பத்திரிகை உலக ஜாம்பவான் சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்

 பத்திரிகை உலக ஜாம்பவான் சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்

தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறை யில் தனது கவனத்தைச் செலுத்தினார் நாட்டில் இதழியல் முன்னோடியான சி.பா.ஆதித்தனார்.  (சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன்)

இவர்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர் – கனகம் அம்மையார் தம்பதிக்கு மகனாக  1905ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பக்கல்வியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பும் பயின்றார்.

கல்லூரியில் படிக்கும்போது ‘தொழில் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி? தீப்பெட்டித் தயாரிப்பது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், சி.பா.ஆதித்தனாரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

லண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக் கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.

1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும்

தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கு வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார்.

சிங்கப்பூரிலிருந்து வந்ததும் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்த னார் பல போராட்டங்களிலும் பங்கு பெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார்.

1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் பணி யாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரானார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.  

இவர் தொடங்கிய முதல் பத்திரிகை ‘தமிழன்’வார இதழ் 1942ஆம் ஆண்டில் வெளியானது.  அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். இது மதுரையிலிருந்து வெளிவந்தது.

தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்தி ரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்தார் ஆதித்தனார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத் தன. அதற்கு எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டார்.

அதேபோல் அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப் படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார்.

தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம் பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு வித்திட்டார் ஆதித்தனார். (தற்போது அது மாதமிருமுறை நாவல் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.)

நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற் றின. யாருக்கும் அஞ்சாமல் உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கொள்கையுடையவர். இதனால் இவரது பத்திரிகையை ஆங்கில அரசு தடை செய்தும்கூட தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்.

காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்ச்சி காலை முதல் மாலை வரை அதைக் காகிதமாக மாற்ற உழைத்தார். பத்திரிகை நடத்தும்போது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கையில் பணம் இல்லை என்ற நிலையில்  ‘சேட்டிடம்’ வெற்றுத்தாளில் கையெழுத்திட்டுப் பணம் பெற்று ஊழியர்களுக்கு வழங்கினார்.

சி.பா.ஆதித்தனார்  நடத்திய இதழுக்குப் பெயர் ‘தமிழன்’. அவர் அமைத்த இயக்கம் ‘நாம் தமிழர். தாய் இல்லத்துக்குப் பெயர் ‘தமிழன் இல்லம். அவர் வெளியிட்ட பதிப்பகத்துக்குப் பெயர் ‘தமிழ்த்தாய் பதிப்பகம். அவர் அமைத்த இரண்டு இயக்க அமைப்பு பெயர்  ‘இளந்தமிழர், ‘மகளிர் தமிழ் மன்றம். எழுதிய நூல் ‘தமிழ்ப் பேரரசு.

‘இதழாளர் கையேடு’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல் இதழாளர் களுக்கு இன்றும் பயன்படும் நூலாக விளங்குகிறது. ஆண்டுதோறும் சி.பா.ஆதித் தனார் வாழ்நாள் சாதனையாளர் விருதும் தமிழறிஞர் விருதும் ஆதித்தனார்  பெயரில் இரண்டு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சிக்கு வித்திட்ட சி.பா.ஆதித்தனார், 1981-ம் ஆண்டு 76-வது வயதில் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது சாதனைகள் மறையாது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...