இளவரசர் முத்து வடுகநாதரை சுமந்து விரைந்து வந்த குதிரை நடுநிசி இரவில் பனையூர் அருகில் வரும் பொழுது சற்று களைப்படைந்து தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இளவரசரும் அதை துன்புறுத்த மனமில்லாமல் குதிரையிலிருந்து இறங்கி அதனை மெதுவாக நடத்தி கொண்டு சென்றார் .
டொக்…. டொக்…. என்ற குளம்பின் ஓசையும் வண்டுகளின் ரீங்காரமும் இணைந்து தேவநாதத்தை உண்டு பண்ணி கொண்டிருந்த நடுநிசி அது. நிலவின் ஒளியில் ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும் வயல்களும் அதில் விளைந்திருந்த பயிர்களும் காதல் வெளிச்சத்தில் கரும் போர்வை போர்த்திக் கொண்டது போல் அழகாக காட்சியளித்தது. இதற்கு நடுவினில் தடாகம் ஒன்று தண்ணீர் ததும்ப நிலவினை பிரதிபலித்து கொண்டிருந்தது. அதனருகில் சென்ற இளவரசர். சற்று ஓவ்வெடுக்க எண்ணி குதிரையை ஒரிடத்தில் மறைவாக கட்டி விட்டு தடாகத்தின் படி துரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ப்ரம்ம முகூர்த்தத்திற்கு இரண்டு நாழிகை இருக்கும் நேரத்தில், தடாகத்திற்கு எதிர்ப்புறம் யாரோ வருவது போல் தோன்றவே அறிந்து கொள்ளும் ஆவலில் சற்றே மறைந்தவாறு கவனித்தார். இருளில் வந்த அந்த இரு உருவமும் தலையில் முக்காடிட்டப் படி கொஞ்சம் கொஞ்சமாக அவர் இருந்த திசைக்கு எதிர்திசையில் நடந்து சென்றது. திடீரென்று ஏதோ ஒரு வினாடி அவ்விரு உருவம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவே அவர்களின் உரையாடலை கூர்ந்து கவனித்தார் . எதுவும் புரிபடவில்லை. எதிர்பாராதவிதமாக ஒரு உருவம் தனது இடையில் இருந்து எடுத்த கத்தியை சலேர்ரென்று மற்றொரு உருவத்தின் மீது குத்திய அடுத்த விநாடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. குத்து பட்ட உருவம் எவ்வித சலனத்தையும் காட்டாமல் சிறிது தூரம் நடந்து சென்று சரிந்து கீழே விழுந்தது.
இதை சற்றும் எதிர்பாராத இளவரசர் தடாகத்தை சுற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று கத்திகுத்து பட்டு கீழே கிடந்த உருவத்தை சற்று திருப்பினார். அது குவிரன்.
…….
சிவகங்கை அரண்மனையில் நடந்து கொண்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் தாண்டவராய பிள்ளை மெதுவாக பேச தொடங்கினார்.
“இளவரசியே … உங்களுக்கு சில உண்மை சம்பவங்களை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். முப்பாட்டனார் கிழவர் ரகுநாத சேதுபதி ஆட்சி செய்த காலம் வரை ராஜாங்கத்தில் எந்த குழப்பமும் பிரச்சனைகளும் ஏற்படவில்லை. சொல்லப்போனால் மராட்டியரும் , நாயக்கரும் நமக்கு நெருக்கமாக தான் இருந்தார்கள். ஆனால், என்று பவானி சங்கருக்கு கிழவரால் ஆட்சி மறுக்கப்பட்டதோ அன்று ஆரம்பித்தது உள்நாட்டு குழப்பம். இதை கவனித்து கொண்டிருந்த நம் எதிரிகள் அவர்களுக்கு சாதகமாக பவானியை பயன்படுத்தி நம் நாட்டை உருகுலைக்க நினைத்தார்கள். அது தற்பொழுது வரை நடக்கவில்லை. ஏன், இப்பொழுது கூட ஒரு எதிரி அரண்மனை வரைக்கும் வந்து விட்டான் ஆனால்… “
“ஆனால் என்ன மாமா… “
” சிறுகாலமாக சகுன தடை ஏற்படுகிறது இளவரசி…. சமீப காலமாக வானத்தில் வால் நட்சத்திரம் வேறு தோன்றியுள்ளது. இது தோன்றும் பொழுது ராஜாங்க ரீதியாக ஏதாவது பாதிப்பு ஏற்படலாம்”
“புரியவில்லை மாமா …” என்றாள்.
தாண்டவராயர் சற்றே தயங்கியபடி குரலை தழைத்து , “ராஜ வம்சத்தில் ஒரு உயிர்போகும்.’ என்றார்
இவ்வார்த்தை அங்கிருந்த அனைவரையும் பீதி கொள்ள செய்தது. அங்கிருந்த சிலர் “ஐய்யோ..” என்ற வார்த்தையை சிதறவிட்டனர்.
தாண்டவராய பிள்ளையின் கணிப்பு என்றுமே பொய்த்தது கிடையாது. அவர் விவேகத்தில் மட்டும் அல்ல…. நல்ல ஜோதிடர் கூட …. ஆகையால் அவரின் கூற்றுக்கு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தது ஒன்றும் மிகையல்ல.
“இதிலிருந்து தப்பிக்க வழி?” குழுமியிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்.
“அந்த தெய்வம் மனது வைத்தால் தான் உண்டு”
இதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அரசர் சசிவர்ண தேவர் மெதுவாக தொண்டையை கனைத்துக் கொண்டு பேச தொடங்கினார்.
“தாண்டவராயா … நீ சொல்வது போல் என் உயிர் போவதற்கு முன்னதாக முத்துவுக்கும் வேலுவுக்கும் மணமுடித்து முத்துவின் கையில் ராஜாங்கத்தை ஒப்படைத்து விட வேண்டும் .” என்றார்.
“பெரியப்பா உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. நானும் அத்தானும் இருக்கிறோம் உங்களுக்கு துணையாக .” என்றவள் சசி தேவரின் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்.
“இல்லை மகளே தாண்டவராயர் சொல்வதை போல் வால் நட்சத்திரம் தோன்றும் போதெல்லாம் ராஜ வம்சத்தில் ஏதேனும் ஓர் உயிர் போய் கொண்டு தான் இருக்கிறது. நீ பிறப்பதற்கு முன்பு இதே போல் வால் நட்சத்திரம் வானில் தோன்றியது அப்பொழுது எனது மாமனார் முத்து விஜயரகுநாத சேதுபதி அம்மை நோய் தாக்கி உயிரிழத்தார் “
” பெரியப்பா அது யதார்த்தம். வால் நட்சத்திரம் தோன்றுவதால் தான் அவர் உயிரிழந்தார் என்ற கூற்றை நம்ப முடியவில்லை.
“இல்லை இளவரசியாரே.. அரசர் சொல்வது முற்றிலும் உண்மை. அரசர் முத்து விஜயர் குடும்பத்திலேயே மேலும் இரண்டு துர்மரணம் ஏற்பட்டது. அப்பொழுதும் வானில் வால் நட்சத்திரம் தோன்றியதும் உண்மை. ” என்ற தாண்டவராயரின் கூற்றை செவிமடுத்தவள் சற்றே குழப்பத்துடன் அவரை கூர்ந்து நோக்கினாள்.
“என்ன மாமா சொல்கிறீர்கள் துர்மரணமா? அதுவும் நமது ராஜ வம்சத்திலா புரியும்படி சொல்லுங்கள்”
தாண்டவராயர் தொண்டையை செறுமிக் கொண்டு பார்வையால் சசிவர்ண தேவரிடம் ஒப்புதல் கேட்கவும், அவர் தலையசைக்கவும் பேசத் தொடங்கினார் . “அதாவது இளவரசியாரே…. உன் அத்தை அகிலாண்டேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரிகளான ராஜலெட்சுமி நாச்சியாரும், சிவகாமி நாச்சியாரும் தண்டபாணி தேவரை விரும்ப, தனது மகள்களின் விருப்ப படி அவரை தனது மருமகனாக்கி கொண்டார் அரசர் முத்து விஜயரகுராதசேதுபதி. அத்துடன் இல்லாமல் தண்டபானி தேவருக்கு ராமேஸ்வரம் ராமநாத கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு ராமேஸ்வரத்தின் கவர்னர் பதவியையும் அளித்தார். ஸ்வாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் கட்டணம் ஏதும் வசூல் செய்யாமல் அவர்களுக்கு இலவசமாக தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி இவை அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும் என்பது அரசரின் உத்தரவு . மீறினால் சிறை சேதம் என்று ஆனை பிறப்பித்தார் அரசர் . ஆனால், தண்டபாணி தேவரின் போறாத நேரம், ராமேஸ்வர கோவிலை இன்னும் விஸ்தரிக்கவும், கோவிலின் நிதியை அதிகரிக்கவும், கோவில் பணிகள் மிக சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாமனாருக்கு தெரியாமல் , ராமேஸ்வரம் வரும் பக்தர்களிடம் காணிக்கையாக மிக மிக சொற்ப பணத்தை வரி வசூல் செய்ய ஆரம்பித்தார். இச்செய்தி முத்து விஜயரகுநாதரின் காதுக்கு எட்டியது. கோபமடைந்த அரசர் தப்பு செய்தது தனது மருமகனே ஆனாலும் தண்டனை உறுதி என்று அவரை கைது செய்ய ஆணையிட்டார். இச்செய்தி சிவகாமி, ராஜலஷ்மி நாச்சியாருக்கு தெரிய வர… கணவரை காப்பாற்ற வேண்டியோ, மன்னிக்க வேண்டியோ அரசரிடம் மன்றாடவில்லை. மாறாக, மனுநீதி சோழனாக இருந்த தந்தையை பெருமையுடன் பார்த்தனர். தனது மனதை கல்லாக்கி கொண்ட அரசரும் சிறிதும் யோசிக்காமல் தண்டபானி தேவரை சிறை சேதம் செய்ய உத்திரவிட்டார். அவர் இறந்த செய்தி அக்காள் தங்கைக்கு தெரிய வர இருவரும் கணவன் இறந்த துக்கத்தில் தங்கள் உயிரையும் மாய்த்து கொண்டனர். “
“ஐய்யையோ அப்புறம்?”
“அப்புறம் என்ன ? மகள்களின் இறந்த செய்தி மன்னருக்கு தீராத துன்பத்தை அளித்தது. இறந்த தன் இரு மகள்களின் நினைவாக அவர்கள் உயிர் நீத்த இடத்தில் வழி போக்கர்கள் தங்குவதற்கும் உணவு அருந்துவதற்கும் ஏற்பாடு செய்து செய்த பாவத்தை போக்குவதற்காக இரு அன்னதான கூடத்தை நிறுவினார் அரசர். ( ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபத்திற்கு அருகில் அக்காள்மடம் தங்கச்சிமடம் என்ற இடம் இன்றும் இருக்கிறது) இப்பொழுது கூறுங்கள் இளவரசியாரே… வால் நட்சத்திரத்தின் விபரீதத்தை ” என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார்.
“மாமா… நீங்கள் தான் சிறந்த ஜோதிடர் ஆயிற்றே…. இப்படி வானத்தில் வால் நட்சத்திரம் அடிக்கடி தோன்றுவது சாத்தியமா?”
“சாத்தியம் இல்லைதான். ஆனாலும் வியப்பு மிகுந்த அதிசயங்கள் ஆங்காங்கே ஏற்படுவது உண்மை தானே இளவரசி. இது இயற்கையின் நியதி. பெளர்ணமிக்கும் அமாவாசைக்கும் எப்படி கடல் அலைகள் எழும்பி ஆக்ரோஷம் கொள்கிறதோ அதே போல் தான் சில நட்சத்திரங்கள் அதிக பொறுப்பை தாங்கி இருக்கும் அரச குடும்பங்களையும் ஆட்டுவிக்கிறது.”
தாண்டவராயர் தனது பேச்சை முடிக்கவும் , அங்கு இருக்கமான ஒரு அமைதி நிலவியது. இளவரசியின் மனதிலும் சற்று பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து இருந்தது.
“பெரியப்பா… ராஜவம்சம் என்றால் நாட்டில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள் அவர்களில் யாராவதாகவும் இருக்கலாம். ஆகவே நீங்கள் கவலை படும்படி ஒன்றும் ஆகிவிடாது. நாளை அத்தான் வந்ததும் ஒரு முறை அத்தையை பார்த்து விட்டு வரலாம்.”
“என் நினைப்பும் அது தான் மா. உன் அத்தையும் பாட்டியும் துறவரம் மேற்கொண்டு மகாதேவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு காலத்தை கடத்தி வருகிறார்கள். இச்சமயத்தில் அவர்களின் ஆசி நிச்சயம் உனக்கு வேண்டும். அதனால் முத்து வந்தவுடன் நாம் புறப்படலாம்”.
........
குயிலியும் சுமனும் உரையாடிக் கொண்டே தடாகத்தின் படித்துறையில் வந்தமர்ந்தனர். அந்தி நேர தென்றல் ஒரே நேரத்தில் இருவரையும் வருடி சென்று கொண்டிருந்தது. குவிந்திருந்த கற்களை ஒவ்வொன்றாக குளத்தில் எறிந்தபடி நீண்ட யோசனையில் இருந்தான் சுமன் .ப்ளக்… ப்ளக் என்ற சத்தத்துடன் கற்கள் தடாகத்தினுள் தங்களை மறைத்து கொண்டது.
குயிலி தான் பேச்சை ஆரம்பித்தாள். “எங்கள் இளவரசிக்கும் உங்கள் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உங்களை நம்பி ஒரு பொறுப்பையும் உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். ஆனால் எனக்கு தான் ஒரு சந்தேகம் “
“என்ன சந்தேகம்? எதுவாயிலும் தயங்காமல் கேள்”
“உண்மையிலேயே உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? அல்லது இங்கு தங்குவதற்கும் சாப்பிடுவதற்காக கூறிய பொய்யா”
குளத்தில் கல் எரிவதை நிறுத்திய சுமன் குயிலியை திரும்பி பார்த்தான்.
“சாப்பிடுவதற்கும் தங்குவதற்குமா இந்நாட்டில் இடமில்லை ? ம்கூம்… நீங்கள் என்னை தெரிந்து கொண்டது அவ்வளவுதான் “
” பின்பு இங்கு வந்ததன் நோக்கம் ?’
“அது தான் சொன்னேனே…. எனது அரசரை பிடிக்கவில்லை வந்து விட்டேன் என்று “
“மறுபடியும் மறுபடியும அதே பொய்யை கூறுகிறீர்கள். சரி அது போகட்டும் உங்களுக்கு ஆங்கிலத்தை தவிற வேறு என்ன என்ன தெரியும்?”
“நன்கு சாப்பிடுவேன். நன்கு உறங்குவேன்.”
“அதை தவிற . . . . “
” அதை தவிற ….ம்ஹா… மீன் பிடிக்க தெரியும்.”
“அப்படியா ? அப்படி என்றால் நாளை கீழக்கரை சென்று ஒரு கூடை மீன்பிடித்து வாருங்கள் ம்கூம்…” என்று கொஞ்சம் கோபப்படுபவள் போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளின் பொய் கோபத்தை மனதுக்குள் ரசித்துக் கொண்டவன்,
“உன்முகத்திற்கு கோபம் பொருந்தவில்லை. உனக்கு என்னை பற்றி தெரியேவண்டும் அவ்வளவுதானே. அதற்கான நேரம் வரும் பொழுது நீயே தெரிந்து கொள்வாய். சரி… நீ … இளவரசியாருக்கு எந்த அளவு சினேகிதம்?”.
“ஏன் கேட்கறீர்கள்? “
” காரணம் இருக்கிறது ….”
“இளவரசி எனக்கு உடன் பிறந்த சகோதரி போல.. சில சமயம் தாயாக சில சமயம் தந்தையாக … “
” அவர்களுக்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால்?”
“என் உயிரை தந்தாவது அவர்களை காப்பாற்றுவேன். ஏன் கேட்கிறீர்கள்? உண்மையில் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்தா?” என்றாள் சற்றே முககலவரத்துடன் .
” இல்லை …. இல்லை … ஆபத்து ஏதும் இல்லை. என்றவன் சிறிது மெளனத்திற்கு பிறகு ..” எனக்கும் ஒரு சினேகிதன் உண்டு. நானும் அவன் சொல்லை தட்டியது கிடையாது. “
“ஓ…. ” என்றாள் ஒன்றை எழுத்தில் .
“சரி அது போகட்டும் நாளையிலிருந்து நம் ஆங்கில வகுப்புகளை ஆரம்பிக்கலாம். நீயும் உன் தோழிகளும் தவறாமல் பாடசாலை வந்து விடுங்கள்” என்றான்.

கண் முன் காட்சிகள். விறுவிறுப்பான எழுத்து.
உரையாடல்கள் சிறப்பு! சுவாரஸ்யம் குறையாத எழுத்து நடை! வாழ்த்துகள்!