சிவகங்கையின் வீரமங்கை – 3 | ஜெயஸ்ரீ அனந்த்
சிகப்பி தான் கொண்டு வந்த பதநீர் பானையை தலையில் சுமந்தபடி வீடு நோக்கி சென்றாள். மேற்கில் மறைந்த சூரியனின் செங்கதிரின் சிவப்பு ஆங்காங்கே தனது உமிழ்நீரை துப்பிக் கொண்டிருந்தது.
காலையிலிருந்து சுற்றியவளுக்கு சற்றே கால் ஓய்ந்திருக்க இடம் தேடினாள். அருகில் இருந்த சுமை தாங்கி கல்லின் மீது தன் சுமையை இறக்கி வைத்தவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். எதேச்சையாக அவளின் கண்கள் தூரத்தில் தெரிந்த காவல் தெய்வம் ஐய்யனாரின் சிலையை நோக்கியது. சிலைக்கு முன்பாக சில தலைகள் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்ததும் தெரிந்தது. சூரியனின் செங்கதிரில் ஐய்யனார் மேலும் ஆக்ரோஷமாக தெரிந்தார். அவரின் பிதுங்கிய விழியும் வெளியே தள்ளிய நாக்கும் கையில் பிடித்திருந்த அரிவாளும் அவளின் மன அமைதியை கெடுத்தது. திடீரென்று பற்களை நற நறவென்று கடித்துக் கொண்டு சேலையில் இடையில் சொருகி வைக்கப்பட்டிருந்த கத்தியை உறுவினாள். ஆவேசம் கொண்டவளாய் கண்கள் கோபத்தில் உறைந்திருக்க “எங்களின் அடுத்த பலி நீதான்…”என்று கூரான கத்தியை சுமைதாங்கி கல்லின் மீது வெறி பொங்க ஒரு குத்து குத்தினாள். இவளின் ஆவேசமும் ஆத்திரமும் கத்தியின் முனையை மழுங்கடித்திருந்தது.
“இது எத்தனாவது கத்தியோ?” என்று அருகில் குரல் கேட்க திடுக்கிட்டவளாய் திரும்பினாள்.
ஆஜானுபாவனாய் அருகில் ஒருவன் நின்றிருந்தான். பார்பதற்கு குடியானவன் போல் இருந்தான். தலையில் இருந்த துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக் கொண்டான். சொல்லப்போனால் அவளின் கோபம் இவனுக்கு நகைப்பை தந்திருந்தது.
“உன் கோபம் ஐய்யனார் மேலா அல்லது சுமை தாங்கி கல்லின் மேலா? எத்தனை ஆக்ரோஷம் அப்பப்பா…” என்றான்.
“ம்….. சரியான சமயத்தில் தான் வந்துள்ளாய். இன்னும் இரண்டே நாள் தான் என் கையாலேயே அந்த கயவன் சசிவர்ண தேவரை கொன்று புதைப்பேன்” ஆத்திரம் மேலோங்கியது அவளுக்கு.
“அதற்கு அவசியம் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை “
“ஏன்? இறந்து விட்டானா?” கேள்வியில் சற்றே எகத்தாளம் தெரிந்தது.
“இல்லை… இல்லை… மிகவும் நோய்வாய்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அவனே மாய்ந்து விடுவான் என்று நினைக்கிறேன். “
“இல்லை… அவ்வளவு சுலபமாக அவன் இறப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். என் கையால் அவன் கழுத்தை நெறித்து….. ” பற்கள் நற நறக்கும் ஒசை கேட்டது.
அதற்குள் அங்கு யாரோ நடந்து வரும் சப்தம் கேட்கவும் சிகப்பி அவசரமாக கத்தியை இடையினில் மறைத்துக் கொண்டாள். “சரி சரி… யாரோ வருவது போல் உள்ளது. இரவு மறக்காமல் ஐய்யனார் கோவில் அருகில் வந்து விடு… என்று குடியானவன் சொன்னதும். சிகப்பி தலையசைத்தபடி அங்கிருந்து நடந்து சென்றாள்.
…………
கோடாங்கியை பார்த்த சிவகொழுந்து விற்கு சற்றே உடல் சிலிர்த்தது. இவன்… இவன்… சுந்தர சேதுபதியை போரில் கொன்றவன் தானே? இவன் எப்படி இங்கு? ஆஹா…. எனக்கு எதுவும் சரியாகப் படவில்லையே… இங்கு எதற்கு வந்தான்?… என்று நினைத்தபடி குதிரையை மெதுவாக நடத்தி அவனை தொடர்ந்து சென்றான். பின்னால் சிவக்கொழுந்து தன்னை தொடர்ந்து வருவதை உணர்ந்து கொண்ட கோடங்கி திடீரென்று தனது பாதையை மாற்றிக்கொண்டு அடர்ந்த காட்டினுள் நுழைந்தான்.
பின்னால் வந்த சிவக்கொழுந்து “ஏய்… ஏய்…” என்ற உறுமலுடன் அந்த காட்டினுள் அவனும் நுழைந்தான். ஆனால் கோடாங்கி காணவில்லை. “அதற்குள் எங்கு சென்றிருப்பான்?” என்றபடி கண்கள் எட்டியவரை தேடத் தொடங்கினான். ஆனால் அவனது துரதிருஷ்டம் அந்த இடத்தில் மெதுமெதுவாக இருள் கவ்வத் தொடங்கியது.
திடீரென்று தோன்றிய இருளில் பெரிய மரங்கள் ராட்ஷச உருவினை எடுத்து இவனை பயமுறுத்த தொடங்கியது. அதற்குள் கோடங்கியின் உடுக்கை சத்தம் மட்டும் தூரத்தில் எங்கோ கேட்க தொடங்கியது. “டுங்.. டுங்டுங்… “
“ஆஹா… அவன் அதற்குள் எப்படி தொலை தூரம் சென்றான்? புதிதாக அல்லவா இருக்கிறது கண்களில் அகப்பட்டவனை இப்படி கோட்டை விட்டு விட்டேனே? மறுபடியும் அகப்படாமலா போய் விடுவான்? இருக்கட்டும் ” என்று நினைத்தவனாய் என்று தேடுதலை பாதியில் விட்டு விட்டு மறுபடியும் சிவகங்கை நோக்கி புறப்பட்டான்
……….
நேயர்களே… சிவ கொழுந்து சிவகங்கைக்கு செல்லட்டும் அதற்குள் நாம் ராமநாதபுரம் அரண்மனைக்கு சற்று நாம் சென்று பார்ப்போம்.
……….
செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி ரகசிய ஆலோசனை கூடத்தில் தனது ஒரே மகளான வேலுநாச்சியாரிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.
“மகளே… இந்த ராஜாங்கத்திற்கு எப்பவுமே எதிரிகளால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் வந்து கொண்டேதான் இருக்கிறது. உனது முப்பாட்டனார் ரகுநாத கிழவன் சேதுபதி அவரைப் பற்றி நான் நிறைய உன்னிடம் கூறி இருக்கிறேன். அவர் மிகவும் திறமைசாலி, உதவுவதில் வள்ளல். வீரத்திலும், தீரத்திலும் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை என்று. “அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று என் அத்தை உத்திரகோசமங்கை அவரை பற்றிய பெருமைகளை அடிக்கடி என்னிடம் சொல்லி இருக்கிறார்.
“சரி தந்தையே… அவரின் பேச்சு இப்பொழுது எதற்கு? அங்கு சிவகங்கையில் பெரியப்பாவின் உடல்நிலை மோசமடைவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லை”
” காரணம் இருக்கும்மா. நா சொல்லப். போகிற விஷயத்தை கவனமாக கேள். அப்போழுதுதான் நம் ராஜியம் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கு என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்று பீடிகையுடன் வேலு நாச்சியாருடன் உரையாட ஆரம்பித்தார்.
“பாட்டனார் ரகுநாத கிழவருக்கு சிவகாமி, ராஜேஸ்வரி என்ன இரண்டு புதல்விகள் அதைத் தவிர அவருக்கு ரணசிங்க தேவர் பவானி சங்கரதேவர் என்று இரண்டு புதல்வர்கள். இதில் கிழவருக்கு அடுத்தபடியாக ரணசிங்க தேவர் ஆட்சிக்கு வரும் நேரத்தில் தான் இராணி மங்கம்மா கையால் ரணசிங்க தேவர் வீர மரணத்தை தழுவினார். இதில் கிழவருக்கு மிக வருத்தம். தனது அடுத்த வாரிசான பவானி சங்கர தேவருக்கு முடிசூட்டுவதில் கிழவருக்கு விருப்பமில்லை அதனால் தமக்கை உத்திர கோசையின் இரண்டாவது புதல்வன் முத்து விஜயரகுநாதருக்கு முடி சூட்டினார். அதிலிருந்து தான் தொடங்கியது ஆபத்து.” என்று சொல்லி நீண்ட பெருமூச்சு விட்டு தொடர்ந்தார்.
“கிழவன் தனக்கு இராஜியம் இல்லை என்று சொன்னது பவானிக்கு பெருத்த அவமானமாகி விட்டது. அதனால் மராட்டிய மன்னரின் உதவியுடன் படையெடுத்து வந்து முத்து விஜயரகுநாத தேவருடன் சண்டையிட்டான். ஆனால் பவானி எதிர்பார்த்தபடி விஜயரகுநாதரை அவனால் வீழ்த்த முடியாமல் போகவே, ஆத்திரம் கொண்டு அந்த போரில் சுந்தரேச சேதுபதியை கொன்றான்.
பவானியால் போரில் கொல்லப்பட்ட சுந்தரேச சேதுபதியின் சகோதரர் தான் கட்டையத் தேவர், மிகவும் தைரியமான பராக்கிரமசாலி.
முத்து விஜய ரகுநாத சேதுபதி தனக்காக உயிர் நீத்த சுந்தரேசருக்கான ராஜியத்தை கட்டைய தேவருக்கு வழங்கினார். அடுத்து வந்த நாட்களில் உடல் நல குறைவால் அரசர் முத்து விஜயரகுநாதரும் இறந்து விட அவரது சொந்த மருமகன் தான் உன் பெரியப்பா சசிவர்ணத் தேவர். இவரும் கட்டைய தேவரும் தஞ்சை மன்னரது உதவியுடன் பவானி சங்கரை ஓரியூர் கோட்டைச் சண்டையில் தோற்கடித்தனர். அப்பொழுதிலிருந்த இராமநாதபுரத்தை சசிவர்ணத் தேவரும், கட்டையத் தேவரும் இரண்டு சீமைகளாகப் பிரித்து இருவரும் தனித்தனியாக முடிசூடி கொண்டனர். இந்த கட்டையத் தேவர் தான் தனது பெயரை குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி என்று மாற்றி கொண்டு இராமநாதபுரம் சேதுபதி ஆனார் என்பதெல்லாம் பழைய கதை.
அதுவரை தனது தந்தை கூறியவற்றை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த வேலுநாச்சியார் முகத்திலும் கவலை ரேகை படர்ந்திருந்தது.
” ஆனால் பவானி என்னவானான் தந்தையே?”
“அவன் உடம்பில் ஊறியது செம்பி நாட்டு மறக்குல இரத்தம் இல்லையே அதனால் அவனிடம் எப்படி நியாய தர்மம் இருக்கும்? பவானி தனக்கு உதவி செய்த மராட்டிய மன்னரையே ஏமாற்றியதால் கோபம் கொண்ட மராட்டியர்கள் அவனை சிறைபிடித்து சென்றதாக கேள்வி.”
“ஒருவேளை தஞ்சை சிறையிலிருந்து தப்பி வந்திருந்தால்? பவானி ஆட்கள் ஊடுறுவியுள்ளதாக பெரியப்பா ஒலை வேறு அனுப்பி இருந்தாரே “
“ஆம்… உன் ஊர்ஜிதம் சரியாக தான் இருக்கும். எனக்கும் அது தான் கவலை. ஆகவே.. நீ உடனடியாக சிவகங்கை புறப்பட வேண்டும். பெரியப்பாவிற்கு உன் அருகாமை ஆறுதல் தருவதோடு பலத்தையும் தரும். பொழுது விடிந்ததும் நீ புறப்படுவதற்கு ஆயத்தம் செய். ” என்றார் அரசர் செல்லமுத்து
“ஆனால் தந்தையே நீங்கள் தனியாக… “
“பயம் தேவையில்லை குமாரி.. நீ திரும்பி வரும் வரை நான் காத்திருப்பேன்.
“இல்லை நான் வரும் வரை… குயிலியை உங்களுக்கு துணையாக இருக்க சொல்லட்டுமா?”
“ஹ ஹ ஹா… நன்றாக இருக்கிறது. இந்த புலிக்கு காவல் ஒரு பூனையா?”
“தவறு தந்தையே குயிலி பூனையல்ல… பூனை தோல் போத்திய புலி… நான் அவளுக்கு அவ்வாறு பயிற்சி அளித்துள்ளேன்.”
“சரி. உனது விருப்பமே என் விருப்பம்.” என்றதும் வேலம்மாள் குயிலி இருக்கும் இடம் தேடி சென்றாள்.
………….
வானில் நட்சத்திரங்கள் ஆங்காங்கே ஜொலித்து கொண்டிருந்தது. சந்திரன் மேலே எழும்பி கொண்டிருந்தான். ஐய்யனார் கோவிலை ஒட்டிய ஒரு பரந்த நிலபரப்பில் இருள் சூழ்ந்த இடத்தில் தரையோடு தரையாக இருந்த ஓரிடத்தில் இரும்பு பலகை ஒன்று சத்தமே இல்லாமல் நகர்ந்தது. சில வினாடிகள் தாமதத்திற்கு பின் அங்கிருந்து ஒரு உருவம் வெளியே வந்து, சற்று தொலைவில் கூட்டமாக நின்று சிலர் உரையாடி கொண்டிருந்த மனிதர்களுடன் அவ்வுருவமும் சென்று சேர்ந்து கொண்டது. அது வேறு யாரும் அல்ல கோடங்கி குவிரன் தான் சிவ கொழுந்து விட மிருந்து தப்பித்து காட்டில் இருந்த சுரங்க பாதை வழியாக ஐய்யனார் சிலை அருகில் வந்திருந்தான். இது போல் சிறிதும் பெரியதுமான சுரங்கப்பாதைகள் ஏராளம் இருந்தது. அதுற்றிய விவரங்கள் ஒரு சிலருக்கே தெரியும். அதில் ஒருவன் குவிரனும் ஒருவன். குவிரனை பார்த்ததும் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
“நமது அரசர் பவானியின் உத்தரவுபடி நாளை சசிவர்ண தேவருக்கு நாள் குறித்தாகி விட்டது. நம்மில் ஒருவர் அவரது காலத்தை முடிக்க வேண்டும். அத்துடன் நில்லாமல், அரசர் செல்லமுத்துவின் உயிரையும் அதே நேரத்தில் பறிக்கபட வேண்டும். இவ்விரண்டு தாக்குதலும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும்.” என்றான் கோடங்கியாக வேடம் தரித்திருந்த குவிரன்.
“நீர் சொல்வது சரிதான். ஆனால் இதை எப்படி செய்வது?. மேலும் நமது அரசர் பவானி சிறையிலிருந்து வெளிவந்து விட்டாரா?… அப்படி என்றால் இன்று வரை ஏன் நம்மை வந்து சந்திக்கவில்லை? வெறும் வாய் வார்த்தைகளை கொண்டே நாம் காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம்” என்றான் குடியானவனான உதிரன்.
“ஏதேது என் பேச்சில் சந்தேகம் ஏற்படுகிறதா?… நானும் உன்னை கவனித்து கொண்டு தான் வருகிறேன். உன் நடத்தையில் , செய்கையில் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆகவே உன்னை விட்டு வைத்தால் எங்களுக்கு ஆபத்து ” என்று இடுப்பில் சொறுகி இருந்த கூரிய கத்தியை உருவினான் குவிரன்
வேலுநாச்சியார் தன் தந்தை செல்லமுத்துவிடம் உரையாடிய பின் குயிலியை தேடிக் கொண்டு ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு வந்தாள். அங்கு பயிற்சி பெறும் அனைவரும் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். ஆண்களுக்கு காலையிலும் பெண்களுக்கு மாலையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
———-
நேயர்களே இங்கு நாம் குயிலியை பற்றிய விவரத்தை சுறுக்கமாக பார்க்கலாம்.
————
பெரியமுத்தன், ராக்கு தம்பதியின் ஒரே மகள் குயிலி. பெரியமுத்தன் அரண்மனையில் தோல் தைக்கும் வேலையை பார்த்து வந்தார். தன் ஒரே மகள் குயிலி மீது அலாதி பிரியம் கொண்டவர். ஆகவே அரண்மனை வேலைக்கு வரும் போதெல்லாம் தன் மகள் குயிலியையும் உடன் அழைத்து வருவார். குயிலிக்கு சிறு வயது முதல் வேலுநாச்சியார் மீது அதீத ஈடுபாடு அவரின் வீரதிரத்தை தைரியத்தையும் பார்த்து தானும் அது போல் வளர ஆசைபட்டாள். வேலு நாச்சியாரும் குயிலின் மேல் அன்பு கொண்டு தன் சொந்த சகோதரி போல் பாவித்து அவளுக்கு பல வித்தைகளை கற்று தந்து தனது நம்பிக்கைக்குரியவளாக வைத்துக் கொண்டாள்.
(தொடரும்)
1 Comment
இராமநாதபுரம் வரலாற்றுத் தகவல்கள் சிறப்பு! சிறப்பாகச்செல்கிறது! வாழ்த்துகள்!