பொற்கயல் | 10 | வில்லரசன்

 பொற்கயல் | 10 | வில்லரசன்

10. குலசேகரனின் குறுவாட்கள்

மீன் வடிவ கைப்பிடியைக் கொண்ட தன் இரும்பு வளரிகளைத் தலைகீழாகப் பிடித்து முழங்கையில் ஒட்டி உறுதியாகவும் திடமாகவும் எதிரிலிருக்கும் பயிற்சி கட்டையைத் தாக்கிக் கொண்டிருந்தான் மின்னவன்.

ஒரு மனிதனின் உயரத்தை ஒத்த அந்தப் பயிற்சி கட்டையில் மின்னவனின் வசி மிகுந்த வளரிகள் மரங்கொத்தியைப் போல் பல பொத்தல்களை ஏற்படுத்தின.

பெரும்பாலும் பல வீரர்கள் தங்கள் வளரிகளை எறி ஆயுதமாக எறிவதற்கு பயன்படுத்தும் நிலையில் மின்னவன் அவற்றை எறி ஆயுதமாக மட்டுமில்லாமல் பிடி ஆயுதமாகவும் பயன்படுத்தத் தொடங்கினான்.

அது ஒரு புதுவித உத்தி என்பதால் அவன் தலைமைக்குக் கீழ் இருக்கும் பல பாண்டிய வீரர்களும் அதை இவனிடத்திலிருந்து கற்றுக் கொண்டனர்.

“கடக் படக் கடக்” எனப் பயிற்சி கட்டையை ஒரு ஒன்றரை ஓரைக்குமேல்* [ 1 ஓரை – 2 ½ நாழிகைகள். 1 நாழிகை – 24 நிமிடங்கள்.] தாக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததால் மின்னவனது மேனி வியர்வைத் துளிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது‌.

ஒரு கட்டத்தில் அவனது மூச்சும் வளரி வீச்சும் வேகமாக செயல்பட்டது. வேகமெடுத்து பிறகு சிறிது வேகம் குறைந்து இறுதியாக பயிற்சியை நிறுத்திய மின்னவன், வளரிகளை அருகில் இருக்கும் மேசை மீது வைத்துவிட்டு துணி ஒன்றைக் கொண்டு தன் உடலில் சுரக்கும் வியர்வையைத் துடைத்துவிட்டு அவனிருக்கும் பயிற்சி கொட்டகையில் இருந்து வெளியே சரம்புச்சாலையில் வாளும் வேலும் வளரியும் கொண்டு பயிற்சி எடுக்கும் தனது வீரர்களை நோட்டமிடத் தொடங்கினான்.

வழக்கமாக போர்ப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி போன்றவையெல்லாம் விடியற்காலையிலேயே தொடங்கிவிடும். அந்நேரத்தில்தான் உடலும் மனமும் புத்துணர்வுடன் செயல்படும். அதுமட்டுமின்றி வெப்பம் இல்லாமல் குளிர்ந்த காற்றுடன் வானிலை இதமாக இருப்பதும் ஓர் காரணம்.

வீரர்கள் பயிற்சி எடுப்பதை பார்த்தபடி நின்றிருந்த அவனை நோக்கி அதிவேகத்தில் ஓடி வந்து கொண்டிருந்தான் இராவுத்தன்.

இராவுத்தன் இன்று பயிற்சிக்கு தாமதமாக வருவதைக் கண்ட மின்னவன் அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று சிந்திக்கும் வேளையில் மூச்சிரைக்க ஓடிவந்த இராவுத்தன் மின்னவனை நெருங்கி சற்று இளைப்பாறிவிட்டு “தலைவரே! அங்கு மாமன்னர் தங்களை அழைத்து வரச்சொல்லி வீரர்களை அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்தான்.

பாண்டியப் பேரரசன் குலசேகரன் தன்னை அழைப்பதாக இராவுத்தன் தெரிவித்தவுடனே விரைந்து பம்பரமாய் சுழன்றான் மின்னவன்.

கொட்டகையின் பின் இருக்கும் இடத்திற்குச் சென்று காக்கைக் குளியல் போட்டுவிட்டு உடை அணிந்து ஈரத் தலையுடன் இராவுத்தனை அழைத்துக்கொண்டு அரண்மனை நோக்கி கிளம்பினான்.

“இராவுத்தா! இத்தனை காலையில் அரசவை கூடி விட்டதா என்ன?” என்று வினவினான் வேக நடை போடும் மின்னவன்.

அவனுடன் அவனைப் போலவே வேகவேகமாக நடக்கும் இராவுத்தன் “இல்லை தலைவரே மன்னர் அவரது அறையில் இருக்கிறாராம்! அங்குதான் தங்களை வரச் சொல்லி இருக்கிறார்”‌.

“அறையிலா!?”

“ஆம்! வந்த வீரர்கள் அப்படித்தான் சொன்னார்கள். மாமன்னர் தங்களை அவர் அறையில் சந்திக்க அழைப்பதாகச் சொன்னார்கள்”. ‌

அதற்கு மேல் மின்னவன் எதுவும் பேசவில்லை‌. அரண்மனையை நோக்கி விரைந்தான்.

முதல்நாள் இரவு இரண்டாம் சாமத்தின் தொடக்கத்தில் பாண்டியப் பேரரசன் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் தன் பரிவாரங்களுடன் நெல்லையிலிருந்து மதுரை திரும்பியிருந்தான். அப்படியானால் இன்று காலை அரசவையைச் சற்று தாமதமாகவே கூட்டுவார். பயணக்களைப்பில் இருப்பார்’ என எண்ணிய மின்னவனுக்கு அத்தனை காலையில் மன்னர் அழைப்பு விடுத்தது எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

குலசேகரனின் அறைக்குச் செல்லும் வழி என்பது மிகவும் நீண்ட பாதை. அரண்மனையிலேயே மிகப் பாதுகாப்பான மற்றும் மிக விசாலமான அறை குலசேகரனின் அறை. அதனுள் பல கட்டுகள் உள்ளன. வழி தெரியாமல் சென்றால் தொலைந்துவிடவும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் அவன் அறைக்கு யாரும் எளிதில் சென்று விட முடியாது. அத்தனை எளிதில் பாண்டிய மன்னன் குலசேகரன் எவரையும் அழைத்து விடவும் மாட்டான். எதுவாக இருப்பினும் அதை அரசவையில் தான் சந்திப்பான். அப்படியிருக்கும் நிலையில் தன்னை மன்னர் அறையில் சந்திக்க அழைத்தது மின்னவனுக்குச் சற்றுப் புதிதாகவே இருந்தது. முன்பு தனக்கும் இளைய பாண்டியன் மற்றும் மாவலிக்கும் வணிக வீதிக் கூடலில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்கவே மன்னர் அழைக்கிறார் என முன்னமே அவன் அறிந்து வைத்திருந்தான்.

குலசேகரன் அறையை அடையும் முன்பே அரண்மனை வாயிலில் இருவரையும் சந்தித்தார் தென்னவன் ஆபத்துதவிகள் தலைவர் கார்வேலர். அவரை மட்டும் யாரேனும் இருளில் பார்த்தால் போதும்! ‘பேய்! பிசாசு! இராட்சசன்!’ என அலறிக்கொண்டே ஓடிவிடுவார்கள். ஏனென்றால் அப்படி ஒரு கருமை நிறம், நீண்டு வளர்ந்த உருவம், படர்ந்த உடல் தோற்றத்தை உடையவர் ஆபத்துதவிகளின் தலைவர் கார்வேலர்.

அவர் தலைமையில் தென்னவன் ஆபத்துதவி வீரர்கள் பாண்டிய மன்னரை இடைவிடாது இமைபோல் வாளும் வேலும் ஏந்தி காத்து வருவார்கள். அப்படி காக்கும் சமயம் கடமை தவறினால் தங்கள் உயிரைத் தாங்களே தீக்கிரையாக்கிக் கொள்ளும் விசுவாசிகள் இவர்கள். அதனால் பாண்டிய நாட்டில் பெரும் மரியாதைக்குரியவர்களாக திகழ்ந்தார்கள் இந்த தென்னவன் ஆபத்துதவிகள்.

கார்வேலரைக் கண்ட மின்னவனும், இராவுத்தனும் இருகரம் கூப்பி வணங்க,

“மின்னவா! இராவுத்தா! வாருங்கள் வாருங்கள்… என்ன மன்னர் அழைத்திருக்கிறார் போலும்…? ம்ம்ம்! நான் அனைத்தையும் கேள்விப்பட்டேன்” எனத் தன் வருத்தத்தை மின்னவனின் தோளைத் தட்டி தெரிவித்தார் கார்வேலர்.

மின்னவன் ஏதும் பேசவில்லை. அவர் முன் மிகப் பணிவுடன் நின்றிருந்தான்.

பிறகு அவரே “சரி சரி! செல் மன்னரைக் காக்க வைக்காதே” எனச் சொல்ல, மின்னவனும் இராவுத்தனும் அவரிடமிருந்து விடைபெற்று மன்னர் அறையை வந்தடைந்தார்கள்.

வந்தவர்களை வெளியே காத்திருக்கும் பணிப்பெண்கள் உள்ளே பல கட்டுகளைக் கடந்து அழைத்துச் சென்றார்கள்.

சொர்க்கத்தில் ஒரு அறை இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் இருந்தது பாண்டிய பேரரசன் மாறவர்மன் குலசேகரனின் அறை. அப்போது அவன் இருந்த அறையில் சுவரெங்கும் விலை மதிப்பற்ற பொருட்கள், வெளிநாட்டு பொருட்கள், வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தலைகள், பலவிதமான அலங்காரங்களுடன் ஆடைகள், பற்பல வகையான பொற்சிலைகள் என அந்த அறையே மினுமினுத்தன. அதில் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் மன்னனைச் சந்தித்து பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்டவை தான் ‌அலங்காரப் பொருட்களாக காணப்பட்டன.

இவை அனைத்தையும் விட மிகப் பிரம்மாண்டமும் கண்கவர் பொருளாகவும் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் மரத்தால் செதுக்கப்பட்ட தமிழகத்தின் வரைபடம் தான். நெல்லூர் சித்தூரில் இருந்து தொடங்கி குமரி வரை உள்ள நிலஅமைப்பு, கடல் எல்லைகள், நாடுகள், ஆறுகள், மலைகள், ஏரிகள் என துல்லியமாக ஆராய்ந்து தயார் செய்யப்பட்டு இருந்தது அந்த வரைபடம்.

அது வெறும் மரத்தால் செதுக்கப்பட்ட ஓவியம் மட்டுமல்ல வேறு சில வேலைப்பாடுகளும் அதனுள் செய்யப்பட்டிருந்தது. அறையின் எண்திசைகளில் உள்ள சந்தனக்கட்டை சாளரங்களின் வழியே வெய்யோனின் கதிர் பாய்ந்து இந்த வரைபடத்தின் மீது படர்ந்தால் வரைபடம் மினுமினுக்கும்‌. இதுபோல் ஒரு பிரம்மாண்ட வரைபடத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது என்பதே மெய்.

விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தாலும் அதன் மீதிருந்து விழிகளை பொற்கயலாலும் கயல்விழியாலும் எடுக்க முடியவில்லை.

வழக்கமாக பெண்களுக்கு அலங்காரப் பொருட்கள் மீது ஆசை இருக்கும். அவர்கள் ஆசைக்கு முழுத் தீனியாக அறை முழுக்க பல விதமான அலங்காரப் பொருட்கள் இருந்தாலும், இந்த வரைபடத்தின் அழகு அவர்களை ஈர்த்துவிட்டதால் அதையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி நின்றிருந்தார்கள் கயல் சகோதரிகள்.

நின்றிருந்த இந்த இருவர் முன் பெரும் உணவு மேசை ஒன்றைச் சுற்றி பணிப்பெண்கள் பண்ட பாத்திரங்களுடன் அங்குமிங்குமாய் நகர்ந்த வண்ணம் இருக்க, மேசைக்கு எதிரே மறுபக்கம் கைகளைக் கட்டியபடி கோபத்துடன் நின்றிருந்தான் வீரபாண்டியன்.

“அதை எடு…! ம்ம்ம் பணியாரம் எங்கே? கொடு!” எனப் பார்த்துப்பார்த்து பணிப்பெண்களிடம் பெற்று பரிமாறிய வண்ணம் பாண்டிய நாட்டின் பட்டத்தரசி அங்குமிங்குமாய் நகர்ந்த வண்ணம் இருந்தார்.

அந்த உணவு மேசையில் இருபுறமும் உள்ள ஆசனங்களில் பாண்டிய மன்னன் குலசேகரனின் தாயுமான பாண்டிமாதேவி, முதன்மை அமைச்சர் தகியுதீன், காலிங்கராயர், மாவலி வானவராயன் மற்றும் மேலும் சில முக்கிய அதிகாரிகளும் உணவருந்திய வண்ணம் இருந்தனர்.

அதில் மாவலி வானவராயன் மாத்திரம் சற்று தயக்கத்துடன் எதிரே கைகட்டி நின்றிருக்கும் வீரபாண்டியனைப் பார்ப்பதும் வலதுபுறம் பார்ப்பதும் அதைத் தொடர்ந்து உணவுத் தட்டை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தான்.

தலையில் பல வகைக் கற்கள் பதித்த மகுடம், நெற்றியில் திருநீற்றுப் பட்டை, செவிகளில் குண்டலம், அடர்ந்து அருவாட்கள் போன்ற மீசை, பிடரியின்றி பளிங்கு கல் போல் பளபளப்பான முகம். இவை அனைத்தும் கம்பீரத்தின் தொடக்கம்தான். தேக்கு போன்ற திடமான தோள்பட்டைகள், நரம்புகள் புடைத்து வெளிவரும் தடித்த வலிய புஜங்கள், புடைக்கும் நரம்புகளுக்கு சங்கிலியிட்டு சிறைப்பிடித்து வைப்பதைப் போல் கரங்கள் எங்கும் தங்க வளையங்கள். கழுத்தில் விலைமதிப்பற்ற பல வகை கற்கள் பதித்த ஆரங்கள், பெரும் பெரும் முத்துக்களை கொண்ட மாலை ஒன்றும் இருந்தது. மார்பில் சந்தனமும் ஜவ்வாதும் ஒருசேர படர்ந்து எழுப்பும் மணம் நாசிக்கு பெருவிருந்து. அவனிடத்தில் கம்பீரம் என்பது காட்டாறு போல் ஓடினாலும் விழிகளில் கனிவு, முகத்தில் ஒரு அமைதியும் அன்பும் கொண்டவனாக தனது ஆசனத்தில் அமர்ந்துகொண்டு பசியாறிக் கொண்டிருந்தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரன்.

உணவை விரும்பி ருசித்துக்கொண்டிருந்த பாண்டிய மன்னன் அறைக்குள் நுழையும் மின்னவனையும் இராவுத்தனையும் கண்டபோது அவன் முகத்தில் சற்று கோபம் எட்டிப்பார்க்கவே செய்தது.

“அண்ணா வாருங்கள்! அமருங்கள்! உணவருந்தலாம்” எனப் பாண்டிய அரசி நாற்காலி ஒன்றை எடுத்து போட்டுவிட்டு பிறகு குலசேகரனைப் பார்த்தாள்.

மின்னவன் மீது வழக்கு உள்ளது. அதை விசாரிக்கவே அவர் அழைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை சில நொடிகள் மறந்துவிட்டதனால் விழிகளிலேயே மன்னிப்புக் கோரி விட்டு பணிப்பெண்கள் சிலரை மாத்திரம் இருக்க வைத்துவிட்டு மற்ற பணிப்பெண்களை அனுப்பிவிட்டு குலசேகரன் அருகில் நின்று கொண்டாள் அவள்.

உள் நுழைந்த அவ்விருவரின் மீது அனைவரது கவனமும் திரும்பின.

ஆனால் மின்னவனின் கவனமும் கவலையும் எதிரே நின்றிருந்த பொற்கயல் மீதே இருந்தன. அவள் தந்தையான காலிங்கராயர் மிகக்கடுமையானவர். அவளை எப்படி தண்டிக்கப் போகிறாரோ? என்று எண்ணி வருந்தினான் அவன்.

வீரபாண்டியனுக்கு மின்னவனைக் கண்டதும் வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் தான் தோன்றியது. ஏளனமாகவே அவனைப் பார்த்தான். மாவலியும் அதே ஏளனப் பார்வையைத்தான் அவன் மீது நாட்டினான்.

குலசேகரனோ வந்து நின்று வணங்கும் அவர்கள் இருவரையும் பார்த்தும் அவர்கள் வணக்கத்தை ஏற்காமல் உணவின் மீது கவனத்தைத் திருப்பினான்.

அவன் செயலில் இருந்தே பாண்டிய மன்னர் தங்கள் மீது மனக்கசப்பில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டான் மின்னவன்.

குரலை இருமுறை கரகரத்துவிட்டு “மாவலி வானவராயரே!” என்று குலசேகரன் அழைத்ததும் உணவு அருந்திக்கொண்டிருக்கும் மாவலி திடுக்கிட்டு எழுந்து நின்று, “மாமன்னா!” என்றான்.

அவனைப் பார்த்து “அமருங்கள்!” என்றான் குலசேகரன்‌. மாவலி அமர்ந்தான்.

“ம்ம்ம்! சொல்லுங்கள்! அன்று வணிக வீதியில் என்ன நடந்தது?’

“அரசே! இளைய பாண்டியர் வணிக வீதிக் கூடலில் வேடிக்கைக்காக சமர்க்களம் அமைக்கச் சொன்னார். அமைத்தேன்! சமரிடச் சொன்னார், சமரிட்டேன்!”

குறுக்கிட்ட குலசேகரன் “நிறுத்தவும்” என்று வலதுபுறம் இருக்கும் இளைய பாண்டியனைப் பார்த்தான். அண்ணனான மன்னன் தன்னைக் கண்டு முறைப்பதைப் பார்த்து தலை குனிந்து கொண்டான் அவன்.

“பொற்கயல் நீ சொல், என்ன நடந்தது?”

“அது.. அரசே! அக்கையும் நானும் கால் நடையாகவே மீனாட்சியைக் காண சென்று கொண்டிருந்தோம். அப்போது வணிக வீதிக் கூடலில் கூட்டம் கூடியுள்ளதைப் பார்த்து அங்கு சென்றோம். அப்போது மாவலிவாணராயர் எங்களிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டார். அதைக்கண்ட மின்னவர் எங்களுக்காக குரல் கொடுத்தார். திடீரென இளைய பாண்டியர் மதுக்குப்பியும் கையுமாக வந்து மின்னவரை அவமதித்து விட்டார்”. ‌

பொற்கயல் முடித்ததும் மாவலியைப் பார்த்தான் குலசேகரன்.

“அரசே! சமர்க்களம் நிகழும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டாம் என்று பக்குவமாக எடுத்துச் சொன்னேன். இருவரும் கேட்கவில்லை பிறகு மனதைக் கல்லாக்கிக் கொண்டு கடுமைத் தொனியில் சொன்னேன்‌. அப்போதும் கேட்கவில்லை. நான் எவ்விதத்தில் கூறியும் அவர்கள் கேட்காமல் குறுவாளை காட்டி மிரட்டினார்கள் அரசே”

”இல்லை! அவர் பேசக் கூடாத விதத்தில் பேசினார் அதனால்தான்…” என்றாள் பொற்கயல்.

இதற்கு நடுவில் காலிங்கராயர் கோபம் தெறிக்க, எதிரே அமர்ந்திருக்கும் மாவலியைப் பார்த்தார். அதைக் கண்டும் காணாதவாறு இருந்தான் மாவலிவாணராயன்.

பொற்கயலைப் பார்த்துவிட்டு மின்னவனைப் பார்த்தான் குலசேகரன்.

அவன் கரங்களைக் கட்டி தலை குனிந்து நின்றிருந்தான்‌.

“படைத்தலைவர் மின்னவரே! உங்கள் தரப்பு வாதத்தைச் சொல்லும்!”

தலைநிமிர்ந்த மன்னவன் “அரசே! என் தரப்பில் நியாயம் ஏதுமில்லை! பாண்டியநாட்டின் படைத்தவன் என்பதை மறந்து சிறுபிள்ளை போல் மாவலிவாணராயருடன் மக்கள் முன் மல்லுக் கட்டினேன்! அதற்காகவே இளைய பாண்டியர் என்னை அறைந்தார். முழுவதும் என் தவறுதான்”.

அவன் சொன்னதைக் கேட்டதும் பொற்கயலுக்கு கோபம்தான் வந்தது. ‘ஏன் இவர் இதுபோல் பழி முழுவதையும் அவர் மீது ஏற்றுக் கொள்கிறார்! இவர் என்றும் பிழைக்கத் தெரியாதவர்!’ என்று எண்ணினாள்‌.

“ம்ம்ம்… உங்கள் பதிலே தங்கள் மீதும் குற்றம் இருப்பதை உணர்த்துகிறது” என்ற குலசேகரன், இளைய பாண்டியனை நோக்கி “உன்னிடம் நான் என்ன நியாயத்தை எதிர்பார்ப்பது? இப்போதாவது மது அருந்தாமல் வந்திருக்கிறாயா? நீ எல்லாம் அரச குருதியில் பிறந்த இளவரசன்!? வெட்கக்கேடு!”

பல் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றிருந்தான் இளைய பாண்டியன்.

“சொல் நீ என்ன சொல்லப் போகிறாய்?”

“நான் என்ன சொல்ல இருக்கிறது? உடன் பிறந்த தமையன் இடத்தில் முதலில் விசாரணையைத் தொடங்காமல் யார் யாரிடமோ கேட்கிறாய்! குடிகாரனிடம் நியாயம் இருக்காது என அனுமானித்து கொள்கிறாய்! இதுதான் விசாரணையா?” எனக் குலசேகரனை அவன் ஒருமையில் பேசியதும்,

“வீரபாண்டியா!” என எழுந்து நின்றார் அவனது தாய் பாண்டிமாதேவி.

“தாயே அமருங்கள்!” என சாந்தமாக சொன்ன குலசேகரன் வீரபாண்டியனைப் பார்த்து

“ஆயிரம் இருப்பினும் மின்னவர் நம் பாண்டிய அரசின் படைத்தலைவர். என் தலைமைக்கு கீழ் இருப்பவர். அவரை கைநீட்டி அடிக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை வீரபாண்டியா! இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி நீதான். உன்னிடத்தில்தான் அனைத்தும் தொடங்குகிறது! முதலில் பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் குடித்துவிட்டு சமர்க்களம் அமைத்து கேலி செய்தது… அதற்கு நம் சிற்றரசர் மாவலிவாணராயரேயே சமரிட வைத்தது. இவை எத்தனைப் பெரிய ஒழுங்கற்ற செயல்? இதில் வில்லும் நாரியும் நீதான். ஏவப்பட்ட கணை மாவலி. விசாரிக்க வந்த படைத்தலைவரை அறைந்து அவமதித்து இருக்கிறாய். அதற்குப் பரிகாரமாக இப்போதே அவரிடம் மன்னிப்புக் கோரு!”

குலசேகரன் மன்னிப்பு கோரச் சொன்னதும் வெகுண்டு எழுந்தான் இளைய பாண்டியன்.

“என்ன? நான் அந்த செவ்விருக்கை நாட்டனிடம்* [தற்போதைய இராமநாதபுரம் மாவட்டம்] மன்னிப்புக் கோருவதா? அண்ணா என்ன பிதற்றுகிறாய்?”

‘இவனைக் குறுவாளால் குத்தியிருக்க வேண்டும்!’ என நினைத்துக்கொண்டாள் பொற்கயல்.

“அடேய் இப்போது நான் உன் அண்ணன் இல்லை! நீதி அரசன். மின்னவரிடம் மன்னிப்பு கூறவில்லை என்றால் பாதாளச் சிறையில் அடைபட வேண்டும்!”

கண் சிவக்க நின்றிருந்த வீரபாண்டியன் வேறு வழியின்றி மின்னவனைப் பார்த்து “மன்னித்து விடு” எனச்சொல்லி விட்டு வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அப்போது காலிங்கராயர் எழுந்து நின்று,

“குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும் அரசே! இதில் என் புதல்விகளும் தொடர்பு பட்டுள்ளார்கள்! அவர்களுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.

“உங்கள் புதல்விகளை யாரும் குற்றவாளியாகக் கருதவில்லை! விசாரணைக்காகவே அழைக்கப்பட்டார்கள். உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது. அமருங்கள் காலிங்கரே!” என்று குலசேகரப் பாண்டியன் உண்டு முடித்த தங்க தட்டில் கையைக் கழுவினான்.

பாண்டிய அரசி அவனுக்கு பட்டுத்துணியை கொண்டுவந்து கொடுக்க அதில் கரத்தையும் வாயையும் துடைத்து விட்டு தன் இடைக்கச்சையில் இருந்து இரண்டு குறுவாட்களை எடுத்து உணவு மேசை மீது வைத்தான் குலசேகரன்.

அவனது அச்செயல் அனைவரையும் அதிர வைத்தது.

பட்டுத் துணியை அரசியிடம் கொடுத்துவிட்டு அனைவரையும் பார்த்து பேசத் தொடங்கினான் குலசேகரன் “இது மாபெரும் தவறு! நம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவே உங்களிடத்தில் உடைவாள் கொடுக்கப்பட்டதே தவிர அதை வைத்து உங்களுக்குள் சமரிட்டு ஆட்டம் போடுவதற்கு அல்ல! படைத்தலைவன், குறுநில மன்னர், பாண்டிய அரசக் குருதி என நம் பாண்டிய அரசாங்கத்தின் மிகப்பெரும் கடமையும் பொறுப்பும் நிறைந்த பணியில் இருந்து கொண்டு வீதியில் இறங்கி மல்லுக்கட்டும் அளவு கீழ்மட்ட செயலை செய்திருக்கிறீர்கள். முதலில் மாவலி வாணராயரே! உங்களுக்கான தண்டனை இதோ. இந்த திறை ஆண்டில் வழக்கமாக நீங்கள் செலுத்தும் தொகையை விட இரு மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும்.”

எழுந்து நின்ற மாவலி பணிந்து “ஏற்றுக் கொள்கிறேன் அரசே! என் மன்னிப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி இதுபோன்று நிகழாது!’ எனப் புறத்தில் சொல்லிவிட்டு அகத்தில் எரிமலையாய் எரிந்து கொண்டிருந்தான்.

“ம்ம்ம்! நன்று அமருங்கள்!”

“அடுத்ததாக இவர்கள் இருவருக்கும் வழக்கமான தண்டனையாக இல்லாமல் சற்று விசித்திரமான தண்டனையை வழங்க நான் விருப்பப்படுகிறேன்” என்றுச் சொல்லிய குலசேகரன் இரண்டு குறுவாட்களையும் கையில் ஏந்தினான். இரண்டில் ஒன்று நீலநிறக் கற்கள் பதித்த குறுவாள். மற்றொன்று சிவப்புநிறக் கற்கள் பதித்த குறுவாள்.

இரண்டும் பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரிந்தன. அழகில்தான் ஆபத்து இருக்கும் அல்லவா? அதனால் அவற்றை வைத்து பாண்டியமன்னன் என்ன செய்யப் போகிறான் என அனைவரும் திகைத்துப் போயிருக்க, திடீரென மின்னல் வேகத்தில் குறுவாட்களை எறிந்தான் மாறவர்மன் குலசேகரன். ‌

அதைக் கண்டு அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...