பயணங்கள் தொடர்வதில்லை | 21 | சாய்ரேணு
19A. யாத்திரையின் முடிவு!
“ஒரு சர்க்கிள் சங்கர் குடும்பத்தைச் சுற்றிவிட்டு வெளியே வந்துட்டோம், இல்லையா?” என்று கேட்டாள் தர்ஷினி. “இந்த ட்ரெயினில் ஸ்ரீனியோடு சம்பந்தப்பட்ட ஒரே நபர் – ஸ்ரீஜா. அவரும் சுப்பாமணியால் மிரட்டப்பட்டவர், அதுவும் உங்கள் எல்லோரையும்விட மிகக் காட்டமான, நிகழ்காலத்தியதான, எதிர்காலத்தையே பாதிக்கின்ற மிரட்டல். அவர்தான் உங்களில் துப்பாக்கி கொண்டுவந்தவர். அவர்தான் இங்கே உண்மையில் அவுட்ஸைடர். அவர் உங்களோடு ட்ராவல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை…”
“புல்ஷிட்!” என்று அலறினாள் ஸ்ரீஜா. “எனக்கு எப்போதுமே துப்பாக்கி கொண்டுவர பழக்கம் உண்டு. நான் ஷுட்டிங் எக்ஸ்பர்ட். இராணி மரணத்துக்குப் பிறகு, என் காணாமப் போன துப்பாக்கி நேத்து என்னுடைய குர்தா பாக்கெட்டிலேயே இருந்தது! பயந்து போய்த்தான் நீங்க டைனிங்கார்ல இருந்தப்ப உங்க கேபினில் ஒளிச்சேன்.
“நான் இந்த ட்ரெயினில் வரதாகவே இல்லை, சுப்பாமணிதான் இன்ஸிஸ்ட் பண்ணி…”
“அப்படிச் சொல்லுங்க. சுப்பாமணி கட்டாயப்படுத்தினாரா? ஏன்?”
“ராஸ்கல்! இந்தப் பிரயாணம் முடியறதுக்குள்ள என்னைக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சிடுவேன்னு சொன்னான்…”
“தேர் யூ ஆர்! இந்தப் பயணம், இங்கே எல்லோரும் கூடியிருப்பது, நாங்க வந்து சேர்ந்திருப்பது எல்லாமே சுப்பாமணியுடைய ஜைஜாண்ட்டிக் மாஸ்டர்ப்ளான்! ஒன்றை வைத்துப் பலதைச் சாதிக்கும் அவருடைய வெற்றிகரமான சூது விளையாட்டு! இந்த ஒருமுறைதான் அவருடைய கேம் தவறிட்டது, பாவம்!” என்றாள் தன்யா.
“என்னடி பாவம்? மகாபாவி அவன்!” என்றாள் காமுப் பாட்டி.
“உண்மைதான் பாட்டி! ஆனா மகாபுத்திசாலியான மகாபாவி! வாழ்க்கையுடைய ஓரங்களிலேயே நின்று, நடுவில் போகிறவர்களை அடித்து அதனால் வாழ்ந்தவர்! அவருக்கு ஒரு சான்ஸ், கடைசி சான்ஸ் தானும் நடுவில் வர! மகராஜனாய்க் கோச்சுவண்டி ஏற! இருள் உலகத்திலிருந்து வெளிச்ச உலகுக்கு வெற்றிகரமாய் மாற!” தன்யாவின் குரல் உயர்ந்தது.
ஸ்ரீஜா குறுகினாள். “அதுக்கு… அதுக்கு… நானும் என் ப்ரதரும்தான் பலிகடாவா?” என்றாள் அழமாட்டாக்குறையாக.
“ஸ்லாப் பாங் ஆன் பாயிண்ட்! சங்கருடைய குடும்பம் பெரிசு! பரம்பரைப் பணக்காரங்க. ஸ்கேண்டல்கள் அவர்களுடைய வாழ்வில் ஒரு பாகம். அத்தனைப் பெரிய பணக்காரர்களாக இல்லாதவர்களும்கூட இந்தக் கார்ப்பரேட் கேமில் மாட்டி, கஷ்டப்பட்டு வெளியே வந்திருக்கீங்க…” தன்யாவின் குரல் அங்கிருக்கும் எல்லோரையும் மென்மையாய் வருடியது.
“ஆனா… ஸ்ரீனி அப்படி இல்லை. வறுமையால் ரொம்பக் கஷ்டப்பட்ட, கெட்ட பெயர், வம்பு இதனாலெல்லாம் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர். தன்மேல் ஒரு அப்பழுக்குச் சொல்ல முடியாதபடி வாழ்வதை ஒரு கொள்கையாகவே கொண்டவர்… கார்ப்பரேட்டாக இருந்தாலும், பணத்தைக் குவித்தாலும், அதே மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியோடு, மிகுந்த கௌரவத்துடனும் எளிமையாகவும் வாழ்கிற மனிதர். சங்கர் குடும்பம்போல் எந்தக் குழப்பங்களும் அவர் வாழ்வில் இல்லை. சின்னக் குடும்பம்; எல்லோரும் வெல்-ஸெட்டில்ட்; அவருக்குக் குழந்தைகளும் இல்லை.
“ஸ்ரீனியுடைய வாழ்வில் வந்த முதல் குழப்பம், அவருடைய சகோதரியால். அவங்க அவருடைய, சரியா சொல்லணும்னா சங்கர் அண்ட் ஸ்ரீனி அஸோஸியேட்ஸோட, போட்டியாளரோட பழக ஆரம்பிச்சாங்க! அதோட, எப்படியோ அவங்களுக்குக் குடிப் பழக்கம் வந்துடுச்சு! இந்த இரண்டிலிருந்தும் ஸ்ரீஜா மீளலைன்னா, அது ஸ்ரீனிக்கு அவமானம்! ஏன்னா, பிஸினஸிலும் சொந்த வாழ்க்கையிலும் ஸ்ரீனியுடைய வாரிசு ஸ்ரீஜா. அவருடைய குணம் அல்லது, ஸ்ரீஜாவுடைய குணத்திற்கு ஏதாவது பங்கம் வந்துடுச்சுன்னா, அது சும்மா கடந்துபோகிற விஷயம் இல்லை! அவருடைய மனதை, வாழ்க்கையை, பிஸினஸை எல்லாத்தையும் பாதிக்கற விஷயம்!
“இந்த நிலையில்தான், இதுவரை சங்கரோடு மட்டுமே சம்பந்தப்பட்ட சுப்பாமணி ஸ்ரீனியின் வாழ்க்கையின் உள்ளே நுழைந்தார். ஸ்ரீஜாவை அவருடைய… நண்பரிடமிருந்து பிரித்தார். அவருடைய பிஸினஸைக் குலைத்தார். ஸ்ரீஜாவையும் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே கொணர்ந்தார். இந்த… உதவிக்கு… என்ன விலை கொடுத்தாரோ ஸ்ரீனி, நமக்குத் தெரியாது!
“ஆனா, எதுவானாலும் அதுக்கு மேலான ஒரு விலையைச் சுப்பாமணி எதிர்பார்த்தார்! அதுதான் ஸ்ரீஜாவைத் திருமணம் செய்துகொள்வது! ஸ்ரீனியின் சாம்ராஜ்யத்தின் மன்னனாக ஆவது! இரண்டு-மூன்று வருஷமா அதுக்கு முயற்சி பண்ணுகிறார் சுப்பாமணி! அதான் ஸ்ரீஜா எப்போதும் கையில் பிஸ்டல் வெச்சிருக்காங்க!”
இவ்விடத்தில் தன்யாவை இடைமறித்த ஸ்ரீஜா “இதை ஸ்ரீனி புரிஞ்சுக்காம, நான் ஏதோ மறுபடியும் என் ஃப்ரெண்டைச் சந்திக்கறேன்னு நினைச்சு ஷான் என்கூடவே எப்போதும் இருக்கணும்னு அப்பாயிண்ட் பண்ணிட்டான். இவன் ரொம்ப நல்லவன் பாரு! இவனைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்றாள்.
“உங்களை மிரட்டிப் பணியவைக்க முடியாதுன்னு புரிஞ்சதும், சுப்பாமணி இன்னொரு ஐடியா பண்ணியிருக்கார். உங்களை இம்ப்ரஸ் பண்றதுதான் அது! சுப்பாமணிக்கும் உங்களுக்கும் தெரியாத ஏதோ ஒரு ரகசியத்தை இங்கே தெளிவிச்சு, தன்னை ஒரு ஹீரோவா காட்டிக்க முயற்சி பண்ணியிருக்கார். அதுக்கு ஹெல்ப் பண்ண எங்களை வரச் சொல்லியிருக்கார்.”
ஸ்ரீஜா விழித்தாள். “ரகசியம்னா?”
“சுப்பாமணி சம்பந்தப்பட்டிருக்கறதால, ஏதோ குற்றத்தைப் பற்றிய ரகசியம்தான்! சங்கர்-ஸ்ரீனி சம்பந்தப்பட்ட எல்லா குடும்பங்களில் உள்ள எல்லா ரகசியங்களும் தெரிஞ்சு, அதைப் பயன்படுத்திக்கவும் செய்யும் சுப்பாமணிக்கு, இது தெரியாதது ஒரு வலியாகவே இருந்திருக்கணும்! அதான் எங்க உதவியை நாடி, அதை உங்க எல்லோருக்கும் காட்டவும் செய்தார். அந்த ரகசியத்தை நான் கண்டுபிடிக்கப் போறேன், அதுக்காக டிடக்டிவ்ஸை வரவழைச்சிருக்கேன் என்று மறைமுகமாக மீசையை முறுக்கும் மிரட்டல்! அது மற்றவர்களுக்குப் புரியலை, நமக்கு முக்கியமான அந்த நபருக்குப் புரிஞ்சிருக்கு! அவங்க செஞ்ச வேலைதான் சுப்பாமணியுடைய கொலை!”
கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீஜாவுக்கு, வேறு ஒரு எண்ணம் உற்பத்தியானது.
“எ… என்னை இம்ப்ரஸ் பண்ணணும்னா… அப்போ…”
“ஆமா. மறுபடியும் சங்கருடைய க்ரூப்க்கே வந்துட்டோம்!” என்றாள் தன்யா.
*
“ஐ… கான்ட்… பிலீவ்… இட்” என்று முணுமுணுத்தான் தர்மா. “ஸ்ரீஜா… அவங்க துப்பாக்கி… இந்தக் கொலையை மறைக்க அவங்களோட முயற்சிகள்…”
“எல்லாமே சந்தேகத்துக்கிடமாத்தான் இருக்கு. இருந்தாலும் சுப்பாமணியோட பிஹேவியரை வேறு எப்படியும் விளக்க முடியாது!” என்றாள் தன்யா.
“ஓகே! ரகசியம், ரகசியம்னு சொல்றீங்க, அது என்ன ரகசியம்? சுப்பாமணி கண்டுபிடிக்க முயன்ற ரகசியம்? அதைச் சொல்லுங்க! அதைக் கண்டுபிடிச்சா இல்லை நீங்க டிடெக்டிவ்ஸ்!” என்றார் சந்திரசேகர்.
தன்யா சற்றுத் திகைத்தாள்.
“டிக்கெட்” என்றான் தர்மா. அவன் விழிகள் மூடியிருந்தன.
“தர்மா?” என்றாள் தன்யா. குரலில் தொனித்த கவலையை உணர்ந்ததும் “நத்திங். யோசிக்கறேன், அவ்வளவுதான். சுப்பாமணி பர்ஸில் மூன்று வருஷத்துக்கு முந்தைய ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏஸி ட்ரெயின் டிக்கெட் இருந்தது. அது அவருடைய டிக்கெட் இல்லைன்னு எனக்கு ஏனோ தோணுது. அதில் ஏதோ மர்மம் இருக்கு” என்றான் தர்மா.
“என்ன ட்ரெயின்?” என்று கேட்டாள் ஸ்ரீஜா.
“அனந்தபுரி. ஏன் கேட்கறீங்க?”
“இருங்க. எனக்கு ஒரு சின்ன மெமரி” என்றாள் ஸ்ரீஜா. “மூணு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு டான்சர் சங்கரோட மகள் பர்த்டேக்கு ஆட வரதா இருந்தா. அவ ட்ரெயினிலேயே காணாமப் போயிட்டா. ஏதோ ஃபோன்ல இன்ஃபர்மேஷன் வந்து இறங்கிப் போயிட்டதா போலீஸ் முடிவு கட்டினாங்க. ஆனா என்ன இன்ஃபர்மேஷன், ஏன் இறங்கிப் போனா, இப்போ அவ எங்கே, எதுவுமே கண்டுபிடிக்கப்படலை. காதல் ஏதாவது இருக்குமோன்னு பார்த்தா, காதலன் ஒருத்தன் சென்னையில் இருந்தான், அவனும் அவளைத் தேடிட்டிருந்தான்னு கேள்வி.”
“யாரு? அந்த நாட்டியத் தாரகை நளினாவா? ஏதோ நத்தம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணு, திடீர்னு பெரிய டான்சர் ஆகிட்டான்னு சொல்வாங்களே” என்று எடுத்துக் கொடுத்தார் தேவசேனாபதி.
“நத்தம்பட்டியா? அது எங்க கிராமமாச்சே! எங்க சொந்த ஊர்!” என்று வியப்புடன் சொன்னாள் ஸ்ரீஜா.
“மிஸ்டரி ஸால்வ்ட்னு நினைக்கறேன்” என்றாள் தன்யா ஆச்சரியமாக.
*
“வாட் டு யூ மீன்?” என்று வியப்புடன் கேட்டாள் ஸ்ரீஜா.
“ஸ்ரீஜா, ஸ்ரீனியைப் பற்றிச் சொல்லும்போது இவன் ரொம்ப நல்லவன் பாருன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?”
“நத்தம்பட்டில நாங்க இருந்தப்போ, என் அம்மாவுக்குச் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி இருந்தா. அவளோட ஸ்ரீனி… அவளை ஸ்ரீனிக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றாள் ஸ்ரீஜா.
“அவங்கதான் ஸ்ரீனியோட வைஃபா?” என்று கேட்டாள் தர்ஷினி.
“இல்லை. ஸ்ரீனி சென்னை வந்துட்டான். இங்கே வந்ததும் பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஆகிட்டான். அப்புறம் அவளை மறந்துட்டான். பெரிய இடத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டான். இதெல்லாம் பழைய கதை” என்றால் ஸ்ரீஜா.
“தர்மா என்னைத் திட்டுவான். இருந்தாலும் நான் ஊகத்துக்குள்ள போறேன். இந்த… நாட்டியத் தாரகை… என்ன பேரு? அவளுக்கும் ஸ்ரீனி லவ் பண்ணின பெண்மணிக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தா?” என்றாள் தன்யா.
“சம்பந்தம்னா? அந்தப் பெண்ணுடைய மகளா? ஸ்ரீனி… ஸ்ரீனியுடைய மகள்னா சொல்றேள்?” என்று கலிவரதன் வியப்புடன் கேட்டார்.
“அப்படி இருந்தா… என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்க்கிறேன். அவ சங்கரோட மகளா இருந்தா… அவளைப் பணம் கொடுத்து செட்டில் பண்ணியிருப்பார். ஒருவேளை விஷயம் தெரிஞ்சாலும், அதைப் பற்றிப் பெரிசா கவலைப்படுவார்னு தோணலை. அதுவே ஸ்ரீனி? தன்னுடைய தனிமனித ஒழுக்கம், உழைப்பு இதுதான் தன்னுடைய பிஸினஸ் வெற்றியின் மூலதனம் என்று சொல்லுகிற ஸ்ரீனி? ஒரே நாளில் அவர் மதிப்புப் போயிடும். பேப்பரிலும் சோஷியல் மீடியாலையும் சந்தி சிரிச்சுடும். ஷேர் மார்க்கெட்கூட விழுந்து போயிடலாம். ஸ்ரீனி என்ற மலையின் வீழ்ச்சி நடக்கும்… அப்படிப்பட்ட பெண் காணாம போயிருக்கா. அவளோட டிக்கெட் சுப்பாமணிகிட்ட இருக்கு!”
“இப்போ என்ன சொல்ல வரீங்க? அந்தப் பெண்ணை ஸ்ரீனிக்காக சுப்பாமணி கடத்திட்டார்னா?”
“அப்படியா இருந்தா எங்களோட ப்ரசன்ஸ், உங்களோட ப்ரசன்ஸ் எல்லாம் எதுக்கு சார்? சுப்பாமணிக்கே இது ஒரு மர்மந்தான்னு நினைக்கறேன். அவர் கண்டுபிடிக்க நினைச்ச மர்மம்” என்றாள் தன்யா.
தர்ஷினி பேச ஆரம்பித்தாள். “தன்யா, இப்போ நான் ஊகிக்கறேன். அந்தப் பெண் ட்ரெயினிலிருந்து இறங்கிப் போயிருக்கான்னு போலீஸ் நினைக்குது. எந்த ஸ்டேஷனில் அவ இறங்கிப் போயிருந்தாலும், டிக்கெட்டை விட்டுட்டுப் போக மாட்டா. ஆனா டிக்கெட்டை ட்ரெயினிலேயே சுப்பாமணி கண்டெடுத்திருக்கணும். ஸோ, அவ காணாம போயிருக்கா, அதாவது கடத்தப்பட்டிருக்கா. யாரால? சங்கர் குடும்பத்தைச் சேர்ந்த யாராலோன்னு சுப்பாமணி நினைச்சிருக்கார். ஏன்?”
“அந்தப் பொண்ணு சங்கர் வீட்டுக்குத்தானே நாட்டியம் பண்ணக் கிளம்பியிருக்கா? அதனால் அவர் அப்படி நினைச்சிருக்கணும். ஆனா நமக்குத் தெரியுமே!” என்றாள் தன்யா.
“நமக்கு என்ன தெரியும்?” என்றாள் தர்ஷினி.
“மர்டர் இஸ் அ ஹாபிட்” என்றான் தர்மா.
வேறு ஏதோ சொல்லவந்த தன்யா அவனைப் பார்த்தாள்.
“யார்? அது இருக்கட்டும். எப்படி? அதைச் சொல்லலாம் இல்லையா?” என்றான் தர்மா. மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்தான். “சாதாரணமா, ஒரு வேலையில் நாம என்ன டெக்னிக் முதலில் பயன்படுத்தினோமோ, அதையேதான் மறுபடி மறுபடி பயன்படுத்துவோம். கொலையும் ஒரு வேலைதான்” என்றான் மூச்சுவாங்குவது பிறருக்குத் தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்தவாறு.
“அதாவது, அந்தப் பெண் கொல்லப்பட்டிருக்கா. சுப்பாமணி மாதிரியே. முதலில் ஷூட் பண்ணி, அப்புறம் ட்ரெயினிலிருந்து தள்ளிவிட்டிருக்காங்க, அவளை அடையாளம் காட்டக்கூடிய எல்லாத்தையும் எடுத்துட்டு! அவளுடைய சாமான்கள் எல்லாம் ஜாடா கொலைகாரனால் அப்புறப்படுத்தப்பட்டன. வேறு ட்ரெயின் மோதிச் சிதைக்கப்பட்டு, ரயில்வே ட்ராக்கில் கிடக்கிற யாரோ ஒரு பெண்ணும், நாட்டியத் தாரகையும் ஒண்ணுன்னு எப்படி நினைப்பாங்க? போஸ்ட்மார்ட்டத்தில் குண்டுகூடத் தெரிஞ்சிருக்காது” என்றாள் தன்யா விழிகள் விரிந்துகொண்டே போக.
“அதே மெதட் இங்கே கொலைகாரனால் பயன்படுத்தப்பட்டது. ஆனா, அவனோட துரதிர்ஷ்டம், ரயில்வே ட்ராக்கில் கிடந்த சுப்பாமணியின் பாடி உடனே கண்டுபிடிக்கப்பட்டு, நெற்றியிலிருந்த துப்பாக்கிக் குண்டின் காயம் தெரிஞ்சு, அடையாளமும் உடனே காட்டப்பட்டு…” என்றாள் தர்ஷினி அதே வியப்புடன்.
“மை காட்! இப்போ புரியறது! எல்லாமே புரியறது! யாரு? அதை மட்டும் சொல்லுங்க! யாரு?” என்று ஸ்ரீஜாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே கேட்டார் சந்திரசேகர்.
“யாரு? ஸ்ரீனிக்கு வேண்டியவங்க இங்கே யாரு? சரியா மூணு வருஷத்துக்கு முன்னாடி ஸ்ரீனியால் அப்பாயிண்ட் பண்ணப்பட்டவங்க யாரு? யாரால் ஸ்ரீஜாவுடைய துப்பாக்கியை ரொம்ப ஈஸியா எடுக்க முடியும், திரும்ப வைக்க முடியும்? யார்மேல, அவங்க ஏழையா இருக்கறதால, இராணி பரிதாபப்படுவாங்க? யாருடைய மூவ்மெண்ட்ஸை நாம அதிகமா வாட்ச் பண்ண மாட்டோம்? யாரைப் பார்த்து ‘அட்டெண்டர் மாதிரி’ இருக்கறதா பரத்குமாருக்குத் தோன்றும்?”
தன்யா பேசிக் கொண்டுவரும்போதே, ஒரு கரம் உயர்ந்தது. தன்யாவை நோக்கித் துப்பாக்கி சீறியது. சோர்வு, மயக்கம் எல்லாம் எங்கே போனதென்றே தெரியாமல் சடாரென்று எழுந்து தன்யாவைத் தள்ளிவிட்டுக் கீழே விழுந்தான் தர்மா. அவன் வயிற்றில் சிவப்புக் குருதி குமிழியிட்டது.
தன்யா அவனைத் தாங்கும்போதே தர்ஷினியின் கால் சுழன்றது. கராத்தே வெட்டில் துப்பாக்கி பறந்தது.
அஸ்வினும் பிரபுராமும் பாய்ந்தார்கள். அவர்களுடைய பிடியில் சிக்கித் திணறினாள் ஷான்.
ஆம், ஷான்!
*
“தடக்” என்ற சப்தத்துடன் இரயில் நின்றது. இரயிலில் தாவி ஏறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியால் தாக்குண்டு நின்றார்.
அவர் ஆந்திர இன்ஸ்பெக்டரல்ல, சென்னை இன்ஸ்பெக்டர் போஸ். தர்மாவின் நண்பன்.
அவனைக் கண்டதும் தர்மாவின் முகம் மலர்ந்தது. “ஷேக்ஸ்பியர்” என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தார்கள் எல்லோரும்.
“ஷேக்ஸ்பியர்” என்றான் மறுபடியும். “பிரியமானவர்களின் சந்திப்பு, பிரயாணத்தின் முடிவு.”