சிவகங்கையின் வீர மங்கை | 19 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீர மங்கை | 19 | ஜெயஸ்ரீ அனந்த்

“கெளரி, கெளரி” என அழைத்தும் கதவு திறக்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளான வைத்தியர், மகளுக்கு வாக்கு ஒன்றைத் தந்து விட்டார்.

“அம்மா… உன் மனச்சஞ்சலத்தை நான் அறிவேன். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை அமைய என்னால் ஆன முயற்சியை நான் மேற்கொள்ளுவேன். இல்லையேல் இதோ இங்கே வீற்றிருக்கும் ராஜேஸ்வரி ஆலயத்தின் முன்பாக நான் என்னை மாய்த்துக் கொள்வேன்..” என்றதும், “தந்தையே…” என்று கூக்குரலுடன் ஓடி வந்து தந்தையைக் கட்டிக் கொண்டாள். இதைக் கண்ட தாண்டவராயப் பிள்ளை ஸ்தம்பித்து நின்று விட்டார்.

ராணி முத்தாத்தாளையும் அரசர் செல்லமுத்துவின் உடன் பிறந்த சகோதரி முத்துத் திருவாயி நாச்சியாரையும் சுமந்த வந்த பல்லக்கு ப்ரான் மலை வந்து சேர்ந்தது. முன்னதாக அங்கு வந்திருந்த அரசர் செல்லமுத்து இவர்களை எதிர்கொண்டு வரவேற்று உபசாரம் செய்தார். ஒரு வாரம் முன்னதாக நகரம் திருவிழாக்கோலம் பூண்டது.

கொடுங்குன்றநாதர் ஆலயத்தில் விவாகம் நடைபெறுவதற்கு முன்னேற்பாடாக பல வைதிக முறைகளுக்கும் மங்கல நாதங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது . நகர மக்கள் தங்கள் வீடுகளுக்கு மாவிலைத் தோரணங்கள் புஷ்ப அலங்காரங்கள் போன்றவற்றால் இல்லங்களை அலங்காரப்படுத்தி வந்தனர்.

பிரான்மலைக் கோட்டை மேலிருந்த படை வீரர்கள் ஊருக்குள் வருபவரையும், வெளியே செல்பவரையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். மக்கள் சாரை சாரையாக மாட்டு வண்டிகளிலும் வீரர்கள் குதிரைகளிலும், சிற்றரசர்களும், அரசிகளும் சிவிகையிலும் பிரான்மலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஊர் மக்கள் அனைவரும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதால் வீட்டில் இருந்த மற்றப் பெண்கள் பல இனிப்பு பதார்த்தங்களைத் தயார் செய்து அவற்றைத் தோழிகளுடனும், மற்ற நண்பர்களுடனும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து உண்டனர். அன்னசத்திரங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் ஜனத்திரள் அலைமோதியது.

ஜனங்கள் ஆரவாரத்துடன் கலை நிகழ்ச்சிகளை ஒத்திகை பார்த்தனர். வெவ்வேறு ஊர்களிலிருந்து கலை நிகழ்ச்சிக்காக வந்த கலைஞர்கள் உள்ளுர்க் கலைஞர்களுடன் போட்டி போட்டு ஒத்திகை பார்த்தனர்.

அச்சமயம் பல்லக்கு ஒன்றும் அதைச் சுற்றி சில மனிதர்களும் இசைக் கருவிகளுடன் ஊருக்குள் வந்தனர்.

“கொடுங்குன்றநாதர் ஆலயத்திற்கான வழி இது தானே..?” என்றான் பல்லக்குடன் வந்த ஒருவன், அங்கு குழுமியிருந்த மக்களிடம்.

“ஆம்… நீங்கள் ஊருக்குப் புதியவரா? ” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

“ஆம். நாங்கள் வடக்கிலிருந்து வருகிறோம். நாடெங்கும் கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்கள் நாட்டிற்கு வந்த பொழுது இளவரசிக்கு விவாகம் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் இங்கு கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்துள்ளோம்” என்றார்.

“ஆஹா… எங்களுக்கும் பல நாட்களாக வெளியூர் நடனங்கள் காண வேண்டும் என்று விருப்பம்தான். நல்ல காரியமாகத்தான் வந்துள்ளீர்கள் . நீங்கள் நேராகச் சென்று தடாகத்தைக் கடந்தால் விருந்தினர்கள் தங்கி ஓய்வெடுத்து கொள்ள ஒரு சத்திரம் உண்டு.”

“நல்லது நாங்கள் சென்று வருகிறோம்” என்றவர்கள் சிவிகையைத் தூக்கிக் கொண்டு சென்றனர். அவர்களின் தலைமறைந்ததும் கூட்டத்தில் இருந்த ஒருவன், “டேய் மருது, பல்லக்கில் இருந்த பெண்ணை நான் பார்த்தேனடா” என்றான்.

“என்ன… அந்த மங்கையை நீ பார்த்தாயா..? அவள் எப்படி இருந்தாள்..?”

“அந்த மங்கை… மங்கை…. உயர்ஜாதிக் குதிரைபோல் இருந்தாளடா” என்று சொல்லவும், கூட்டத்தில் சிரிப்பொலி அதிர்ந்தது. இவ்வாறு கேலியும் கிண்டலுமாக ஜனங்கள் பொழுதைக் கழித்தனர்.

ளவரசி வேலுநாச்சியார் விவாஹ வைபவத்திற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். உயர்தர ஆடை அணிகலன்களும் பிரத்யேகமாகச் செய்யப்பட்ட மலர் அலங்காரங்களும் சேர்ந்து அவளுக்கு அழகைக் கூட்டியது. தன் வாளை உருவி எதிரிகளின் தலைகளை மண்ணில் உருள செய்யும் கைகளுக்கு தங்க வைர, வளையல்களும்,. இதுவரை யாரும் கண்டிராத உள்ளங்கையின் மத்தியில் சிவப்பென மருதாணியும், குதிரையை விட அதிவேகமாக விரைந்து சென்று எதிரிகளைச் சுற்றி வளைக்கும் கால்களில் சதங்கைகளும், எதிரியை எதிர்த்து வளைந்து கொடுக்கும் இடையினில் ஒட்டியாணமும், பட்டு, பீதாம்பரத்தில் ஆடைகளும் தரித்திருந்தாள்.

துணிச்சல் மிகுந்த முகத்தில் நாணம் பூத்திருந்தது. மணப்பெண்ணுக்கு உண்டான சர்வ செளந்தர்யங்களையும் கொண்டு அழகான மங்கையெனக் காட்சி தந்தாள். அவளுக்கு ஒரு பொருத்தமான மணமகனாக முத்து வடுகநாதரும் இருந்தார்.

“அத்தான், விவாஹத்துக்கான நேரம் வந்தாகிவிட்டது. ஆனால் இன்னும் என் உடன் பிறவாத் தங்கை குயிலி வரவில்லையே… அவள் இது குறித்து செய்தி ஏதேனும் அனுப்பி இருக்கிறாளா..?” என்றாள் வேலுநாச்சியார்.

“எனது தோழன் சுமத்திரன் அங்கு இருக்கும் வரை எதற்கும் கவலை கொள்ள தேவையில்லை வேலு.”

“யாரு…? சுமன் தான் சுமத்திரனா..? அவன் உங்கள் தோழனா..?” -வியப்புடன் கேட்டாள்.

“ஆம் வேலு… சமயம் வரும் பொழுது உன்னிடம் கூறலாம் என்றிருந்தேன். தற்பொழுது, சுமனும் குயிலியும் இணைந்து மராட்டிய மன்னனின் படைகள் ராமநாதபுரத்தை முற்றுகையிடும் முன்னதாக முறியடித்து விட்டதாக தகவல் வந்துள்ளது.”

“என்ன… மராட்டியர் ராமநாதபுரத்தை நோக்கிப் படையெடுத்து வந்தார்களா? இச்செய்தி மாமா தாண்டவராயருக்குத் தெரியுமா..?”

“அவருக்குத் தெரியாமலா..? முன்னேற்பாடாக அவர் அனுப்பிய வீரர்கள் சுமனுடன் சேர்ந்து கொண்டு ராஜசிம்மமங்கலத்தில் மராட்டியப் படைகளைத் தோற்கடித்து விட்டதாகவும், ராமநாதபுரத்தில் அமைச்சர் பசுபதியின் படைகள் குயிலியுடன் இணைந்து தேவிப்பட்டினத்தில் மராட்டிய படைகளை முறியடித்து விட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இனி கவலை கொள்ள வேண்டியதில்லை. இன்று இரவு நடைபெறும் குரவை கூத்தை மகிழ்ச்சியாகக் கண்டுகளிக்கத் தயாராகு” என்றவர் தனது கடைக்கண்ணால் வேலுவைச் சற்றே காதலுடன் பார்க்க… அவரின் பார்வையின் வெப்பம் தாங்காது நாணத்துடன் தலை கவிழ்ந்து கொண்டாள் இளவரசி வேலுநாச்சியார்.

ரவு ஆலயத்தின் பின்பக்க மைதானத்தில் நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் மக்கள் சாரை சாரையாக இளவரசியின் விவாக வைபவத்தைப் பார்க்கக் குழுமியிருந்தனர். இருளை விரட்ட பத்தடிக்கு ஒன்றாக தீப்பந்தங்களும் தீபங்களும் ஏற்றப்பட்டிருந்தது. மைதானத்தை ஒட்டிய பகுதியில் அரசர்களும் மந்திரிகளும் அமர்ந்து பார்வையிடப் பெரிய அரங்கங்கள் அமைக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பிற்கு வீரர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். வெகு விமர்சையாக விழா ஆரம்பித்தது.

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...