கோமேதகக் கோட்டை | 2 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
கடல் நடுவுலே இருந்த தீவுலே கோமேதகக் கோட்டை இருந்தது. கோட்டையைச் சுத்தி கடல். கடலுக்குள்ளே பெரிய பெரிய சுறா மீன்கள் ஆளையே முழுங்கிற அளவுக்கு இருந்துச்சு. சுறா மீன்கள் மட்டுமல்ல ராட்சத திமிங்கலங்களும் அந்த கடலில் இருந்தது. கடலில் செல்லும் கப்பல்கள் அந்த கோட்டை இருக்கும் திசை பக்கம் கூட எட்டிப் பார்ப்பது இல்லை!
ஏனெனில் அந்த தீவில் இந்த ராட்சதனைப் போல பல அரக்கர்களும் அரக்கிகளும் வசிச்சு வந்தாங்க! அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு அந்த வழியே வரும் கப்பல்களை மறித்து கவிழ்த்து விளையாடுவதுதான். பல கப்பல்கள் அந்த வழியே வந்து இந்த ராட்சதர்களிடம் அகப்பட்டு அழிந்து போகவே அந்த பக்கமே இப்போது எந்த கப்பல்களும் அங்கு வருவது இல்லை!
கடல் அலைகள் அந்த கோட்டையைச்சுற்றி பெரிதும் ஆர்பரிச்சுக்கிட்டு இருந்துச்சு! அந்த கோட்டையின் நிறம் வித்தியாசமாக காப்பிகலரும் மஞ்சளும் கலந்து தேனின் நிறம் போல் கருஞ்சிவப்பாய் ஜொலித்துக் கொண்டிருந்துச்சு. சூரியனின் கதிர்கள் அந்த கோட்டையில் விழுந்து எதிரொளிச்சு கோட்டை பளபளப்பாக மின்னிக்கொண்டு இருந்துச்சு.
அந்த அழகிய ஆபத்து நிறைந்த கோமேதக கோட்டையிலே இளவரசியை அடைச்சு வைச்சுட்டு ராட்சசன் வெளியே வந்தான். அவன் வெளியே வரும் போது அந்த கோட்டையில் முக்கால் உயரம் இருந்தான். “ஹோ” என பெரிதாக ஒரு கர்ஜனை புரிந்தான். அந்த கர்ஜனையைக் கேட்டதும் இரண்டு அரக்கர்கள் அவன் முன்னே வந்து நின்றனர்.
“அடேய்! காவலர்களே! கோட்டையின் உள்ளே இளவரசி இருக்கிறாள்! பத்திரம்! அவளுக்கு நேரத்திற்கு உணவு கொடுங்கள்! அவள் மூலம் நமக்கு நிறைய நல்லது நடக்கப் போகிறது! பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! நான் இவளின் அப்பா ஆளும் வில்லவபுரம் போய் வருகிறேன்! அதுவரை நீங்கள்தான் கோட்டைக்குக் காவல்” என்று சொன்னான். காவலர்களும் “உத்தரவு அரசே!” என்று பணிந்து வணங்கினார்கள்.
அடுத்த நொடி ராட்சதன் விண்ணில் பறக்க ஆரம்பித்தான். அவன் பறக்கும் போது எதிரே வந்த பட்சியினங்களை எல்லாம் விழுங்கிக்கொண்டே நேரே வில்லவபுரம் நோக்கி ஆகாயத்திலேயே பறந்தான். வில்லவபுரம் வந்த ராட்சசன் அங்கே இருந்த ஒரு பெரிய மலைமேல நின்னுக்கிட்டு பெரிய பாறைகளை உருட்டிவிட ஆரம்பிச்சான்.
வில்லவபுரத்தில் ஓர் ராட்சதன் வந்து மலைமீது நின்று பாறைகளை உருட்டி விடுவதைப் பார்த்து மக்கள் மிரண்டு போயிட்டாங்க! இந்த ராட்ச்சசன் எப்படி வந்தான்? அவன் ஏன் இப்படி பாறைகளை உருட்டி விட்டுகிட்டிருக்கான்? என்ன காரணமாக இருக்கும்? ஒன்றுமே அவர்களுக்குப் புரியவே இல்லை! விழுந்தடிச்சுக்கிட்டு அரண்மனை நோக்கி ஓடினாங்க!
மக்கள் பயந்து போய் விழுந்தடித்துக் கொண்டு வருவதைப் பார்த்து கோட்டைக் காவலர்கள் ராஜாக்கிட்டே போய் சொன்னாங்க!
ராஜாவும் அரண்மனை வாசலுக்கு வந்து நின்று, “எனதருமை மக்களே! ஏன் இப்படி பயந்து ஓடி வர்றீங்க”ன்னு அன்போட கேட்டாரு! மக்களும் ராட்சதன் ஒருத்தன் வந்து பாறைகளை உருட்டிக் கிட்டு இருப்பதாகவும் தாங்கள் தான் காப்பாத்தனும்னு சொன்னாங்க. ராஜாவும் அந்த ராட்சசனை விரட்ட பெரிய பெரிய படை வீரர்களை அனுப்பி வைச்சாரு. அவங்க எல்லோரையும் தூக்கி ஒரே வாயிலே முழுங்கிட்டான் ராட்சசன்.
தன்னோட வீரர்கள் அநியாயமா சாகிறதை பொறுக்கமாட்டாத ராஜா
விஜயேந்திரன் தானே ராட்சசனை எதிர்த்து சண்டை போட கிளம்பினாரு. பெரிய ரதத்தில் ஏறி ராட்சதன் இருக்கிற மலைக்கு வந்தாரு. ராட்சதனைப் பார்த்து குரல் கொடுத்தாரு..! “ஏய் ராட்சதனே! மரியாதையாக இந்த நாட்டைவிட்டு ஓடிவிடு! மக்களைத் துன்புறுத்தாதே! மீறினால் உன் உடம்புலே உசுரு இருக்காது”ன்னு மிரட்டுனாரு.
அதைக்கேட்டு அந்த ராட்சதன் பயங்கரமா சிரிச்சான். அவன் சிரிக்க சிரிக்க பக்கத்தில் இருந்த மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்தன. பெரிய கட்டிடங்கள் அப்படியே அதிர்ந்தன.
“நீதான் வில்லவபுரத்தோட ராஜாவா! வா! உன்னைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருக்கேன்! நீ என் உசுரை எடுத்துடுவியா என்ன? நான் உன்னோட பொண்ணை என்னோட கோட்டையிலே அடைச்சு வச்சிருக்கேன். எனக்கு பசி அடங்கலை! நீ என் வயிறு அடங்கிறாமாதிரி சாப்பாடு போடு! அப்போதான் உன் பொண்ணை விடுதலை செய்வேன்..” அப்படின்னு கொக்கரிச்சான் ராட்சசன்.
அப்போதுதான் ராஜாவுக்கு விபரீதம் உறைச்சது. பொண்ணோட பதினைஞ்சாவது வயசு கண்டம் இவன் கிட்ட மாட்டிக்கிறதா? இருக்குமா? குரு துரோணா தன் மகளை பாதுகாக்க தவறிட்டாரேன்னு கோபமா வந்தது அவனுக்கு.
“ஏய் ராட்சதனே! என் மகள் குரு துரோணாகிட்டே படிச்சுகிட்டு இருக்கா! அவளை நீ எப்படி கடத்தி இருக்க முடியும்?” என்று வீம்பாகக் கேட்டான்.
“உன் பொண்ணு படிக்கிற குருகுலம் இருக்கிற காட்டுக்குள்ளே நுழைஞ்சு அங்கே இருக்கிற புள்ளைகளை புடிக்க ஆரம்பிச்சேன்! உன் பொண்ணே முன் வந்து அந்த புள்ளைகளை விடுவிச்சு அவளே பணயக் கைதியா மாறிட்டா! அவளை விடுவிக்கணும்னா எனக்கும் என் கூட்ட்த்துக்கும் தினமும் வயிறு ரொம்ப உணவு கொடுக்கணும். அப்படி கொடுக்கிறதா இருந்தா உன் பொண்ணை விடுவிப்பேன். அப்படி கொடுக்கிறதா ஒத்துக்கிட்டு உன்னாலே கொடுக்க முடியாத போயிடுச்சுன்னா உன் பொண்ணையே முழுங்கிடுவேன். உனக்கு ஒரு மூணு நாள் நேரம் தருகிறேன். அதற்குள் எங்களுக்குத் தேவையான உணவு வகைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.”
“உங்களுக்கு தினமும் எவ்வளவு உணவு தேவைப்படும்..?”
“தினமும் 100 மாடுகள், 200 ஆடுகள், 500 மூட்டை அரிசி சாதம், 500 மூட்டை காய்கறிகள், அண்டா நிறைய நெய், 100 குடம் பாயசம், 50 படகு நிறைய மீன் உணவுகள்.
“இது போதுமா? இப்படி நான் தினமும் கொடுப்பதானால் ஒரே வாரத்தில் என் நாடு அழிந்துவிடும்.”
“அதைப்பற்றி எனக்கென்ன கவலை? நாளை மறுநாள் நான் இங்கே வரும்போது நான் சொன்னவை தயாராக இருக்க வேண்டும். இல்லாவிடில் உன் பொண்ணை நீ மறந்துவிட வேண்டியதுதான்.” சொன்ன ராட்சதன் உயரே பறந்தான்.
ராட்சதன் சொன்ன நிபந்தனைகளைக் கேட்டு மலைத்துப் போய் நின்ற ராஜா சுதாரிச்சுக்கிட்டு அரண்மனைக்குத் திரும்பினார். இதற்கெல்லாம் காரணம் குரு துரோணாதான்! அவர் மட்டும் என் மகளை பாதுகாத்து இருந்தால் இந்த சங்கடம் நேர்ந்து இருக்குமா? அவர் கோபம் முழுக்க துரோணா மீது திரும்பியது.
ஒரு குதிரையில் ஏறி துரோணாவின் ஆசிரமம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தார்.
மன்னரின் கோபத்தில் இருந்து துரோணா தப்பித்தாரா?
12 Comments
கதை நல்லாருக்கு. குழந்தைகள் விரும்புவார்கள். இது போன்ற கதைகள் இப்போது வருவதில்லை. ஒரு சில இடங்களில் conversation மாறுகிறது. உ.ம். விழுந்தட்டிச்சுக்கிட்டு என்று ஒரு இடத்திலும் விழுந்தடித்துக்கொண்டு என்றும் இருக்கிறது. மற்றபடி கதை அருமை
தங்கள் சொன்ன ஆலோசனைகள் சிறப்பு. அடுத்த அத்தியாயங்களில் தவறுகளை திருத்திக் கொள்கிறேன்! நன்றி!
அடுத்த பகுதியை எதிர்பார்க்க வைத்து விட்டது உங்கள் ‘ கோமேதகக்கோட்டை’! வாழ்த்துக்கள் நண்பரே!
– மூ. மோகன்.
நன்றி நண்பரே!
இரண்டாவது அத்தியாயத்திலேயே கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தது என்ன… !அடுத்தது என்ன…!! என்று அடுத்த அத்தியாயத்தை படிக்க மனம் ஆவலாக இருக்கிறது.
கதையாசிரியர் நத்தத்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
வாழ்க வளமுடன்
ஜூனியர் தேஜ்
தங்களின் அழகான விமர்சனம்! கதையை இன்னும் சிறப்புடன் எழுத ஓர் உத்வேகமாக அமைந்திருக்கிறது! நன்றி நண்பரே!
மிகவும் அருமை அடுத்து என்ன நடக்கும் எனஆவலாக உள்ளது பாராட்டுக்கள்
மிக்க நன்றி!
Story good . congrats
ராட்சசன் சொன்ன நிபந்தனைகளை கேட்டு ராஜா மட்டுமல்ல நாங்களும் மலைத்துப்போய் நின்றுவிட்டோம்! அருமை! வாழ்த்துகள்!
மிக்க நன்றி!
இரண்டு பகுதிகளையும் இன்று வாசித்தேன்! அருமை! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்! அந்தக்கால அம்புலிமாமா கதைகள் நினைவுக்கு வருகிறது! பாராட்டுகள்!