பொற்கயல் | 9 | வில்லரசன்

 பொற்கயல் | 9 | வில்லரசன்

9. விழா அழைப்பு

சோழ மன்னனைச் சந்திக்க வேண்டி புறப்பட்ட வளவன், அரண்மனை வீதியை அடைந்ததும் அவன் கண்களுக்கு யாரோ ஒருவன் இருளில் பதுங்கிப் பதுங்கி செல்வதைப் போல் தெரியவே, சத்தமிடாமல் அந்த உருவத்தைப் பின் தொடர்ந்து சென்றான்.

இரண்டு மூன்று வலது இடது வளைவுகளைக் கடந்த பிறகு அந்த உருவம் அரண்மனையை அடைந்தது.

இதற்குமேல் அவ்வுருவத்தை அரண்மனைக்குள் அனுமதிப்பது ஆபத்தாகிவிடும் என உணர்ந்த வளவன் விரைந்து சென்று அந்த உருவத்தைத் தன் கம்பளிப் போர்வையால் போர்த்தி இழுத்துக் கீழே தள்ளி மேலே அமர்ந்து,

“யார் நீ? இந்நேரத்தில் எதற்காக இப்படி பதுங்கிப் பதுங்கிச் செல்கிறாய்?” என அவனை புரட்டிப்போட்டு முகத்தைப் பார்த்த வளவன், “நீயா?’ என்றான்.

“நானேதான் வளவரே! என் மீது அப்படி என்ன கோபம் தங்களுக்கு..? இறைவா…” என முகம் சுளித்தான் சோட மன்னன் இளைய கண்டகோபாலனின் நண்பனும் சோட அரசவையின் அதிகாரியுமான விமலாதித்தன்.

“விமலாதித்தா! நீ இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்? காஞ்சியிலிருந்து எப்போது வந்தாய்?”

“வளவரே! உங்கள் பலத்தையும் வலிய உடலையும் பொறுத்துக் கொள்ள என்னால் இயலாது! ‌ தயவுகூர்ந்து எழுந்திருங்கள் பிறகு அனைத்தையும் விலாவரியாக சொல்கிறேன்” என முகம் சுளித்தபடி தன் தோள்பட்டையை பிடித்தான் விமலாதித்தன். ‌

“மன்னித்துவிடு விமலாதித்தா!” என எழுந்துநின்ற வளவன் அவன் கைப்பற்றி மேலெழுப்பி நிற்க வைத்தான். ‌

தன்மீது கிடக்கும் வளவனின் கம்பளிப் போர்வையை அவனிடமே கொடுத்தபிறகு இடையை இருமுறை அசைத்து விட்டு வளவனை நோக்கிப் பேசத் தொடங்கினான் விமலாதித்தன்.

“வளவரே! உங்கள் பலம் யானைபோன்றது; அதற்கு முன் பூனை இந்த விமலாதித்தன். என்மீது முன்பகை ஏதேனும் இருந்தால் இரண்டடி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள்! ஆனால் இன்னொரு முறை இதுபோல் செய்து விடாதீர்கள்” எனச் சற்று சிரிப்புடன் சொல்லிவிட்டு அவனைக் கட்டியணைத்து தோழமை பாராட்டினான்.

வளவனுக்கும் சிரிப்புதான் வந்தது.! “இருளில் நீ என்று தெரியவில்லை விமலாதித்தா! அதுவும் மன்னரின் அரண்மனைக்கு முன் இதுபோன்ற உருவம் தென்பட்டால் வேறு என்ன செய்வது?”

“சோழ மன்னரைச் சோழ நாட்டின் படைத்தலைவர் வளவர் இருக்கும்போது யாரும் எதுவும் செய்துவிட முடியாது என அனைவரும் அறிந்ததுதானே வளவரே! எவனுக்குத் துணிவு இருக்கிறது உங்களைக் கடந்து மன்னரைத் தொடுவதற்கு? இப்போதெல்லாம் வேளைக்கார படையை விட மன்னர் தங்களையே அதிகம் நம்புகிறார் என நான் அறிவேன்!” ‌

தற்பெருமையை விரும்பாத வளவன் பேச்சை வேறு விதம் மாற்றினான்.

“வந்த செய்தியைச் சொல்லவில்லையே! காஞ்சியிலிருந்து எப்போது வந்தாய்?”

“இன்று மாலைதான் வந்து சேர்ந்தேன். வந்ததும் மன்னரைச் சந்திக்க இயலவில்லை. இரவு அழைப்பதாகச் செய்தி வந்தது. காத்திருந்து கண்கள் பூத்து போயின! இறுதியில் இப்போதுதான் அழைப்பு வந்தது. ஆதலால்தான் மன்னரைக் காண சித்தமானேன். பணிப்பெண் துணை வருவதாகச் சொன்னாள்‌. வீராப்பாக வேண்டாமென்று தனித்து வந்து வழி தெரியாமல் சற்றுக் குழம்பிப்போன நேர்த்தில்தான் தாங்கள் கோழியைப் பிடிப்பதுபோல் பிடித்து நிறுத்தி விட்டீர்கள்!” என்றான் விமலாதித்தான்.

சிரிப்புடன் அவனைப் பார்த்த வளவன், “உன்னிடம் அந்த நகைச்சுவை உணர்வு அப்படியே உள்ளது விமலாதித்தா! சரி வா, செல்வோம். நானும் மன்னரைக் காணத்தான் செல்கிறேன்” என அவன் தோள்மீது கரம் போட்டு அழைத்துச் சென்றான்.

இருவரும் பேசிக்கொண்டே மன்னரின் அரண்மனையின் மேல்தளத்தில் இருந்த உப்பரிகை மண்டபத்தை அடைந்தார்கள்.

அது உப்பரிகை போலவும் இருந்தது, மண்டபம் போலவும் இருந்தது. மன்னனின் அறையிலிருந்து வெளிப்புறம் அதாவது சோழ மன்னனின் அறை முன்பு நேர் எதிரே அமைக்கப்பட்டிருந்தது அந்த உப்பரிகை மண்டபம்.

அந்த மண்டபத்தின் நடுவே இருபுறம் தொங்கும் சீறும் புலிகளின் முக வடிவத்தைக் கொண்ட ஊஞ்சலில் இமைகளை மூடி அமர்ந்திருந்தான் சோழ மன்னன் மூன்றாம் இராசேந்திரன்.

அவனுக்கு அருகாமையில் சிறு மேடையின் மீது பெண்ணொருத்தி அமர்ந்து மகரயாழ் ஒன்றை மீட்டிக் கொண்டிருந்தாள். ‌ யாழிசை செவிகளுக்கும், குளிர்ந்த இளங்காற்று மனதிற்கும் குளுமையைத் தந்தாலும், சோழ மன்னன் அவற்றை இரசிக்கவில்லை! வெளியே தீண்டும் குளிர்ந்த காற்றால் உள்ளே இருந்த எரிமலையைச் சமாதானப்படுத்த இயலுமா? அவன் இதயம் மாத்திரம் எரிமலையாய் வெடித்து தீப்பிழம்பைக் குருதிக் குழம்பாய் உடலெங்கும் அனுப்பிக் கொண்டிருந்தது‌. ‌

சோழர் குடி, சேற்றில் சிக்கி மூழ்கிக் கொண்டிருப்பதை நினைக்க நினைக்க அவனுக்குள் சினமும், சோர்வும், சோகமும் இடிஇடித்து மழை பொழிந்தன.

மன்னனை மகிழ்விக்க யாழ் மீட்டும் அந்தப் பெண் அங்கு வந்து நிற்கும் வளவனையும் விமலாதித்தனையும் கண்ட பிறகு யாழ் நரம்புகளின் இசை மூலமே சோழ மன்னனுக்குச் செய்தியைத் தெரிவித்தாள்.

கண்களைத் திறந்த சோழமன்னன் நிறுத்துமாறு அவளுக்கு கைகாட்டினான். அவள் யாழ் மீட்டுவதை நிறுத்திவிட்டு மேலெழுந்து நின்று இரு கரம் கூப்பி தலை தாழ்த்தி பணிய, வலக்கரத்தை நீட்டி அவளுக்கு உத்தரவு கொடுத்தான் மூன்றாம் இராசேந்திரன்.

அப்பெண் வெளியேறிய பிறகு வளவன் மட்டும் மன்னனை நெருங்கினான். ‌

“அரசே! தங்களைக் காண சோட மன்னர் இளைய கண்டகோபாலரின் அதிகாரி விமலாதித்தன் வந்துள்ளார்” என்று பணிவுடன் தெரிவித்தான் வளவன்.

“வரச் சொல்” என்றான் சோழமன்னன்.

வளவன் கையசைத்ததும் விமலாதித்தன் அருகில் வந்து நின்றான்.

“சோழ மன்னருக்கு விமலாதித்தனின் வணக்கங்கள்!” எனத் தலை தாழ்த்தி வணங்கினான் அவன்.

“ம்ம்ம்” என நாற்காலியைச் சுட்டிக்காட்டினான் மூன்றாம் இராசேந்திரன்.

“நன்றி அரசே!” என விமலாதித்தன் அமர, வளவன் சோழ மன்னனின் ஊஞ்சல் பின் நின்று கொண்டான்.

“நலமா?”

“ஒரு குறையும் இல்லை அரசே! தாங்கள் நலமா?”

வற்றிய சிரிப்புதான் பதிலாகக் கிடைத்தது விமலாதித்தனுக்கு.

“வந்த செய்தி என்ன?”

விமலாதித்தன், தங்கச்சரிகை கொண்டு தயாரிக்கப்பட்ட சுருள் மடல் ஒன்றைப் பணிவுடன் எழுந்து சோழ மன்னனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தான்.

சுருள் மடலைப் பெற்று அதைத் திறந்து பார்த்தான் சோழ மன்னன்.

அது ஒரு விழா அழைப்பு மடல்‌.

சோட மன்னன் இளைய கண்டகோபாலனின் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழாவிற்கு சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரனை அழைத்திருந்தான் சோட மன்னன்.

சுருள் மடலைப் படித்தபிறகு சோழ மன்னனுக்கு அவனது மகனின் நினைவுதான் வந்தது. தஞ்சையில் விட்டுவிட்டு வந்த மகன் இந்நேரம் என்ன செய்கிறான்? உறங்குகிறானா? நம்மைப் பார்க்க வேண்டும் என அழுகிறானா? பஞ்சணையில் படுத்து பழகியவன் தரையில் உறங்குவானா? போன்ற பலவகை ஐயங்களும் கணைகளாக அவன் நெஞ்சைத் துளைத்தன.

சோழ மன்னன் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த விமலாதித்தன், வளவனைப் பார்த்தான். ‌

அவன் பார்வையைப் புரிந்து கொண்டவனாக சோழ மன்னனை நெருங்கி “அரசே” என்றான் வளவன்.

யோசனையில் இருந்து வெளிவந்த மூன்றாம் இராசேந்திரன் விமலாதித்தனைப் பார்த்து,

“மகிழ்ச்சி! அவசியம் வருகிறேன்! இளைய கண்டகோபாலர் அழைத்து நான் வராமல் இருப்பதா? சோட மன்னர் எப்படி இருக்கிறார்! காஞ்சியில் அனைவரும் நலமா?” என்று சோகத்தை மறைத்து விட்டு நலம் விசாரித்தான் அவன்.‌

“ஏதோ நலம் அரசே! முன்பு நம்மிடத்தில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை. குலசேகரனது அரசப் பிரதிநிதிகளாக அவன் தமையன்கள் தமிழகத்தை ஆங்காங்கே ஆண்டுவருகிறார்கள். அதனால் பலரது நிம்மதி பறிபோயிற்று. அதுவும் தொண்டைமண்டல அரசப் பிரதிநிதியாக மாறவர்மன் விக்கிரமபாண்டியன் இருக்கிறான். முன்புபோல் சோட மன்னரால் பெரிதாக செயல்பட முடியவில்லை. ‌ எல்லாவற்றிலும் மாறவர்மன் விக்கிரமபாண்டியனின் குறுக்கீடு இருக்கிறது. இளவரசருக்கு பெயர் சூட்டு விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்கு கூட சோட மன்னர் எங்கேயும் செல்லவில்லை. அருகில் உள்ள அரசர்களுக்கும் என்னைப் போன்ற வேறு பல அவைப் பிரதிநிதிகளை அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார். அதுவும் பாண்டியர்களுக்குக் கப்பம் செலுத்த வேண்டிய காலம் நெருங்குவதால் பணி வேறு ஏராளமாக உள்ளன!”

விமலாதித்தன் கப்பத்தைப் பற்றிப் பேசியதும் சோழ மன்னன் வளவனைத் திரும்பிப் பார்த்து, “நாம் செலுத்த வேண்டிய திறை என்னாயிற்று?” என்று வினவினான்.

“முதன்மை அமைச்சர் தலைமையில் பணி நடந்து வருகிறது அரசே”

“ம்ம்ம்!” என்றவன், விமலாதித்தனைப் பார்த்தான். அவன் தொடர்ந்தான்.

“நம் நாட்டில் விளைவதைப் பாண்டியர்களுக்குக் கப்பமாகக் கொடுப்பதில் எங்கள் மன்னருக்குத் துளியளவும் விருப்பமில்லை அரசே! ஏன் போசள மன்னருக்கும் இதில் விருப்பமில்லை! இத்தனை பெரும் செல்வத்தையும் தானியங்களையும் திறைப் பொருளாக செலுத்திக்கொண்டு எப்படி வாழ முடியும்? இதற்கெல்லாம் கூடிய விரைவில் முடிவு கட்டியே ஆக வேண்டும்! ஆம், முடிவு வரும்!”

“போரில் தோற்று வலுவிழந்துகிடக்கும் நாம் கப்பம் கட்டித்தானே ஆகவேண்டும் விமலாதித்தா?”

சோழ மன்னன் சொன்னதைக் கேட்டதும் கவலையுற்ற விமலாதித்தன் “நீங்கள் சொல்வதும் சரிதான் அரசே! ஒரு காலத்தில் சோழர்கள் எப்படி இருந்தார்கள் அரசே? அதுவும் முதலாம் இராசராச சோழரும், முதலாம் இராசேந்திர சோழரும் நம் புகழைக் கடல் கடந்து தென்கிழக்கு நாடுகளில் எல்லாம் பரப்பினார்கள். ஆனால் இப்போது….” எனப் பெருமூச்சு விட்ட விமலாதித்தன் “மனம் வலிக்கிறது அரசே! அந்தப் பரமசிவனுக்கு சோழர் குடி மீது அப்படி என்ன கோபமோ?” என்றான்.

முன்னமே இதன்பொருட்டு மனம் நொந்து இருக்கும் மூன்றாம் இராசேந்திரனை விமலாதித்தன் மேலும் காயமுறச் செய்வதுபோல் வளவனுக்குத் தோன்றவே, பணிவுடன் “அரசே நாங்கள் விடைபெறவா? ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டான்.

“அவசியமில்லை வளவா! விமலாதித்தனுடன் உரையாடி நாட்கள் பல ஆகின்றன! அவன் பேசட்டும்” என்றான் சோழ மன்னன்.

மன்னர் தன் பேச்சை விரும்புவதை அறிந்த விமலாதித்தன் மேலும் தெம்புடன் பேசத் தொடங்கினான்‌.

“சோழர்கள் என்றாலே அஞ்சி நடுங்கிய பாண்டியர்கள், இப்படி வீறு கொண்டு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பிடிப்பார்கள் என யார் எதிர்பார்த்தார்? எல்லாம் அந்த ஈசனுக்கே வெளிச்சம். ஆனால் ஒன்று அரசே! விரைவில் சோழர்கள் எழுவது உறுதி! நீங்கள் எக்காரணம் கொண்டும் கவலை கொள்ள வேண்டாம், நான் ஒன்று சொல்கிறேன்! நான் தெரிவித்ததாக இளைய கண்டகோபாலரிடம் சொல்லாதீர்கள்”. என நாற்புறமும் பார்த்துவிட்டு சற்று நெருங்கி அமர்ந்தான் விமலாதித்தன்.

அவன் செயல் சோழ மன்னனுக்கும் வளவனுக்கும் வித்தியாசமாக இருந்தது.

“கூடிய விரைவில் பாண்டியநாட்டில் ஒரு பெரும் குழப்பம் வெடித்துச் சிதறப் போகிறது. அதற்கான மூளையாக நம் சோட மன்னர் தான் இருக்கப் போகிறார். இந்த ஆண்டு திறைதான் நாம் பாண்டியர்களுக்கு செலுத்தும் இறுதியான திறையாக இருக்கும். மீதத்தை விழாவின் போது எங்கள் சோட மன்னரே தங்களுக்கு விளக்கி விடுவார்!” என்றான் விமலாதித்தன்.

மூன்றாம் இராசேந்திரன் குழப்பத்துடன் அவனைப் பார்த்தான். பாண்டியர்களை எதிர்க்கும் வலிமை தென்னகத்தில் யாருக்கும் இல்லை என்பதை அவன் நன்கறிந்தவன். பல சூழ்ச்சிகளை செய்தும் முன்னாள் பாண்டியப் பேரரசன் சுந்தர பாண்டியனையும், அவனுக்குப் பிறகு அரியணை ஏறிய குலசேகரனையும் வீழ்த்த முடியாமல் தோற்றவன்தான். இருப்பினும் இளைய கண்டகோபாலனான மனும சித்தி என்ன திட்டம் வைத்துள்ளான் என அறிய விரும்பினான். அதற்கான நேரமும் விடையும் ஒரு கிழமை கழித்து காஞ்சியில் கிடைக்கப்போகிறது அவனுக்கு. ‘விரைந்து வா துணிந்து வா சோழனே!’ என்று காஞ்சி நகர் அழைப்பதுபோல் இருந்தது சோழ மன்னனுக்கு.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

பொற்கயல் 8ம் அத்தியாயம்

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...