சிவகங்கையின் வீரமங்கை | 17 | ஜெயஸ்ரீ அனந்த்
சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றாள் குயிலி. அதற்குள் பாய்ந்து வந்து குயிலியை நெருங்கிய சுமன், ஸ்தம்பித்து நின்ற குயிலியின் தோளை உலுக்கி அவளை நினைவுக்குக் கொண்டு வந்தான்.
“குயிலி… என்ன சிலை போல் நின்று விட்டாய்..?”
அவன் ஸ்பரிசம் பட்டதும் சடாரென்று நினைவு வந்தவளாய், “ஹ்ஹா… தாங்கள்…. தாங்கள்… உண்மையைக் கூறுங்கள். இத்தனை சிறப்பாக வளரி எறிகிறீர்களே..? தாங்கள் யார்..? யார் கூறி எங்களுக்கு அரணாக வந்துள்ளீர்..?”
கேட்டவன் சுமனிடமிருந்து சற்று விலகி நின்றாள் .
“நான் யார் என்பதைச் சமயம் வரும் பொழுது தெரிவிக்க வேண்டும் என்று இளவரசர் ஆணையிட்டதால் உங்களிடம் என்னைப் பற்றிய ரகசியத்தை தெரிவிக்கவில்லை. இப்பொழுது நான் யார் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.” என்றவன், சற்று நெஞ்சை நிமிர்த்தி “நான் மதுரை நாயக்கர் விஜயகுமாரரின் உடன் பிறந்த தமையன், இளவரசரின் ஆத்மார்த்த தோழன் சுமத்திரன். இளவரசரின் விருப்பப்படி அரசரைப் பாதுகாக்கவே வந்துள்ளேன்” என்றான்.
குயிலி ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றதுடன் அவளின் நாவானது மேல் அண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது.
“நீங்கள் விஜயகுமாரரின் தமயனா..? எங்கள் இளவரசரின் தோழனா..?”
“ஆம். அப்படித் தான் சொன்னேன். இந்தச் சங்கதி உங்கள் செவிகளை எட்டவில்லை என்றால் அதற்கு நான் காரணம் அல்ல. உங்கள் செவிகள் தான் காரணம்.”
“இந்தச் செய்தி இளவரசிக்கு தெரியுமா?”
“இது வரை தெரியாது. இனிமேல் தெரிந்து கொள்ளலாம். அது இருக்கட்டும், தஞ்சை மராட்டியப் படையால் இங்கு ஆபத்து வர காத்துக் கொண்டிருக்கிறது. நம் படை வீரர்கள் சிலரை இங்கு வரவழைத்து அணைக்குக் காவல் இட வேண்டும்.” என்றவன்… தாமதிக்காமல் மறுபடியும் தனது இடையினில் இருந்த சிறிய வட்ட வடிவிலான சக்கரம் போன்ற ஆயுதத்தை எடுத்து இரு வேறு திசைகளில் எறிந்தான். இவன் எறிந்த திசைகளில் “ஐய்யோ… அம்மா…” என்ற அலறலுடன் சில எதிரிகளின் தலைகள் நிலத்தில் வீழ்ந்தன.
“குயிலி, நீ தாமதிக்காமல் விரைவாக தேவிப் பட்டிணம் சென்று அங்கு நம் வீரர்களை தயார்ப்படுத்து, விரைவில் நான் அங்கு வந்து விடுவேன்.” என்றவன், எதிரிகளைத் தாக்கி அழிப்பதற்கு ஆயத்தமாக நின்றிருந்தான். அச்சமயம் வேகமாக வந்த குதிரைகளில் இருந்த வீரர்கள் சிலர், “வெற்றிவேல்… வீரவேல்…” முழக்கத்துடன் சுமனின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.
“இளவரசர் சுமத்திரனுக்கு வணக்கம், அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை உங்களிடம் இதைச் சமர்ப்பிக்கச் சொன்னார்.” என்று வந்த வீரர்களில் ஒருவன் சுமனிடம் ஓலை ஒன்றைக் கொடுத்தான். அதிலிருந்த செய்தியைப் படித்த சுமனின் முகங்கள் பல்வேறு முகபாவங்களைக் காட்டியதை குயிலி கவனிக்கத் தவறவில்லை.
வேறு சமயமாக இருந்திருந்தால், தாங்கி வந்த செய்தி என்ன என்பதை சுமனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பாள். ஆனால் இப்பொழுதோ சுமன், சுமத்திரன் ஆகி இருந்தான். இவரிடம் எப்படிக் கேட்பது? என்ற தயக்கத்தில் ஏதும் பேசாது தனது குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றாள்.
அதே சமயம் சுமனுடன் வரும் பொழுது இருந்த மகிழ்ச்சி இப்பொழுது அவளிடத்தில் இல்லை. இவளுக்குள் ஒரு விரிசல் விழுந்திருந்ததைத் தெரிந்து கொண்டாள். ஆனாலும் அவள் பெண் அல்லவா, அவள் இதயம் அந்த விரிசலை ஏற்க முடியாமல் திணறியது.
•
அரசர் பத்திரமாக பிரான்மலை சென்ற செய்தி கேட்டதும் நிம்மதியடைந்த அமைச்சர் பசுபதி, மராட்டியப் படைகளை எதிர்ப்பதற்காக வீரர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு தாக்குதலின் வியூகத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார்.
அரண்மனையைச் சுற்றிலும் இருந்த அகழிகளைக் கடக்கும் மரப்பாலங்கள் அகற்றப்பட்டன. திருப்பத்தூர் அனுமந்தபுரம் கோட்டை வாசல்கள் மூடப்பட்டன. அகழிகளில் பல ராட்சஷ முதலைகள் விடப்பட்டன. அரண்மனையைச் சுற்றிலும் காலாட்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டதுடன், அவர்கள் தேவையில்லாமல் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவத் தளவாடங்களிளிலிருந்தும், ஆயுதக் கிடங்கிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஆயுதங்களுடன் வழி நெடுக படை வீரர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தேவி பட்டிணம், ராமேஸ்வரம் போன்ற துறைமுகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது. மொத்தத்தில் ராமநாதபுரம் அரண்மனைக்கு உட்பட்ட பகுதிகளில் சிறிது சிறிதாக பதட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
மக்கள் பீதியில் “ஐய்யோ… அபாயம், அபாயம்… போர் மூண்டது…” என்று பேசிக் கொண்டிருந்தாலும், சில வாலிபர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்த தக்க சந்தர்ப்பம் கிடைத்ததாக எண்ணி, படை வீரர்களாக காலாட்படையில் சேர்ந்து கொண்டனர்.
இச்சமயத்தில் கீழக்கரையிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைகள் தருவிக்கப்படுட்டு ஐநூறு கூலிப்படையிரையும் அழைத்துக் கொண்டு சீதக்காதி, பசுபதியுடன் சேர்ந்து கொண்டு மராட்டியர்களை எதிர்க்க ஆயத்தமாக இருந்தார்.
“சீதக்காதியாரே… தாங்கள் கூறியது போல் எங்கள் நாட்டிற்கு ஆபத்து என்றவுடன் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எங்களுடன் சேர்ந்து கொண்டு எதிரியை எதிர்க்கத் துணிந்ததற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.”
“அமைச்சரே… நாங்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து என்றுமே பின் வாங்க மாட்டோம். இது உங்கள் நாடு நாங்கள் வாழ வந்தவர்கள். உங்களின் எதிரி எங்களுக்கும் எதிரியல்லவா..? இதில் நன்றிகள் எதற்கு..?”
“சரி வாருங்கள். எதிரிகள் முன்னேறி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தலாம் ” என்ற பசுபதியின் தலைமையிலும் சீதக்காதியின் தலைமையிலும் படை வீரர்கள் தஞ்சையை நோக்கி விரைந்து சென்றார்கள்.