ஆனந்தநாயகி அம்மாளும் அவர் கடந்துவந்த பாதையும்
கடலூர் ஆனந்தநாயகி அம்மாள் வாழ்க்கை பல திருப்பங்களுடன் தமிழக அரசியலோடு பின்னிப்பிணைந்தது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் சாலை யில் பெண்ணாடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கே வெள்ளாற்றங் கரையில் உள்ள ஊர் திருவட்டத்துறை.
திருவட்டத்துறை கிராமத்தின் பெரும் நிலக்கிழார்களில் முக்கியமானவர் ராமசாமி படையாட்சி. இவர் தன் மூத்த மகளுக்கு ஆனந்தநாயகி என்றும் இரண்டாவது மகளுக்கு வாலாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். உள்ளூர் சிவன் கோயில் அறங்காவலராக இருந்த ராமசாமி, இயல்பிலேயே ராமலிங்க அடிகளார் மீது பற்றுகொண்டவர்.
அந்தக் காலகட்டத்தில் வள்ளலாரின் சமயநெறி தென்னாற்காடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ராமசாமி வள்ளலார் மீது காட்டிய பற்று அவருடைய பிள்ளைகளையும் கவர்ந்தது. இதனால்தான் ஆனந்தநாயகி அம்மாள் பின்னாளில் நமது கணவருடன் சேர்ந்து அரியலூர் அருகே உருவாக்கிய கல்வி நிறுவனத்திற்கும் வள்ளலார் பெயரைச் சூட்டினார்.
பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதில் ராமசாமிக்கு அதிக அக்கறை இருந்தது. இதனால் அந்தக் காலகட்டத்திலேயே மாட்டு வண்டிகள் மூலம் பெண் பிள்ளை களைப் பெண்ணாடத்திற்கு அனுப்பி எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைத்தார். பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பெற்றோர் மறுத்து வந்த கால கட்டத்தில் ராமசாமியின் மகள்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தது இன்று வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதைவிட இன்னும் மேலானது என்று கூறலாம்.
ராமசாமியின் மூத்த மகள் ஆனந்தநாயகி அம்மாள் 1921ஆம் ஆண்டு பிறந்த வர். இவர் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவுடன் 18ஆவது வயதில் 1938ம் ஆண் டில் கொடுக்கூர் விசுவநாதனைத் திருமணம் செய்து கொண்டார். இவர் களுக்கு அம்பலவாணன், புகழேந்தி என்ற இரு மகன்கள். அலர்மேலு, பவானி என்று இரு மகள்கள் உள்ளனர்.
1953ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியாரால் உரு வாக்கப்பட்டது. குலக்கல்வி என்ற அந்த நச்சுப்பாம்பை நசுக்கி எறிந்தவர் கொடுக்கூர் விசுவநாதன். இவரின் சமயோசித செயல் பாட்டதால் தோற்றுப் போன ராஜகோபாலாச்சாரி தாம் வகித்த முதல மைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். இருந் தாலும் ராஜ கோபாலாச்சாரியால் தமிழ் நாட்டு மக்களுக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதனை முற்றாகத் தடுக்க, எம்.எல்.ஏ. வாக இருந்த விசுவநாதன் களத்தில் இறங்கி, சட்டசபையில் ஆதரவு திட்டி காமராஜரை முதலமைச்சர் பதவிக்குக் கொண்டுவந்தவர் கொடுக் கூர் விசுவநாதன் தான்.
ஆனந்தநாயகி அம்மாள் வள்ளலார் நெறிப்படி அனாதை பிள்ளைகள் மீது அக்கறை கொண்டவராக வாழ்ந்தார். அதே வேளையில் மிகப் பெரிய துணிச் சல்காரராகவும் திகழ்ந்தார். தன் மனதுக்குச் சரி என்று பட்டதைச் செய்யத் தயங்காதவராக இருந்தார். இவருடைய துணிச்சலும் முற்போக்குச் சிந்தனையும்தான் விசுவநாதன் வாழ்க்கையில் எதிரொலித்தது.
ராமசாமியின் இரண்டாவது மகளான வாலாம்பாள் இதே பெண்ணாடம் அருகே உள்ள சௌந்திர சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் புலவர் கலியபெருமாளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். 1949ஆம் ஆண்டு தமிழ் முறைப்படி புலவர் பொன்னம்பலனார் தலைமை யில் திருமணம் நடைபெற்றது.
ராமசாமியைப் பொறுத்தவரையில் இரண்டு மகள்களையும் எஸ்.எஸ். எல்.சி. வரை படிக்க வைத்து அரசாங்க வேலையில் உள்ள மாப்பிள்ளை களுக்குத் திருமணம் செய்த வைத்ததில் பெரிய மகிழ்ச்சி.
முதல் மருமகன் விசுவநாதன் அரசாங்க வேலையை விட்டுவிட்டு காந்திய நெறிப்படி அரசியலில் இறங்கினார். இதே போன்று இரண்டாவது மருமகன் கலியபெருமாள் தமிழாசிரியர் வேலையை மூன்று ஆண்டுகள் மட்டும் பார்த்துவிட்டு அதைத் துறந்து விவசாயச் சங்கப் பணிகளில் ஈடுபட ஆரம்பித் தார்.
பெரியார் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கலியபெருமாள் 1954ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண் டார். அப்போது தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை அமலில் இருந் தது. கடைகளில் ஆதிதிராவிடச் சமூகத்து மக்களுக்கு என்று தனிக் குவளை வைத்திருந்தார்கள். அதில் தரப்படும் தேநீரை அவர்கள் குடித்த பிறகு குவளை யைக் கழுவி வைக்கவேண்டும் என்ற கொடுமை நிலவி யது.
முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களைச் சேர்த்துக்கொண்டு கலிய பெருமாளும் வாலாம்பாளும் நடத்திய போராட்டங்களினால் விருத்தா சலம் பெண்ணாடம் பகுதிகளில் இரண்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது. அடுத்து முடிவெட்டும் கடைகளில் ஆதிதிராவிடர்களைச் சமமாக உட்கார வைத்து முடி வெட்ட மறுத்து வந்தனர். இதற்கு எதிராக நடந்த போராட்டத்தால் ஆதிதிராவிடர்களும் மற்றவர்களைப் போன்று முடி வெட்டிக் கொள்ளும் வாய்ப்பு உருவானது.
புலவர் கலியபெருமாள்-வாலாம்பாள் இணையர் நடத்திய போராட்டங் களினால் இந்த வட்டாரத்தில் இவர்கள் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந் தார்கள்.
ஒரு குடும்பத்திற்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் என்பதை மாற்றி 15 ஏக்கர் நிலம் வைத்துக்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று 1960ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி யது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காகப் புலவர் கலிய பெருமாள் கைது செய்யப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலை ஆனார்கள். ஆனால் புலவர் கலியபெருமாள் மன்னிப்புக் கடிதம் தருவதற்கு மறுத்து விட்டார்.
இதன் பிறகு பெண்ணாடம் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் தலைவ ராகப் புலவரைத் தெர்ந்தெடுத்தார்கள். ஆலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளருக்காகப் போராடி புலவர் வெற்றி பெற்றார்.
இதே காலகட்டத்தில் 1965ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் புலவர் கலியபெருமாள் தன் மனைவி வாலாம்பாளுடன் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பண்ணை யார்கள், ஆலை முதலாளிகள் ஆகியோருக்கு எதிராக ரஷ்யா மற்றும் சீனாவில் நடைபெற்றது போன்று ஆயுதம் தாங்கிய போராட் டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கட்சித் தலைமை இதனை ஏற்க வில்லை. இதன் பிறகு அந்தக் கட்சியில் இருந்த தீவிரவாத சிந்தனை கொண்ட இளைஞர்கள் வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்ற அமைப்பை ஏற்படுத்தி னார்கள். புலவர் கலியபெருமாள் இதன் முதன்மை நிர்வாகியாக இருந்து வழி நடத்தினார்.
இதே வேளையில் கொடுக்கூர் விசுநாதன் 1968ல் காலமாகிவிட்டார். அவர் நிறுவிய வள்ளலார் கல்வி நிறுவனத்தைச் சிலர் கைப்பற்ற முயன்றார்கள். அந்த இடையூறுகளை எதிர்கொண்டு ஆனந்தநாயகி அம்மாள் வள்ளலார் கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
1969ஆம் ஆண்டில் கொடுக்கூரில் நடந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கூட்டத் தில் போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பினர் கூலித் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொண்டிருந்த பண்ணையார்களின் வயல்களில் இறங்கி அறு வடை செய்து அந்த நெல்லை அனைத்து ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த அறுவடைப் போராட்டத்தினால் நெல்லைப் பறிகொடுத்த பண்ணையார்கள் எவரும் புலவர் கலியபெரு மாள் மீதிருந்த பயத்தால் போலிசில் புகார் கொடுக்கவில்லை..
கலியபெருமாள் நடத்திய இயக்கம் நாளடைவில் விரிவடைந்தது. புதிய வர்கள் சேர்ந்தார்கள். அப்படி வந்த இளைஞர்கள் தங்கள் பாதுகாப்புக்காகப் புலவர் கலியபெருமாளின் தென்னந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தபோது எதிர்பாராத வகையில் வெடித்துவிட்டது. காணியப்பன், கணேசன், சர்ச்சில் ஆகிய மூவரும் இறந்துவிட்டனர். கடுமையான காயம் அடைந்த புலவர் கலியபெருமாள் தலைமறைவாகிவிட்டார். அடுத்த சில நாட்களில் வாலாம்பாள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். வயல்களில் அத்துமீறி இறங்கி அறுவடை செய்தது உள்ளிட்ட வழக்குகள் வாலாம்பாள் மீது போடப் பட்டன.
புலவர் கலியபெருமாளின் மகள்கள் தமிழரசி, கண்ணகி, அஞ்சுகம் ஆகி யோர் அரியலூரில் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந் தார்கள். மகன் சோழன் நம்பியார் அதிராசம்பட்டினம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தை மிரட்டி மகள்கள் மூன்று பேரை யும் பள்ளியிலிருந்து நீக்கச் செய்துவிட்டது கால்துறை.
ஏற்கெனவே அனாதைப் பிள்ளைகளுக்காகப் பள்ளிக்கூடம் நடத்திவந்த ஆனந்தநாயகி அம்மாள் தங்கையின் மகள்கள் மூன்று பேரையும் தமது வள்ளலார் கல்வி நிறுவனத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.
இதைக் கேள்விப்பட்ட திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரடியாக ஆனந்தநாயகி வீட்டுக்கே வந்து தங்கை வாலாம்பாள் மகள்கள் மூன்று பேரையும் பள்ளிக்கூடத்திலிருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்று மிரட்டினார்.
மூன்று மகள்களும் ஆதரிப்பார் இல்லாமல் தெருவில் அலைந்தால் அதைப் பார்த்துவிட்டு புலவர் கலியபெருமாள் தலைமறைவு வாழ்க்கையை விட்டு சரணடைவார் என்பது போலிசின் திட்டமாக இருந்தது.
இதற்கு ஆனந்தநாயகி அம்மாள், “ஆண் பிள்ளைகளாக இருந்தாலும்கூட வெளியில் அனுப்பிவிடலாம். இவர்கள் பெண் பிள்ளைகள். மூவரையும் அரசு தமது பாதுகாப்பில் தங்கவைத்து படிக்க வைப்பதாக உறுதியளித்தால் நான் வெளியில் அனுப்பிவிடத் தயார்” என்று தெரிவித்தார். இதற்கு அரசு பாதுகாப்பில் தங்கவைத்து படிக்க வைக்க முடியாது என்று கூறிய காவல் துறை கண் காணிப்பாளர், ஆனந்தநாயகி அம்மாளிடம் நீங்கள் கடுமையான விளைவு களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துவிட்டு சென்றுவிட்டார்.
இந்த நேரத்தில் காவல் துறைக்கு உளவு சொல்லிக்கொண்டிருந்த அய்யன் பெருமாள் என்பவன், பொண்ணாடம் வட்டாரத்தில் பலரையும் மிடிட்டிப் பணம் பறித்து வந்தான். தமக்கு யாராவது பணம் தராவிட்டால் அவர்களைப் புலவர் கலியபெருமாளோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லி சிக்க லில் மாட்டிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். இதனால் அவனைக் கண்டால் பலரும் அஞ்சி நடுங்கும் நிலை இருந்தது. அப்போது புலவரைப் பின்பற்றி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த தமிழரசன் தமது நண்பர் ஒருவருடன் நேர்ந்து அய்யன்பெருமாளைத் தாக்கியதில் அவன் இறந்துவிட்டான்.
ஏற்கெனவே நெல் அறுவடை வழங்கில் கைது செய்யப்பட்ட வாலாம்பாள் பிணையில் விடுதலையாகி கடலூரில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் மூன்று மகள்களையும் ஆனந்தநாயகி அம்மாள் அழைத்துவந்து கடலூரில் தங்கை வாலாம்பாளிடம் விட்டுவிட்டு அரியலூருக்குத் திரும்பினார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த போலிசார் ஆனந்தநாயகி அம்மாளை வழியில் கைது செய்து கை, கால்களில் விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். பிறகு அவரைக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்தனர். விசாரணை யின்போது புலவர் கலியபெருமாளின் மூன்று மகள்களையும் படிக்க வைக்கக்கூடாது என்று அவரிடம் கேட்டனர்.
இதற்கு, ஆனந்தநாயகி அம்மாள், “இவர்கள் மூவரும் பெண் பிள்ளைகள் அதிலும் சிறு வயது பிள்ளைகள். இவர்களை ஆதரிப்பதால் இவர்களின் தந்தையும் தமது தங்கை வாலாம்பளின் கணவருமான புலவர் கலியபெரு மாளின் அரசியல் நடவடிக்கைகள் உடன் தொடர்பு இருக்கிறது என்று கருதவேண்டாம். புலவரின் அரசியல் செய்லபாடுகளில் தமக்கு ஈடுபாடும் கிடையாது, தொடர்பும் கிடையாது” என்று திட்டவட்டமாகச் சொன்னார்.
இது உண்மைதான் என்பது காவல் துறைக்கு நன்றாகத் தெரிந்தது. தலை மறைவாக இருக்கும் புலவர் கலியபெருமாளைச் சரணடையச் செய்ய வேண்டும் என்றால் அவரின் உறவினர்களை அச்சுறுத்த வேண்டும் என்பது போலிஸ் திட்டமாக இருந்தது. இதனால் ஆனந்தநாயகி அம்மாள் சொன் னதை ஏற்காமல் அவரையும் அய்யன்பெருமாள் கொலை வழக்கில் சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அய்யன்பெருமாள் கொலை வழக்கில் புலவரும் அவரது மகள்கள் வள்ளு வன், நம்பியார், தமிழரசன் உட்பட பலர் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருந்த னர். இதன்பின் தலைமறைவாக இருந்த இடத்தில் புலவரைச் சுற்றி வளைத்து போலிஸ் கைது செய்தது. விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடை பெற்றுவந்த அய்யன்பெரு மான் கொலை வழக்கு பின்னர் கடலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வெகு விரைவாக நடைபெற்று முடிந்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் 1972ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தீர்ப்பு சொன்னது. புலவர் கலிய பெருமாளுக்கும் அவருடைய மகன் வள்ளுவனுக்கும் மரண தண்டனை தரப்பட்டது. ஆனந்த நாயகி அம்மாள், புலவரின் இளைய மகன் சோழன் நம்பியார் மேலும் ராஜமாணிக்கம், மாசிலாமணி, ஆறுமுகம் ஆகியோ ருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் நெறிப்படி வாழ்ந்தவர் ஆனந்தநாயகி அம்மாள்.. அரியலூர் மாவட்டம் லிங்கத் தடிமேடு வள்ளலார் கல்வி நிறுவனத்தில் 1953ஆம் ஆண்டு முதல் பல நூறு ஆதரவற்ற பிள்ளைகளைத் தம் பிள்ளைகள் போன்று பாதுகாத்து வந்தவர் ஆனந்தநாயகி. அதேபோன்று தம் தங்கையின் மூன்று மகள் களுக்கு ஆதரவு அளித்ததற்காகத் துளியும் தொடர்பில்லாத கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டார். இவரு டைய கணவர் கொடுக்கூர் கே.ஆர். விசுவநாதன் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஜெயங் கொண்டம் சுற்றுவட்டாரத்தில் கடவுளைப் போன்று மதிக்கப்பட்டு வந்தவர். இது எதனையும் காவல் துறையும் நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வில்லை.
அய்யன்பெருமாள் கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தநாயகி அம்மாள் வேலூர் மகளிர் சிறை யில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை என்பது அந்த நாட்களில் 12 வருடம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
மேல்முறையீட்டில் வள்ளுவனின் மரண தண்டனை ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. இந்த நீதிமன்றங்கள்மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி புலவர் கலியபெருமாள் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட் டார். இதனால் புலவரின் கழுத்துக்குமேல் தூக்குக் கயிறு தொங்கிக் கொண் டிருந்தது.
இந்தச் சூழலில் கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கல்யாணசுந்தரம் டெல்லியில் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியைச் சந்தித்துப் பேசினார். வி.வி. கிரி, சுதந்திரப்போராட்டக் காலங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டவர். வேலூர், அமராவதி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த வர். வி.வி.கிரியிடம் இதனைக் கல்யாணசுந்தரம் சுட்டிக்காட்டி உங்களைப் போன்று மக்களுக்காகப் போராடியதால்தான் கலியபெருமாள் இன்று மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாகச் சொன் னார்.
தமிழ்நாட்டுக்குத் திரும்பிவந்த கல்யாணசுந்தரம் புலவர் கலியபெரு மாளின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்து ஒரு லட்சம் கையெ ழுத்துகளை வாங்கினார். இதன் பிறகு கல்யாணசுந்தரம் இந்த மனுவை குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் கொடுத்தார். அவர், பொது மக்களின் விருப்பத்தின் பேரில் புலவர் கலியபெருமாளின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது என்று அறிவிப்பை வெளியிட்டார் வி.வி.கிரி.
சுதந்திர இந்தியாவில் மக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முதல் நிகழ்வு புலவர் கலிய பெருமாள் வழக்குதான்.
ஆனந்தநாயகி அம்மாள் உள்ளிட்ட ஏழு பேர் பொய் வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த செய்தியை தில்லி யைச் சேர்ந்த செய்தியாளர் கன்ஷியாஸ் பர்தேஷ் என்பவர் 1981ல் பத்திரிகை களில் படித்தார். அவர் உடனே தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மற்றும் பெண்ணாடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர் கள் உட்பட பலரைச் சந்தித்து உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்தார். அவர்கள் அனைவருமே அய்யன்பெருமாள் கொலை வழங்கிற்கும் தண்டிக்கப்பட்டு உள்ள ஆனந்தநாயகி அம்மாள் உள்ளிட்டோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொன்னார்கள்.
கன்ஷியாஸ் பர்தேஷ் இதில் உள்ள நியாயங்களை உணர்ந்து அன்றைய காலகட்டத்தில் பரவலாக அறியப்பட்டிருந்த மனிதஉரிமை ஆர்வலர் தார்குண்டே உள்பட பலரையும் சேர்த்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஆர்.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோர் அடங்கிய அமர்வு இவர்கள் ஏழு பேரையும் சிறையில் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்ற முதல் உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் உடல்நிலை யைக் கருத்தில்கொண்டு ஆனந்தநாயகி அம்மாளைப் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டது. அவர் பத்தாண்டுகள் தண்டனை முடிந்த நிலை யில் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இதன் பிறகும் அவருடைய ஆயுள் தண்டனை காலத்தைக் குறைக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால் தம் வாழ்நாள் முழுவதும் பரோல் விடுப்பிலேயே ஆனந்தநாயகி அம்மாள் கழிக்க நேரிட்டது.
இதன் பிறகு புலவர் கலியபெருமாளின் மகன் வள்ளுவன் கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். அவரும் பரோலில் விடுவிக்கப் பட்டார். கன்ஷியாஸ் பர்தேஷ் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டங் களினால் பிறகு ஒவ்வொருவராக விடுதலை ஆனார்கள்.
தங்கை வாலாம்பாள் மகள்களுக்குத் தங்க இடம் கொடுத்தமைக்காகப் பத்தாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு விடுதலையான ஆனந்தநாயகி அம்மாளின் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பின்புறம் உள்ள லேக் ஏரியா என்பது விசுவநாதன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது அவரின் முயற்சியால் உருவாக் கப்பட்டது. இங்கிருந்த விசுவநாதன் வீட்டில்தான் அவரின் மூத்த மகன் அம்பல வாணன் குடியிருந்தார். இந்த வீட்டில் ஜாமீன் மற்றும் பரோல் காலங்களில் தங்கியிருந்தபோது ஆனந்தநாயகி அம்மாள் கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டதைப் பொதுமக்கள் பார்த்துக் கதறினார்கள். மேலும் மகன் வீட்டில் தங்கியிருந்தபோதெல்லாம் அவரைச் சந்திக்க யாராவது வருகிறார்களா என்பதைக் கவனிக்க சாலையின் இரு முனைகளிலும் போலிஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
பரோலில் விடுதலையான ஆனந்தநாயகி அம்மாள் கடைசி நாட்களில் அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேட்டில் உள்ள வள்ளலார் கல்வி நிறுவனத்தில் வசித்தார். தமது 68வது வயதில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி காலமானார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த (விசுவநாதன்-ஆனந்தநாயகி அம்மாள்) கணவன்-மனைவி இருவரும் தன்னலமற்ற செயல்களினால் மக்களின் மதிப்பைப் பெற்றவர்களாக விளங்கினார்கள்.
கொடுக்கூர் விசுவநாதன், ஆனந்தநாயகி அம்மாள் இருவரது உடலும் அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேட்டில் வள்ளலார் கல்வி நிறுவன வளாகத் தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
கொடுக்கூர் விசுவநாதனால் தோற்றுவிக்கப்பட்ட வள்ளலார் கல்வி நிறுவ னம் இப்போதும் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. திக்கற்ற பிள்ளைகள் 350 பேர் இங்கு தங்கிப் படித்து வருகின்றனர். எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு மூன்று வேளை யும் உணவளிக்கப்பட்டு வருகிறது.