கோமேதகக் கோட்டை | 17 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

கோமேதகக் கோட்டையினுள் சிறை வைக்கப்பட்டிருந்த இளவரசி சுமார் நான்கு நாழிகை காலம் செலவழித்து வித்யாதரனின் உருவத்தை வரைந்து முடித்தாள்.

“ ஆஹா! என்ன கம்பீரம்! என்ன அழகு! இவன் முகத்தில் இருக்கும் தேஜஸிற்கு இவன் அரச குமாரனாகப் பிறந்து இருக்க வேண்டியவன்! என்று அவள் மனது சொன்னது.

வரைந்து முடித்த படத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசியை நோக்கி வேகமாக வந்த ராட்சதன் அவள் கையிலிருந்த அந்த திரைச்சீலையை வாங்கிப் பார்த்தான். அவன் முகத்தில் ஓர் ஏளனம் தோன்றியது. “இந்த சிறு பையன் தானா வித்யாதரன்! இவனிடம்தான் நான் தோற்றுவிடுவேன் என்று அந்த ஆந்தை பயமுறுத்தியதா? என் ஒரு கைப்பிடிக்கு இவன் வருவானா? பொடிப்பயல்! இந்த கோட்டைக்குள் அவன் காலடி எடுத்துவைத்தால் அவன் ஆயுள் அஸ்தமித்துவிடும்! அறியாக் குழந்தை வீணாக வந்து உயிரைவிடப்போகிறது!” என்று கர்ஜித்தான்.

இளவரசிக்கு ராட்சதனின் கர்ஜனை கொஞ்சம் அச்சத்தையே தந்தது. ஆனாலும் அந்த பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராட்சதனைப் பார்த்து, “வித்யாதரன் உம்மைவிட உருவத்தில் சிறியவராக இருக்கலாம்! ஆனால் உன்னைவிட புத்திக் கூர்மை உள்ளவர். சில சமயம் உருவ பலத்தை உத்திபலம் வென்றுவிடும்! இன்னும் சில நாட்கள் தான்! அப்புறம் இந்த கோட்டையை கட்டி ஆள நீ இருக்க மாட்டாய்!” என்றாள்.

“ஏய் இளவரசி! என்ன உன் வாய் மிகவும் நீளுகின்றது? நீ இருக்குமிடம் என் கோட்டை என்பதை நினைவில் கொள்! இது உன் அரண்மனை அல்ல உன் இஷ்டத்திற்குப் பேச. இது இந்த ராட்சதனின் கோட்டை! இங்கே என் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. எனக்கா புத்தி கிடையாது என்று ஏளனம் செய்கிறாய்? அந்த வித்யாதரன் எப்படி உள்ளே நுழைகிறான் என்று பார்த்துவிடுகிறேன்! அப்போது என் சாமர்த்தியத்தை நீ உணர்ந்து கொள்வாய்!” என்று கடுமையாகப் பேசினான் ராட்சதன்.

“உம்மை ஏளனப்படுத்துவது என் நோக்கமல்ல! வித்யாதரன் மேல் உள்ள நம்பிக்கை என்னை அப்படிப் பேச வைத்தது. இப்போது கூட ஒன்றும் இல்லை. என்னை என் அரண்மனையில் விட்டுவிடு! உணவுக்காக எளியோரைக் கொன்று தின்னாதே! நீயும் உன் கூட்டமும் எங்கள் நாட்டுப் பக்கம் வராமல் இருப்பதாக சத்தியம் செய்து கொடு! உயிர் பிழைப்பாய்!” என்று ராட்சதனின் கோபத்தைத் தூண்டுவது போல பேசினாள் இளவரசி.

“எனக்கு உயிர்ப்பிச்சை தருகிறாயா இளவரசி? உன் உயிர் என் கையில் இருக்கிறது என்பதை மறந்து பேசிக்கொண்டிருக்கிறாய்! உன்னால் என் மக்கள் அனைவருக்கும் சிரமம் இல்லாமல் உணவு கிடைக்கிறது என்பதால் உன்னை எதுவும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறேன்! இனியொருமுறை அப்படிப் பேசாதே! பேசினால் உன்னைக் கொல்லவும் தயங்க மாட்டேன்!” கர்ஜித்தான் ராட்சதன்.

“உன்பிடியில் நான் இருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆனால் உண்மையில் என் பிடியில் தான் நீ இருக்கிறாய்! உன்னைக் கொல்ல வேண்டும் என்று அன்று யோசித்துதான் அன்று உன்னிடம் சிறைபட்டு இந்த கோட்டைக்கு வந்தேன்! எப்போது நீ என் மீது கை வைத்தாயோ அப்போதே உன் வாழ்நாள் குறையத் துவங்கிவிட்டது. உன்னைக் கொல்ல வித்யாதரன் வருவான் என்பது எனக்குத் தெரியும். அவனை எதிர்கொள்ள… ஊகும்… உன் மரணத்தை எதிர்கொள்ள நீ தயார் ஆகு!” என்று ஆவேசமாக பதிலுறுத்தாள் இளவரசி.

“என்ன திமிர் உனக்கு..? வித்யாதரன் வருகின்றானா, வரட்டும்! யாரங்கே! இவளைப் பாதாளச் சிறையில் அடையுங்கள்! உணவேதும் கொடுக்காதீர்கள்! வித்யாதரன் வந்து மீட்டுப் போகட்டும்! இல்லையேல் அப்படியே மடிந்து போகட்டும்” என்று உத்தரவிட்டான் ராட்சதன்.

இரண்டு ராட்சதர்கள் இளவரசியை அழைத்துச்சென்று பாதாளச் சிறையில் தள்ளினர்.

தே சமயம் பூதக் காட்டில் வித்யாதரன் மந்திரப்பாயில் சூர்ப்பனகாவோடு பயணித்துக் கொண்டிருக்க எதிரே ஒரு பெரிய யானை போன்ற உருவத்தில் வந்து மறித்தாள் பூதகி.

“வித்யாதரா! இவள்தான் பூதகி! இந்த பூதக்காட்டின் தலைவி. இவளை மீறி நாம் அடி கூட நகர முடியாது.” என்றாள் சூர்ப்பனகா!

“அதையும் பார்த்துவிடுவோம்! அவளாக வழிவிட்டாளெனில் தப்பித்தாள். இல்லையெனில் இன்று தொலைந்தாள் அந்த பூதகி!” என்றான் வித்யாதரன்.

“அடேய்! வித்யாதரா! இது பூதக்காடு! இதன் மேல் பறக்க உனக்கு உரிமையில்லை! திரும்பிச்செல்!” என்றாள் பூதகி.

”அப்படியெனில் உரிமையைக் கொடு! நீ கொடுக்காவிட்டால் நாங்களே எடுத்துக்கொள்வோம்!” என்றான் வித்யாதரன் நக்கலாக.

“எடுத்துக்கொள்ள இது என்ன திண்பண்டமா? இது என் காடு! உள்ளே நுழையவோ மேலே பறக்கவோ அனுமதிக்க முடியாது!” என்றாள் பூதகி.

“உன் காடு உன் காடு என்று சொல்லுகிறாயே! இங்கே இருக்கும் விருட்சங்களையும் செடி கொடிகளையும் நீ நட்டு வளர்த்தாயா? அல்லது இவற்றை நீரூற்றிப் பராமரிக்கிறாயா? இயற்கையாய் வளர்ந்த விருட்சங்கள்! இயற்கையால் காப்பாற்றப் பட்டு வளர்ந்து வருகின்றது, இதில் நீ ஆக்ரமிப்பு செய்து கொண்டு இங்கே பயணிப்போரை துன்புறுத்தி வருகின்றாய்! இது உனக்கு நல்லதல்ல! இப்பொழுதே இந்தக் காட்டை விட்டு நீயும் உன் கூட்டத்தாரும் கிளம்ப வேண்டும்! இல்லாவிட்டால் நான் துரத்தி அடிப்பேன்!”

”எப்படித் துரத்தி அடிக்கப் போகிறாய்? பார்த்துவிடுவோம்!”

”பார்க்கத்தானே போகிறாய்!” என்றான் வித்யாதரன்.

சூர்ப்பனகா தன் மந்திரக் கோலை உயர்த்திப் பிடித்தாள். கண்மூடி ஏதோ தியானித்தாள். அடுத்த நிமிடம், “வித்யாதரா இவளைக் கொல்லும் வழி கிடைத்துவிட்டது.” என்றாள்.

”என்ன அது?”

“யானை போன்ற உருவத்தில் இருக்கும் இவளது காதில் நீ புகுந்து குடைச்சல் கொடுத்தால் போதும்!”

”அது எப்படி முடியும்?”

”உனக்குத்தான் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை தெரியுமே! பார்! கீழே பார்! ஏதாவது ஓர் எறும்பு புழு பூச்சி வண்டு இறந்து கிடக்கும் அதில் புகுந்து அவள் உடல் மீதேறி காதுக்குள் புகுந்து விடு! பூதகி துடித்துப் போவாள்! மடிந்தும் போவாள்!”

”ஏய்! சூர்ப்பனகா! அங்கே என்னச் சொல்லிக் கொடுக்கிறாய்..? நான் உன் தலைவி என்பதை மறந்துவிட்டாய்!” பூதகி அதட்டினாள்.

”மன்னிக்கவும்! நான் இப்போது எதிரணியில் உள்ளேன்!” என்று பவ்யமாக பதில் சொன்னாள் சூர்ப்பனகா.

”எதிரணிக்குச் சென்றதே மன்னிக்க முடியாத குற்றம்! வித்யாதரனை முடித்துவிட்டு உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்!”

”ஐயையோ! என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்! நான் ஓர் அப்பாவி!”

“யார்? நீயா அப்பாவி?”

“பின்னே யார்? ஒன்றும் தெரியாத பேதை நான்!”

“ஹாஹாஹா’ நீ பேசுவது வேடிக்கையாக இருக்கிறது! எத்தனை பேரை உன் சூனிய வித்தைகளால் ஆட்டிவைத்தாய்! நீ நினைத்த்தை எல்லாம் சாதித்துக் கொண்டாய்! நீ ஒன்றும் அறியாதவள் என்று சொல்லுகின்றாய்!”

-இப்படி பூதகியும் சூர்ப்பனகாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்த சமயத்தில் வித்யாதரன் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான். கீழே குனிந்து பார்வையை கூர்மைப்படுத்தினான். அவன் பார்வையில் இறந்து கிடந்த சிறு வண்டு ஒன்று தென்பட்டது. அடுத்த நொடி அவன் வாய் மந்திரத்தை முணு முணுக்க அவன் உடலை விட்ட உயிர் அந்த வண்டில் பாயத் துவங்கியது.

மந்திரப்பாயில் வித்யாதரன் அப்படியே சாய சூர்ப்பனகா வித்யாதரனை தாங்கிப்பிடித்துக் கொண்டாள். அதே சமயம் உயிர்பெற்று எழுந்த அந்த வண்டு பூதகியை சுற்றி வந்தது. பூதகி தன் முறம் போன்ற காதுகளை அசைத்துக் கொண்டே இருந்தாள். அந்த காதுகள் அசையும் வேகத்தில் உள்ளே நுழைய முடியாமல் சுற்றிப் பறந்து கொண்டே சமயம் பார்த்திருந்தான் வித்யாதரன்.

“அடேய்! சூர்ப்பனகா! வித்யாதரன் என்ன மயங்கி சரிந்துவிட்டான்! இதுதான் அவனது வீரமா? எழுப்பு அவனை சீக்கிரம் எழுப்பு! இல்லாவிட்டால் இதோ ஒரு நொடியில் அவனை நான் எழுப்புகிறேன்!” கர்ஜித்துக் கொண்டே பூதகி ஓர் அடி வைக்கும் சமயம் வண்டாக மாறியிருந்த வித்யாதரன் பூதகியின் காதுக்குள் நுழைந்து விட்டான்.

உள்ளே நுழைந்த வண்டு பூதகியின் காதில் பலமாக கடித்து இன்னும் உள்ளே நுழைய ஆரம்பித்தது.

”ஆ” என்று காதைப் பிடித்துக் கொண்ட பூதகி, “அய்யோ! காது குடைகிறதே! ஐயோ வலி பொறுக்க முடியவில்லையே! ஆ.. ஆ..” என்று அரற்றினாள்.

இப்போது சூர்ப்பனகா கத்தினாள். ”சபாஷ் வித்யாதரா! பூதகியின் காதுக்குள் நுழைந்துவிட்டாயா? விடாதே அவளை கடித்துக் குதறு! ம்.. ஆகட்டும்!” என்று உற்சாகக் குரல் கொடுத்தாள்.

“ஆ! வித்யாதரன் என் காதுக்குள் புகுந்துவிட்டானா? டேய்! வித்யாதரா! என்னை ஒன்றும் செய்து விடாதே! காதில் தான் என் உயிரே இருக்கிறது! தயவு செய்து வெளியே வந்துவிடு!” கத்தினாள் பூதகி

”அவன் வெளியேத்தான் இருக்கிறான்! ஆனால் உன் காதின் உள்ளேயும் இருக்கிறான்!” என்றாள் சூர்ப்பனகா.

”சூர்ப்பனகா! வித்யாதரன் எப்படி என் காதுக்குள் புகுந்தான்? ஆ.. கடிக்காதே! வெளியே வா…” அரற்றினாள் பூதகி.

”அவன் வெளியே வர மாட்டான்! உன்னைக் கொல்லாமல் விடமாட்டான்.”

அப்போது மந்திரப்பாயில் இருந்து வித்யாதரன் உடல் நழுவிக் கீழே விழுந்தது. அதைப்பார்த்ததும் பூதகியின் கண்களில் ஓர் மின்னல் தோன்றி மறைந்தது.

‘ஐயோ! கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே! வித்யாதரனின் உடல் கீழே விழுந்து விட்டதே! பூதகியும் அதைப்பார்த்துவிட்டாளே! இப்போது என்ன செய்வது?’ என்று முழித்தாள் சூர்ப்பனகா!

“அடேய்! வித்யாதரா! கூடுவிட்டு கூடுபாய்ந்து வண்டாக மாறி என் காதுக்குள் புகுந்து கடிக்கிறாயா? மரியாதையாக வெளியே வா! உன் உடல் இப்போது என் காலடியில் கிடக்கிறது! நீ என்னைக் கொல்லும் முன் என் காலால் மிதித்து உன் உடலை சிதைத்துவிடுவேன்! என்னைக் கொன்றாலும் நீ மீண்டும் உன் உடலுக்குச் செல்ல முடியாது! உனக்கு உன் உடல் வேண்டுமானால் வெளியே வா!” வேதனையிலும் சூளுரைத்தாள் பூதகி.

”சூர்ப்பனகா! பூதகி சொல்வது நிஜமா? உள்ளேயிருந்து கேட்டான் வித்யாதரன்.”

”ஆம் வித்யாதரா! கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டேன்! இப்போது உன் உடல் பூதகியின் காலடியில் இருக்கிறது!”

”உன் உடல் வேண்டுமானால் என் காதில் இருந்து வெளியே வா! இல்லை ஒரே மிதிதான்! உன் உடல் நசுங்கிப்போய்விடும்! அப்புறம் நீ வண்டாகவே சுற்றவேண்டியதுதான்!” கர்ஜித்தாள் பூதகி.

வித்யாதரன் வெளியே வந்தானா?

–அடுத்த வாரம் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!