கால், அரை, முக்கால், முழுசு | 2 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 2 | காலச்சக்கரம் நரசிம்மா

2. கருப்பு அசுரர்கள்

கோவையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, தனது பென்ஸ் காரை சென்னையில் உள்ள நண்பன் செந்திலின் வீட்டிற்கு அனுப்பியிருந்தான், ஆதர்ஷ். ‘அதுதான் நான் செய்த தவறு’ — என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

சென்னை வந்ததும், நண்பன் செந்தில் வீட்டுக்குச் சென்று தனது பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு பிறகு ஏதாவது ஹோட்டலில் ரூம் புக் செய்யலாம் என்கிற எண்ணத்தோடு, ஆட்டோவில் தரமணியில் இருந்த செந்தில் வீட்டுக்குச் சென்றான். ஏரியாவின் பெயரை பார்த்தாவது ஆதர்ஷ் எச்சரிக்கை அடைந்திருக்கலாம்.

செந்தில் வீட்டு பெல்லை அழுத்தியதும், ஒரு சிறு பெண் வந்து கதவைத் திறந்தாள் !

”மணிமாலா..! பெல் அடிக்கிறது..! யார் வந்திருக்காங்கன்னு பாரு..!” செந்தில் கூற, இது நிச்சயம் ஒத்திகை செய்யப்பட்டு அரங்கேற்றப்படும் நாடகம்தான் –என்பது உடனே புரிந்து போனது ஆதர்ஷுக்கு. தனது தங்கையின் பெயர் மணிமாலா என்பதை இவன் தெரிந்து கொள்ள வேண்டுமாம்… அவனை விழுங்கிக் கொண்டிருந்த மணிமாலாவின் கண் விழிகள், ”ஊ சொல்ல வா.. மாமா … ஊஊ சொல்ல வா” என்று சுழன்றபடி நோக்கிக் கொண்டிருந்தன.

அவளது பார்வையைத் தவிர்த்தபடி, மணிமாலாவைக் கடந்து உள்ளே சென்றான், ஆதர்ஷ்.

அதற்குப்பின் தரமணி குடும்பம் உனக்கு ”தரேன் எங்கள் மணியை ! ஏற்றுக்கொள்..!” என்கிற பாவனையிலேயே நடக்கத் தொடங்கினர்.

பென்ஸ் கார் சாவி அவர்கள் வசம் உள்ளபோது இவனால் எப்படி நழுவ முடியும்.? ! மணிமாலா மாட்டுக்கார வேலன் ஜெயலலிதா போல ஒரு பக்கம் பார்த்து, ஒரு கண்ணை சாய்த்து, உதட்டை கடித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள். ஆதர்ஷ் எம்ஜிஆராக இருந்திருந்தால், அதனை ரசித்துப் பாடியிருப்பான். அவன்தான் பெண்களுக்கு எம்.என்.நம்பியாராயிற்றே…

”ஆபிஸ்-ல ரூம் புக் பண்ணி இருக்காங்கடா..! அங்கே போகணும்..!” –ஆதர்ஷ் தயக்கத்துடன் சொல்ல, செந்திலின் தாய் தங்கம் இடைமறித்தாள்.

”என்ன… அட்ரெஸ்.சு…. கடல் போல நம்ம வீடு இருக்குது..! இங்கேயே குளிச்சிட்டு, என் கையால லஞ்ச் சாப்பிட்டு ஆபீஸ் போகலாம். ஹோட்டல் ரூம் எதுக்கு..?!” –செந்திலின் அம்மா தங்கம் சொல்ல, ஆதர்ஷுக்கு வியர்த்தது.

ஆதர்ஷ் என்கிற அவன் பெயரையே நசுக்கி கொலை செய்யும் இந்த அம்மாவிடம் சிக்கினால், ”அடேய் மாப்பிள்ளை” கதைதான்.

”ஆமாம்டா..! கடல் போல எங்க வீடு இருக்கு..! இங்கேயே தங்கிடு..!” –செந்தில் சொன்னான். இந்த அட்லாண்டிக் கடலுக்கு நான்கு மாத வாடகை பாக்கி என்றுதான், இவனிடம், கைமாத்து வாங்கியிருந்தான், செந்தில்.

‘ஆமா ! வீடு கடல் போலதான் இருக்கு! . ஆனால் உங்க பொண்ணு மணிமாலா கடல் கன்னியா அதுலே நீந்திக்கிட்டு இருக்காளே!’

‘உங்க வீட்டுல குளிக்கலாம் தான்! ஆனா டவலை உங்க பொண்ணு கிட்டே கொடுத்து அனுப்புவீங்களே!! டவலை கொடுக்கிறேன் பேர்வழின்னு, என் கையை ஒத்தி ஒத்தி எடுத்தா என்ன செய்யுறது..?’

‘வேணுமின்னே நீங்க சாப்பாடை காரமா செஞ்சுட்டு, எனக்கு புரை ஏற வச்சு, ‘மாப்பிளை க்கு புரை ஏறி போச்சு, தண்ணி கொண்டா மணிமாலான்னு’ சொல்லி, என் தலையில் அடிக்கிறேன் பேர்வழின்னு தலையை தடவுவீங்க..! ஐயோ.! வேண்டவே வேண்டாம்..!’–

ஆதர்ஷ் அங்கிருந்து புறப்படுவதற்குத் துடித்தாலும், அவர்கள் விடுவதாகவே இல்லை. வேறு வழி இல்லை. தரமணி வீட்டிலேயே குளித்து, பாத்ரூமிலேயே டிரஸ் செய்து கொண்டு, மெதுவாக வெளியே வந்தான். அவர்கள் டைனிங் டேபிளில் தயாராகக் காத்திருக்க, தயக்கத்துடன் உட்கார்ந்தான்.

அவர்கள் தன்னைச் சுற்றி அடிக்கும் கும்மியை பார்த்ததும், திடீரென்று அவனுள் ஒரு சந்தேகம். அவனுடைய பெரியம்மா, அவன் பெற்றோர்களுக்கு எதிராக ஏதோ வசியம் வைத்தது போல், மணிமாலாவிடம் அவன் மயங்குவதற்கு உணவில் ஏதாவது மருந்து வைத்திருப்பார்களோ, என்கிற பயம் வேறு தோன்றியது.

செந்திலுக்கு சாப்பாடு பரிமாறி இருந்த தட்டை தான் எடுத்து வைத்துக்கொண்டு, தனக்கு பரிமாறி இருந்த தட்டை செந்தில் முன்பாக வைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராமல் சாப்பிடத் தொடங்கினான்.

தங்கம் அம்மாவுக்கு அது நல்ல சகுனமாக தோன்றியது.

”மாப்பிள்ளையும், மைத்துனனும் தட்டு மாத்திக்கிட்டாங்க. ! நல்ல சகுனம்தான்..!” — என்று சட்டென்று கூறிவிட, விருட்டென்று எழுந்தான், ஆதர்ஷ்.

”நான் உங்க வீட்டுக்கு வந்தது என்னோட காரை எடுத்து போக… செந்தில்..! ஸ்டாப் ஆல் திஸ் நான்சென்ஸ்..! என்னோட கார்ச் சாவி எங்கே..? உங்க வீட்டு தண்ணியிலே நான் தலை முழுகினது, உன்னோட நட்புக்கும் சேர்த்துத்தான்..!” –என்று சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு விடுவிடுவென்று வெளியே நடந்து, தனது பென்ஸ் காரைக் கிளப்பினான்.

”பெரிய கல்லூளி மங்கனா இருக்கானே..! இந்த ரிஷ்யசிருங்கர் வேஷம் எவ்வளவு நாளைக்குன்னு பார்க்கலாம்.!” –தங்கம் ஏமாற்றத்துடன் கூறினாள்.

• • •

மாலை மூன்று மணி

‘டிரினிட்டி இண்டியா’ சேனல் கட்டட வளாகம் பிரம்மாண்டமாக, நீரூற்றுகளுடன் காணப்பட்டது. எங்கு நோக்கினாலும் கிரானைட் கற்களும், வெளிநாட்டு டைல்களும் ஜொலித்தன.

ஆதர்ஷ் தனது பென்ஸ் காரை நிறுத்துவதற்குப் பார்க்கிங் ஏரியாவில் இடம் தேட, ஹியுண்டாய் அக்ஸ்ன்ட் மற்றும் ரெனால்ட் கார்களுக்கு நடுவே ஓர் காலி இடம் தென்பட, அதனைக் குறி வைத்து அவன் செல்ல, சட்டென்று ஒரு நீல வண்ண அல்கசார் ஆதர்ஷ்-ஷை முந்திக்கொண்டு சென்று, அந்த இடத்தைக் கைப்பற்றியது.

கடுப்புடன் ஆதர்ஷ் அப்படியே நின்றிருக்க, நல்லவேளையாக அந்த ரேனால்ட் கார் தனது இடத்தை விட்டு விர்ரென்று புறப்பட, அந்த இடத்தில் தனது காரைத் திருப்பினான், ஆதர்ஷ்.

அல்கசார் கார்க்காரனை நாலு வார்த்தை சூடாகக் கேட்க வேண்டும், என்று மனதில் தோன்ற, தனது காரை லாக் செய்துவிட்டு, தனது லெதர் பேக்குடன் நடந்தான் ஆதர்ஷ். ஆனால் அல்கஸார் கார்க்காரன், அவனை நோக்கியே வந்தான்.

”சாரி ப்ரோ..! எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு பழக்கம். எல்லாமே எனக்கு தான் முதல்ல கிடைக்கணும்ன்னு..! அதுக்குக் காரணம் நான் ஜனவரி இரண்டாம் தேதி காலையில ஒரு மணிக்கு பிறந்தவன். எங்கம்மா மட்டும் என்னை ஒன் அவர் முன்னாடி பெத்திருந்தா, உலகமே என்னோட பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கும். ஒரு மணி நேரம் லேட்டாப் பொறந்ததால, நியூ இயர் பர்த்டேயை மிஸ் பண்ணிட்டேன். அதனால தான், நான் எதையும் டிலே செய்வது இல்லே..! வேகமாப் போய் எல்லாத்துலயும் முந்திக்குவேன்..! பை தி வே, என் பெயர் கார்த்திக் வாசுதேவன், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து வரேன்.” –என்றான், கார்த்திக்.

”ப்ளீஸ் டோன்ட் கால் மீ ப்ரோ..! என்னவோ போல இருக்கு. என்னை ஆதர்ஷ்ன்னு கூப்பிடுங்க..! நான் கோவை தொண்டாமுத்தூர்ல இருந்து வரேன். இங்கே நிகழ்ச்சி தயாரிப்பாளரா சேரப்போறேன்..!” –என்று தனது கையை நீட்ட, கார்த்திக், அதன் நுனியைப் பற்றிக் குலுக்கினான்.

இருவரும் ஒரே நேரத்தில், டிரினிட்டி இந்தியா டிவி ஆபிஸ் ரிசப்ஷனில் நுழைந்தனர்.!

ஆதர்ஷ் வடநாட்டு ராஜ குடும்பத்தின் இளவரசன் போன்று கம்பீரத்தின் உச்சக்கட்டம். ஓர் ஜிம் இன்ஸ்டிரக்டர் போன்று வலிமையின் மொத்த உருவம்..! நடையிலேயே ஒரு ஆளுமை..! நேர்த்தியான ஆடை அலங்காரம்..! தன்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்கிற செயற்கைத்தனம் இல்லாத உடல்கூறு மொழிகள். இளம் வயதிலேயே நிறைய அனுபவங்களைப் பெற்றவன் என்கிற முகபாவம். அவன் கற்ற கல்வி கண்களில் தேங்கி நின்றது. மொத்தத்தில் பூரண தகுதிகளைக் கொண்டவன் என்பதை அவனது உருவமே பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவனது புகைப்படம் மேட்ரிமோனி விளம்பரத்தில் வந்தாலே போதும், பெண்கள் அவனைக் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள்.

ஆதர்ஷ்ஷை விட கார்த்திக் அதிக நிறம் கொண்டிருந்தாலும், அவனை விடச் சற்றுக் குட்டையாக இருந்தான். கண்களில் உடனே பணிகளைத் தொடங்கி கோடிகளை சேர்த்து , ஈசிஆர்-இல் வீடு வாங்க வேண்டும் என்கிற அவசரம் புலப்பட்டது, ஆதர்ஷின் மனதில் பெண்களின் மீது எரிச்சலும், வெறுப்பும் இருந்தாலும், அவர்களை நோக்கும் போது கண்களில் அந்த துவேஷம் புலப்படவில்லை. ஆனால் கார்த்திக்கின் கண்களில், ”உன்னையெல்லாம் நான் எதற்கு மதிக்க வேண்டும்?” என்று அவன் பெண்களை பார்த்த பார்வையிலேயே வெறுப்பு தெரிந்தது. கார்த்திக் ஒரு வங்கி கவுண்ட்டருக்கு சென்றால் கூட, மிகவும் அழகான பெண் அமர்ந்திருக்கும் கவுண்ட்டருக்கு தான் செல்லுவான். பக்கத்து கவுண்ட்டரில் இருந்த சோடா பாட்டில் கண்ணாடி அணிந்த பெண் ”என் கவுண்ட்டருக்கு வாங்க ” என்று அழைத்த போதுகூட, வரிசையில் நின்று அந்த அழகான பெண்ணிடம்தான் செக்கைக் கொடுத்தான். அவனுக்கு எல்லாவற்றிலும் தி பெஸ்ட் தான் வேண்டும். பிராண்டட் ஷர்ட், பாண்ட், பிராண்டட் ஷூஸ் எதிலுமே குறைவு வைக்க மாட்டான். கார்த்திக்கிற்கு விசேஷம் அவனது கண்கள். அகன்று விரிந்திருந்த அந்த கண்களால் அவன் பார்க்கும்போது, சிறைச்சாலை சர்ச் லைட் போல அவை சுழலும். அதில் பல பெண்கள் சிக்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் யாரும் தனது லெவலுக்கு இல்லை என்று அலட்சியம் செய்துவிடுவான்.

அவர்கள் உள்ளே நுழைந்த அந்த வரவேற்பு ஹால், ஓர் அரண்மனையின் கொலு மண்டபம் போன்று, ஷாண்ட்லெர் விளக்குகள், உயர்ரக ரத்தின கம்பளங்களுடனும் செயற்கை நீரூற்றுகளுடனும் திகழ்ந்தது.

வரவேற்பு மேஜையின் எதிரே, நீண்ட ஹாலின் நடுவே, சுவற்றில் பெரிய அளவில் டர்பன் கட்டிய ஒரு பெரியவர் ஒருவரின் உருவம் மாட்டப்பட்டு இருக்க, அந்த புகைப்படத்தின் இருபுறத்திலும், பதிமூன்று கிலோ வெள்ளியில் வடிக்கப்பட்ட ஆளுயரக் குத்து விளக்குகள் கண்ணாடிப் பேழையினுள் நிற்க, நடுவே ஒரு பெரிய வெள்ளிக் கலயத்தில், வண்ண மலர்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அதன் பின்பாக பெரியவரின் படத்திற்குக் கீழே செயற்கை நீரூற்று ஒன்று பெருகிக் கொண்டிருந்தது.

வஸுதா என்கிற பெயர் பேட்ஜில் பொறிக்கப்பட்டிருக்க, வரவேற்பில் அமர்ந்திருந்த பேரழகி ஒருத்தி, அவர்களை வரவேற்றாள்

”ஆர் யூ கைஸ் ஜாயினிங் டியூட்டி டூட்டி டுடே..? வெல்கம் டு அவர் டிரினிட்டி பாமிலி..! ப்ளீஸ் பீ சீட்டெட்.! ஒன் மிஸ் சஞ்சனா பிரம் எச் ஆர் டெபார்ட்மெண்ட் -வில் ரிஸீவ் யூ” –என்றபடி போனை எடுத்தாள்.

கைஸ் என்றதும் கார்த்திக்கிற்கு சுள்ளென்று கோபம் வந்தது. தமிழில் சூடாக பதில் தந்தான்.

”கைஸ்னு சொல்றீங்க..? நாங்க என்ன விடலைப் பசங்களா..? எங்களை சார்ன்னு கூப்பிடுங்க..!” –சொன்னதும் ஆடிப் போய்விட்டாள், வஸுதா.

”சாரி..! ப்ளீஸ் பீ சீட்டட்” –என்று அந்த பெரியவரின் புகைப்படத்திற்கு முன்பு இருந்த சோபாவைக் காட்டினாள்

அந்த ஹாலில் ஏராளமான அழகிய பெண்கள் வண்ணத்துப் பூச்சிகளாய், சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தனர். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, தொடங்கி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, திரிஷா போன்ற பெண்கள் கழுத்தில் ஐடி கார்டுடன் நடமாடிக் கொண்டிருக்க,. ஆதர்ஷ் மெத்தென்ற சோபாவில் எரிச்சலுடன் சரிந்தான்.

”சிக்கனிங்..! பெண்கள் இல்லாத ஆபிஸ் உலகத்தில் இல்லவே இல்லையா..? இவங்களை எப்படிச் சமாளிக்கிறதுன்னே தெரியலை..! நான் என்னோட பழைய ஜாபை ரிசைன் செஞ்சதே ஒரு பெண்ணால்தான்..!” –ஆதர்ஷ் கூற, அருகில் அமர்நதிருந்த கார்த்திக் திகைப்புடன் அவனை பார்த்தான்.

”உங்க கருத்தை நான் ஆமோதிக்கிறேன்…” –கார்த்திக் சிரித்தான்.

”நீங்க அந்த ரிஷப்ஷனிஸ்ட் பெண்ணுக்கு சூடாக் கொடுத்ததைப் பார்த்தேனே. குட்..! நீங்க கொடுத்த டோஸ்-ல அவ அரண்டு போயிட்டாள்..!” -ஆதர்ஷ் புன்னகைத்தான். .

”நானும் உங்களை மாதிரி பெண்கள் இல்லாத ஆபிசைத்தான் எதிர்பார்த்தேன். காரணம், பழைய ஆபிஸ்ல நான் ஒரு பெண்ணாலே பழி தீர்க்கப்பட்டவன். என்னோட பாஸ் ஒரு சபாலானந்தன். எனக்குக் கொடுக்க வேண்டிய பிரமோஷனைப் புதுசாச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் கொடுத்தான். நான் அவன்கிட்டே நியாயத்தைக் கேட்டேன். அதுக்கு அவன், ‘லேடீ பாஸ் கிட்ட வேலை பாரு..! உனக்கும் பிரமோஷன் கிடைக்கும்’-ன்னு சொன்னான்..! ‘சரி, உங்க மனைவி ஆபிஸ் ஆரம்பிக்கறப்பச் சொல்லி அனுப்புங்க’–னு சொல்லிட்டு, ரிசைன் பண்ணிட்டேன். உங்க கதை எப்படி..?” –கார்த்திக் கேட்க, சலிப்புடன் அவனை நோக்கினான் ஆத்ரஷ்.

”எல்லாத்தையும் மறந்துட்டு புது ஆபிஸ்ல ஜாயின் பண்ணறப்ப இந்தப் பேச்சுத் தேவையா..? ஆபிஸ்ல கம்பெனி வளரணும்னு வேலை தர்றான்..! அந்த வேலையில கவனம் செலுத்தாமல், ‘அவனை லவ் பண்றேன், இவனை லவ் பண்றேன்’னு பின்னாடியே அலையுதுங்க. யாருக்காவது பர்த்டேன்னா உடனே கேக் வாங்கி பார்ட்டி கொண்டாடறாங்க..! ஆஃபீஸ்ல பெண்கள் இல்லாம இருந்தா, எவ்வளவு நிம்மதியா வேலை செய்ய முடியும்..? கம்பெனி எல்லாம் இழுத்து மூடுவதற்குக் காரணமே, ஆபிஸ்ல வேலைகளைத் தவிர, மீதி எல்லாம் ஜரூரா நடக்குது. கலீக்ஸ்ன்னா வேலைகளை ஒண்ணாச் செய்யணும். ஒருத்தருக்கொருத்தர் பிரைவேட்டா உறவு வச்சுக்கிட்டா, வேலையா செய்யத் தோணும்..?” –ஆதர்ஷ் சொல்லிக்கொண்டே இருக்க, மற்றொரு அழகிய வாலிபன், இவர்கள் பேசுவதை நின்று கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு தனது கையை நீட்டியபடி வந்து அமர்ந்தான்.

”ஐ ஆம் தினேஷ் தில்லைநாயகம்..! நான் மதுரையைச் சேர்ந்தவன். நான் டிரினிட்டி டிவி யில எடிட்டரா வேலைல சேர வந்திருக்கேன். பேமிலி எதுவும் கிடையாது. உங்களை மாதிரியே எனக்கும் பெண்கள்ன்னா அலர்ஜி..!” -தினேஷ் கூறினான்.

”வாட் எ கோயின்ஸிடென்ஸ்..! ஆங்கிலத்துல சொல்லுவாங்க… Birds of Same feathers flock togetherன்னு..! அந்த வகையில பெண்ணாதிக்கத்திற்கு எதிரான நாம மூணு பேரும், இங்கே ட்ரினிட்டி டிவி-ல ஒன்று சேர்ந்து இருக்கோம்.” –ஆதர்ஷ் கூறும்போதே, புதிதாக ஒரு குரல் கேட்டது.

”மூணு இல்லை சார், நாலு..! நானும் உங்க கிளப்-ல மெம்பர் ஆக விரும்பறேன்..! என் பெயர் ரேயான் தங்கபாண்டியன்..! திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் தான் என் சொந்த ஊரு..! நான் ட்ரினிட்டி டிவில கிராபிக் டிசைனரா இன்னைக்குச் சேரவந்திருக்கேன்..!” –என்றான் ரேயான்.

”அதெல்லாம் சரி..! உங்களுக்கு ஏன் பெண்களைப் பிடிக்காது..? காரணம் சொன்னாதான், எங்க கிளப்ல மெம்பெர்ஷிப் கிடைக்கும்..” –கார்த்திக் சிரித்தபடி சொல்ல, சங்கடத்துடன் பதில் கூறினான், ரேயான்.

”சொல்லவே நா கூசுது..! அது ஒரு சோகக் கதை..! என் அப்பா ஒரு மெடிக்கல் ரெப்ரெசண்டேடிவ்..! ஆனா அவரு ஒரு டிகே.!”

”’டிகேன்னா திராவிடர் கழகமா..?” –தினேஷ் கேட்க, தலையசைத்து மறுத்தான், ரேயான்.

”அந்த டிகே இல்லை..! இவர் Dame Killer என்கிற DK..! எங்கப்பா பார்க்க அரவிந்த்சாமி மாதிரி இருப்பார். மெடிக்கல் ரெப்ரெசெண்ட்டிவா இருக்கிறதால பல மாநிலங்களுக்குப் போவார். போகிற ஊர்ல யாராவது ஒரு பெண் அவரை வளைச்சுப் போட்டுக்குவா. இப்படியே பல மாநிலத்துல இருந்து பல சித்தி எனக்கு வந்துட்டாங்க. இதுல சோகக் கதை என்ன தெரியுமா..? என்னோட கேரளா சித்தி என்னோட முன்னாள் காதலி..! தயவுசெய்து என்னை உங்களில் ஒருத்தனா சேர்த்துக்கங்க..!” –ரேயான் நொந்து போய் கூறினான்.

”உங்க கதை என்ன..?” –ஆதர்ஷ், தினேஷைக் கேட்டான்.

”என் அப்பா ஒரு ஸ்மால் ஸ்கேல் தொழிலதிபர். அவரோட டைப்பிஸ்ட் ஒரு டைப்பா டைப்படிச்சு, அவரை வளைச்சுப் போட்டுக்கிட்டு, எங்க சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுட்டா. என்னை அப்பா கிட்டேயே நெருங்க விடலை. அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அம்மாவோட தம்பி என்னைப் பார்த்துக்கிட்டாரு. ஆனா அவர் பிள்ளையை விட நான் அதிக மார்க் வாங்கின உடனே, என்னை விரட்டிட்டாங்க. நான் ஒரு அனாதை இல்லத்தில் சேர்ந்து படிச்சேன்…! பெண்கள் மேல பயங்கர கோபம். அதனால் அவங்களை நல்லா யூஸ் செஞ்சு ஏமாற்றுவேன்..! அவ்வளவுதான் என் கதை..!” –தினேஷ் சொன்னான்.

“சூப்பர்..! நாலு பேருக்கும் ஒரே கொள்கை..! பெண்ணியத்தை வேரறுப்போம்..! பேசாம அதை ஒரு இயக்கமாத் தொடங்கிடலாமே..! நம்ம சங்கத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்..? ஆன்டி (Anti ) பெண்கள் படைன்னு வைக்கலாமா..?” -கார்த்திக் கேட்டான்.

”வேண்டாம்..! ஆன்டி பெண்கள் படை ன்னு பெயர் வச்சா, நீங்க Auntyகளைத்தானே எதிர்க்கறீங்க. நாங்க சின்னப் பொண்ணுதானேன்னு யங் கேர்ள்ஸ் நம்மை தொந்திரவுபடுத்துவங்க. மொத்தமா பெண் குலத்தையே எதிர்க்கிற மாதிரி ஒரு பெயர் வைக்கலாம்…” ஆதர்ஷ் கூறினான்.

தினேஷுக்கு மினு ஆன்ட்டி நினைவுக்கு வந்தாள்..!

”வருத்தப்படும் வாலிபர் சங்கம்..! எப்படி..?” -ரேயான் கேட்டான்.

”சே சே..! இது நமக்கு வீரம் இல்லைன்னு சொல்றது போல இருக்கு. அவங்க யாரு நம்மை வருத்தப்பட வைக்க..? ஒவ்வொரு நங்கையையும் நிற்க வச்சு, அவங்க தலையில் ‘நங் நங்’னு குட்டுவது போல் நம்ம கிளப்புக்கு பெயர் வைக்கணும்” –என்று தினேஷ் சொல்ல, ஆதர்ஷ் யோசனையுடன் பார்த்தான்.

”நம்ம நாலு பேரும் இங்கே ஒண்ணா வேலை செய்யப் போறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருப்போம். குறிப்பாக… பெண்கள் நம்மகிட்ட வாலாட்டினால், நாம நாலு பேரும் ஒண்ணா அவர்களை எதிர்த்துப் போராடி அடக்குவோம். Dinesh, Aadarsh. Reyaan அண்ட் Karthik (D-A-R-K)-னு நாம நாலு பேரு..! அதனால நம்ம பெயரின் முதல் எழுத்தை வச்சு, DARK DEMONs-னு பெயர் வைப்போம். தமிழ்ல கருப்பு அசுரர்கள்..! நம்ம கிட்ட வம்புக்குவர அத்தனை பொண்ணுங்களையும் ஒரு கை பார்ப்போம்..” –என்று சொன்னபோது, ஒரு குண்டுப் பெண்மணி அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி அலட்சியமாக நடந்து வந்தாள். தனது கண்ணாடிக் கண்களால் அவர்களை அதிகார தோரணையுடன் பார்த்தாள்.

”ஹாய் கய்ஸ்..! நீங்கதான் புதுசா வேலைக்கு வந்திருக்கீங்களா..? நான் எச்-ஆர் டிபார்ட்மென்ட் எக்சிக்யூட்டிவ் சஞ்சனா..! நான்தான் ஆபிசின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு. நான்தான் இந்த வரவேற்பறையை டிசைன் செஞ்சேன்.” –என்று தனது பெருமைகளை பீற்றிக் கொள்ளத் தொடங்கினாள். ஆதர்ஷும், ரேயானும் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மீண்டும் ‘கய்ஸ்’ என்கிற அழைப்பு அவர்களுக்குள் எரிச்சலைக் கிளப்பி இருந்தது.

கார்த்திக் மட்டும் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக போட்டோவில் இருந்த பெரியவரைச் சுட்டிக் காட்டினான்.

”இந்த போட்டோல இருக்கிறவர் யாரு..?”

”அவருதான் இந்த சேனல் உரிமையாளர், பிரதீப் நஞ்சுண்டனோட தாத்தா தர்மலிங்கம்.! பெரிய ஜமீன்தாராக இருந்தார். நான்தான் அவர் போட்டோவை வரவேற்பு ஹாலுல மாட்டி, ரெண்டு பக்கம் வெள்ளிக் குத்து விளக்கு வச்சு, அவர் போட்டோவுக்கு முன்னாடி இந்த செயற்கை நீரூற்றை வைச்சேன். என்னை சிஇஓ பிரதீப் ரொம்பவே பாராட்டினார்..” –தொடர்ந்து சஞ்சனா ஜம்பமடித்தாள் .

”நீரூற்று நல்லா இருக்கா-?” –நான்கு வாலிபர்களிடம் பாராட்டை எதிர்பார்த்து, சஞ்சனா கேட்டாள்.

தினேஷ் அவளை நக்கலாகப் பார்த்தான்.

”அந்த நீரூற்றைக் கொஞ்சம் தள்ளி வையுங்க. அந்த நீரூற்று போட்டோல இருக்குற தாத்தாவின் இடுப்பு உயரத்துக்குப் பாயுதா..? யாரோ நடு ஹால்ல நின்னுகிட்டு உச்சா போறாங்கன்னு நினைச்சேன்.!” –என்றதும், சஞ்சனாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

டார்க் டெமன்ஸ் அமைப்பு உறுப்பினர்கள் கலகல என்று சிரித்தபடி ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ள, சஞ்சனாவுக்குப் பற்றி எரிந்தது.

”நான்சென்ஸ்..! ஆம்பளைங்கன்னு கர்வம். அசிங்கமாப் பேசறதுக்குன்னே வேலைக்கு வரதுங்க..! கெட் அப் அண்ட் follow மீ..! சிஇஓ பிரதீப் நஞ்சுண்டன் உங்களை சந்திப்பார்.” –என்றபடி நடக்க, டார்க் டெமன்ஸ் நால்வரும் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தனர்.

”சல் சல் சல் மேரா ஹாத்தி..!” என்று குண்டு சஞ்சனாவின் நடையை கேலி செய்தபடி தினேஷ் மெல்லிய குரலில் பாட, மற்றவர்கள் சிரித்துக்கொண்டே அவளைத் தொடர்ந்தார்கள்.

‘வாங்கடா ! உள்ளே உங்களுக்கு ஒரு பெரிய ஆப்பு காத்திருக்கு..!’ –சஞ்சனா மனதினுள் கருவியபடி நடந்தாள்.

–தொடரும்…

முதல் அத்தியாயம்...

ganesh

2 Comments

  • கருப்பு அசுரர்களின் வீரம் வெள்ளைத் தேவதையிடம் பலிக்கிறதா பார்ப்போம்! சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது! வாழ்த்துகள்!

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...