களை எடுக்கும் கலை – 3 | கோகுல பிரகாஷ்

 களை எடுக்கும் கலை – 3 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 3

“யாருய்யா இது…?” ராம்குமாரின் குரலில் எரிச்சல் தென்பட்டது.

“சார், சதாசிவம் சொன்ன ஆளு இவன் தான்.”

“எங்க இருந்துய்யா பிடிச்சுட்டு வரீங்க… எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போகப் பார்த்தானா…?”

“இல்லை சார்! துர்கா காலனியில தான் இருந்தான். நாங்களும் துர்கா காலனியில தேடிப் பாத்துட்டு, பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் பாக்கலாம்னு நெனைச்சுட்டு கெளம்பினோம். ஆனா, அங்கேயே தான், ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ஒளிஞ்சிட்டு இருந்தான்.” கான்ஸ்டபிளின் பதிலைத் தொடர்ந்து, காத்தவராயனைப் பார்த்தார் ராம்குமார்.

இதுவரைக்கும் துவைத்ததே இல்லை என்று தோன்ற வைத்தது அவன் அணிந்திருந்த அழுக்கு சட்டையும், அங்கங்கே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த பேண்ட்டும். எண்ணைக் காணாத தலைமுடி, திரிதிரியாய் தொங்கிக் கொண்டிருந்தது. ஒல்லியான தேகம். அவன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாமல், தொளதொளவென இருந்தது அவன் அணிந்திருந்த ஆடை.

“தப்புப் பண்ணிட்டு போய் ஒளிஞ்சுகிட்டா, கண்டுபிடிக்க முடியாதுனு நெனைப்பா… சொல்லு, பரந்தாமனை எதுக்கு கொலை பண்ண…?”

ராம்குமாரின் கேள்வியைக் கேட்டு, காத்தவராயனின் கண்கள் கலங்கத் தொடங்கின. “அவர் ரொம்ப தங்கமான மனுஷன் சார். அவரை நான் கொலை பண்ணல…”

“அப்புறம் ஏன் மண்டபத்துல போய் ஒளிஞ்சுட்டு இருந்த…?”

“நான் வழக்கமா அங்கதான் தங்குவேன். ஏரியாவுல கேட்டிங்கனா, அவங்களே சொல்லுவாங்க…”

“அடிக்கடி பரந்தாமன் வீட்டுக்கு போவேன்னு சொல்லுறாங்களே, என்ன விஷயம்…?”

“அவர் ஏதாவது வேலை சொன்னா செய்வேன். வேற ஒன்னும் இல்லை சார்!”

“ஓசி சரக்கு வாங்கப் போவேன்னு சொல்லு…”

தலையை சொறிந்தபடி நின்றுக் கொண்டிருந்தான். “சரி, அப்படி போய், ஒரு ஓரமா உக்காரு…” என்று சொல்லிவிட்டு, கான்ஸ்டபிள் பக்கம் திரும்பினார்.

“கான்ஸ்டபுள்… அவன் சட்டையை கழட்டிட்டு, அப்படி ஓரமா உட்கார வை…’

“வேணாம் சார், வேணாம்!” கான்ஸ்டபிள் அருகில் வரவும், அலறத் தொடங்கினான் காத்தவராயன். கான்ஸ்டபிள் அவனை வலுக்கட்டாயமாக பிடித்து, அவன் சட்டையை கழற்றினார்.

“சார்…”

“கான்ஸ்டபிளின் குரலைத் தொடர்ந்து, வயிற்றில் கையை வைத்து மறைத்துக் கொண்டிருக்கும் காத்தவராயனைப் பார்த்தார், ராம்குமார்.

“டேய்! கைய எடு! அவன் வயத்துல என்ன இருக்குன்னு பாருங்க…”

கான்ஸ்டபிள் வலுக்கட்டாயமாக அவன் கையை விலக்க, விலா எலும்புக்கு கீழே, வயிற்றில் நல்ல ஆழமான காயம். ஏதோ கூரிய ஆயுதத்தால் வயிற்றில் கிழித்தது போல இருந்தது.

“பரந்தாமன் தடுக்கும்போது, தவறி கத்தி உன்மேல பட்டுடிச்சா… சொல்லு…”

“இல்லை சார்… ராத்திரி போதையில நடந்து வரும்போது, தள்ளுவண்டியில நீட்டிட்டு இருந்த கம்பி கிழிச்சிடுச்சு…” என்றவனை ஒரு நம்பாத பார்வைப் பார்த்தார், ராம்குமார்.

“சத்தியமா இதுதான் சார் உண்மை!”

“பரந்தாமன் கூடத்தான் குடிச்சியா…?”

“இல்லை சார், நேத்து அவர் வீட்டுக்கு நான் போகவே இல்லை…”

சரி, அப்படி உக்காரு. உன்னை அப்புறம் விசாரிக்குறேன்…” என்றவாறு கதிரவன் பக்கம் திரும்பினார்.

‘இவனை குற்றவாளியா நாம ஆக்க தேவையில்லை… உண்மையான குற்றவாளியே இவன்தான்’ என்று சொல்லுவது போல் இருந்தது கதிரவனின் பார்வை.

“கதிர்…”

“சார்…”

“எதையும் தீர விசாரிச்சு, உண்மைய கண்டுபிடிக்குறது தான் நம்ம வேலை. சந்தர்ப்பம், சூழ்நிலையை வச்சு, சந்தேகப்படலாம். ஆனா, எந்த முடிவுக்கும் வந்துடக் கூடாது. இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டரும், நீங்களும் கேஸை எப்படி க்ளோஸ் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும், உண்மையான குற்றவாளியை பிடிக்காம, கேஸை முடிக்குறதுன்ற பேச்சுக்கே இடமில்லை.”

“சாரி சார்… சும்மா ஒரு பேச்சுக்குத் தான் சொன்னேன். உண்மையிலயே எனக்கும் அதே எண்ணம் தான். நாம விசாரணையை தொடர்ந்து பண்ணலாம் சார்…”

“கான்ஸ்டபுள், அவனுக்கு முதலுதவி பண்ணுங்க. அவனை அப்புறம் விசாரிக்குறேன்…” என்று சொல்லிவிட்டு, “கதிர், சிசிடிவி ஃபூட்டேஜ்லாம் வந்துடுச்சா…?” எனக் கேட்டார்.

“வீடியோவை காப்பி பண்ணி வைக்க சொல்லியிருக்கேன் சார். இதோ இப்போ கேட்குறேன்…” என்றவாறு மொபைலை எடுத்தார் கதிரவன்.

“என்ன கதிர், இந்தமாதிரி ஆதாரங்களை சேகரிக்கும் போது, கூடவே இருக்கணும்னு தெரியாதா…?”

ராம்குமாரின் குரலில் இருந்த உஷ்ணத்தை கண்டு, ‘குற்றவுணர்ச்சி’யுடன் அவரைப் பார்த்தார் கதிரவன்.

“ஹலோ, நான் எஸ்ஐ கதிரவன் பேசுறேன். சிசிடிவி ஃபூட்டேஜை காப்பி பண்ணி வைக்க சொன்னனே, ரெடியா…?”

“….”

“என்ன நிஜமாவா சொல்லுறீங்க…?”

“….”

“சரி! நான் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுறேன்…”

கதிரவன் ஃபோனை வைத்ததும், “என்ன கதிர்…?”

“சார்… அது வந்து…”

“சொல்லுங்க…”

“ரெண்டு நாளா, சிசிடிவி எதுவும் வேலை செய்யலைன்னு சொல்றாங்க…”

“இதுக்குத் தான் இந்த வேலையெல்லாம் உங்களையே பக்கத்துல இருந்து பண்ண சொன்னேன். இப்போ என்னப் பண்ணப் போறீங்க…?”

“நான் நேர்ல போய் பாத்துட்டு வரேன் சார்!”

“அதைப் பண்ணுங்க மொதல்ல… ஆமா, அந்த அப்பார்ட்மெண்ட் செகரெட்ரி யாரு…?”

“நம்ம சதாசிவம் சார் தான்…”

இன்ஸ்பெக்டரின் பார்வையில் இருந்து, அவர் என்ன நினைக்கிறார் என யூகிக்க முடிந்தது கதிரவனால்.

“சார், விசாரணை பண்ணிட்டு தேவைப்பட்டால், சதாசிவத்தை திரும்பவும் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்துடுறேன்.”

தலையசைப்பால் அதற்கு அனுமதியளித்த ராம்குமார், “என்ன கதிர், சதாசிவம் மேல சந்தேகம் அதிகமாகுதா…?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்!”

“ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி சிசிடிவி கனெக்ஷனா, இல்லை, அப்பார்ட்மெண்ட் முழுசா ஒரே கன்ட்ரோல்ல இருக்கான்னு பாருங்க. தனித்தனியா கனெக்ஷன் இருந்தா, மத்த வீடுகள்ள இருக்கிற ஃபூட்டேஜ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டு வாங்க…”

“ஓகே சார்!”

“சிசிடிவி ஏன் வேலை செய்யலைன்னு பாருங்க… ஏதாவது கேபிள் கட்டாகியிருக்கா… இல்லை பவர் சப்ளை இல்லாயா, என்ன காரணம்னு பாருங்க… ஃபூட்டேஜ் டெலிட் ஆகிருந்தா, சம்பந்தப்பட்டவங்க எல்லாரையும், கைது பண்ணி கூட்டிட்டு வந்துடுங்க…”

“எஸ் சார்!” என்று விரைப்பான சல்யூட் ஒன்றை விநியோகித்து விட்டு வெளியேறினார் கதிரவன்.

கதிரவன் சென்றதும், இன்ஸ்பெக்டரின் பார்வை, சுவர் ஓரமாக ஒடுங்கி அமர்ந்தபடியே, இவர்களின் சம்பாஷனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த காத்தவராயனின் மேல் சென்றது. முதலுதவி செய்து கட்டுப் போட்டிருந்த வயிற்றில் இருந்த காயத்தின் மேல் கையை வைத்தபடியே, வலியால் முனகிக்கொண்டே இருந்தான்.

“இங்கே வா…”

இன்ஸ்பெக்டரின் அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்தவன் போல், உடனே எழுந்து அருகில் வந்தான்.

“பேர் என்ன சொன்ன…?”

“காத்தவராயன்”

“சாப்பிட்டியா…?”

“இன்னும் இல்லீங்க…”

ராம்குமார் அருகில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து கண்ணசைக்க, குறிப்பை உணர்ந்து, அவரும் கிளம்பினார். “டிபன் வாங்கிட்டு வரும்போது, அப்படியே ஸ்ட்ராங்கா ரெண்டு டீயும் வாங்கிட்டு வந்துடு…”

கான்ஸ்டபிளின் தலை மறைந்ததும், காத்தவராயனிடம், “எத்தனை வருஷமா துர்கா காலனியில இருக்க…?” என்று கேட்க,

“வெவரம் தெரிஞ்சதுல இருந்து, இங்கேயே தான் இருக்கேன்…” என்றான்.

“குடும்பம்…?”

“அப்படி யாரும் இல்லைங்க… சின்ன வயசுல இருந்தே யாராவது வேலை குடுத்தா செய்வேன். சாப்பாடு, பணம் ஏதாவது குடுப்பாங்க… அப்படியே ஓடிப் போயிடுச்சி என் வாழ்க்கை.”

“பரந்தாமன் கூடப் பழக்கம் எப்படி…?”

“ஏதாவது வீட்டுக்கு வாங்கனும்னா, வாங்கிட்டு வரச் சொல்லுவாரு, வாங்கித் தருவேன். அப்படித் தான் பழக்கமாச்சு…”

“நேத்து ஏதாவது வாங்கித் தந்தியா…?”

“இல்லைங்க… நேத்து அவர் வீட்டுப் பக்கமே போகல…”

“பொய் சொன்னா மாட்டிக்குவ… இன்னும் கொஞ்ச நேரத்துல கேமரால பதிவானது எல்லாம் வந்துடும். வீணாப் பொய் சொல்லாத…”

“இல்லைங்க ஐயா… நீங்க தாராளமா கேமராவுல பாருங்க… நான் அங்க போகவே இல்லைங்க…”

“சரி, சதாசிவம் எப்படி…?”

“அதிகம் பழக்கம் இல்லைங்க ஐயா. என்கிட்ட அவர் எதுவும் வேலை சொல்லுறது இல்லை. என்னைப் பாத்தாலே, மூஞ்சை சுளிச்சுகிட்டு போய்விடுவார்…”

“அவர் இந்தக் கொலையை பண்ணியிருப்பாருன்னு நெனைக்குறியா…?”

“என்னைப் பாத்தா, மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சிப்பாரு… மத்தபடி எல்லாருகிட்டயும், நல்ல விதமாத் தான் பழகுவார். வேற ஒன்னும் எனக்குத் தெரியாது சார்…”

“டேய், ஒன்னு சார்னு கூப்பிடு, இல்லைன்னா ஐயான்னு கூப்பிடு. உன் இஷ்டத்துக்கு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்க…”

“பயத்துல என்ன பேசுறேன்னு எனக்கே தெரியலைங்க…”

“தப்பு செஞ்சவங்க தான் போலிஸை பாத்து பயப்படுவாங்க… நீ என்ன தப்பு செஞ்ச…?”

ஒருமாதிரி கிண்டலாக சிரித்தான் காத்தவராயன்.

“என்ன பயம் விட்டுப் போச்சா… போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கோம்ன்றத மறந்துடாத…”

“என்ன சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், பயப்படத் தேவையில்லைன்னு சொன்னீங்க… இப்போ பயம் விட்டுப் போச்சான்னு கேக்குறீங்க…”

உண்மையில் இந்தக் கேள்விக்கு, ராம்குமாரிடமே பதில் இல்லை.

“சின்ன வயசுல இருந்தே, என்னை எங்கப் பார்த்தாலும் லத்தியால அடிச்சு விரட்டுறாங்க உங்க ஆளுங்க… அப்புறம், ஏன் பயப்படுறன்னு கேட்டா, எப்படி சார்…?”

“சரி, சரி! அதை விடு. பரிமளத்தை தெரியும்ல…”

“ஆமா, பரந்தாமன் வீட்டுல வேலை செய்யுறாங்க…”

“ஆள் எப்படி…?”

“அதெல்லாம் ஒன்னும் தெரியாது சார்… பக்கத்துல ஏதோ கிராமத்துல இருந்து தெனமும் வந்துட்டு போறாங்க… புருஷன் இல்லை. ரெண்டு பொண்ணுங்க மட்டும் இருக்கு, அவ்ளோதான் சார் தெரியும்.”

“ஹ்ம்ம். ஒன்னும் தெரியலைன்னு சொல்லிட்டு, இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கியா நீ…?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் காத்தவராயன்.

“சரி, சதாசிவத்துக்கும், உனக்கும் ஏதாவது முன்பகை இருக்கா…?”

“அதிகம் பேசுனது கூட இல்லை சார். எங்களுக்குள்ள என்ன முன்பகை…?”

“அப்படியா, சதாசிவம் உன்மேலத் தான் சந்தேகமா இருக்குன்னு சொன்னார்…” இதைச் சொல்லிவிட்டு, அவன் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என நோட்டம் விட்டார். பெரிதாக எந்த மாறுதலும் இல்லை.

“பிச்சை எடுக்குறவன் அப்பார்ட்மெண்ட்க்குள்ள வந்துட்டு போறானேன்ற எரிச்சலா இருக்கும். வேற ஒன்னும் இல்லை சார்…”

“சரி! நீ சாப்பிடு…” என்று அவனை அனுப்பிவிட்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, கண்களை மூடியபடி இதுவரை நடந்த சம்பவங்களை மனதிற்குள் ஓட விட்டார்.

கொலை செய்யப்பட்ட பரந்தாமனுக்கு முன்பகை, விரோதம் என்று எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. எல்லோரிடமும் நல்ல பெயர் இருக்கிறது. நிறைய பேருக்கு உதவிகளும் செய்திருக்கிறார். சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. கொலை செய்வதற்கு ஒரே காரணம், அவரிடம் இருந்து, பணம், நகை சொத்துகளை கைப்பற்றுவதற்காக இருக்கலாம். ஆனால், கொலை நடந்த இடத்தில் பணமோ, நகையோ கொள்ளையடிக்கப் படவில்லை. குடிபோதையில் ஏதாவது சண்டை வந்து, அதனால் கொலை நடந்திருந்தால், கொலையாளி நிச்சயம் ஏதாவது தடயத்தை விட்டுச் சென்றிருப்பான். ஆனால் அப்படி எதுவும் இல்லை. எனவே இது நிச்சயம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை தான். ஆனால் செய்தது யார்…? ஏன்…? யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் இருந்தது. தலைவலியை மேலும் அதிகரிப்பது போல், அதிக சத்தத்துடன் தொலைபேசி அலறத் தொடங்கியது.

“ஹலோ, இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஹியர்.”

“……”

“எஸ் சார்…”

“……”

“நோ சார்…”

“……”

“ஓகே சார்…”

எல்லா கேள்விகளுக்கும் ‘எஸ் ஆர் நோ’ டைப்பில் பதில் சொல்லியபின், தொலைபேசியை வைத்துவிட்டு, தலையை பிடித்துக் கொண்டார், ராம்குமார். எஸ்பி ஆபிஸில் இருந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சந்தேகத்தின் அடிப்படையில் கூட யாரையும் கைது செய்யவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும். என்ன பண்ணலாம்? யாரை கைது செய்வது…? குழப்பத்தோடு திரும்பி பார்த்தார், காத்தவராயன் நின்று கொண்டிருந்தான். ‘சேச்சே…’ எனத் தலையை சிலுப்பிக் கொண்டார்.

வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டது. கதிரவன் தான் வந்துக் கொண்டிருந்தார். முகத்தில் பதட்டம் பரவியிருந்தது.

“என்ன கதிர், என்ன விஷயம்…? உங்க முகத்துலயே கலவரம் தாண்டவமாடுதே…?”

சற்றும் தாமதிக்காமல் விஷயத்துக்கு வந்தார் கதிரவன். “ரொம்பவே சீரியஸான விஷயம் தான் சார். சிசிடிவி வேலை செய்யாததற்கான காரணம்…”

“சொல்லுங்க! என்ன காரணம்…?”

“அந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்குற சிசிடிவியை யாரோ ஹேக் பண்ணியிருக்காங்க சார்…”

“என்ன… ஹேக் பண்ணியிருக்காங்களா…” ராம்குமாரின் மூளையில், இந்த கொலைவழக்கின் முடிச்சை அவிழ்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதும், வழக்கு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்திருப்பதும் உறைக்கத் தொடங்கியது.

களை கலைவது தொடரும்

< 2 வது பாகம்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...