தியாகராஜ பாகவதர் எனும் தன்மானன்
“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை ” – என்பது எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கை சொன்ன அனுபவ மொழி.
ஆம். பட்டுக் கட்டிலில் படுத்துறங்கி, தங்கத் தட்டில் உணவருந்திய பாகவத ரையே வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போட்டது என்றால்… நாம் எல்லாம் அதற்கு முன் எம்மாத்திரம்?
எப்போதும் விழிப்புணர்வோடு இருங்கள். வாழ்க்கை ஒரு வழுக்குப் பாறை.
ஓகோவென்று திரைத்துறையில் கோலோச்சிய தியாகராஜ பாகவதர் படங்கள் வருடக் கணக்கில் ஓடியது. ஆண் ரசிகர்களைப் போலவே பெண் ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர்.
அப்படிப்பட்டவர் வாழ்வில் மிகப் பெரிய அடி விழுந்தது. அதுதான் லஷ்மி காந்தன் கொலைப்பழி. அந்தக் கொலைப்பழியில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவும் மாட்டப்பட்டிருந்தனர்.
லட்சுமிகாந்தனுக்கு இவர்களைத் தவிர, எண்ணற்ற எதிரிகளிருந்தனர். அவர் களில் யாரோ சிலருடைய தூண்டுதலின்பேரில், லட்சுமிகாந்தன் கொல்லப்பட் டான். பழி இவர்கள் மீது விழுந்து, இவர்கள் சிறைதண்டனை அனுபவித்ததுதான் பரிதாபத்திற்குரியது.
பாகவதர், என்.எஸ்.கே. இருவருமே நிரபராதிகள் என்பதே உண்மை. அப்ரூவரு டைய சாட்சியுரையில், எண்ணற்ற முரண்பாடுகளிருந்ததை, இருவர் தரப்பு சார்பி லும் ஆஜரான வழக்கறிஞர் எத்திராஜுலு அவர்கள், சிறப்பாக விளக்கி, வாதாடி னார்.
இச்சம்பவம் நடந்தபோது இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி நடந்துக்கொண் டிருந்தது. அவர்கள் கண்ணுக்கு கொலையாளி எப்படிப்பட்டவன், குற்றம் சாட்டப் பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியாது. இந்தியாவில் எல்லாரும் அடிமைகள். அவர்கள் சட்டம்தான் அவர்களுக்குப் பெரிது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக பாகவதரின் கணக்குப் புத்தகத்தில் லட்சுமி காந்தன் கொலையுண்ட நாளில் சிறு தொகை கணக்கில் வராமல் இருந்தது என்ப தைக் காரணம் காட்டி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1944ஆம் ஆண்டு நடந்த இந்தக் கொலை வழக்கு 1947 வரை நடந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இவர்கள் மேல் எந்தவித வலுவான ஆதாரமும் இல்லாமல் சிறைக் கொடு மையை அனுபவித்து வந்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் மஞ்சள் பத்திரிகைகள் மலிந்திருந்தன. அதில் ஒன்று ‘இந்து நேசன்’ எனும் பத்திரிகை. இதனை நடத்தி வந்தவன்தான் லட்சுமி காந்தன்.
1940லிருந்து பத்திரிகைத் தொழில் செய்துவரும் லட்சுமிகாந்தன் சென்னையில் ‘சினிமாதூது’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தான்.
அடுத்தது லட்சுமிகாந்தன், ‘இந்துநேசன்’ எனும் ஏற்கனவே நடத்தி நிறுத்தப்பட்டி ருந்த பத்திரிகையை வாங்கி அதில் மீண்டும் சினிமாப் புள்ளிகளின் நடத்தையை கிசுகிசு என்ற பெயரில் கொச்சையாக, கேவலமான வார்த்தைகளைப் போட்டு எழுதினான்.
சினிமாக் கலைஞர்கள் மட்டுமல்லாது சமுதாயத்தின் எல்லாத் துறையிலிருந்த பெரும்புள்ளிகளின் அந்தரங்கங்களும் அவன் பத்திரிகைச் செய்திக்கு இலக்கா னார்கள். இது போன்ற பிளாக் மெயில் பத்திரிகைகளுக்கு எதிராக எம்.கே.தியாக ராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடுவும் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு ஜேம்ஸ் ஹோப் என்பவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் இதுபோன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட லைசன்சை திரும்பப் பெற வலியுறுத்தியிருந் தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று கவர்னர் பத்திரிகையின் லைசன்சை கேன்சல் செய்துவிட்டார்.
வேறு பல முயற்சிகள் செய்து பத்திரிகையை வெளிக்கொணர லட்சுமிகாந்தன் முயன்றும் ஒன்றும் முடியவில்லை. ‘சினிமா தூது பத்திரிகையைத் தானே மூடும்படி ஆனது. புதிதாக ‘இந்துநேசன்’ என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தத் தொடங்கினான்.
முந்தைய பாணியிலேயே இதிலும் கட்டுரைகள், தனிநபர் விமர்சனங்கள், இழிவு படுத்தும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் இவன் எம்.கே.டி., என்.எஸ்.கே. மற்றும் பல திரைப்பட நடிகர் – நடிகைகள் குறித்தெல்லாம் கேவலமான செய்தி களை வெளியிட்டு வந்தான். இதில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. சொந்தத்தில் ஒரு அச்சகம் கூட வாங்கிவிட்டான்.
அப்போது இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஜப்பானிய படை மெல்ல மெல்ல கிழக்காசிய பகுதிகளைப் பிடித்து முன்னேறி வந்தது. பர்மாவை நெருங்கி அந்தமான் தீவையும் அது பிடித்துக் கொண்டது. அப்போது கைதாகி சிறையி லிருந்த லட்சுமிகாந்தன் விடுதலையாகி தமிழ்நாடுக்குத் திரும்பி பிழைப்புக்கு வழி தேடலானான்.
1944 நவம்பர் 7ல் லட்சுமிகாந்தன் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென் றான். அவர் இருப்பது வேப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக்ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசைவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
குத்துப்பட்டு காயத்துடன் விழுந்து கிடந்த லட்சுமிகாந்தன் மெல்ல எழுந்து தட்டுத்தடுமாறி வேப்பேரிக்குச் சென்று மறுபடியும் தன் வக்கீலைப் பார்த்து நடந்ததை விவரித்தான். அவர் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பகுதிகளில் அப்போது ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசித்து வந்தனர்.
அப்படியொரு ஆங்கிலோ இந்திய இளைஞன் இவனை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றான். வழியில் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்லிவிட்டு லட்சுமி காந்தன் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க விரும்பினான். ரத்தம் அதிகம் வெளியேறவும் ஓய்ந்துபோன லட்சுமிகாந்தன் ரிக்ஷாவில் உட்கார்ந்தபடி நடந்தவற்றைச் சொல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நம்பியார் என்பவர் ஒரு காகிதத் தில் அவற்றைக் குறித்துக் கொண்டார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் அவன் சேர்ந்தான். அங்கு அவனுடைய ரத்தப்போக்கு நிற்க வில்லை. டாக்டர்கள் பரிசோதனை செய்து வந்தபோதும் மறுநாள் விடியற் காலை 4.15க்கு அவன் உயிர் பிரிந்தது.
அவன் மரணம் தொடர்பாக 1944, டிசம்பரில் பிரிட்டிஷ் போலீஸ் எட்டுப் பேரை கைது செய்து கொலை வழக்குத் தொடர்ந்தது. இந்த எட்டு பேரில் அந்த நாட் களின் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும், திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலும் அடங்குவர். இவர்கள் எட்டு பேரும் ‘கொலைச் சதி’ செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
கொலையுண்ட லட்சுமிகாந்தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டும் தனிப் பட்ட காழ்ப்புணர்வின் காரணமாக இவர்களின் மீது காவல்துறையில் நேரில் சாட்சி சொன்னது, இவர்கள் ஏற்கெனவே லட்சுமிகாந்தன் பத்திரிகையைத் தடை செய்யச் சொன்னது, கணக்கு வழக்கை சரியாக வைத்துக்கொள்ளாதது எல்லாம் தான் இவர்கள்மேல் வெள்ளை அரசுக்கு ஐயம் ஏற்படக் காரணமானது.
‘என்.எஸ்.கிருஷ்ணன் – தியாகராஜ பாகவதர் விடுதலை முயற்சிக்கூட்டம்‘ திருச்சி நகர் டவுன் ஹாலில் 1945 நவம்பர் 11ஆம் தேதியன்று மாலை நடை பெற்றது.
“என்.எஸ்.கே., எம்.கே.டி.க்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தான ஆயுள்காலச் சிறைத் தண்டனையைக் கண்டு நாட்டு மக்கள் பெரிதும் வருந்துவதோடு அவர்கள் மீது கருணை காட்டி இனியும் சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கில்லாமல் விடுதலை செய்ய வேண்டுமாய் திருச்சி மக்கள் சார்பில் கூட்டப்பட்ட இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணன்-பாகவதர் விடுதலை முயற்சி கமிட்டி ஒன்றும் அன்று ஏற்படுத்தப் பட்டது. அதன் உறுப்பினர்களாகப் பெரியார் ஈ.வெ.ரா., பி.டி.வேதாசலம், திருச்சி தஞ்சை நகர்மன்றத் தலைவர் ராவ்பகதூர் ஏ.ஒய்.அருளானந்தசாமி நாடார், செங்கல்பட்டு ஜில்லா போர்டு தலைவர் டி. சண்முகம், சேலம் நகர்மன்றத் தலைவர் பி. ரத்தினசாமிப் பிள்ளை, திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் வி.எஸ். வீரபத்திரன், திருப்பூர் நகர்மன்றத் தலைவர் கே.என்.பழனிச்சாமிக் கவுண்டர், ஈரோடு நகர்மன்றத் தலைவர் ஆர்.கே. வேங்கிடசாமி, தாராபுரம் நகர்மன்றத் தலைவர் கே.முத்துக்கிருஷ்ண நாயுடு, கரூர் நகர்மன்றத் தலைவர் எஸ்.சின்னச் சாமி முதலியார், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம், என். சங்கரன் ஆகியோர் இருந் தனர்.
‘குடியரசு’ ஏட்டில் இந்தச் செய்தி வெளிவந்தவுடன் நாடெங்கும் உள்ள மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், பேரூராட்சி மன்றம், பஞ்சாயத்து போர்டு போன்ற பல அமைப்புகளில் இதைப்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘கிருஷ்ணன் -பாகவதருக்குக் கருணைகாட்டுக’ என்னும் தீர்மானங்கள் சென்னை ராஜதானி கவர்னருக்கு அனுப்பப்பட்டன. திருவனந்தபுரம் முதல் சென்னை வரை பல்வேறு நகர்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுவின் மேல் ஆதாரம் வன்மையில்லாத தாலும் கொலைச் சம்பவம் நடந்தபோது அவர் உள்ளூரில் இல்லை என்ற காரணம் காட்டி அவர் விடுவிக்கப்பட்டார்.
1946ல் தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனி லுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ 100 வாரங்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி, ஒரு புது சாதனை யைச் செய்தது.
ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீ லனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை மறுபரிசீலனை செய்தது.
“இந்த வழக்கில் அப்ரூவரான ஜெயானந்தனின் வாக்குமூலம் ஊர்ஜிதம் ஆக வில்லை. ஊர்ஜிதம் செய்யப்படாத அந்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் தண்டிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இருவரையும் விடுதலை செய்கிறோம்” என்று கூறி பாகவத ரையும், என்.எஸ். கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947ல் விடுதலை செய்தது.
உயர் நீதிமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து பலத்த கைத்தட்டல் எழுந்து நீதிமன்றத்தையே அசைத்தது.
சிறையிலிருந்து பிற்பகல் 1.15 மணியளவில் கலைவாணரும் பாகவதரும் விடு தலை செய்யப்பட்டனர். திரளாகக் கூடியிருந்த மக்கள் வாழ்த்தொலி எழுப்பி னார்கள்.
தியாகராய நகர் வீட்டில் என்.எஸ்.கிருஷ்ணனை வரவேற்க பலர் வந்தனர். திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை காரில் அறிஞர் அண்ணா வந்திருந்தார். பின்னர் எழுத்தாளர் வ.ரா. வந்தார். கலைத்துறையினர் வந்துகொண்டே இருந் தார்கள். அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கலைவாணர் தனது சிறை அனுபவங்களையும் கலையுக அனுபவங்களையும் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார். முப்பது மாதச் சிறை வாசத்திற்குப் பின் தன் ரசிகக் கூட்டங் கள் நடுவே விடுவிக்கப்பட்ட பாகவதர் வெற்றி வீரராகக் காட்சியளித்தார்.
1950களில் என்.எஸ்.கே., பாகவதரை வைத்துப் படம் எடுத்தனர். அதற்குள் சினிமா துறையின் போக்கு சற்று மாற்றம் கண்டிருந்தது. ஆனால் அவர்கள் படம் முன்பிருந்த சிகரங்களை எட்டவில்லை.
இதுதான் எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம்
கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலையாகி வெளிவந்த தியாகராஜ பாகவதரின் சினிமா உலக வாழ்க்கை சின்னாபின்னமாகி போயிருந்த நேரம் அது.
அந்த சிக்கலான நேரத்தில்…
சிவாஜியின் ஊதியத்தைவிட 10,000 ரூபாய் அதிகம் தருவதாக சொல்லி, சிவாஜி நடித்த “அம்பிகாபதி” படத்தில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள்.
ஆனால் கதாநாயகனாக நடித்து வந்த நான், அப்பாவாக நடிப்பதா? முடியாது எனக் கூறி, அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் பாகவதர்.
கொஞ்சம் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும், நிதானமாகச் சிந்தித்து ஒத்துக் கொண்டிருந்தால், இன்னும் கூட ஒரு ரவுண்ட் பாகவதர் சினிமாவில் வந்திருக்கலாமே… ஆனால் அதை மறுத்து விட்டார் பாகவதர் !
இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் மிகப் பெரிய தொகையைத் திரட்டித் தந்த பாகவதருக்கு நன்றி கூறி, நூறு ஏக்கர் நிலத்தையும், திவான் பகதூர் பட்டத் தையும் அன்றைய அரசு கொடுத்ததே… அதை எச்சரிக்கை உணர்வுடன் ஏற்றுக் கொண்டிருந்தால், நிழல் உலகமான திரை உலகம் தன்னை கை விட்ட கடைசி காலத்தில், அந்த நிலபுலன்களாவது அவரைக் காப்பாற்றி இருக்கும்… அதையும் பாகவதர் மறுத்து விட்டார்!
எல்லாம் காலம் செய்த கோலம்.