கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு! | 17 | காலச்சக்கரம் நரசிம்மா

17. ஒரு கரிய உருவம் !

”அஞ்சு..!” –ஆதர்ஷின் அலறலைக் கேட்டு அட்டெண்டர் பஞ்சு ஓடிவந்தான்.

”சார் கூப்பிட்டிங்களா..?” –பதற்றத்துடன் வர, அவனைக் கோபத்துடன் பார்த்தான், ஆதர்ஷ்.

”உன்னை யாருய்யா கூப்ட்டது..? அதோ போறாளே… அடங்காப்பிடாரி அஞ்சு..! அவளைக் கூப்பிடுய்யா..?”

”சார்..! அடங்காப்பிடாரி அஞ்சுன்னு கூப்பிடணுமா… இல்ல, வெறும அஞ்சுன்னு கூப்பிடணுமா..?” –பஞ்சு பவ்யமாகக் கேட்க, அதற்குள் அஞ்சுவே உள்ளே எட்டிப்பார்த்தாள்..!

”யு கால்டு மீ, மிஸ்டர் ஆதர்ஷ் வித்யாலயா..? சாரி.. மிஸ்டர் ஆதர்ஷ்..?” –என்றவுடன் அவளை ஆத்திரத்துடன் முறைத்தான்.

”என்ன நக்கலா…? வாட் டூ யு மீன் பை திஸ்..?” ஆதர்ஷ் கையில் ஊசலாடிய துண்டுச்சீட்டைப் பார்த்தாள் அஞ்சு..!

”அதைப் பேப்பர்ன்னு சொல்வாங்க, இங்கிலீஷ்ல. தமிழ்ல காகிதம்ன்னு சொல்வாங்க..! அதைக் கண்டுபிடிச்சது, சீனாக்காரங்க..! இப்ப நம்ம ஆபீஸ்ல அதை ஒழிச்சுக் கட்டி பேப்பர் லெஸ்ஸா மாத்திக்கிட்டு வராங்க…?”

“சீனியர்ன்னு மரியாதை இல்லாம, எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி நக்கலாப் பேசுவே..! வாட் டு யு திங்க் யு ஆர்..?” –கர்ஜித்தான் ஆதர்ஷ்.

”நான் வேற என்ன சொல்ல முடியும்..? மொட்டையா ஒரு பேப்பர்த் துண்டைக் கையில வச்சுக்கிட்டு, இதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டா… நானா என்ன பதில் சொல்றது..?”

”இந்தப் பேப்பர்ல ‘இரண்டாவது விக்கெட் காலி’ன்னு போட்டிருக்கு. அதை அனுப்பினவ பேரு fair angels..? இது அந்தக் கங்கணாவும் நீயும் சேர்ந்து செஞ்ச வேலைதானே…?” –ஆதர்ஷின் கண்களில் கனல் தெறித்தது.

”வாட் நான்சென்ஸ்..! எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது..! நாங்க துண்டுக் காகிதம் எல்லாம் அனுப்புற சீப் வெரைட்டி இல்லை..! எதுவானாலும் நேரடி அட்டாக் தான்.”

”இதோ பாரு..! எனக்கு கோபம் கட்டுக்கடங்காம போச்சுன்னா, பொம்பளைங்கன்னுகூட பார்க்க மாட்டேன். உங்க தலைவி கங்கணா கிட்டே சொல்லி வை… இன்னொரு தடவை இந்த மாதிரித் துண்டு சீட்டு அனுப்பினீங்கன்னா, உங்களை நார் நாராக் கிழிச்சுடுவேன்… கெட் லாஸ்ட்..!” –ஆதர்ஷ் அலற, அஞ்சு அலட்சியமாகத் தோள்களை குலுக்கிவிட்டு, தன் வழியே நடந்தாள்..!

”பாழாய்ப்போன பெண்கள்..!” –பொதுவாக முணுமுணுத்துவிட்டு, ஸ்லீப்பில் வைத்திருந்த தனது ஸிஸ்டத்தை மீண்டும் இயக்கக் தொடங்கினான், ஆதர்ஷ்.

ன்று மாலை அனைவருக்கும் முன்பாக, ஆபீசில் இருந்து வந்து விட்டிருந்தான், ரேயான்.

நண்பர்கள் இன்னும் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கவில்லை. சிறிது நேரம் ஒர்க் அவுட் செய்யலாம் என்று ரேயான் மொட்டை மாடிக்குப் போக அங்கே, கங்கணா வீட்டுக்கு வந்திருந்த ஃபானி (Fanny) யோகா செய்து கொண்டிருந்தாள்.

‘ஜாக்கிரதை..! பெண் என்கிற மாயப் பிசாசு முதலில் கை ஆட்டும், பிறகு கண் சிமிட்டும். டையை ஆட்டும், பிறகு கட்டை விரலின் அடியில் வைத்து ஒரே நசுக்கு..!’ –ஆதர்ஷ் சொல்லித் தந்திருந்த பாடத்தை ஒரு முறை நினைவு கூர்ந்தாலும், ஃபானியின் கவர்ச்சி அவனைச் சுண்டி இழுத்தது.

உடனே அவனுக்கு ஆலப்புழா ஓமனாவின் நினைவு வந்தது. இவனுடைய காதலியாக இவன் பின்னால் பைக்கில் வலம் வந்தவள்தான் ஓமனா..! ஒரே ஃபாண்டாவை இரண்டு ஸ்டராவில் உறிஞ்சியவர்கள்தான். இவன் தனது அடர்த்தியான முடியைச் சிலிர்ப்பும் போதெல்லாம், உடனே அதைத் தனது கைவிரல்களால் அளைந்து கோதி விடுவாள்.

திடீர் என்று ஒரு நாள் இவனது அப்பன் தங்கபாண்டியனுடன் வந்து நின்று, ”டேய் மகனே ரேயான்” என்று முடியைக் கோதி விட்டாள்.

”என்னடி..! ஒரு ஃபாண்டாவுல ரெண்டு ஸ்ட்ரால்லாம் போட்டுக் குடிச்சோமே” என்றான்.

”அம்மாவும் பிள்ளையும் ஒரே தட்டுல சாப்பிடறது இல்லையா..?” –என்று அப்பனுடன் ஹனிமூன் கிளம்பி போனாள்.

‘இனியும் காதலிக்கக் கூடாது..! எதற்கு இன்னமும் ஒரு சித்தியை உருவாக்க வேண்டும்..?’

அதேசமயம் ஃபானியுடன் பேச வேண்டும் போல இருந்தது. ஆனால். ‘மகனே… ரேயான்’ என்று அவள் அழைப்பது போல பிரமை.

”யு லுக் க்யூட்..! உங்க பெயர் ரேயான்தானே..! நைஸ் நேம்..! என் பெயர் ஃபானி..!”

”அதென்னங்க பெயர் ஃபானி..?” –ரேயான் தன்னை மறந்து கேட்டு விட்டான்.

”என்னோட ஃபாதர் அலெக்சாண்டர் எனக்கு ஃப்லாரன்ஸ் நைட்டிங்கேல்ன்னு பேர் வச்சார். ஆனா இவ்வளவு பெரிய பேர் வேண்டாமேன்னு, ஃபானி அலெக்சாண்டர்னு மாத்திக்கிட்டேன்…! டு பீ பிராங்க், நேத்தி மிட்நைட், நீங்க எனக்கு உங்க பிளாட் கதவைத் திறந்தீங்க இல்லே… அப்ப உங்களைப் பார்த்த உடனேயே இவர் ஹாண்ட்சம்மா இருக்காரேன்னு தோணிப் போச்சு. அப்பவே, டேட் செஞ்சா உங்களை மாதிரி க்யூட் கய்யோடேதான் டேட் செய்யணும்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டேன். இன்னைக்கு நைட் ப்ரீயா..? பெசன்ட் நகர்ல என்னோட பிரெண்ட் ரெஸ்டாரண்ட் வச்சிருக்கா. அங்கே நாம் பேசிக்கிட்டே டின்னர் சாப்பிடலாம்..?” –கொஞ்சியபடி கேட்டாள் ஃபானி

ரேயான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

”நீங்க யாருங்க..? அதுவே எனக்குத் தெரியாது..! அதுக்குள்ளே டேட்டுக்குக் கூப்பிடறீங்களே..!” –ரேயான் உண்மையான அதிர்ச்சியுடன் கேட்டான்.

”கங்கணா இருக்கால்லே… அவளோட ஸ்கூல் மற்றும் காலேஜ் மேட்..! சென்னையில வேலை கிடைச்சிருக்கு..! பெரிய பிளாட்ல நானும் அம்மாவும் மட்டும்தான் இருக்கோம். நீயும், உங்கம்மாவும் எங்களோட வந்து தங்கிக்கன்னு சொன்னாள்..! எங்கப்பா அலெக்சாண்டர் போன வருஷம்தான் இறந்து போயிட்டார். அம்மா ஹெலனால, கோவாவுல இருக்க முடியல. அப்பா நினைவாகவே இருக்காங்க. அவங்க சோகங்களை மறக்கணும்னுதான, சென்னையில வேலை தேடிக்கிட்டேன். அடுத்த வாரம், அம்மா வராங்க.” –ஃபானி கூறினாள்.

”பாவங்க அவங்க..!” – என்ன சொல்வது என்று தெரியாமல், ரேயான் மிடறு விழுங்கினான்.

”கரெக்ட்..! ஒரு மனுஷன் ஜோடியைத் தேடிக்கிட்டா ஆயுள் பர்யந்தம் அவங்க ஒருத்தொருக்கொருதர் லாயலா இருக்கணும். அடிக்கடி ஜோடி மாத்தறதுங்கிறதைக் கேவலமா நினைக்கிறேன். எனக்கு ஒரு காதலன் கிடைச்சா, என்னோட கல்லறையில் அவன்தான் மண்ணைத் தூவணும். இல்லே அவன் கல்லறையில் நான் ஒருத்திதான் மண்ணைத் தூவணும்ன்னு நினைக்கிறவ நான்…!

ஜிவ்வென்று உயரே பறந்தான், ரேயான்..! பல மலர்களைத் தேடி மொய்க்கும் வண்டாக, அப்பா தங்கபாண்டியன் இருக்க, அவரை மயக்கி தங்களது பணத்தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் பெண்கள் அவரைச் சுற்ற, தனது ஆருயிர்க் காதலி ஓமனாவே இவனுக்குத் துரோகம் செய்து விட்டுச் சித்தியாகி விட, பெண் இனத்தின் மீதே வெறுப்புக் கொண்டிருந்த, ரேயானின் செவிகளில், ஃபானியின் வார்த்தைகள் தேனாகப் பாய்ந்தன.

இந்த மாதிரிப் பெண்தான் அவனுக்குத் தேவை..!

Variety is the spice of life என்று தம்பதிகள் ஜோடி மாற்றிக் கொள்வதை ஒரு பார்ட்டியாகவே நடத்தும் கிளப்புகளில் இவன் கீ போர்டு வாசித்திருக்கிறான். அதையெல்லாம் பார்க்கும்போது இவன் கூனிக் குறுகியிருக்கிறான். மேற்கத்தியக் கலாச்சாரத்தில்தான் இவன் வளர்ந்தான் என்றாலும், அதற்கும் ஓர் எல்லைக்கோடு உள்ளது என்று நினைப்பவன். ஒருவேளை, இவனது தந்தையின் நடத்தையால் மனம் உடைந்து இவனது அம்மா ரெபெக்கா தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், இவனும் அப்பாவை போல் இருந்திருப்பானோ என்னவோ…?

”நிச்சயம் போகலாம், ஃபானி..!” –உற்சாகத்துடன் ரேயான் சொல்ல, அதே சமயம்…

டிரினிட்டி இந்தியா டிவி பார்க்கிங்கில், ஆதர்ஷின் கார் வைப்பர்களுக்கு இடையே, ஒரு துண்டுக் காகிதத்தைச் சொருகிவிட்டு சென்றது அந்த உருவம்.

ஆணா பெண்ணா என்று யூகிக்க முடியாதபடி, கறுப்பு பேண்ட், கறுப்புக் குர்தா, கறுப்பு ஷூஸ், கண்ணில் கறுப்புக் கண்ணாடி, கைகளில் கறுப்பு உறைகள், கறுப்புநிற கோவிட் மாஸ்க், தலையில் கறுப்பு கேப் என்று எல்லாம் கறுப்பு. முகம் மட்டுமே வெண்மையாகத் தெரிந்தது.

”மூன்றாவது விக்கெட் காலி..! இனி நீ மட்டும்தான் பாக்கி..! –ஃபேர் ஏஞ்சல்ஸ்..!” –என்கிற வாசகத்துடன், ஆதர்ஷின் வருகைக்காக அந்தத் துண்டுச் சீட்டு காத்திருந்தது.

சரியாக மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையை விட்டு, திருவான்மியூர் வீட்டுக்குக் கங்கணா கிளம்ப, அதே சமயம், ஆதர்ஷும் வீட்டுக்கு கிளம்பினான். மூன்றாவது மாடியில் இருந்து இறங்கும் லிஃப்டுக்காகக் காத்திருந்த ஆதர்ஷ், லிப்ட் வந்து கதவு திறக்க அதில் நுழைய முற்பட்டவன் திகைத்தான். உள்ளே கங்கணா நின்றிருந்தாள்.

வந்த வழியே திரும்பி, படிகளில் இறங்கி செல்லத்தான் நினைத்தான், ஆதர்ஷ். ஆனால் தான் பயப்படுவதாக அவள் நினைத்துவிடப் போகிறாள் என்று தோன்ற, உள்ளே நுழைந்தான். லிப்ட் கதவு மூடி கொண்டது.

லிப்ட் கீழே இறங்க தொடங்கியது. ஆதர்ஷ் காரில் வைக்கப்பட்டிருந்த வைப்பரின் நடுவே வைக்கப்பட்டிருந்த காகிதம் மெல்லிய காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

தொலைவில் நின்றிருந்த கரிய உருவம் அந்தக் காகித்தையே பார்த்து கொண்டிருந்தது.

–மோதல் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...