பயணங்கள் தொடர்வதில்லை | 22 | சாய்ரேணு
ஜங்க்ஷன் (நிறைவு)
ஒருவிநாடி திக்கித்து நின்றானாயினும், போஸ் உடனே சுதாரித்துக் கொண்டான். போலீஸ் டு-வே ரேடியோவையும் மொபைலையும் மாறிமாறி இயக்கினான். எப்படியோ சிக்னல் பிடித்துவிட்டான். தர்மாவை எல்லோருமாகக் கவனமாக இறக்குவதற்குள் ப்ளாட்ஃபார்மில் வீல்-சேர் தயாராக இருந்தது. வெளியே வந்ததுமே ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு வந்துவிட்டது.
ஆம்புலன்ஸில் தர்மாவின் ஸ்ட்ரெச்சருக்கு எதிரே போடப்பட்டிருந்த பெஞ்சில் போஸ் அமர்ந்தான். தர்ஷினியும் அவன் அருகிலேயே அமர்ந்தாள். தன்யா சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டாள்.
மனதில் அலையலையாய்ப் பயம் ஓடியது.
*
பிழைத்துவிடுவான். வயிற்றில்தானே பட்டிருக்கிறது. நல்லவேளை ஹார்ட்டில்…
ஏற்கெனவே ஒரு காயம் பட்ட நிலையில்…
நோ! அதை நினைக்காதே! தர்மா என்ன சொல்லுவான்? “நம் எண்ணங்களுக்குக் காலத்தை மாற்றும் சக்தி உண்டு. தின்க் பாஸிட்டிவ் ஆல்வேஸ்” என்பான்.
இனி யார் அப்படி என்னிடம் சொல்லுவார்கள்?
தர்ஷினி ட்ரெயினில் சொன்னது ரொம்பச் சரி. அவளைப் போய்க் கேலி செய்தேனே!
இவனில்லை என்றால் ஏது என் தைரியம், திமிர், புத்திசாலித்தனம், வெற்றிகள், வாழ்க்கை?
இவனில்லை என்றால் என்ன என் ஐடண்ட்டிட்டி? நான் யார்?
*
தர்மாவின் கண்கள் திடீரென்று திறந்தன. “தன்யா, கம் ஹியர்” என்றான் மெல்லிய குரலில்.
தன்யா ஆம்புலன்ஸ் ஓட்டத்தைச் சமாளித்து எழுந்து அவனருகே சென்று நின்றாள்.
“உன்னிடம் ஒண்ணு சொல்லணும். அதைத் தமிழில் சொல்லலாம், சமஸ்கிருதத்தில் சொல்லலாம், உருதுல சொல்லலாம். ஆனா உனக்கு இங்க்லீஷ் பிடிக்கும்” என்றான்.
தன்யாவும், தர்ஷினியும் போஸும்கூட, அவனையே பார்த்தார்கள்.
“This body is not me,
I am not limited by this body.
I am Life without boundaries.
I have never been born,
And I have never died.
Look at the ocean and the sky filled with stars,
Manifestations from my Wondrous True Mind.
Since before time, I have been free.
Birth and death are only doors through which we pass,
Sacred thresholds on our journey.
Birth and death are a game of hide-and-seek.
So laugh with me,
Hold my hand,
Let us say good-bye,
To meet again soon.
We meet today,
We will meet again tomorrow.
We will meet at the source every moment.
We meet each other in all forms of life…”
தர்மாவின் குரல் தேய்ந்தது.
தர்ஷினி உடைந்துபோய்க் குரல் வெளிவராமல் அழுதாள். போஸ் விம்மலை அடக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
தன்யாவின் கண்ணீர்ப் பசையற்ற விழிகள் தர்மாவையே வெறித்தன.
*
பரபரப்பான, படபடப்பான, கையறுநிலை நிமிடங்கள்!
ஐ சீ யூ.
வில் ஐ சீ யூ?
காத்திருப்பு. இதைப்போல் கொடுமை கிடையாது.
போவதும் வருவதுமாய் டாக்டர்கள், நர்ஸ்கள்.
எங்களிடம்தான் ஏதோ சொல்லப் போகிறார்களோ? இல்லை.
போஸ் தவித்து அங்குமிங்குமாய் நடக்கிறான்.
தர்ஷினி தன்யாவின் அருகில்வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு நின்றவள்தான். நகரவேயில்லை.
Hold my hand… வேண்டாம், நினைக்காதே!
பீதியடித்த முகங்கள்… மௌனம் மௌனம் மௌனம்…
டாக்டர்… டாக்டர் வருகிறார். தலைகலைந்த, சோர்வான டாக்டர்.
அங்கேயே நின்றுவிடுங்கள். வராதீர்கள் டாக்டர்! இந்த விநாடியோடு உலகம் உறைந்துபோகட்டும்! எந்தச் சப்தமும் வேண்டாம்!
டாக்டர் அவர்களை ஏறிட்டார். “ஹி வில் லிவ். தேவுடு ரக்ஷிஞ்சாடு…”
அடுத்த விநாடி “ஹேய்… லீவ் மீ. இன்ஃபெக்ஷன், இன்ஃபெக்ஷன்…” என்று கத்தினார் அவர்கள் அணைப்பில் திணறிய டாக்டர்.
*
“நான் எங்கிருக்கிறேன்? பூலோகமா சுவர்க்கமா?” என்றான் தர்மா கண்விழித்து.
“கேரிங் ஹார்ட்ஸ் ஹாஸ்பிடல், விஜயவாடா” என்றாள் அந்தப் புன்னகை நர்ஸ். அவனைச் சோதித்துவிட்டு விலகிப் போனாள்.
கஷ்டப்பட்டுத் தலையை லேசாகத் திருப்பினான் தர்மா.
தன்யா.
“உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். அது இங்க்லீஷ்ல சொல்லலாம், சமஸ்கிருதத்தில் சொல்லலாம், உருதுல சொல்லலாம். ஆனா உனக்குத் தமிழ் பிடிக்கும்” என்றாள்.
தர்மாவின் முகம் புன்னகையில் சுழித்தது.
“நீ பெயரல்ல.
உயரமும் எடையும் பாலுமல்ல.
நீ வயதல்ல.
நீ படித்த புத்தகங்களும்
பாடிய பாடல்களும்
எழுதிய கவிதைகளும்
உன் சிந்தனைகளும் நீ.
உன் அன்பும் அருகாமையும் நீ.
உன் உள்ளமும் உதவியும் உண்மையும் நீ.
உன் பரிதவிப்பும் புன்னகையும் நீ.
பிறப்பும் முடிவும் குருவும் காலமும் கடவுளும் நீ.
எங்கிருந்து வந்தாயோ அது நீ.
எங்கே போகிறாயோ அதுவும் நீ.
ஏன் பிரிந்து ஓடுகிறாய்?
நானும் வருகிறேன் உன் பயணத்தில்.
பட்டுப்பூச்சியின் சிறகுகளாய், நீ
படபடக்கும்வரை நானும் உயிர்ப்போடு.
பயணங்கள் முடிந்துபோகும்.
ஆன்மா மறுபடி தொடங்கும்.
இது பந்தயமல்ல, பயணம்.
வா, என் கையைப் பிடித்துக் கொள்.
சேர்ந்து தொடங்குவோம், சேர்ந்து முடிப்போம்.
இலக்கல்ல பயணத்தின் மகிழ்வு.
பாதையும், பக்கத்துணையும்!”
தர்மா விக்கித்துப் பேச்சிழந்தான். அவன் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.
“என்ன தர்மா. லெஜண்ட் படத்தில் பாலகிருஷ்ணாகாரு மாதிரி எக்ஸ்ப்ரெஷன் கொடுக்கற?” என்றவாறே சரியாக அந்த விநாடி உள்ளே நுழைந்தான் போஸ். அவன் விழிகளும் சிவந்திருந்தன.
“உயிர் நண்பன். படுத்த படுக்கையா கிடக்கறேன், படம் பார்க்கப் போயிருக்கான் பாரு” என்றான் தர்மா சிரித்து.
“ஏன், நீங்க பார்க்க மாட்டீங்களோ? நீ பொழச்சு வந்ததே சிபிஐ பார்ட் ஃபைவ் பார்க்கத் தானே?” என்றான் போஸ் வேடிக்கையாக.
“அது மலையாளக் கரையோரம். இப்போ தெலுங்குச் சீமையில் இல்ல இருக்கோம்? அதனால் RRR சேர்த்துக்க” என்றான் தர்மா. “அப்புறம் காஷ்மீர் ஃபைல்ஸ் கட்டாயம் பார்க்கணும்… RRRல எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களையும் காட்டி ஒரு பாட்டு வருது பாரு, மெய்சிலிர்த்துப் போகும். கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளைக்காகப் பாட்டை மறுபடி மறுபடி பார்க்கலாம்.”
“வ உ சி ஆ? ஆலியா பட்னு சொல்லு. அவங்களைத்தானே பார்க்கணும் உனக்கு?”
“அவங்களையும்.”
தன்யாவும் தர்ஷினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘என்ன இவர்கள்? ஜீவ-மரணப் போராட்டம் நடந்திருக்கிறது இங்கே! இப்படியா பேசிக் கொள்வார்கள்? இதுதான் நட்பா? எல்லாப் பிரச்சனைகளும் கிரேஸி மோகன் சொன்னதுபோல் இந்தக் கூட்டுக்கு முன்னால் கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய்விடுமா?’ என்று அந்தப் பார்வைகள் வியப்பாய்ப் பேசிக் கொண்டன.
“சரி இருக்கட்டும், கேஸ் என்ன ஆச்சு?”
“ஆச்சு. ஷான் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டா. அவ பழைய ரவுடி. ஸ்ரீனி அவளுக்குக் ‘கொட்டேஷன்’ கொடுத்திருக்கார். அந்த டான்ஸ் பெண்ணு தான் ஸ்ரீனி மகள்ங்கற ஆதாரங்களோடு ட்ரெயினில் வரும்போது அவளைக் கெட்டிக்காரத்தனமா முடிச்சுட்டா. பாவம், அவ கார்டியனும் காதலனும் அவளை இன்னும் தேடிட்டிருக்காங்க. அப்புறம் ஸ்ரீஜாவைக் கண்காணிக்க செகரட்டரி என்ற பெயரில் கூடவே வெச்சுட்டார் ஸ்ரீனி. ட்ரெயினில் சுப்பாமணி நளினா மேட்டரைக் கிளறுகிறார்னு அவளுக்குப் புரிஞ்சதும் ஸ்ரீனிக்குக் கால் பண்ணியிருக்கா. அவரையும் முடிச்சுடச் சொல்லி இன்ஸ்ட்ரக்ஷன்… இதில் இராணி கந்தசாமி இவ சுப்பாமணி கேபினிலிருந்து அவரை இழுத்துட்டு வெளியே வரதைப் பார்த்துட்டாங்க. சுப்பாமணியோட பல விக்டிம்களில் இவளும் ஒருத்தின்னு நினைச்சுப் பரிதாபப்பட்டுக் காட்டிக் கொடுக்காம இருந்திருக்காங்க. யாருக்கும் தெரியாம அவளைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. ஷான் அவங்களைச் சுட்டுட்டா. அப்புறம் நீங்க ரெண்டுபேரும் விஷயத்தைக் கரெக்டா கண்டுபிடிச்சு நெருங்கி வந்துட்டீங்க…”
“என்ன தைரியம் பாரு, இத்தனை பேருக்கு நடுவில் ஷுட் பண்ண!” என்றாள் தன்யா.
“எல்லா விஷயத்தையும் உங்களால்தானே நிரூபிக்க முடியும்? மத்தவங்களை நினைச்சு அவ பயப்படலை. உங்க ரெண்டுபேரையும் சுட்டுட்டு ஓடிப் போயிடலாம்னு நினைச்சிருக்கா. ஸ்ரீனி அவளைத் தப்புவிச்சுடுவார்னு நம்பிக்கை! ‘எல்லாம் சரியா வந்திருந்தா, இந்நேரம் நான் ஃபாரின் பறந்திருப்பேன்’ அப்படிங்கறா!”
“நீ எப்படி சினிமா போலீஸ் மாதிரி கரெக்டா அங்கே பிரசன்னமான?” என்று கேட்டான் தர்மா.
“நீங்க கிளம்பறதுக்கு முன்னாடியே சுப்பாமணியைப் பற்றி டீடெயில்ஸ் கேட்டிருந்தா தன்யா. ஆளு சரியில்லைன்னு தெரிஞ்சுது. அதான் உங்களை ட்ராக் பண்ணிட்டிருந்தேன். ரெயில் ஓங்கோல்ல நின்னு போச்சுன்னும், சுப்பாமணி இறந்துட்டார்னும் இன்ஃபர்மேஷன் கிடைச்சது. நீங்க எதையும் சமாளிப்பீங்கன்னாலும்… ஏதோ தப்பா பட்டது. அதான் கிளம்பி வந்தேன். அது போகட்டும், நீ எதுக்குடா பாயற புல்லட்டை மெனக்கிட்டு நிறுத்தித் தொலைக்கற? உன்னால் அத்தனைபேருக்கும் கஷ்டம்!” என்று எரிந்துவிழுந்தான் போஸ்.
“பின்னே? நாம இப்படி ஏதாவது சாகஸம் பண்ணலேன்னா, ‘துப்பறிதல் என்பது விசாரணை மட்டும் இல்லை’ அப்படின்னு கடிதம் போடுவார் வாசகர் சிவசக்தி சரவணன்! அதோட, இவங்களே எல்லாப் பெயரையும் தட்டிக்கிட்டுப் போக விடலாமா? இனிமேல் பாரு, ஐயாவோட புகழை! போஸ், அந்தப் புல்லட் கிடைச்சா வாங்கி வைடா, டாலர் பண்ணிக் கழுத்தில் மாட்டிக்கப் போறேன்!”
“அது எதுக்கு?” என்றாள் தன்யா.
“நீங்க எத்தனை சாதனைகள் பண்ணினாலும் ஆபத்துன்னா உங்களைக் காப்பாற்ற நாந்தான் வரணும்னு நினைவுபடுத்தறதுக்கு!” என்றான் தர்மா.
“அதுசரி, உன்னையே தன்யா கொடுத்த ஜெர்கின் தான் புல்லட்டோட வேகத்தைக் குறைச்சுக் காப்பாத்திச்சுன்னு டாக்டர் சொன்னார், பேசறான்!” என்றாள் தர்ஷினி, கொணகொணவென்ற அழுகைக் குரலில்.
தர்மாவுக்குக் குண்டடிபட்டதிலிருந்து இப்போதுதான் அவள் முதன்முறையாகப் பேசியிருக்கிறாள்.
தர்மாவின் வேடிக்கைப் பேச்சு நின்றது. “தர்ஷினி” என்றான். அவள் அருகில் போனாள். “ஆளும் குரலும் சரியாகவே இல்லையே” என்றான்.
“நேத்துக் காலையில் உங்க வீரதீர சாகஸத்தை நிகழ்த்திட்டீங்க! நேத்திக்கும் இன்னிக்கும் முப்பது மணிநேரம் ஆச்சு! ஒருத்தருக்கும் பச்சைத் தண்ணி பல்லில் படலை. எப்படி இருப்பான்னு நினைக்கறே?” மறுபடியும் போஸுக்குக் கோபம் வந்தது.
“சரி” என்றான் தர்மா. பிறகு தர்ஷினியைப் பார்த்து “தன்யாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் கேண்ட்டீன் போ. ரெண்டு பேரும் டீ குடிங்க. அப்புறம்… எங்கேடா தங்கணும் இவங்க?” என்றான் போஸைப் பார்த்து.
“ஹோட்டல் ராயல்சீமா” என்றவாறே அறைச் சாவியை அளித்தான் போஸ்.
“ஓகே. எனக்கு ஒண்ணும் இல்லை, கூட போஸ் இருக்கான். நீங்க ரெண்டுபேரும் ரூமுக்குப் போய்க் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. வாஷ் யுவர் ஃபேஸ்” என்றான் தர்ஷினியிடம்.
தர்ஷினி சோகையாய்ப் புன்னகைத்தாள்.
“லைஃப்” என்றான் தர்மா.
“லைட்” என்று சொல்லி இருவரும் விடைபெற்று விலகினார்கள்.
“இது என்ன பரிபாஷை?” என்றான் போஸ்.
“அதையெல்லாம் ஏன் கேட்கிற? அண்ணன்-தங்கச்சிக்கு நடுவில் ஆயிரம் இருக்கும்” என்ற தர்மா “போஸ் மை ஃப்ரெண்ட்! என் பயணம் முடிஞ்சதுன்னு நினைச்சேன், இப்போ முடியலை போலிருக்கு” என்றான்.
“எப்பவும் முடியாது” என்றான் போஸ்.
“மடத்தனமா பேசாத. எல்லாப் பயணமும் ஜங்க்ஷன் வந்ததும் முடிஞ்சுடும், தொடராது” என்றான் தர்மா.
“நீ பயணம் இல்லைடா, பாதை” என்று நினைத்துக் கொண்டான் போஸ்.