ஆமைக்கு இவ்வளவு சிறப்புகளா?
நிதானமாகச் செயல்படும் மனிதர்களைப் பார்த்து “ஆமை மாதிரி அசைந்து வர்றான் பாரு” என்று சோம்பேறித்தனத்துக்கு உதாரணமாக மட்டம்தட்டிப் பேசு வது பல மனிதர்களின் இயல்பாகி விட்டது. ஆனால் ஆமையின் புத்திக்கூர்மை, செயல்திறன் பற்றி ஒரு ‘ஆமை முயல்’ கதை சிறப்பாக விளக்கியிருக்கும். அந்தளவுக்கு ஆமை பழம்பெருமை வாய்ந்தது. இன்று சர்வதேச ஆமைகள் தினம். அதைப் பற்றிச் சிந்திப்போம்.
ஆமைகள் நிலத்துக்கும் கடலுக்கும் மரபு ரீதியான தொடர்பைப் பல்லாண்டு கால மாகத் தொடர்ந்து வருகிறது. வழி தவறிய கடல் பயணிகளுக்கும் மீனவர்களுக் கும் வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் உள்ள உயிரினம் ஆமை. முதுகெலும் புள்ள தன் உடலை ஓடுகளுக்குள் மறைத்துக்கொண்டிருக்கும் அனைத்துமே ஆமைதான். நிலத்து ஆமை (Tortoise), நன்னீர் ஆமை (Freshwater turtles), கடல் ஆமை (Sea Turtles), உவர்நீர் ஆமை (Terrapines) என்று அவற்றின் வகைகள் மாறுபடலாம். தன் முதுகெலும்பு, உடல் அனைத்தையும் ஒரு பாதுகாப்புக் கவசத்தினுள் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரே உயிரினம் ஆமைதான்.
நீருக்கும் நிலத்துக்கும் இடையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டே யிருப்பதன் மூலமாக அவை பல சேவைகளைச் செய்கின்றன. கடல் மற்றும் நன்னீரில் வாழும் ஆமைகளே நிலத்துக்கும் நீருக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றன.
அதன் வரலாற்று உண்மையைப் பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை. இந்த ஆமைகளின் வாழ்விடம், எங்கெல்லாம் அவை காணப்படுகின்றன, அதன் எண்ணிக்கை என்று எந்தவிதமான தரவுமே நம்மிடம் முழுமையாக இல்லை. அனைத்து வகையான கடல் ஆமைகளும் அழிவின் விளிம்பில் உள்ளதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் கணித்துள்ளது.
உலக அளவில் மொத்தம் இரண்டு குடும்பங்களைச் சார்ந்த ஏழு வகையான கடல் ஆமைகள் உள்ளன. அதாவது, கடினமான மேற்புற ஓடுகளைக்கொண்ட ஆமை கள், கடினமான மேற்புற ஓடுகள் இல்லாத ஆமைகள் என இரண்டு குடும்பங்கள் உள்ளன. இதில் மொத்தமுள்ள ஏழு வகை ஆமைகளில், இந்தியக் கடற்பரப்பில் ஐந்து வகைகள் காணப்படுகின்றன. அவை பெருந்தலை ஆமை, பேராமை, அழுங் காமை, பங்குனி ஆமை ஆகியவை கடினமான மேற்புற ஓடுகளைக் கொண்டவை. தோனி ஆமைக்குக் கடினமான மேற்புற ஓடு இல்லை.
இவை அனைத்தும் இந்தியக் கடற்பரப்பில் காணப்படுகின்றன. இந்தியாவில் 28 வகையான நன்னீர் மற்றும் நிலத்து ஆமை வகைகள் இருக்கின்றன. அதில் 17 வகைகள் சர்வதேச உயிரினங்கள் பாதுகாப்பில் அருகிவரும் அரிய வகைப் பட்டியலில் (IUCN Red List) இருக்கின்றன. அவை அழியும் நிலையிலிருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள்.
கடல் ஆமைகள் மாறுபட்ட இனப்பெருக்கப் பண்பைக் கொண்டவை. அவை, முட்டையிடுவதற்காகப் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முட்டையிடும் இடத்தை அடைகின்றன. ஒரு பெண் ஆமை, பல ஆண் ஆமைகளுடன் இனச் சேர்க்கை புரிகிறது. ஆண் ஆமைகளின் விந்தை சில மாதங்களுக்குத் தன் உட லில் சேமித்து வைக்கும் தன்மையை அது கொண்டிருக்கிறது. முட்டை உருவான பிறகு, பெண் ஆமைகள் மணற்பாங்கான கடற்பகுதியில் முட்டையிடுகின்றன. இதில் ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், ஒரு பெண் ஆமை எந்தக் கடற் பகுதியில் பிறந்ததோ, அதே கடற்பகுதியில்தான் முட்டையிடுகிறது.
பெண் ஆமைகள் கடல் நீரிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் துடுப்பு களின் உதவியால் சின்னச் சின்ன குழிகளைத் தோண்டி முட்டையிடுகின்றன. பிறகு அந்தக் குழியை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பி விடுகின்றன. பங்குனி ஆமைகள், கூட்டமாக ஒரே வேளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முட்டை யிடுகின்றன. பொதுவாக இனப்பெருக்க காலத்தில் ஆமைகள் 50லிருந்து 300 முட்டைகள் வரை இடும் வல்லமையுடையவை. முட்டையிட்ட 60 நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியேறும்.
கடல் ஆமைகளின் ஆண்-பெண் விகிதம், வெப்பநிலையைப் பொறுத்தே அமை வது மற்றொரு ஆச்சரியம். முட்டையிட்ட மணல் பகுதியின் வெப்பநிலை 85 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக இருந்தால், அனைத்து முட்டைகளும் பெண் குஞ்சுகளாக இருக்கும். 85 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் குறைவாக இருந்தால், அனைத்து முட்டைகளும் ஆண் குஞ்சுகளாக இருக்கும். இதில் மிகவும் குறிப் பிடத்தக்க விஷயம், ஒரு பெண் ஆமை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் முட்டையிடும்.
ஆமைகளின் புதைபடிவங்கள் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டிராசிக் காலத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. கடல் ஆமைகள் 150 வருடம் உயிர் வாழக்கூடியது. இதன் ஆயுள் அதிகமாக இருப்பதற்கு இதன் இதயம் நிதானமாக துடிப்பதே காரணம் என சொல்லப்படுகின்றது. தற்போது உலகம் முழுவதும் 225 வகையான ஆமை இனங்கள் காணப்படுவ தாகச் சொல்லப்படுகின்றது.
ஆமைகள் முட்டை இடுவதற்கு இரவு நேரத்தைத் தெரிவு செய்வதற்கான காரணம், சந்திர ஈர்ப்பு விசையால் அலைகள் மேல்நோக்கி உயர்த்தப்படுவதால் இலகுவாகக் கடற்கரையை அடையலாம் என்பதற்காகத்தான். இடப்பட்ட முட்டைகளை மண்ணால் மூடிவிட்டு ஆமைகள் சென்றுவிடுகின்றன. இவை சூரிய வெப்பத்தினால் இயற்கையாக அடைகாக்கப்பட்டு 60 நாட்களில் குஞ்சு களாக வெளிவருகின்றன. பெரிய மீன்களிடமிருந்து தப்புதல், பறவைகள், விலங்குகளிடமிருந்து தப்புதல் என இக் குஞ்சுகள் தமது ஆயுட்காலத்தில் பலத்த சவால்களுக்கு உள்ளாகின்றன. இவை முதிர்ச்சி அடைய 30 ஆண்டுகள் வரை செல்லும். 1000 குஞ்சுகளில் ஒன்றே முதிர்ச்சி அடைகின்றது.
இவற்றின் உணவாக கடற்பாசிகள், கடற்பஞ்சுகள், மெல்லுடலிகள், ஜெல்லி மீன் கள் என்பன.
ஆமைகள் ஒரு முறை முட்டை இட்ட இடத்தையே அடுத்த முறையும் தெரிவு செய்து பல்லாயிரம் கடல் மைல் பயணம் செய்து அடைகின்றது என்றால் அவற் றின் திறன் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இன்று இந்த ஆமை இனமானது வேகமாக அழிவடைந்து வருகின்றது. காரணம், உலகமயமாக்கல், தொழில்மயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் கடற்கரைப் பகுதிகளில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டு, ஆமைகள் முட்டை யிடும் பகுதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.
கடற்கரை முழுவதுமிருக்கும் உல்லாச விடுதிகள், உணவகங்களின் பிரகாச விளக்குகளால் முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் போவதற்குப் பதிலாக, நிலப்பரப்பை நோக்கித் திரும்பி உயிர் விடுகின்றன. தவிர, ஆமைகளும் அவற்றின் முட்டைகளும் உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதுவே ஆமையினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
இந்தியாவிலுள்ள நன்னீர் மற்றும் நிலத்தில் வாழும் ஆமைகளைப் பற்றிய தரவு களைச் சேகரிக்கவும் இந்திய பல்லுயிரிச்சூழல் பாதுகாப்புக்கான குழுமம் (India Biodiversity portal) புதிய வழிமுறையைக் கையிலெடுத்துள்ளது. இந்தியாவின் நன்னீர் மற்றும் நிலத்து ஆமைகள் (Freshwater turtles and tortoise of India, FTTI) என்ற குழுவை அமைத்து அவர்கள் வழியாக மக்களிடமிருந்தும் காட்டுயிர் ஆர்வலர் கள் மத்தியிலிருந்தும் நன்னீர் மற்றும் நிலத்து ஆமைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மக்கள் அறிவியல் திட்டத்தைத் தொடங்கினார்கள். இந்தத் திட்டம் மே 17-ம் தேதி தொடங்கி மே 23-ம் தேதி உலக ஆமைகள் தினத்தன்று நிறைவு பெற்றது. அந்தத் திட்டத்தை வழிநடத்தினால் ஆமை இனங்கள் காக்கப்படும்.