கால், அரை, முக்கால், முழுசு! | 16 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு! | 16 | காலச்சக்கரம் நரசிம்மா

16. இரண்டாவது விக்கெட் காலி

”டேய்… சம்திங் ஃபிஷி..! மெஸ் மாமி வீட்டுக்கு நாம டிபன் சாப்பிடப் போனோம்..! அதுக்குள்ளே இங்கே ‘ஒரு விக்கெட் காலி’ அப்படின்னு கதவுல எழுதி வச்சிருக்கு…! எல்லாம் அந்த கங்கணா வேலையாத்தான் இருக்கணும்..! நம்மளை அவமானப்படுத்தி விரட்டறதுக்கு ஏதோ சதி செய்யறான்னு நினைக்கிறேன். நாம அவளை ஓரங்கட்டிட்டோம்னு கோபத்துல இப்படியெல்லாம் செய்யறான்னு நினைக்கிறேன். எதுக்கும் நீ பத்திரமா இரு, கார்த்திக்..!” –ஆதர்ஷ் குரலில் எச்சரிக்கை தொனித்தது.

”நம்மளை மீறி என்ன நடக்க போறது, ஆதர்ஷ்..! கங்கணாவால என்ன செய்ய முடியும்..? நாம லைஃப்ல செட்டில் ஆகிட்டு, போய்க்கிட்டே இருப்போம்..!” –கார்த்திக்கின் மனக்கண்ணில், இந்துவின் பேரழகு உருவம் நிழலாடியது.

”இடியட்..! உன் நல்லதுக்குத்தான்டா நான் பேசிட்டு இருக்கேன்..! அந்த மெஸ் மாமி வீட்டு பெண்ணைப் பார்க்கறப்ப எனக்குச் சந்தேகமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். லைஃப்ல செட்டில் ஆகணும்னு பேசிட்டு இருக்கே..! இப்போதைக்கு உன்னோட மேரேஜ் கனவுகளைத் தள்ளி வை. நாம நாலு பேரும் இப்ப எந்த பொண்ணு கிட்டேயும் மாட்டிக்கக் கூடாது. கங்காணவை விரட்டிட்டுதான் நமக்கு மேரேஜ்..!” –ஆதர்ஷ் காட்டத்துடன் சொன்னான்.

”நீ ஏன் அந்த கங்கணாவையே நினைச்சுகிட்டு இருக்கே..! கொஞ்ச நேரம் அவளை மறந்துட்டு ஆபீசுக்குக் கிளம்ப வேண்டிய வேலையைப் பாரு..! இன்னைக்கு அவசர மீட்டிங் இருக்கு இல்லை..?” –ரேயான் கூறினான்.

மீட்டிங்கில் பங்கேற்க ஆதர்ஷும், கார்த்திக்கும் மட்டும் புறப்பட்டுச் செல்ல, தினேஷ் நிதானமாக குளித்துவிட்டு, தனது டூ வீலரில் ஆபீசுக்குப் புறப்பட்டான். தனது பைக்கிற்கு வேகம் கொடுத்து முன்னேறியவன் ஈஸிஆர் ரோட்டில் நுழைவதற்கு பச்சை சிக்னல் விழுந்ததும் தனது பைக்கிற்கு வேகம் கொடுத்தான். இவன் வண்டிக்கு இன்னும் வேகம் கொடுத்து ஈஸிஆர் ரோட்டில் திரும்ப, சிக்னலை அலட்சியம் செய்தபடி வேகமாக ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண், திடீரென்று தினேஷின் பைக் குறுக்கே வருவதைப் பார்த்து, பதட்டம் அடைந்து நேராக அவன் பைக்கின் மீது வந்து மோதினாள். தினேஷ் சட்டென்று பிரேக் அடித்து, தனது உறுதியான கால்களைச் சாலையில் ஓங்கி மிதித்து கீழே விழாமல் சமாளித்தான். ஆனால் அந்த ஸ்கூட்டிப் பெண் பிரேக் அடிக்கத் தோன்றாமல் அப்படியே தடுமாறி வண்டியுடன் விழ, ஸ்கூட்டி ஓடிச் சென்று பிளாட்பாரத்தில் மோதியது.

சாலையில் பதட்டத்தில் கூட்டம் கூட, அந்த ஸ்கூட்டிப் பெண் உயிரே போனது போல அலறத் தொடங்கினாள். இத்தனைக்கும் கீழே விழுந்திருந்தாலும், லேசான சிராய்ப்புகள்தான் அவளுக்கு ஏற்பட்டிருந்தன. தனக்கு விபத்து ஏற்படுத்தியவன், வீரப்பன் மீசையுடன் பேட்டை வஸ்தாது போல இருந்திருந்தால், ஒருவேளை அந்தப் பெண் பேசாமல், தனது வண்டியை எடுத்துக்கொண்டு போயிருப்பாளோ என்னவோ…

ஆனால் கம்பீர வாலிபனாக தினேஷ், கையில், பிரேஸ்லேட் கருப்புக்கண்ணாடி சகிதம், தனது பைக் ஸ்டாண்டை போட்டுவிட்டு, இவளை நோக்கி வருவதைக் கண்டதும், அவன் தன்னை ஈவ் டீசிங் செய்யும் ஒரு பகுதியாகத்தான், இவளை நடுரோட்டில் தள்ளிக் குப்புற விழவைத்தான் என்கிற எண்ணம் ஏற்பட்டது. எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறாள்..! வண்டி ஓட்டிச் செல்லும் பெண்களை வேண்டும் என்றே சீண்டி, கீழே விழ வைப்பதுதானே இந்த ரோடுசைடு ரோமியோக்களுக்கு வேலை..! இவனை விடக்கூடாது. இவனைப் பிடித்துப் போலீசில் கொடுத்தால், ரௌடியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த வீரப்பெண்மணி என்று மறுநாள் பேப்பர்களில் வரும். சேனல்களில் பைட் கிடைக்கும் என்று நினைத்துவிட்டாள்.

”ஸ்டுபிட், இடியட், மங்கி, கூஸ், டாமிட்..!” –என்று பராக் பராக் கட்டியம் சொல்லி மன்னரை வரவேற்பது போல, தினேஷை வரவேற்றாள், அந்தபெண்.

”வாட் ஹேப்பண்ட் மேடம்..?” –ஒன்றுமே புரியாமல் கேட்டான், தினேஷ்.

”தள்ளுறதையும் தள்ளிட்டு, இங்கிலீஷ் வேற… ஏன் மேன் என்னைத் தள்ளி விட்டே..? எனக்கு அடிகிடி பட்டு, என் அழகு பாதிக்கப்பட்டிருந்தா நீயா மேன் என்னைக் கல்யாணம் செஞ்சுக்குவே..?” –பொரிந்து தள்ளினாள் அந்தப் பெண்.

”அழகா..! எங்கே…? கீழே எங்கேயாவது போட்டுடீங்களா..? இங்கே எங்கேயும் காணோமே..! ஒருவேளை வீட்டுலயே வச்சுட்டு வந்துடீங்களா..?” –தினேஷ் சுற்றுமுற்றும் பார்த்தபடி கேட்க, பொங்கும் ஆக்ரோஷத்துடன் அவனைக் கடித்துத் துப்பினாள்.

”கீழே தள்ளி விட்டுட்டு, நக்கலா பண்றே..? இரு, வச்சுக்கறேன்… போலீஸ்… போலீஸ்..!” –அந்தப் பெண் அலற, பல்லைக் குத்தியபடி சற்றுத் தொலைவில் நின்றிருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் வந்தார். இன்னும் மாதக்கடைசி வரவில்லை என்பதால் பல்லை ஒரு குச்சியால் குத்தியபடி நிதானமாக வந்தார்.

”என்னம்மா ப்ராபளம்…?” –போலீஸ் கேட்டார்.

”எனக்கு குச்சியால் பல்லைக் குத்தற போலீஸ் வேணாம்..! லத்தியால பல்லைப் பெயர்க்கற போலீஸ் வேணும்..! இந்த ஆள் என்னை ஈவ் டீசிங் செஞ்சு கீழே தள்ளிட்டான்..!”

”சார்..! இந்தம்மா ராங் சைட்ல வண்டியை ஓட்டிட்டு வந்துட்டு, என்மேல பழியை போட்டு, திசை திருப்பப் பார்க்கிறாங்க..!” –தினேஷ் கூற, அந்தப் பெண் முறைத்தாள்.

”ராங் சைடோ… ரைட் சைடோ…. நாங்க எப்பவுமே பெண்களோட சைடுதான்..! அப்படியே இருங்க..! போலீசைக் கூப்பிடறேன்..!” –என்று மிரட்ட, கூட்டம், காலையிலேயே தெருவில் சீரியல் பார்க்கும் வாய்ப்பை நழுவ விடாமல், அவர்களைச் சுற்றிக் குழுமத் தொடங்கினர்.

”ரெண்டும் டாவு பார்ட்டிதான்..! அந்த பையனை அது ஐஸ்க்ரீம் கேட்டிருக்கும். அவன் கையில பைசா இல்லைனு, எட்டணாவுக்கு மல்லாக்கொட்டை வாங்கி கொடுத்திருப்பான். இது கோபத்துல, நடுரோட்டுல சண்டை போடுதுபோல” –ஒரு வழிப்போக்கன் அந்தச் சண்டைக்கு விளக்கம் கொடுத்திருந்தான்.

போலீசை அழைப்பதற்காகான முயற்சிகளில் அந்த போக்குவரத்துப் போலீஸ்காரர் இறங்க, ”எக்ஸ்க்யூஸ் மீ..!” என்று இனிய குரல் ஒன்று கேட்டது.

மூவருமே திரும்பிப் பார்த்தனர்.

தேவதையை போல ஒரு பெண் நின்றிருந்தாள். இவனது பைக் அருகே, அவளுடைய பிஎம்டபிள்யூ கார் நின்றிருந்தது.

”சார்..! அந்த ஜென்டல் மென் மேல தப்பு இல்லை. நான் சிக்னல்ல ரெட் லைட் வந்ததால் நின்றிருந்தேன். இந்த லேடி சிக்னல்ல நிற்காம, என்னைத் தாண்டி வேகமாப் போனாங்க. அப்ப சரியா அவரும் ஈசிஆர் ரோட்டுல திரும்பியிருக்காரு. அவரு மேல எந்த தப்பும் இல்லை..! அந்த லேடி மேலதான் எல்லா தப்பும்..!” –அந்தப்பெண் கூற, கான்ஸ்டபிள் வியப்பிலும், தினேஷ் பிரமிப்பிலும், அந்தத் பெண் எரிச்சலுடனும், வந்த தேவதையைப் பார்த்தனர்.

அந்தபெண்ணையும், அவளது காரையும் பார்த்தவுடன், போக்குவரத்துப் போலீஸ்காரருக்கு வியர்த்தது. போலீஸ் டெபுடி கமிஷனர், சாய்நாத் மகள்தானே இந்த பெண்..!

அவ்வளவுதான்..! ஓர் அபௌட் டர்ன் எடுத்து, அந்தப் பெண்ணை முறைத்தார்.

”சாவுக் கிராக்கி..! எவன் உனக்கு லைசென்ஸ் கொடுத்தான்..? ஒழுங்கு மரியாதையாக் கிளம்பிப் போ..! இல்லேன்னா… பிடிச்சு உள்ளே உக்கார வச்சிடுவேன். கமிஷனர் ஐயா பொண்ணே சொல்லிட்டாங்க, உன் மேலதான் தப்புன்னு..!”

இனி அங்கே தனது ஜம்பம் பலிக்காது என்பதைப் புரிந்து கொண்டு, அந்தப் பெண் பேசாமல், தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றாள்.

.”தேங்க் யூ மேடம்..! நியாயமா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுக்குத்தான் சப்போர்ட் செய்யறது வழக்கம்..! நீங்க எப்படி என்னை சப்போர்ட் செஞ்சீங்க..!” –தினேஷ் அதிசயித்தான்.

”நோ வே..! நான் நியாயத்திற்குத்தான் சப்போர்ட் செய்வேன். ஆல் திஸ் டாக் ஆப், பெண்ணுரிமை, பெண்ணியம்…எல்லாம் சுத்த ரேபிஸ்..! ஆண்கள்தான் சுயநலம் இல்லாத தியாகிகள். ஐ ரெஸ்பெக்ட் மென்..!” –அந்தப் பெண் சொன்னதும், திகைத்துப் போய் நின்றான்.

சரியாக ஒரு பழைய பஸ், முகத்துக்கும், பின்புறத்திற்கும் மட்டும் பிங்க் பெயிண்ட் அடிக்கப்பட்டு, பெண்களை மட்டும் சுமந்துகொண்டு சென்றது.

”அதோ பாருங்க..! இலவசம் என்கிற பெயர்ல பெண்களோட சுயமரியாதையைக் கெடுக்கறாங்க. ஆணுக்கு பெண் சமஉரிமைன்னு பேசிட்டு, இந்த மாதிரி பெண்கள் ஓசிப் பயணம் செஞ்சா, ஆண்கள் கிட்டே என்ன மரியாதை இருக்கும்..? எங்களுக்கு ஓசிப் பயணம் வேண்டாம், ஆண்கள் மாதிரியே நாங்களும் காசு கொடுத்து போகிறோம்..! எங்களுக்குச் சலுகை வேண்டாம்..!ன்னு பெண்கள் அரசுகிட்டே சொல்லணும். ஆண்கள் துட்டு கொடுத்து பஸ்ல போறாங்க..! ஆனா அவங்கதான், தங்கைக்கு, பெண்களுக்குனு திருமணம் செய்யறாங்க. என்னைக் கேட்டா, ஆண்களுக்கு மட்டும் இலவசம்னு பஸ் விடணும்..!” –என்றாள் அந்த பெண்..!

”மேடம் ! உங்க பெயர் என்ன ! உங்களுக்கு எங்க டார்க் டெமான்ஸ் சார்பா ஒரு பாராட்டு விழா நடத்தணும்…!”

”டார்க் டெமான்ஸ்..?” –குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

”ஆமாம். பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சங்கம்..! அவசியம் நீங்க எங்க நண்பர்களை பார்க்கணும். உங்களைப் பார்த்தால், என் நண்பர்கள் சந்தோஷப்படுவாங்க. உங்க பெயர் என்னங்க..?” –தினேஷ் கேட்டான்.

”ஐயாம் அர்ச்சனா..! கமிஷனர் சாய்நாத் பெண்..!” –என்றபடி தனது கார்டை நீட்டினாள்.! நான் ஒரு வார் விடோ..! என் கணவர், எல்லை துப்பாக்கிச் சூடுல இறந்து போயிட்டார். நான் ஒரு பொட்டிக் வச்சிருக்கேன்.” –என்றாள்.

”ஒரு தியாகியோட மனைவி..! அதனாலதான் ஆண்களைப் பற்றி நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க..!” –தினேஷ் கூறினான்.

”எஸ்..! ஆண்களை மதிக்கிறதாலதான் நான் ஓர் ஆர்மி வீரரைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேனு அப்பாகிட்டே சொன்னேன். வேணுமின்னா போலீசைக் கல்யாணம் பண்ணிக்கன்னு அப்பா சொன்னாரு..! இல்லை, எனக்கு ஆர்மி வீரர்தான் வேணும்னு பிடிவாதம் பிடிச்சு அவரைக் கட்டிகிட்டேன். திடீர்னு அவர் இறந்த செய்தி வந்துது. கொஞ்ச காலம்தான் அவரோட வாழ்ந்தேன். இருந்தாலும், ஒரு தியாகி எனது கணவர் என்கிற மனநிறைவு போதும் எனக்கு..! சி யு..! எனக்கு நேரமாகுது” –என்றபடி அர்ச்சனா புறப்பட்டாள்.

அவள் பூசியிருந்த செண்ட்டின் நறுமணம், தினேஷின் நாசியைத் தாக்கியது. ஆஹா..! முதன்முறையாக ஆண்களை மதிக்கும் ஓர் பெண்ணைப் பார்க்கிறான். வார் விடோ..! கமிஷனர் பெண்..! பணம், அதிகாரம் எல்லாமே இருக்கிறது. நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று இவனுக்கு எதிராக ஒரு பெண் இருந்தும், இவனுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறாள். இவளைவிட, ஓர் அற்புதப்பெண் இவனுக்குக் கிடைப்பாளா..?

‘கோரோமென்டல் பொட்டிக்’ என்று கறுப்புக் கார்டில் துலங்கும் தங்கநிற எழுத்துகளைப் பார்த்தான். கீழே அர்ச்சனா கெளதம், புரொப்ரைட்டர் என்று எழுத்துகள் மின்னின.

கெளதம் என்கிற பெயரை மறைத்து, அவனது கண்களில் தினேஷ் என்கிற கொட்டை எழுத்து தோன்றியது. அர்ச்சனா தினேஷ் –ஒரு முறை கூறி பார்த்துக்கொண்டவன், கார்டைச் சட்டைப் பாக்கெட்டில் வைத்து, அதை வருடிக்கொடுத்தபடி தனது பைக்கை நோக்கி நகர்ந்தான்.

டிரினிட்டி இந்தியா அலுவலகத்தில், H.R. டிபார்ட்மென்ட் அஞ்சு வேகமாக ஆதர்ஷின் அறையில் நுழைந்து அவனை, அலட்சியமாகப் பார்த்தாள்.

”புதுசா OTT ஆட்களை எடுக்கணும்னு பிரதீப் சார் சொல்லியிருந்தார். அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கு. உங்ககிட்டே கொடுக்கச் சொன்னார்..!” –என்றபடி ஃபைலை அவன் மேஜை மீது வைத்துவிட்டு, திரும்பிப் பாராமல் நடந்தாள்.

‘லவ்சி ஹிப்போபோட்டமஸ் (அசிங்கம் பிடிச்ச நீர்யானை)’ என்று முணுமுணுத்தபடி, அவள் வைத்திருந்த பைலை இழுத்துத் திறந்து பார்த்தான் ஆதர்ஷ்.

”ஆதர்சு குட்டி..! ரெண்டாவது விக்கெட்டும் காலி..! –இப்படிக்கு FAIR ANGLES” என்று ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியுடன் அஞ்சு சென்ற வழியையே பார்த்தான். ”அஞ்சு..!” ஆதர்ஷ் அலறிய அலறல், டிரினிட்டி இந்தியாவின் பார்க்கிங் பகுதி வரை எதிரொலித்தது.

–மோதல் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...