோன் இசைத்தட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மதுரை, காரைக்குடி ஆகிய இரண்டு நகரங்களிலும் எங்கு திரும்பினாலும் ஒலித்துக்கொண்டு இருந்ததாக அக்கால ரசிகர்கள் கூறுவார்கள். 1936ம் ஆண்டு ராஜலஷ்மி இலங்கையில் நாடகம் நடத்தினார். இவரது நாடகத்தை கண்டுகளித்த இலங்கை ரசிகர்கள் ‘இலங்கை திலகம்’ என்ற பட்டத்தை இவருக்கு அளித்து சிறப்பித்தனர். 1940களில் தமிழ் சினிமா உலகம் புதிய நடிகர், நடிகைகளை உருவாக்கிக்கொண்டு தொழில்நுட்ப விஷயங்களிலும் முன்னேறிக்கொண்டு இருந்தது. காலம் செல்லச் செல்ல பழையன கழிதலும், புதியன புகுதலும் எனும் இயற்கை விதிப்படி பழைய நடிகை நடிகர்கள் ஓய்வு பெறவும், புதியவர்கள் அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து கொள்வதுமான நிலைக்குத் தமிழகத் திரையுலகம் புது வடிவம் பெற்று மாறியிருந்தது. விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொள்ளும் மனப்பான்மை அறவே இல்லாத டி.பி.ராஜலஷ்மிக்குத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ராஜலஷ்மி சொந்த வாழ்க்கையிலும் மாசுமருவற்று வாழ்ந்தவர். பழமையில் நம்பிக்கை உள்ளவர். எனவே இவரது பட வாய்ப்புகள் காலப்போக்கில் குறைய ஆரம்பித்தன.
புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்த ராஜலஷ்மியிடம் தைரியமும், குறிக்கோளும் இருந்தன. அந்த நாட்களிலேயே இவர் குழந்தைத் திருமணத்தையும், சிசுக் கொலையையும் எதிர்த்துப் போராடியுள்ளார். பெண் சிசுக்கொலையை சும்மா பேச்சால் எதிர்த்ததோடல்லாமல், அப்படி கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தானே தத்து எடுத்து மல்லிகா என பெயர் சூட்டி வளர்த்து, அந்தப் பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரம், ராஜலஷ்மி தம்பதிக்கு 1936ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் டி.எஸ்.கமலா. தனது மகள் கமலா பெயரில்தான் ‘மிஸ் கமலா’ என்று தான் தயாரித்த தமிழ்ப் படத்திற்குப் பெயர் வைத்தார். படம் நன்றாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல்தான் ஆகவில்லை. மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார் தயாரிப்பாளர் ராஜலஷ்மி. விளைவு அவரது குடும்பம் கடனில் தத்தளித்தது. ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட ‘குலேபகாவலி’ என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார்.
இவர் சொந்தமாக ஒரு சினிமா கம்பெனியும் சென்னையில் நடத்தி வந்தார். அதன் பெயர் ‘ராஜம் டாக்கிஸ்’ சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ராஜரத்தினம் தெருவில் இவர் வசித்தார். இப்பகுதியில் இவருக்கு 10க்கும் மேற்பட்ட வீடுகள் சொந்தமாக இருந்தன. அந்தத் தெருவில் முதல் எண் உள்ள தனது வீட்டிற்கு ‘ராஜ்மஹால்’ என்று பெயரிட்டிருந்தார்.
1935ஆம் ஆண்டு பர்மாவில் இவர் நாடகம் நடத்தினார். பர்மாவின் ரங்கூன் நகரில் இவரது நாடகம் மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தது. அங்கு இவர் நடித்த நாடகங்களை தொடர்ந்து பார்த்து வந்த பர்மிய மீனவ ரசிகர் ஒருவர் ராஜலஷ்மியின் நாடக நடிப்பை மெச்சி ‘வலம்புரி சங்கு’ ஒன்றை இவருக்குப் பரிசாக அளித்தார்.
டி.பி.ராஜலஷ்மி என்ற எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட அந்த வலம்புரி சங்கு தான் ராஜலஷ்மி தன் குடும்பத்திற்கு விட்டுச்சென்ற ஒரே சொத்து. அதை அவரது மகள் கமலா சென்னை திருமங்கலத்திலுள்ள தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து போற்றி பாதுகாத்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் ராஜலட்சுமி யையே சாரும். மும்பையைச் சேர்ந்த ‘சாகர்மூவிடோன்” தயாரித்த குறத்தி பாட்டும் நடனமும் என்ற துண்டுப்படத்தில் ராஜலட்சுமி நடித்தார். இப்படம் நான்கு ரீல்கள் கொண்டது. இந்தப் படம் 1931ல் வெளி வந்தது. படத்தில் ராஜலட்சுமியின் வசன உச்சரிப்பு மிகத் தெளிவாக இருந்தது. பின்னணி இசையே இல்லாமல் தாள லயத்துடன் பாட்டுப் பாடும் திறன் இவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்தது. இத்தகைய திறமைகளை நிறைவாக பெற்றிருந்த ராஜலட்சுமி சிறந்த நடிகையாக மிளர முடிந்தது.
டி.பி.ராஜலஷ்மியின் நாடகங்கள் நாட்டின் பல இடங்களிலும் அரங்கேறி புகழடைந்தன. யாழ்ப்பாணத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தி அந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார். கோவலன் – மாதவி காட்சி நடந்து கொண்டிருந்தது. நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த காந்திஜி ஒரு பொம்மைப் புலியை டி.பி. ராஜலஷ்மி கையில் கொடுத்து “இந்த வெற்றிப் புலியை வைத்துக் கொள்” என்று சொல்லிக் கொடுத்தார். டி.பி. ராஜலஷ்மிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தான் அணிந்திருந்த கை வளையல் களைக் கழற்றி கஸ்தூரிபாய் நிதிக்கென்று உடனேயே கொடுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தை அவரது வளர்ப்பு பெண் மல்லிகா, தம் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் 1931ஆம் ஆண்டு முதல் 1950 ஆண்டு வரை முன்னணி நடிகையாகவே வலம் வந்த டி.பி.ராஜலஷ்மியின் பல படங்கள் பல மாதங்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தன. 1950ம் ஆண்டு ஜோசப் தளியத் இயக்கிய ‘இதயகீதம்’ என்ற படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசி படம். ‘இந்தியத் தாய்’ என்ற பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கி தயாரித்தார். அது தோல்வியைக் கண்டது. அதற்கு நிறைய பணம் செலவு செய்திருந்தார். அந்தப் படத்தினால் ஏற்பட்ட கடன் சுமை ராஜலஷ்மியை அழுத்தியது. மன உளைச்சலுக்குள்ளானார்.
கட்டுப்பெட்டியான ஆச்சாரமான குடும்பத்தில் பெண்ணாக பிறந்து வாழ்வின் உச்சத்தைப் பார்த்துவிட்ட ராஜலஷ்மியின் உடல்நலம் கெட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளானார். அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் படுத்த படுக்கையானார். வறுமையினால் தன் அனைத்து சொத்துக்களையும் விற்க நேர்ந்தாலும் டி.பி.ராஜலஷ்மி ஒரே ஒரு வீட்டை மட்டும் வைத்துக்கொண் டிருந்தார். அந்த வீட்டை தன் மகள் கமலாவிற்கே கொடுத்துவிட்டார். வறுமையின் காரணமாக அந்த வீட்டையும் விற்க நேர்ந்தது. மனம் உடைந்துபோன ராஜலஷ்மி நினைவிழந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் இருந்த ஒரு வாடகை வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த வீட்டிலேயே 1964ல் அவர் மரணம் அடைந்தார். அவரது நினைவுகளைத் தமிழ் சினிமா தன் வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் பதித்துக்கொண்டு பெருமைப்படுகிறது.
இவருக்கு தமிழக அரசால் ‘கலைமாமணி’ விருது கொடுக்கப்பட்டது.
ராஜலஷ்மி நடித்த படங்கள்.
காளிதாஸ், ராமாயணம், வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, திரௌபதி வஸ்திராப ஹரணம், கோவலன் பக்தகுசேலா, குலேபகாவலி, பூர்ணசந்திரா, சம்பூர்ண அரிச்சந்திரா,பாமா பரிணயம், மிஸ்கமலா, வீர அபிமன்யு சீமந்தனி, கௌசல்யா பரிணயம், நந்தகுமார், அநாதைப் பெண், சுகுண சரஸா, தமிழ் தியாகி, மதுரைவீரன், குமார குலோத்துங்கன், பக்த குமணன் (அல்லது) ராஜயோகி, மாத்ருதர்மம், உத்தமி, பரஞ்சோதி, ஜீவஜோதி, இதயகீதம்.
ராஜலஷ்மி ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி யாக இருந்திருக்கலாம்.
கமலவேணி, விமலா என்ற இரு நாவல்களை ராஜலஷ்மி எழுதி வெளி யிட்டார். அவர் எழுதிய தமிழ் நாவல்தான் ‘மிஸ் கமலா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு தமிழ் ரசிகர்களுக்கு விருந்தானது.
இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா 1931ம் ஆண்டு திரையிடப் பட்டது. இதையொட்டி ‘இந்திய பேசும் படத்தின் வெள்ளி விழா’ 195ம் ஆண்டு சென்னையில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் இரண் டாம் நாள் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கத்தினரால் சென்னை வி.பி. ஹாலில் சிறப்பாக நடத்தப்பட்டது. நகைச்சுவை மேதை என்.எஸ்.கிருஷ்ண னின் தலைமையில் நடந்த இந்த விழாவில், முதல் தமிழ் பேசும்படமான ‘காளிதாஸின் கதாநாயகியான டி.பி.ராஜலஷ்மியையும் அதை இயக்கிய எச்.எம்.ரெட்டியையும் தென்னிந்தியாவின் முதல் ஹிந்திப் படத்தை டைரக்ட் செய்து தயாரித்த கே. சுப்ரமண்யத்தையும் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வர்ணப் படத்தைத் தயாரித்தவர் என்பதற்காக டி.ஆர்.சுந்தரத்தையும் விழாவில் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
பெண்களை பொதுவெளியில் உலவவிடாத கட்டுப்பெட்டியான ஒரு காலகட் டத்தில், ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து பெண்ணுக்குரிய தடைகளை யெல்லாம் புறந்தள்ளி திரையுலகில் சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த டி.பி.ராஜலஷ்மியின் புகழ் திரையுலகம் உள்ளவரை நிலைத்து நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.