பொற்கயல் | 11 | வில்லரசன்

 பொற்கயல் | 11 | வில்லரசன்

11. பொலிவிழந்த பொன்மான்

ழக்கமாக அந்த நந்தவனத்தில் பொற்கயல் காத்துக்கிடப்பதையே கண்டு பழக்கப்பட்டிருந்த குளத்தின் வண்ண மீன்கள், வண்ணக் கோழிகள், ஆந்தைகள், பூக்கொடிகள் போன்றவை அங்கு வழக்கத்திற்கு மாறாக மின்னவன் வானைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பதைப் கண்டு ஒன்றுக்கு ஒன்று கிசுகிசுக்கத் தொடங்கின.

“என்ன அதிசயமாக இருக்கிறது? இவன் எப்பொழுதும் தாமதமாக வருபவன் ஆயிற்றே! இன்று பொழுது சாய்ந்ததும் முதலாக வந்து அவளுக்காக காத்திருக்கிறான்!”

“அதுதான் எனக்கும் புரியவில்லை! பொறு அவள் வரட்டும்! என்னவென்று பார்ப்போம்” என்று குளத்தில் இருந்து எட்டிப்பார்த்த மீன்கள் இரண்டு பேசிவிட்டு அங்குமிங்கும் நீந்தித் திரிந்தன.

பொழுது சாய்ந்ததால் புத்துணர்ச்சியுடன் அன்றும் பொற்கயலின் மேனியை உரசி உல்லாசம் காண களங்கன் முயன்றபோது அங்கு கொடிகளுக்கு இடையே படுத்திருந்த மின்னவன் தன்னையே பார்ப்பதை அறிந்து திகைப்புக்குள்ளானான். மேலும் இத்தனை நாட்கள் அவனது காதலியான பொற்கயலைக் கள்ளத்தனமாக இரசித்து தன் ஒளியால் தீண்டியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அச்சத்தில் மறைந்துக் கொள்ள மேகக் கன்னிகளின் பின்னே அவன் செல்ல அந்த மேகங்களோ, “ம்ம்ம் நகரு அப்படி! இத்தனை நாட்கள் அந்தப் பொற்கயலைத் தேடிச் சென்றவன் இப்போது எதற்கு எங்களிடம் வருகிறாய்?’ என்று கோபித்துக் கொண்டு நகர்ந்து சென்றாலும் அவற்றைப் பின் தொடர்ந்து ஓடினான் களங்கன்.

மின்னவன் நந்தவனத்தில் உடலாகப் படுத்திருந்தானே தவிர, அவன் மனம், நினைவு எல்லாம் இன்று காலை பாண்டிய மன்னனும் அவன் நண்பனுமான குலசேகரப் பாண்டியன் அவனுக்கு விதித்த தண்டனையிலேயே நிலைத்திருந்தது!

தன்னைப் பார்த்தாலே தோழமையுடன் பேசி உறவாடும் குலசேகரனிடத்தில் அவப்பெயர் பெற்றது மட்டும் இல்லாமல் தன்னை அவன் குற்றவாளியாக்கி விரட்டாத குறையாக அனுப்பியது அவனுக்கு மீளமுடியாத வருத்தத்தை தந்திருந்தது.

பலமுறை பிறர் செய்த தவறை மன்னித்தருள குறைந்தபட்ச தண்டனையை விதித்து தனது கனிவை வெளிப்படுத்தும் பாண்டிய மன்னன் குலசேகரன் இதுபோன்று சுடு வார்த்தைகளைக் கொட்டி இப்படி ஓர் விசித்திர தண்டனையை வழங்கிவிடுவான் என மின்னவன் மட்டுமல்ல, அங்கு அறையில் இருந்த எவருமே எதிர்பார்க்கவில்லை.

அவன் வீசிய சொல்வாட்களைக் காட்டிலும் எறிந்த குறுவாட்களில் பலியாகிப் போய் இருக்கலாமோ என்றுகூட மின்னவன் நினைத்ததுண்டு.

இனி குலசேகரன் எறிந்த குறுவாட்கள் எங்குச் சென்றது என்று பார்ப்போம்.

உணவருந்தி முடித்து அமர்ந்திருந்த குலசேகரனுக்கு ஏனோ கோபம் சற்று அதிகமாகவே இருந்தது. அவனை அதுபோல் எப்பொழுதும் அங்கிருந்தவர்கள் பார்த்ததில்லை.

குறுவாளை எடுத்து வைத்திருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்ன தண்டனை என அனைவரும் விறுவிறுக் கொண்டிருக்கும் நேரம் சரேல் சரேல் என்று இரண்டு குறுவாட்களையும் எறிந்தான் குலசேகரப் பாண்டியன்.

அதிவேகத்தில் எறியப்பட்ட அந்த இரு குறுவாட்களும் அந்த அறையில் பெரிதாக சுவரில் காட்சியளிக்கும் தமிழகத்தின் வரைபடத்தில் சென்று குத்திட்டு நின்றன. அதன் மீது பார்வையைச் செலுத்திய அனைவரையும் குலசேகரனின் சினம் தணியா குரல் அவன் பக்கம் திருப்பியது.

“இதோ! இதுதான் நான் இவர்களுக்கு வழங்கவிருக்கும் தண்டனை. நீல நிறக் கல் பதித்த குறுவாள் படைத்தலைவர் மின்னவருக்கு! சிவப்பு நிறக் குறுவாள் வீரபாண்டியனுக்கு. அவை வரைபடத்தில் எங்கு குத்திட்டு நிற்கிறதோ அங்கு உள்ள சிவாலயத்தில் இருவரும் தங்களது உழைப்பில் பெற்ற செல்வத்தைக் கொண்டு சிவப்பணி செய்ய வேண்டும். எப்பணியாக இருந்தாலும் மறுக்காமல் செய்ய வேண்டும். கடமையை மறந்து காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொண்ட இருவரும் இந்தப் பாண்டிய அரசுக்கும் அரசனுக்கும் களங்கத்தையும் அவமானத்தையும் தேடித் தந்து இருக்கிறார்கள். இனியும் இவர்கள் மதுரையில் இருப்பது சரியாக வராது. செய்த பிழைக்குத் தக்க தண்டனை பெற்றே ஆக வேண்டும். இவர்கள் இருவரது பதவிகளும் இப்போதே பறிக்கப்படுகிறது. இனி மின்னவர் பாண்டிய நாட்டின் படைத் தலைவர் அன்று! வீரபாண்டியன் இளவரசன் அன்று! இருவரும் சராசரி குடிகள். தண்டனையை முடித்த பிறகு இவர்களுக்கான மன்னிப்பும் பதவியும் மீண்டும் கிட்டும்” எனக் கோபத்துடன் சொல்லி முடித்தான் குலசேகரப் பாண்டியன்.

“இல்லை! முடியாது! ஒருபோதும் முடியாது! எனக்கும் இந்த ஏவல் நாய்க்கும் ஒரே தண்டனையா?” என்று வீரபாண்டியன் கேட்டதும் தடால் என்று எழுந்த குலசேகரன், வீரபாண்டியனை கன்னத்தில் அறைந்துவிட்டு அவன் கையை பிடித்து முதுகில் பின் மடக்கி உடைவாளை உருவி அவன் கழுத்தில் வைத்தான்.

சதா சாந்தமும் கருணையும் பிறரிடத்தில் கொட்டித் தீர்த்து அன்பைப் பேணும் குலசேகரனின் கோபம் அந்த அறையையே நடுங்க வைத்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது எனச் செவி வழியே கேட்டவர்கள் அன்று விழி வழியே அதைக் கண்டார்கள்.

உணவு மேசையில் இருந்த அனைவரும் எழுந்து நிற்க, மின்னவனும் இராவுத்தனும் கூடச் சற்று திடுக்கிடச் செய்தார்கள்.

கயல்விழிக்கெல்லாம் கால்கள் நடுங்கத் தொடங்கிற்று. மின்னவனுக்கு கிடைத்த தண்டனையைக் கேட்டு அதிர்ச்சியடைந்து சோகத்தில் நின்றிருக்கும் பொற்கயல் கூட ‘இவனுக்கு நன்றாக வேண்டும்!’ என வீரபாண்டியனை பார்த்து நினைத்து விட்டு பிறகு மீண்டும் மின்னவனின் நிலை எண்ணி வருத்தத்தில் மூழ்கினாள்.

“உன்னை வளர்த்தவன் முன்பே வித்தை காட்டுகிறாயா வீரபாண்டியா? நாடாளப்போகும் அரச வம்சத்தை சார்ந்த உனக்கு வீரம் எவ்வளவு முக்கியமோ… அதுபோல் நாவடக்கமும் அவையடக்கமும் அவசியம். இனி படைத்தலைவர் மின்னவரை ஏதேனும் வசைபாடினாய் என்றால் உன் நாவிருக்காது” என்று மிரட்டினான்.

“குலசேகரா! வீரபாண்டியா! போதுமப்பா நிறுத்துங்கள்! பெற்ற தாய் முன்பே பிள்ளைகள் இப்படி அடித்துக் கொள்வதை என்னால் பார்க்க முடியவில்லை! ஈசனே! விரைந்து என்னைக் கைலாயத்திற்கு அழைப்பாயாக!” என மனம் வருந்தினார் பாண்டிமாதேவி. அவர் கரம்பற்றி துணையாக நின்றார் பாண்டிய அரசி.

வீரபாண்டியன் கழுத்தில் இருந்து வாளை எடுத்து அவன் கையை வெடுக்கென விடுவித்தான் குலசேகரன். வீரபாண்டியன் அண்ணனின் அதீத பலத்திற்கு முன்பு பணிந்து வேறு வழியின்றி அமைதியாக அரைமனதோடு தண்டனையை ஏற்றுக் கொண்டான்.

காலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை எண்ணிப் பார்த்த மின்னவனுக்கு அதன்பிறகு குலசேகரபாண்டியன் தன்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தைத் தந்திருந்தது. நண்பன் நட்புப் பாராட்டி சிரித்துப் பேசாமல் மன்னனாகவே நடந்து கொண்டான். தன் முகத்தைக்கூட ஏறிடாமல் சென்று விட்டான். இவை அவன் உள்ளத்தை நெருடிக் கொண்டே இருந்தது. இந்த நெருடலில் இருந்தவன், கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு சற்று இமைகளை மூடினான். கால் நாழிகைகூடக் கடந்து இருக்காது! அப்போது அங்கு வந்த பொற்கயல் சத்தமின்றி மெல்ல அவனது அருகில் அமர்ந்து அவன் தலையை வருடிக் கொடுக்கத் தொடங்கினாள்.

கண்விழித்த மின்னவன் அருகில் பொற்கயல் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்திலேயே சட்டென எழுந்து அமர்ந்து, “முத்தே! என்ன இது?” என்றான் திகைப்புடன்.

அவன் திகைப்புடன் கேள்வி எழுப்பும் அளவு பொற்கயலின் கோலம் இருந்தது.

அணிகலன்கள் என்றால் விரும்பி ஆடைபோல் உடுத்திக் கொண்டு அழகு பார்க்கும் பொற்கயலின் உடலில் ஒரு பொட்டு அணிகலன் கூட இல்லை.

அலங்கரிக்கப்படாத தேர் போலவும், வறண்ட வயல் போலவும், தோகையற்ற மயில் போலவும் தோற்றமளித்த பொற்கயலது கண்களில் தீட்டியிருந்த மை அழிந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தது. கூந்தல் கலைந்திருந்தது.

மின்னவனைப் பிரியப்போவதை எண்ணி அன்று முழுவதும் விம்மி விம்மி அழுதாள் அவள்.

காலையிலிருந்து உணவும் நீரும் இன்றி அழுதவள் இப்போது மின்னவனுக்கு விடை கொடுக்கும் நேரமும் அழுதால் சரியாக இருக்காது என நினைத்து புன்முறுவலுடன் அவனை நோக்குபவள் மறுகையில் வைத்திருந்த சிறு துணி முடிப்பைத் திறந்து மின்னவன் முன் நீட்டினாள். அதனுள் பொற்கயலின் அனைத்து அணிகலன்களும் இருந்தன.

அவளைப் பார்த்துவிட்டு கையிலிருக்கும் அணிகலன்களைப் பார்த்த மின்னவன் மீண்டும் பொற்கயலைப் பார்த்து, “முத்தே! எதற்காக இவை? ஏன் அணிகலன்களை களைந்தாய்?” என்று கேட்க,

“தங்களுக்காகத்தான்! மன்னர் தங்களுக்கு விதித்த தண்டனையை நானும் உடன் இருந்து கேட்டேனே! கோடியக்கரை குழவர் கோயிலில் தாங்கள் சிவப்பணி செய்ய வேண்டும் என தந்தை சொன்னார்! அதுவும் உங்கள் சொந்தச் செலவில் செய்ய வேண்டுமாம். இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் இதைக் கொண்டு சிவப்பணியை மேற்கொள்ளுங்கள்”.

அவளுக்கு ஏதும் பதில் கூறாத மின்னவன் கையில் இருக்கும் அணிகலன்களில் சிலம்பொன்றை எடுத்துப் பார்த்து சிறு முறுவல் காட்டியவன், “என்னிடம் இருந்த செல்வத்தை முன்னமே செலுத்திவிட்டேன் முத்தே! எனக்கு உதவ நினைத்த உன் நல்ல மனதிற்கு என் இதய நன்றி!” என்றவன் பொற்கயலின் வலது காலைப் பற்றி தன் மார்பில் வைத்து அந்தச் சிலம்பை அவள் காலில் அணிந்த பிறகு அங்கு முத்தமிட்டான்.

“நன்றி தெரிவிக்கும் பொருட்டு நான் அந்நியமாகிவிட்டேனா?”

“நன்றியும் ஒரு விதத்தில் காதலின் வெளிப்பாடுதான் முத்தே!” என மற்றொரு காலைப் பிடித்து சிலம்பை அணிவித்துவிட்டு அங்கு முத்தமிட்டான்.

பிறகு அவள் கையில் இருந்த அனைத்து அணிகலன்களையும் பெற்று கீழே வைத்துவிட்டு பிற்பாடு ஒவ்வொன்றாக எடுத்து அவளுக்கு அணிவிக்க துவங்கினான்.

மேகலையை அணிவித்த பிறகு இடையில் ஒரு முத்தம். கழுத்தில் அணியும் மாலைகளை அணிவித்து கழுத்தில் பல முத்தங்கள். வளவிகளை அணிவித்து கைகளில் முத்தங்கள். மோதிரங்களை அணிவித்து விரல்கள் பத்திலும் முத்தங்கள். தோடுகளைச் சூட்டி காதுகளில் முத்தம். மூக்குத்தியை அணிவித்து மூக்கில் ஒரு முத்தம். ‌ நெற்றி ஆரத்தை அணிவித்து நெற்றியில் முத்தம்‌ என அணிகலன்களை அணிவித்த இடமெல்லாம் முத்தத்தை மின்னவன் தீண்ட, பொற்கயல் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தாள்.

நீண்ட காலம் தன் பிரிவை அவள் தாங்கிக் கொள்வதற்காகவே இத்தனை முத்தங்களை வழங்கினான் மின்னவன்.

முத்த மழை முடிந்ததும் கண் திறந்த பொற்கயல் நீர் ததும்ப மின்னவனைப் பார்த்தாள்.

அவனோ குறுநகையுடன் “உன் அழகை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது அழகே!” என்றான்‌.

”அப்போது என்னுடனே இருந்து விடுங்கள்! கோடியக்கரை செல்லாதீர்கள்!”

“எனக்கு மாத்திரம் ஆசை இல்லையா? தண்டனைக் காலம் முடிந்த பிறகு ஓடோடி வந்து விடுவேன்”

அழுகையைக் கட்டுப்படுத்திய பொற்கயல் “உங்கள் தவறுக்கு மன்னர் தண்டனை விதித்து விட்டார். என் தவறுக்கு எனக்கு யார் தண்டனை கொடுப்பது?”

“உன் தவறா? என்ன அது?”

“ஆம்! என்னால் தான் நீங்கள் மாவலியுடன் மல்லுக்கட்ட நேர்ந்தது. இளைய பாண்டியனிடம் அவமானப்பட நேர்ந்தது! ஒரு வகையில் உங்கள் தண்டனையின் காரணமே நான்தான். இதையெல்லாம் மன்னரிடம் சொல்லி விடுகிறேன் எனச் சொன்னபோது வேண்டாம் என்றீர்கள். ஏன்? என்னையும் அக்கையையும் காப்பதற்காக!?”

“இல்லை முத்தே! நான் உன்னை மன்னரிடம் மறைக்கச் சொல்லவில்லை. அங்கு என்ன நடந்தது என்று நம்மை விட ஒற்றர்கள் மூலம் அவர் அதிகம் அறிந்திருப்பார். தண்டனையை முடிவெடுத்து விட்டுத்தான் விசாரணையை தொடங்கியிருப்பார். அதனால் தான் நீ அவையில் எதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம் என்றான். பிறகு… நான் காக்க நினைத்தது உன்னையும் உன் அக்கையையும் இல்லை! உன் தந்தையை”.

“தந்தையையா?”

“ஆம்! நீ அவர் முன் மெய் கூறியிருந்தால் அக்கையின் காதல் கசிந்திருக்கும். ஏன்… நமது காதலும் கூட கசிந்திருக்கும். ஏனோ மாவலி தெரிந்தோ தெரியாமலோ நமக்குச் சாதகமாகப் பேசிவிட்டான். நீங்கள் ஏன் வணிக வீதி கூடலுக்கு சென்றீர்கள் என அறிந்தால் அங்கேயே இளைய பாண்டியரையும் மாவலியையும் ஒரு வழி செய்திருப்பார் உன் தந்தை. காலிங்கராயரின் கோபத்தை நம் பாண்டியநாடே அறியுமே. அனைவரது முன் பெற்றெடுத்த பெண்களின் மீது தவறு இருப்பது தெரிந்தால் அதைவிட வேறு பெரும் அவமானம் ஏதுமில்லை முத்தே. அதன் பிறகு அவர் நிமிர்ந்த நடை போட முடியுமா? இங்கு பெண்களைப் பெற்ற பலரும் இதுபோன்று ஏதும் நடந்து விடக்கூடாது என வேண்டிக் கொள்ளாத நாளே இல்லை. நம் காதலுக்காக பெற்றவர்களை அவமானப்படுத்துவது நியாயமாக இருக்காது!”

“நீங்கள் சொல்வதும் சரிதான்! தந்தை கோபக்காரர்! அதே சமயம் மிகவும் பாசக்காரர். பெண்கள் மீது தவறு இருப்பது தெரிந்தால் உடைந்து போய் விடுவார்”.

“ஆமாம், உன்னிடம் கேட்க வேண்டும் என்று இருந்தேன். உன் அக்கை எப்படி இருக்கிறார்? இளைய பாண்டியருக்கும் தண்டனை கிடைத்ததை எண்ணி வருந்துகிறாரா?”

“இல்லை! கயல்விழிக்கு இளைய பாண்டியர் மீது எந்தவிதக் காதலும் இல்லையாம். அவரை இனியும் காதலிப்பது முட்டாள்தனம் எனக் கருதுகிறாள். அவர் மகதநாடு செல்வதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். அதேசமயம் நீங்கள் கோடியக்கரை செல்வதை என்னிடம் சொல்லி வருந்தினாள்”.

“ம்ம்ம். உன் தந்தை! அவர் என்ன சொன்னார்?”

“அன்று அங்கு செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஏன் சென்றீர்கள் என்று கேட்டார். மன்னரிடம் சொன்னதைத்தான் சொன்னேன் மீனாட்சியை தரிசிக்கச் சென்றதாக!”

“ம்ம்ம்.”

“அவருக்கு கோபம் எல்லாம் மாவலி மீதுதான். அவன் குறுக்கெலும்பை உடைக்க ஆசைப்படுகிறார். பிறகு உங்களை…”

“என்ன? என் மீதும் கோபமாக இருக்கிறாரா?”

“இல்லை! தாங்கள்தான் தக்க சமயத்தில் எங்களுக்கு உதவி புரிந்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தார். நாளைக் காலை தங்களைச் சந்தித்து பேசப் போவதாகச் சொன்னார்”.

“சரி”.

அவர்களுக்குள் சில நொடிகள் அமைதி நிலவியது. அதை பொற்கயல் தான் முதலில் கலைத்தாள்

“நாளை பயணம் தொடங்கி விட்டால் பிறகு தங்களை எப்போது காண்பது?”

“நான் உன் இதயத்தில்தான் இருக்கிறேன்! என்னை ஏன் பிரிந்ததாக எண்ணுகிறாய்?”

“மின்னவரே, ஆயிரம் சொன்னாலும் உங்கள் முகத்தைக் காண முடியாது அல்லவா?”

“விரைவில் முடிந்து விடும். நீ நினைப்பதற்குள் மதுரை திரும்பி விடுவேன்!”

“காத்திருப்பேன்!” என்றவளின் விழிவழியே கண்ணீர் தேங்கி நிற்பதை அறிந்த மின்னவன் அவளை நெருங்கி அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்தான்.

பொற்கயல் தன் மடியில் இருப்பவன் நெற்றியில் முத்தம் ஒன்றைக் கொடுத்தாள்.

காதல் கசியும் கண்களால் அவளை நோக்கிய மின்னவன் “காலை பயணத்தைத் தொடங்க வேண்டும் உன் அழுகையைப் பார்த்து விட்டுத்தான் புறப்பட வேண்டுமா?” என்று வினவ, “மன்னியுங்கள்!” என்று கண்களைத் துடைத்து விட்டுச் சிரித்தாள் அவள்.

“க்கும்… இதற்கு அதுவே நலம்!”

“உங்களை…” என அவனைச் செல்லமாக அடித்த பொற்கயலுக்கு உள்ளுக்குள் எப்படி இருந்தது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

மின்னவனுக்கும் பொற்கயலைப் பிரிய விருப்பமில்லை! இதுபோல் எப்போதும் அவள் மடி மீது தலை சாய்ந்து கிடக்க வேண்டும் என எண்ணினான். ஆனால் இந்தக் காதல் தருணம் வெய்யோன் வருகை தரும் வரைதான் நிலைத்திருக்கும் என்பதால் விடாமல் பொற்கயலை ஏதேதோ பேசிச் சிரிக்க வைத்து அழகு பார்த்தான். இருவரும் சிறிது நேரம் சிரித்து மகிழ்ந்தார்கள்.

அதன்பிறகு இதழ்கள் இணைந்தன. இத்தனை நேரம் இவர்களைக் கண்டு வாடிக் கிடந்த நந்தவனப் பூக்கள் எல்லாம் இரவென்றும் பாராமல் பூத்து விரிந்தன. காதல் காட்சிகள் அவற்றை மட்டுமின்றி குளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் வெட்கப்பட வைத்தது.

பிறகு பொழுது ஏறியதும் பொற்கயலைப் பிரிந்து மதுரைக்கு விடை கொடுக்க தயாரானான்‌ மின்னவன்‌.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

பத்தாம் அத்தியாயம்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...