கால், அரை, முக்கால், முழுசு | 14 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 14 | காலச்சக்கரம் நரசிம்மா

14. இனியவளே வா !

தொடர்ந்து லைலா மஜ்னு பிளாட்டின் பஸ்ஸர் ஒலிக்க, ரேயான் மீண்டும் ஒரு முறை மாஜிக் ஹோல் வழியாகப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்தான்.

மிகவும் உரிமையுடன் உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண். ஸ்லீவ்லெஸ் லாங் ஃபிராக் போட்டு, இரு காதுகளிலும் பெரிய வளையங்களைப் போட்டிருந்தாள்.. அடர்த்தியான கூந்தலை விரித்துப் போட்டிருக்க, அவள் உள்ளே நுழைந்தபோது, பெண்கள் உபயோகிக்கும் பர்ப்யூமின் நெடி பலமாக வீசியது.

ஹேய்கங்கணா..! ஏதாவது மிட் நைட் பார்ட்டி நடக்குதா இங்கே..? இவ்வளவு கைஸ் இருக்குது..!..”

கதவை பிடித்துக்கொண்டு பிரமித்துப்போய் பார்த்துக் கொண்டிருந்த, ரேயானை அலட்சியமாகப் பார்த்தாள், அந்த பெண்.

ஏ பாய்..! ஏன்னா மென் பார்த்துகிட்டு இருக்குது..? என் பேக்கேஜ் உள்ளே வரார் இல்லே…! அதை தூக்கி நீ உள்ளே வைக்குது..!” —என்று அதட்ட, கார்த்திக் அவளை கோபத்துடன் பார்த்தான்.

யாருமா நீ…? லூசு..! ராத்திரி ரெண்டு மணிக்கு எங்க பிளாட்க்குள்ளே வந்து கலாட்டா செய்யறே..? எங்களை அது இதுன்னு பேசறே..! பேட்டி, பைக்கு, வரார் இல்லே..னு மரியாதை கொடுக்கிறே..!” —கார்த்திக் கேட்க, அவள், அவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

இது கங்கணாவோட ரோமியோ ஜூலியட் பிளாட்தானே..?”

அதுவரை பேசாமல் இருந்த ஆதர்ஷ், காட்டத்துடன், அவளை அதட்டினான்.

வெளியில இருந்தபடியே கேட்க வேண்டிய கேள்வி..! உள்ளே வந்து கேட்கிறியே..! நீ தேடி வந்த பிளாட் கீழே இருக்கு..! இது பாய்ஸ் தங்கியிருக்கிற பிளாட்..!”

ஐ ஆம் சோ சாரி..! இரண்டாம் மாடியா, மூன்றாம் மாடியான்னு குழப்பம். அதுதான், நேரே மூணாவது மாடிக்கு வந்துட்டேன். வெரி சாரி அகைன்..! பிளைட் டிலே ஆகிடுச்சு. அதுதான், இவ்வளவு லேட்டா வந்தேன்..” —அந்த பெண் விளக்க, ஆதர்ஷ் பல்லைக் கடித்தான்.

உன் விளக்கம் எல்லாம் வேணாம்..! அவுட்..!” —ஆதர்ஷ் உறும, அந்தப் பெண், சற்றே பயந்து பின்வாங்கினாள்.

பிளாட்டை விட்டு வெளியேறியவள், சட்டென்று, கதவைப் பிடித்துக்கொண்டிருந்த ரேயானைப் பார்த்தாள்..!

தேங்க் யூ பாய்..! எனக்கு நீ கதவைத் தொறந்து இருக்குது..! யு லுக் க்யூட்..!” என்றபடி ரேயானின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டு, வெளியேறினாள் அந்த பெண்.

அந்தச் சிறுதட்டு, ரேயானை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் தாக்கி, ஒருவித மின்சாரத்தை பாய்ச்சி விட்டிருக்க வேண்டும்.

உன் பெயர் என்ன டாலி..?” —ரேயான் கிசுகிசுத்த குரலில் கேட்டான்.

பாஃனி மிராண்டா (Fanny Miranda)” என்று சிரித்தபடி கூறிய, பாஃனி, படிகளில் இறங்கி இரண்டாவது தளத்திற்குச் சென்றாள்..!

ரேயான்..! அவகிட்டே என்னடா கிசுகிசுத்தே..?” —தினேஷ் கேட்டான்.

இனிமே இந்த பிளாட்டு பக்கம் கால் வச்சே, கொன்னுடுவேன்னு சொன்னேன்..!” —சமாளித்தான், ரேயான்.

இல்லையே..! அந்த பொண்ணு உன் கன்னத்தை தட்டினப்பா, உன் முகத்துல கோபம் வந்திருக்கணுமே..! ஓங்கி அவள் தவடையில ஒரு அடி கொடுத்திருக்கணுமே. நீ அதை என்ஜாய் பண்ணின மாதிரி இல்லே இருந்தது..?” —கார்த்திக் கேட்டான்.

அப்படியெல்லாம் இல்லே, ஆதர்ஷ்..! உன்னை விட நான் பெண்கள் விஷயத்துல உறுதியானவன், தெரிஞ்சுக்க..! என்னை யாரும் கவிழ்க்க முடியாது..!” —ரேயான் சொன்னாலும், தன்னை மறந்து அவனது வலது கை பாஃனி தட்டிவிட்டு சென்ற, கன்னத்தையே வருடிக்கொண்டிருந்தது. மற்ற மூவரையும் திரும்பியும் பார்க்காமல், தனது அறையை நோக்கி மெதுவாக நடந்தான், ரேயான்.

எனக்கு என்னவோ டவுட்டா இருக்கு..! ராத்திரி ரெண்டு மணிக்கு ஒரு பொண்ணு, நம்ம பிளாட்டுக்கு வந்து பெல் அடிக்கிறா..? எதுக்காக கங்கணா வீட்டுக்கு இவ வந்திருக்கா..? கங்கணாவும், அவள் அம்மாவும் மட்டும்தானே, கீழ் பிளாட்டில் தங்கப் போவதாக அட்டெண்டர் பஞ்சு சொன்னான்..? இப்ப இந்தப் பெண் வந்திருக்காளே..! இந்தக் கங்கணா ஏதோ சதித்திட்டம் போடறாள்..! எல்லாரும் எச்சரிக்கையா இருங்க..! எல்லோரும் நம்ம வேலையில போகஸ் செய்யுங்க..! நாளைக்கு பிரதீப் ஒரு முக்கிய மீட்டிங் சம்மன் செஞ்சிருக்காரு..! டிரினிட்டி இந்தியா குரூப் சார்பா OTT சேனலை அறிமுகம் செய்யறது விஷயமா, வேலைகளைத் தொடங்கி இருக்கார். நாம கங்கணாவை மூலையில உட்கார வச்சுட்டு, நம்ம திட்டங்களைச் செயல்படுத்துவதுல கவனம் செலுத்தணும். ஓகே. பெண்களை லவ் செய்யறது மட்டும் இல்லே, அவங்களை ஒரு பொருட்டா மதிச்சு சண்டை போடறதுகூட டைம் வேஸ்ட்…! அவங்க நம்ம லெவல் இல்லைனு ஒத்துக்கிட்டு, நாம முன்னேறிப் போய்க்கிட்டே இருக்கணும். அண்டர்ஸ்டாண்ட்..! போய் தூங்கற வழியைப் பாருங்க..!” —தனது அறையை நோக்கி நடந்தான் ஆதர்ஷ்.

கீழே இரண்டாவது தளத்தில் நுழைந்தாள் பாஃனி. கங்கணா கதவை திறந்தாள்.

என்ன பாஃனி இவ்வளவு லேட்..? இவ்வளவு நேரம் காத்திருந்தேன். இனிமே நீ வரமாட்டேன்னு தூங்கப் போயிட்டேன்.”

நான் லேட்டா வந்தது மட்டுமில்லேபை மிஸ்டேக் மாடியிலே இருக்கிற, பிளாட்ல போயி பெல்லை அடிச்சுது..! கதவை ஒரு க்யூட் கய் தொறந்தது..! ஆனால் மத்த மூணு பேரும் என் பேருல கோபத்தோடு கத்திச்சு மேன்..!”

பாஃனி! அவங்க கிட்டே எச்சரிக்கையோடு இரு..! அவங்க எம்சபிஸ்..! பெண்கள்ன்னா பிடிக்காது..! நீ இங்கே என்னோட தங்கற வரைக்கும், அவங்க கிட்டே எந்த வம்பும் வச்சுக்க கூடாது. ஓகே..!” —கங்கணா எச்சரித்தாள்.

பெண்கள்ன்னா பிடிக்காதா..? இன்ட்ரெஸ்ட்டிங்..! பிடிக்க வெச்சுடுவோம்..!” —பாஃனி சிரித்தாள்.

நான் இங்கே வந்து ஒரு மாசமாகப் போகுது..! அவங்களை நண்பர்களா ஆக வைக்கணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஒண்ணும் நடக்கலை..! நாலு பேருமே ஒரே குட்டையில் விழுந்த மட்டைங்க..!”

குட்டை, மட்டை எல்லாம், செம கட்டையைப் பார்க்கிற வரைக்கும்தான்…! வெயிட் பண்ணு..! நாலு பேருக்கும், நாய்க் காலர் மாட்டி, நம்ம பின்னாடி ஓடி வர வைக்கலாம்.” பாஃனி கூறினாள்.

ட்டெண்டர் பஞ்சு வழக்கமாக ஏழு மணிக்கெல்லாம், டார்க் டெமான்ஸ் நான்கு பேருக்கும் காலை டிபன் மற்றும் பிளாஸ்கில் காபி மற்றும் டீ கொண்டு வந்து கொடுத்து விடுவான். அன்று காலை மணி ஏழரை ஆகியும், இன்னும் அவன் வரவில்லை.

தினேஷ், பஞ்சுவுக்கு போன் செய்ய, அவன் மூக்கை உறிஞ்சியபடி பேசினான்.

சார்..! எனக்கு பாசிட்டிவ் வந்திருக்கு. என்னால இன்னும் ஒரு பத்து நாளைக்கு டிபன் கொண்டு வர முடியாது. ஒண்ணு செய்யுங்க. மருந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில், நீலா மாமி மெஸ்ன்னு ஒரு கடை இருக்கு. வழக்கமா அங்கேதான் உங்களுக்கு டிபன் வாங்கி வருவேன். நீங்க இந்த பத்து நாளைக்கு மட்டும், அங்கேயே போயி சாப்பிடுங்க. உடம்பு சரியானதும், நான் வாங்கி வந்து தரேன்.!” —பஞ்சு சொல்லிவிட, எரிச்சலுடன், போனை கட் செய்தான்.

சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்டா, கார்த்திக்..! பத்து மணிக்கு பிரதீப் மீட்டிங் அழைச்சிருக்காரு..! வந்து குளிச்சு ரெடியாகி, உடனே கிளம்பணும் !” —ஆதர்ஷ் கூற, தலையசைத்தான், கார்த்திக்.

நால்வரும், நீலா மாமி மெஸ் கடையைத் தேடிச் சென்றனர். மருந்தீஸ்வரர் கோவில் குளத்தின் கரையில் சிறிய அட்டை போர்டு ஒன்றை தாங்கியபடி, அந்தத் குறுகலான வீடு காணப்பட்டது.

இங்கேயா நாம் சாப்பிடப் போறோம்..?” —ஆதர்ஷ் கேட்டான்.

பஞ்சு சொல்லியிருக்கான்..! இடம்தான் இப்படி இருக்கு. ஆனா டிபன் சூப்பரா இருக்கும்..!” —தினேஷ் கூற, நான்கு பேரும் உள்ளே நுழைந்தனர்.

நுனி வாழை இலையில் இட்லி, வடை, பொங்கலை சிலருக்கு பரிமாறிக் கொண்டிருந்த வயதான ஒரு மாமி, இவங்களைப் பார்த்ததும், மலர்ச்சியுடன் வரவேற்றாள்.

பின்னாடி வாஷ்பேசின் இருக்கு..! போய் கையை அலம்பிண்டு வாங்கோ…! நான் இலையைப் போட்டு வைக்கிறேன்..!” —என்றபடி அடுக்களையில் நுழைய, நால்வரும், உணவுக் கூடத்தின் பின்புறம் சென்றனர்.

மற்ற மூவரும், கையைக் கழுவிக்கொண்டு உணவு கூடத்திற்குச் செல்ல, கார்த்திக்கின் போன் சிணுங்கியது. அவன் அம்மாதான், ஸ்ரீரங்கத்திலிருந்து போன். ஏதோ வரன் வந்திருப்பதாகத் தொடங்க, எரிச்சலுடன், ”நான் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருக்கிறேன்என்று கத்திவிட்டு, போனை வைத்தான்.

இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான்….

உன்னை நான் சந்தித்தேன், நீ ஆயிரத்தில் ஒருவன்என்று டிவி பாடிக்கொண்டிருந்தது. அங்கிருந்த அறை ஒன்றிலிருந்துதான் பாட்டு ஒலித்தது. தன்னையும் மறந்து அந்த அறையினுள் எட்டிப் பார்த்தான் கார்த்திக்.

டிவியில் ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதன் எதிரே ஓர் பெண் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்..!

அவள் முகத்தை பார்த்த கார்த்திக் சிலையாகிப் போய் நின்றான்.

இதோ…! அவன் தேடிக்கொண்டிருந்த, ஐஸ்வரியா ராயைக் காட்டிலும், மிக அழகான பெண்.! அழகின் உச்சம் நிச்சயம் இதுதான்..!

பிரமித்துப் போய் அந்தப் பெண்ணையே வெறித்துக்கொண்டிருந்தான், கார்த்திக்.

மனதுக்கு உகந்தவளே..! என் இதயத்திற்குள் புகுந்துகொள்..!

இனியவளே வா..!

நண்பர்கள் அவனுக்காகச் சாப்பிடாமல் காத்திருப்பதை மறந்தான். ஆபிசில் பிரதீப் நஞ்சுண்டன் ஓர் முக்கிய மீட்டிங்கிற்கு அழைத்திருப்பதையும் மறந்தான்.

இவன் ஆயிரத்தில் ஒருத்தி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அந்த அழகியையே பார்த்து கொண்டிருக்க, அவளோ ஆயிரத்தில் ஒருவன் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கங்கணா..! நீயெல்லாம் ஒரு பெண்ணா..? இதோபார், இந்த உலக அழகியை..! இவளை வைத்து உன் கொட்டத்தை அடக்குகிறேன் பார்..!” —தனக்குள் கருவிக்கொண்டிருந்தான், கார்த்திக்.

–மோதல் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...