தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா

 தலம்தோறும் தலைவன் | 15 | ஜி.ஏ.பிரபா

15. மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர்

மாடும் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மொடுங்

கூடி அங்குள குணங்களால் வேறுண்டு குலாவியே திரிவேனை

வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி

ஆடுவித்தென தகம் புகுந்து ஆண்டது ஒரு அற்புதம் அறியேனே!

திருவாசகம்.

சௌபாக்கியம் என்பது என்ன?

மாடு, மனை, மங்கையர் சுற்றம், உற்றார், உறவினர், நிலம், வயல் என்பவையா..? அழியக் கூடிய ஒன்றைச் சௌபாக்கியம் என்று எப்படிக் கூற முடியும்..? நம் கருமங்கள் அனைத்தும் நிலவுலக இச்சையை உபாசித்தே செய்யப்படுகின்றன. இவை எதுவும் நம் கூட வரப் போவது இல்லை.

ஆனால் மாயையில் சிக்கிய நம் மன ஆசைகளே நம் கர்ம வினைகளுக்குக் காரணமாயிற்று. அந்த வினைகள் பாம்பு போல் விஷம் நிறைந்தது. அதன் வெப்பத்தில் மூழ்கி நாம் கதறுகிறோம். இறைவா என்று கூக்குரல் இடுகிறோம். எந்த மெய்ப்பொருளைக் காண வேதங்கள் அலைகிறதோ அதன் கால்களைச் சரணமடைந்தால் நமக்கு இவ்வுலகச் செல்வங்களுடன், மேலுலகப் பதவியும் கிடைக்கும். இதைத்தான் திருவாசகம்,

உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா,உன் குரை கழற்கே

கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே!

என்று போற்றுகிறது.

தனக்கென்று உள்ள உறவினர், சொந்தம், பந்தம் அதன் மூலம் கிடைத்த எந்தச் செல்வங்களும் தேவையில்லை என்றவர் அடுத்து மிகத் துணிவுடன் கற்றவர் துணையும் வேண்டாம் என்கிறார். வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்று… வேறு இறைச் சிந்தனை இல்லாமல், தான், தனது என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் உறவுகூடத் தேவையில்லை. நூல்களைக் கற்க வேண்டிய அவசியமில்லை. அன்பில் உருகி, ஈசனின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் போதும்… அனைத்து நன்மைகளும் வந்து சேரும் என்கிறார்.

பாதத்தைப் பற்றக்கூட வேண்டியதில்லை. ஈசனே என்று மனமுருக அழைத்தால் போதும், அந்தச் செல்வங்கள் அனைத்தையும் தந்து நம்மை ஆட்கொள்பவன் ஈசன். தன்னையே நம்பி வந்த முடவனுக்கும் மோட்சம் கொடுத்த கருணாமூர்த்தி அல்லவா இறைவன்..? நம் பாவங்கள் அனைத்தையும் போக்கி அரவணைக்கவே ஸ்ரீ மயூர நாதராகக் காட்சி அளிக்கிறார் மயிலாடுதுறை என்னும் மாயவரத்தில்.

காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராகக் கருதப்படுகிறது. அதில் ஒன்றுதான் மாயவரம். ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது என்பது இதன் பெருமையை விளக்கப் போதுமானது. பிரம்மனால் உருவாக்கப்பட்ட இத்தலத்தில் அவர் மயூர நாதராக ஈசனைப் பூஜித்தார். அன்னை பார்வதி மயில் ரூபத்தில் இறைவனைப் பூஜித்தார்.

ஈசனை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் கணவன் மறுத்தும், பார்வதி தேவியார் சென்று கலந்து கொண்டார். அங்கு அவமானப்பட்ட தேவியைச் சிவன் சபித்து விடுகிறார். காவிரியின் தென்புறத்தில் ஐப்பசி மாதம் முப்பது நாளும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சாப விமோசனம் அளிக்கிறார். அதன்படி அன்னை மயிலாகத் தவம் இருந்து ஈசனை அடைகிறாள். ஈசனும் ஆண் மயிலாக உருவெடுத்து, அன்னையுடன் ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித்துறை என்று பெயர் பெற்றது.

ஒருமுறை கன்வ முனிவர் கங்கையில் தீர்த்தமாடச் செல்கையில், எதிரில் மிகவும் கோரமான ரூபத்துடன் மூன்று பெண்கள் வந்தார்கள். தாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்றும், மக்களின் பாவங்களைத் தாங்கள் வாங்கிக் கொண்டதால் இக்கோர உருவம் ஏற்பட்டது என்றும் கூறி வருந்தினார்கள்.

‘காவிரித் தென்கரையில் உள்ள மாயவரத்தில் துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் உங்கள் பாவங்கள் நீங்கி, அழகிய உருவம் பெறுவீர்கள்’ என்று முனிவர் கூறுகிறார். அதேபோல் அங்கு நீராடி, பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். ஒவ்வொரு துலா மாதத்திலும், அந்த மூன்று நதிகளும் இங்கு வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள் என்கிறது புராணம். தேவர்கள், முனிவர்கள், சப்த மாதர்கள் என்று அனைவரும் துலா மாதத்தில் இங்கு நீராட வருவதாகத் தல புராணம் கூறுகிறது.

துலா மாதமான ஐப்பசியில் முதல் இருபத்தி ஒன்பது நாட்கள் நீராட முடியவில்லை என்றாலும் கடை முகம் எனப்படும் முப்பதாவது நாள் நீராடி, மயூர நாதரையும், அவயாம்பிகையையும் தரிசிப்பது மிகச் சிறப்பு. அடுத்த நாள் கார்த்திகை முதல்நாள் முடவன் முழுக்கு எனப்படுகிறது.

துலா மாதத்தின் சிறப்பு பற்றி கேள்விப்பட்டு முடவன் ஒருவன் மயிலாடுதுறை நோக்கி வருகிறான். ஆனால் இயலாமையினால் ஐப்பசி முடிந்து கார்த்திகை முதல் தேதி அன்றுதான் வந்து சேர்கிறான். வருந்திய அவன், தன்னால் மீண்டும் அடுத்த வருடம் வந்து நீராட முடியாது என்று இறைவனிடம் வேண்ட, ஈசன் ஒருநாள் நீட்டித்துத் தருகிறான். அதேபோல் முடவன் நீராடி பாவங்கள் நீங்கி, மோட்சத்தை அடைகிறான்.

அதேபோல் கடைமுக நாளில் காவிரியில் நீராட, நாத சர்மா, அனவித்யாம்பிகை என்னும் தம்பதியர் வருகிறார்கள். அதற்குள் நாள் முடிந்து விடுகிறது. வருத்தத்துடன் இருந்த அவர்கள் கனவில் ஈசன் தோன்றி, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் நீராடினாலும், பாவங்கள் விலகும் என்கிறார். அதேபோல் நீராடி முக்தி அடைந்தனர்.

இங்கு ஐப்பசி மாத அமாவாசை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நம் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தி, அவர்களின் பாவங்கள் போக்க பூஜைகள் செய்யப்படுகிறது.

திருவாடுதுறை ஆதீனத்திற்கு உரிய இக்கோவில் கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற மூன்று பக்கம் மொட்டைக் கோபுரங்களும், சுற்றிலும் பெரிய மதில்களுடனும் காட்சி அளிக்கிறது. வீதி உட்பட ஐந்து பிராகாரங்கள் உள்ள இதன் ராஜகோபுரம், ஒன்பது நிலைகளுடன், அழகான சிற்பங்களுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

கருவறை கோஷ்டத்தில் நடராஜரின் பாதத்திற்கு அருகில் ஜுரதேவர் இருக்கிறார். சிறப்பான அமைப்பு. அதேபோல் துர்க்கை அம்மனின் காலுக்குக் கீழ் மகிஷனும், இரண்டு புறமும், இரண்டு அசுரர்களும் இருப்பதும் சிறப்பான தோற்றம். இரண்டு சண்டிகேஸ்வரர் ஒரே சன்னதியில் உள்ளனர். லிங்கத்தைப் பூஜிக்கும் மகாவிஷ்ணு சன்னதி தனியாக உள்ளது.

நாத சர்மா, அனவித்யாம்பிகை லிங்கத்தில் ஐக்கியமாகி முக்தி அடைந்ததால அவர்களுக்கும் தனியே ஒரு சன்னதி உள்ளது. என்னை வழிபட்ட பின் உங்களையும் வழிபட்ட பின்னரே, முழுப்பலன்களும் கிடைக்கும் என்று அவர்களுக்கு வரம் அருளியுள்ளார் ஈசன்.

அன்னை அவயாம்பிகை, நின்ற திருக்கோலத்தில் வலது திருக்கரத்தில் கிளியை ஏந்திய வண்ணம் காட்சி தருகிறாள். கண்கொள்ளா அழகுத் திருக்கோலம். லிங்க வடிவத்தின் அருகில் அம்பாள் மயில் ரூபத்தில் அவரை வழிபடும் கோலத்தில் இருக்கிறாள். தல விருட்சம் மாமரம்.

இங்கு சிவன், நந்தியின் கர்வத்தைப் போக்கி அருள் செய்ததால் இடப தீர்த்தம் சிறப்பானது. இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இங்கு ஐப்பசி தீர்த்தவாரியும், கடைமுகத் தீர்த்தவாரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் துலாக் காவிரி ஸ்நானம் பல அற்புதப் பலன்களைத் தர வல்லது.

பலராலும் போற்றிப் புகழ்ந்த மயிலாடுதுறை பற்றி சம்பந்தரின் பதிகம் ஒன்று

ஊனத் திருணீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டாடிப்

பேணும் தேனொத் தினியான மருஞ்சேர் வானம் மயிலாடுதுறையே”

என்று பாடுகிறார்.

இப்பிறப்பில் நமக்குள்ள ஆணவம், என்னும் குறைகள் நீங்க, ஞானப் பொருளாய் உள்ள சிவபெருமானை வணங்க வேண்டும். தேன் போன்ற இனியனாய் விளங்கும் அப்பெருமான் மயிலாடுதுறையில் விரும்பி அமர்ந்திருக்கின்றான் என்கிறார். அப்பர் பெருமான்

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை

உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்

வள்ளல் மா மயிலாடுதுறை உறை

வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே”

-என்று பாடுகிறார். இங்குள்ள ஈசனுக்கு வள்ளல் என்னும் பெயரும் உள்ளது. நாம் கேட்பதை அள்ளி வழங்கும் ஈசனுக்கு இப்பெயர் பொருத்தம்தானே. பெருமானின் நாமத்தை மீண்டும், மீண்டும் உரைப்பதாக தன் மகளின் நிலை பற்றி, ஒரு தாய் உரைக்கும் அகத்துறைப் பாடலாக இது அமைந்துள்ளது.

இறைவன் உருவம் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவள். ஆனாலும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றி, அவனின் வள்ளல் தன்மை பற்றிக் கேள்விப்பட்டு, அவனையே நினைந்த வண்ணம் இருக்கிறாள் என்கிறாள் தாய்.

ஈசன் நாமத்தை உச்சரிக்கும் போது நமக்குள் எழும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது. எத்தனை முறை உச்சரித்தாலும் மன நிறைவு தராத சிறப்புடையாது பஞ்சாட்சர மந்திரம். அந்த நாமத்தில் ஆழ்ந்து உருகும் தன் மகளை நினைத்துப் பாடுவதாக இப்பதிகம் அமைந்துள்ளது.

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் உள்ளத்தில் இருக்கும் நாமம் ஓம் நமசிவாய.’- என்பார்கள். மயிலாடுதுறை ஈசனை மனதார நினைத்து உருகி வேண்டினால், நம் பாவங்கள் அனைத்தையும் நீக்கி, நன்மைகளையும் செய்வார் ஸ்ரீ மயூரநாதர்.

–தலைவன் தரிசனம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...