பொற்கயல் | 8 | வில்லரசன்

8. வளவனின் வருத்தம்

டுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சோழநாட்டின் படைத்தலைவன் வளவன்.

பேயறைந்தது போல் திகிலுடன் காணப்பட்ட அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய் நிறைந்திருந்தன. மூச்சுக்காற்று முழுவதுமாய் வாய் மற்றும் நாசி வழியே பயணிக்க முடியாத வண்ணம் வேகமெடுத்ததால் வளவனுக்கு மேலும் ஒரு நாசி தேவைப்பட்டது.

காணக்கூடாத கனவுகள் எதையும் அவன் கண்டிடவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடீரென ஒரு விழிப்பு வந்துவிட்டது. ஏன் விழித்தோம் எதற்காக விழித்தோம் என வளவனுக்குப் புரியவில்லை. மூச்சுக்காற்று சீரான பிறகுதான் ஏன் இப்படி நடந்தது என மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய வந்தது.

முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துவிட்டு தனதருகே படுக்கையில் புலிக்குட்டிகளைப் போல் படுத்துக் கிடக்கும் அவனது மூன்று குழந்தைகளையும், அவர்களை அணைத்தபடி படுத்திருக்கும் தன் மனைவியையும் பார்த்தான். பிறகு தன் மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்தவன், மூன்று புலிகளுக்கும் முத்தமிட்டுவிட்டு படுக்கையிலிருந்து இறங்கி மதுக் குப்பிகள் கிடக்கும் மேசையிடம் சென்று குவளை நிறைய மதுவை ஊற்றி மெல்ல ருசித்தான்.

சோழத் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் படை வீடுகள் வீதியிலேயே சற்றுப் பெரிதாக அமைந்திருக்கும் தனது குடிலின் சாளரத்திடம் வந்து நின்ற வளவன், மதுக் குவளையை அருகே வைத்துவிட்டு சாளரத்தின் வெளியே தெரியும் நகரைப் பார்த்தவனுக்கு மனதிற்கு பெரும் நெருடலாக இருந்தது.

அன்று தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் நிகழ்ந்த சம்பவத்தை அவனால் மறக்க முடியவில்லை! என்றும் மறக்கவும் மாட்டான். ‌ மறக்கக்கூடிய காட்சிகளா அவை? சோழ இளவரசனை தஞ்சை மூதாட்டி ஒருவரிடம் ஒப்படைத்த பிறகு தன் மன்னன் “பெருவுடையாரே!…” எனக் கதறி மூச்சயர்ந்து மயங்கி விழுந்ததைக் கண்டு பதறிப் போனவர்கள், மன்னனை எழுப்பி இமைபோல் காத்து கங்கை கொண்ட சோழபுரம் அழைத்து வந்தது என அனைத்து சம்பவங்களும் அவனுக்குள் ஓடாத நொடிகளே இல்லை.

இளவல் கடல் கடந்து சென்றிருக்கிறார் விரைவில் திரும்பிவிடுவார் என்பதுதான் ஊர் முழுக்க பரப்பப்பட்டதே தவிர, அவர் தஞ்சையில் வாழ்கிறார் என்று சோழ மன்னனுக்கும் அவன் நம்பிக்கைக்குரிய சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

தலைநகர் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பும் பயணத்தின் போது மூன்றாம் இராசேந்திரன் இதைப் பற்றி பிறரிடம் தெரிவித்து விடக்கூடாது என உறுதிமொழி பெற்றுக்கொண்டதால் தன் மனைவியிடம் கூட வளவன் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

நகரைக் காணும் கண்கள் காய்ந்து நீர் வற்றத் தொடங்கியதும் யோசனையில் இருந்து வெளிவந்த வளவன், இமையைச் சற்று மூடித் திறந்துவிட்டு மதுக்குவளையை எடுத்துப் பருகினான். ‌

அப்போது அவன் வலிய கழுத்தைத் தன் பூங்கரங்களால் சுற்றி வளைத்து முகத்தை வளவனின் தோள் மீது வைத்து, “இந்த நடுச்சாமத்தில் உறங்காமல் மதுவா?” என்று கேட்டாள் அவன் மனைவி குமரி.

“உறக்கம் கலைந்துவிட்டது குமரி! அதான் உறக்கம் நாட….” என மதுவைப் பருகினான் வளவன்.

அவன் உதட்டைத் துடைத்து விட்ட குமரி “நீங்கள் நாகைக்குச் சென்று வந்ததில் இருந்தே உறக்கமின்றி அவதிப்படுகிறீர்கள். இளவலைப் பிரிந்ததில் வருத்தமா? இளவலை எக்காரணம் கொண்டோ தான் மன்னர் அனுப்பி வைத்திருப்பார். அதான் விரைவில் திரும்பி விடுவார் என அறிவிக்கப்பட்டதே! பின் ஏன் இந்தக் கவலை?” என்றாள் குமரி.

நாகைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு தஞ்சை சென்றதை மறைத்ததனால் சற்று குற்றவுணர்வுடன்தான் இருந்தான் அவன். பேரன்பு வைத்திருக்கும் மனைவியிடம் புறம் கூற அவன் ஒரு போதும் விரும்பியதில்லை. பிறரிடமும் பொய் புரட்டுகள் செய்வது வளவனுக்குப் பிடிக்காது. அவன் அப்படித்தான் வளர்க்கப்பட்டான்.

ஒழுக்கமும், வீரமும், நாணயமும்தான் அவனது அடையாளம். வளவனை நம்பி சோழநாட்டின் கருவூலத்தையே ஒப்படைக்கலாம் எனச் சோழ மன்னன் பலமுறை தன் அதிகாரிகளிடம் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறான்.

பிறர் பேசுவதற்கு ஏற்ப வளவனும் சோழ நாட்டின் மீதும் சோழ மன்னன் மீதும் அப்படி அப்பழுக்கற்ற விசுவாசமும் தீவிர பற்றும் கொண்டவன்.

“அறிவேன் குமரி! நினைத்து நினைத்து கவலைக் கொள்ள சோழ நாட்டவர்களிடம் நிரம்ப உள்ளனவே! இளவலைப் பற்றிய கவலை சற்று மறைந்தாலும் மன்னரைப் பற்றியும் மண்ணாகிக்கொ ண்டிருக்கும் நம் சோழ நாட்டைப் பற்றியும் நினைக்கும் பொழுது என்னால் நிம்மதியாக துயில் கொள்ள முடியவில்லையே குமரி.”

“நம் சோழ நாட்டின் நிலை அதளபாதாளத்தை நோக்கிச் செல்வதை நானும் கவனித்து வருகிறேன்! ஆனால் நம் அரசாங்கம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறது! சரிதானே?”

“சரிதான்! சோழ நாடு பாண்டிய நாட்டிற்கு கப்பம் செலுத்தும் வரை நாட்டின் உட்கட்டமைப்பை உயர்த்துவது கடினம்!”

“இதைப் பற்றி நீங்கள் நம் மன்னரிடம் பேசவில்லையா?”

“பல முறை பேசிவிட்டேன்! எல்லா முறையும் ஒரே பதில்தான் கொடுக்கிறார் நம் மன்னர்”

“என்ன அது?”

‘பாண்டிய மன்னன் குலசேகரனை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது! அவன் தமையன்கள் கொங்கு நாடு, தொண்டை மண்டலம் போன்ற பகுதிகளில் அரசபிரநிதியாக இருந்து கொண்டு நம்மை இரும்புக் கரங்களால் நசுக்கி வைத்துள்ளனர். பாண்டியர்கள் கேட்டும் கப்பத்தைக் கொடுத்துவிடுவது தான் நல்லது!’ என்று துளியளவும் நம்பிக்கையற்ற குரலில் பேசுகிறார்‌. குமரி! அவர் எத்தனை வீரம் பொருந்தியவர் தெரியுமா? அவரே இப்படி மனம் நொந்து பேசுவதை என்னால் தாங்கவே இயலவில்லை!”

“எல்லாவற்றுக்கும் அந்த நடராசன் தான் வழி கொடுக்க வேண்டும்!”

சில நொடிகள் அமைதிக்கு பிறகு, “நீ இன்று அரசியாரிடம் பேசினாயா? அவர் இப்போது எப்படி இருக்கிறார்?”

“அரசியாரிடம் யார் பேசினாலும் சமாதானம் ஆக மறுக்கிறார். தவமிருந்து பெற்ற பிள்ளையைப் பிரிந்தால் யார்தான் மனம் வருந்த மாட்டார்!? நமக்கும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு நாழிகைக்கு மேல் பிரிந்தாலும் என் மனம் வாளாவிருக்காது. அப்படியிருக்க அரசியாரின் வலி எப்பேற்பட்டது! அவர் நிலைமையில் என்னை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!”

“ஆம் குமரி! மன்னர் எவ்வளவோ சொல்லியும் தேவி மனம் இரங்கவில்லை என செவி வழி அறிந்தேன். அவருக்கு இது ஈடுகட்ட முடியாத பேரிழப்புதான்!”

முன்னமே வளவன் இதன் பொருட்டு வாடிப்போய் உள்ளதை அறிந்து பேச்சை சற்று திசை மாற்றிவிட நினைத்தாள் குமரி.‌

“இன்று நீங்கள் எத்தனை அழகாக இருக்கிறீர்கள் தெரியுமா! மாலை நாம் ஒன்றாக திரும்பும் பொழுது திருமணம் ஆனவர் என்று கூட பாராமல் ஊர் கன்னிகள் எல்லாம் உங்களை பார்வையிலேயே பிடுங்கி உண்டு விடுகிறார்கள் தெரியுமா?” என மேலும் அவனை நெருங்கினாள் குமரி‌‌ ‌

வளவன் அப்போது காதல் செய்யும் உடல் நிலையிலும் இல்லை. அதற்கான மனநிலையும் அவனிடத்தில் எழவில்லை. இருப்பினும் மனைவியின் அன்பையும் ஆசையையும் மதித்து சிறு நகையுடன் அவளைப் பார்த்தவன்,

“நீ மட்டும் என்ன..? அப்படித்தானே என்னை உன் பொறியில் சிக்க வைத்தாய்? சிக்கியதும் மூன்று வருடத்தில் மூன்று புலிகள்! நீ மட்டும் சளைத்தவளா என்ன?” என்றான்.

வளவன் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டதும் அத்தனை நிறைவு குமரியிடம்‌‌.

“ஆம்! மெய்தான்! வளவருக்கு போட்டி அதிகமாயிற்றே! ஆதலால்தான் வலை போட்டு மீன் பிடிப்பதைப் போல் உங்களை பிடித்து விட்டேன்” எனக் குமரி கூறியதும் ஏனோ வளவனுக்கு மீண்டும் பாண்டியர்களின் நினைவுதான் வந்தது.

மீன் என்றவுடன் பாண்டியர்களின் நினைவும் அவர்கள் மீது சோழ நாட்டவர்கள் வைத்திருக்கும் வன்மமும் வெய்யோன் போல் பெரிதாக எழுந்துவிட்டது வளவனுக்கு. ஆசையாகப் பேசிக்கொண்டிருந்த அவன் முகம் மாறுதல் அடைந்ததைக் கண்டு, “என்ன ஆயிற்று?” எனக் கேட்டாள் குமரி.

“ஏனோ பாண்டியர்களின் நினைவு வந்துவிட்டது குமரி” பற்களை நறநறவென்று கடித்தான் வளவன்.

குமரிக்கும் பாண்டியர்கள் மீது பெரும் கோபம் இருந்ததால் கணவனுடன் சேர்ந்து அவளும் கோபக்கனலை கக்கினாள்‌.

“அவர்களால் தானே நம் சோழ நாட்டிற்கு இந்நிலை!? இதற்கெல்லாம் கூடிய விரைவில் அவர்கள் விலை கொடுக்க வேண்டும்! சோழ நாட்டை எப்படி தீக்கிரையாக்கினார்களோ அதுபோல் நிச்சயம் பாண்டிய நாடும் தீக்கிரையாக வேண்டும்!”

“உறுதியாக நடக்கும் குமரி! விரைவில் நடக்கும்! சோழத்தின் வீரம் மிகுந்த நாட்களுக்கு குளத்தில் எறிந்த கல்லாக இருந்துவிடாது! விரைவில் வில்லாக மாறும்! பாயும்!” என்றான் அதீத கோபத்தில் இருந்த வளவன்.

இருவரும் சாளரத்திடம் பேசிக் கொண்டிருக்கும் அந்நேரத்தில் “கியா! கியா! கியா!” என ஒரு அழுகைக் குரல் கேட்க, வளவனும் குமரியும் பின் திரும்பிப் பார்த்தார்கள்.

அங்கு படுக்கையில் அவர்கள் மூன்று குழந்தைகளில் பல் முளைத்திடாத கடைக்குட்டி எழுந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற இரு குழந்தைகளும் விழித்துக்கொள்ள, மூன்றும் ஒரே நேரத்தில் அழுகை ராகம் பாடத் தொடங்கின‌.

வளவனும் குமரியும் விரைந்துச் சென்றார்கள். குமரி கடைக்குட்டியை தூக்கிக் கொள்ள, வளவன் மற்ற இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டான்.

“அட அட ஏனப்பா என்னாயிற்று? அம்மா இங்குதான் இருக்கிறேன்! வேண்டாமப்பா! ம்ம்ம்ம்! ம்ம்ம்!” எனச் சமாதானப்படுத்திச் சற்று குலுக்கி முதுகைத் தட்டிய குமரி, குழந்தையின் வயிற்றைத் தொட்டுப் பார்த்து அதன் பசி அறிந்து படுக்கையில் அமர்ந்து பாலுட்டத் தொடங்கினாள்.

வளவன் மற்ற இரு பிள்ளைகளுடன் சாளரத்திடம் வந்து நின்று வேடிக்கை காட்டினான்.

“அதோ பார்! அங்கு பார்! நிலவில் யார் இருப்பது? யார் பார்!” என இரு குழந்தைகளையும் சமாதானப் படுத்தியதும் சற்று நேரத்தில் குழந்தைகள் அழுகையை நிறுத்தின. அழுது கொண்டிருந்த அவர்கள் தன் மேலேயே உறங்கிவிட இரு குழந்தைகளையும் கொண்டு சென்று படுக்கையில் மென்மையாகவும் பொறுமையாகவும் படுக்க வைத்த வளவன், எழுந்து நின்று நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துவிட்டு “பு…” என ஊதினான். அவன் செயலைக் கண்ட குமரி வாயைப் பொத்தியபடி சிரித்தாள்.

“படைத்தலைவராம் பெரிய படைத்தலைவர்! குழந்தைகளைச் சமாதானப் படுத்துவதற்கு இத்தனை வியர்வை மணிகளா?”

“உன் மூன்று பிள்ளைகளும் மூன்று சேனைகளுக்குச் சமம்!” என்ற வளவன், மீதமிருந்த தன் மதுக்குவளையை முடித்துவிட்டு உடைவாளை எடுத்து இடையில் கட்டிக்கொண்டு கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு வெளிக்கிளம்ப ஆயத்தமானான்.

அவன் செயல்களைக் காணும் குமரி பாலூட்டுவதால் எழுந்து செல்லாமல் கையசைத்து ”எங்கு செல்கிறீர்கள்?” என வினவினாள்.

“மன்னரைக் காண வேண்டும் போலிருக்கிறது குமரி! சென்று பார்த்துவிட்டு வருகிறேன்”.

“இந்த நேரத்திலா? மன்னர் உறங்கிக் கொண்டிருப்பார்! விடிந்த பிறகு செல்லுங்கள்”.

“அவர் உறக்கத்தை மறந்து பல காலமாகிறது குமரி! இந்நேரத்தில் அரண்மனை மண்டபத்தில் யாழுடன் அமர்ந்திருப்பார். துணைக்கு யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை! இதுபோன்ற நேரத்தில் நாம்தான் அவருக்குத் துணையாக இருக்க வேண்டும்!” எனச் சத்தமிடாமல் சொல்லிவிட்டு அவள் அருகே நெருங்கிய வளவன், அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையின் கால்களில் முத்தம் பதித்தான்.

அது அவன் முகத்திலேயே எட்டி உதைக்க, குமரி சிரிப்புடன் சொன்னாள்

“தந்தைக்கு மகனின் தண்டனை”

புன்னகை காட்டி தண்டனையை ஏற்றுக்கொண்ட வளவன் குமரியைப் பார்த்து “வருகிறேன்” என்று கிளம்ப முற்படும் போது,

“நில்லுங்கள்!” என அவனை நிறுத்திய குமரி தன் கண்களில் தீட்டி இருந்த மையை மோதிர விரலால் எடுத்து அவனது முகத்தில் யாருக்கும் தெரியா வண்ணம் சிறு பொட்டு ஒன்று வைத்தாள்.

வளவன் அவள் செயலைப் பார்த்து சிரித்தான். எப்போது வளவன் வெளியே கிளம்பினாலும் குமரி செய்யும் வழக்கமான செயல்தான் இது. கேட்டால் மற்ற பெண்களின் கண் பட்டுவிடும் என்பாள்‌‌.

“இந்த நடுச்சாமத்தில் பேய்கள்தான் உலவும் குமரி!” என்றான் வளவன்.

“ஆங், பெண் பேய்களும் உங்களைப் பார்த்து கண் வைத்து விடக்கூடாது அல்லவா?”

வளவன் அவள் தலையில் செல்லமாகக் குட்டு ஒன்றை வைத்து விட்டு கிளம்பினான்‌‌. ‌

தன் குடில் அமைந்திருக்கும் படைவீடு விதியிலிருந்து அரண்மனை வீதியை அடைந்த வளவன், அரண்மனைக்குள் யாரோ ஒருவன் பதுங்கிப் பதுங்கி இருளில் செல்வதைப் பார்த்தான்.

சத்தமிடாமல் அவனைப் பின்தொடர்ந்தவன் பிறகு தகுந்த சந்தர்ப்பத்தில் தன் கம்பளிப் போர்வையால் அவனைப் போர்த்தி கீழே தள்ளிவிட்டு, அவன் மேல் அமர்ந்து முகத்தைப் பார்த்தான்.

முகத்தைப் பார்த்த வளவன் “நீயா?” என்றான் வியப்புடன்.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!