அமெரிக்காவே நேட்டோவை கலை, ரஷியாவே உக்ரைனை விடுவி! -தோழர் பெ. மணியரசன்

அமெரிக்காவே நேட்டோவைக் கலை! இரசியாவே உக்ரைனைவிட்டு வெளி யேறு! ஆதிக்க இனங்களே அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு!

உக்ரைன் நாட்டின் மீது இரசியா படையெடுத்து, அந்நாட்டு மக்களை – கட்டு மானங்களைத் தாக்கி உயிரிழப்புகளையும், பொருள் நாசங்கள் செய்வதைப் பார்க்கப் பார்க்க நெஞ்சில் மேலும் மேலும் பதற்றமும் வேதனைகளும் ஏற்படு கின்றன. அதே வேளை நெஞ்சுரத்தோடு உக்ரைன் அரசும், அந்நாட்டுப் படையும் இரசியப் படையினரை எதிர்கொள்வது வியக்க வைக்கிறது.

இரசியா, உக்ரைன் மீது ஏன் படையெடுக்கிறது? வடஅமெரிக்க நாட்டின் (யு.எஸ்.ஏ.) தலைமையிலான “வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு (நேட்டோ – NATO)” எனப்படும் பல நாடுகளின் படைக் கூட்டணியில் உக்ரைன் சேரப் போகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒன்றியத்திலும் சேர்கிறது. இதனால் உக்ரைனின் அண்டை நாடான இரசியாவின் பாதுகாப்பிற்கும், தற்சார்புக்கும் ஆபத்து என்று அந்நாடு அஞ்சுகிறது.

சோவியத் ஒன்றியம் என்ற கம்யூனிச நாட்டுக்கு எதிராக உலக ஏகாதிபத்திய நாடு களால் 1949இல் உருவாக்கப்பட்டதே நேட்டோ. அதன் தலைவன் வட அமெரிக்கா! அப்போது அதன் முதல் பகை நாடு இரசியா!

வட அமெரிக்கா நேட்டோவை உருவாக்கி சோவியத் ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்த பின் அதை எதிர்கொள்வதற்கு வார்சா உடன்படிக்கைக் கூட்டமைப்பை சோவியத் ஒன்றியம் உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் 1991இல் 15 நாடு களாகப் பிரிந்த பின் வார்சா கூட்டமைப்பு கலைந்தது.

இரசியாவை வீழ்த்திட, இதுவே வாய்ப்பு என்று கருதிய வட அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த சில நாடுகளைத் தனது நேட்டோவில் சேர்த்துக் கொண்டது.

உக்ரைன் நேட்டோவில் சேர மறுத்தது. விக்டர் யூனோவிச் என்பவர் 2014இல் உக்ரைன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நேட்டோவில் சேர மறுத்தார். இரசியாவுடன் நெருக்கம் காட்டினார்.

வட அமெரிக்கா ஆதரவு அரசியல் தலைவர்கள் நேட்டோவில் சேர வேண்டும் என்று உக்ரைனில் பெரும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் போராட் டத்திற்கு, “தன் மதிப்புப் புரட்சி” (Revolution of Dignity) என்றார்கள். இப்போராட் டத்தினால் விக்டர் யூனோவிச் பதவி விலகினார். இடைக்கால ஆட்சித் தலைவர் வந்தார். இந்த உள்நாட்டு நெருக்கடியைப் பயன்படுத்தி, படைகளை அனுப்பி உக்ரைன் நாட்டில் இருந்த கிரிமியா என்ற தேசிய இனத்தின் விருப்பத்தை நிறைவேற்றித் தனி நாடாக்கத் துணை நின்றது இரசியா!

அதன்பிறகு, 2019இல் நடந்த தேர்தலில் உக்ரைன் குடியரசுத் தலைவராக செலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். இவர் வடஅமெரிக்காவிற்கு நெருக்கமான வர். நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் (ஈரோ) சேர்த்திட வேண்டு கோள் வைத்தார்.

இப்போழுதும் உக்ரைன் நாட்டின் இரசிய எல்லையோரப் பகுதிகளில் இரசிய மொழி பேசும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்காக இரசியா “குரல் கொடுக்கிறது”.

ஸ்டாலின், குருச்சேவ், பிரெஷ்னேவ் ஆட்சிக் காலங்களில் நிகரமை (சோசலிச) சோவியத் ஒன்றியம் இதர சிறுபான்மைத் தேசிய இனங்கின் மீது – அவற்றின் குடியரசுகள் மீது இரசிய தேசிய இன – இரசிய மொழி ஆதிக்கங்களைத் திணித் தது. கோர்பச்சேவ் குடியரசுத் தலைவர் ஆனபின் பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தை நீக்கி சனநாயகக் கருத்துரிமை வழங்கினார். ஒடுக்கப்பட்டு, உள்ளே பொருமிக் கொண்டிருந்த தேசிய இனங்கள் ஒவ்வொரு கட்டத்தில் தனிநாடு கோரின. பதினைந்து நாடுகளாக 1991இல் சோவியத் ஒன்றியம் பிரிந்தது. அவ் வாறு சோவியத் இரசியாவிலிருந்து பிரிந்ததுதான் உக்ரைன்!

ஒரு மொழி பேசக்கூடிய ஒரு தேசம் அயல்மொழி பேசும் தேசங்களை ஆக்கிர மித்து காலனி ஆக்கிக்கொள்ளும் போக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீவிர மடைந்தது. நவீனத் தொழில் உற்பத்தி முதலாளிகளும், வணிகர்களும் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களின் முதுகெலும்பாவர்!

ஆனால், சனநாயகக் காலத்தில் – ஒரு நாட்டுக்குள் சிக்கிக்கொண்ட சிறுபான் மைத் தேசிய இனங்களை ஆதிக்கம் செய்வது அவர்களின் மொழி – இன அடையாளங்களை மறைப்பது அல்லது மறுப்பது முதலாளிய நாடுகளிலும் நடந்தது. சோவியத் ஒன்றியம் என்ற நிகரமை நாட்டிலும் நடந்தது. இப்போது கம்யூனிஸ்ட்டுச் சீனாவிலும் நடக்கிறது. திபெத்தியர்கள், உய்கூர் மக்கள் ஆகிய சிறுபான்மைத் தேசிய இனங்கள் சீனாவின் ஹன் பெருந்தேசிய இன ஆதிக்கத்தின்கீழ் சிக்கித் துன்புறுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் இன்று நடந்து கொண்டுள்ளது.

சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சம உரிமை கொடுத்ததில் சோவியத் தலைவர் லெனின் பாராட்டிற்குரியவர். அவர்க்கு முன்பாக, சுவிட்சர்லாந்தில் முதலாளிய கூட்டாட்சி உருவாக்கப்பட்டு, பெரிய – சிறிய தேசிய இனங்களுக்குச் சமநிலை வழங்கப்பட்டது.

அண்மையில் இரசிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் சிக்கல் குறித்துப் பேசிய இரசியக் குடியரசுத் தலைவர் புத்தின், “லெனின் செய்த தவறுகளால் நாம் இப்போது பாதிக்கப்படுகிறோம். 1917இல் இரசியப் புரட்சி வென்றவுடன், எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன்கூடிய தன்னுரிமை வழங்கினார் லெனின்; கூட்டாட்சியாக சோவியத் ஒன்றியம் அமைத்தார். அப்படிச் செய்யாமல் ஒற்றையாட்சியாக அமைத்திருக்க வேண்டும்” என்றார்.

இதைப் படித்தபோது, இந்தியாவில் பண்டித நேருவும், வல்லபாய் பட்டேலும் ஒற்றை ஆட்சி அமைத்துத் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களைக் கட்டிப் போட்டது நினைவிற்கு வந்தது. அவர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் அந்தக் கட்டை மேலும் மேலும் இறுக்கினார்கள்; இறுக்குகிறார்கள்!

இவற்றிலிருந்து நாம் கவனிக்க வேண்டியது, ஏகாதிபத்தியங்கள் பல வடிவங் களில் இருக்கின்றன. பிரிட்டன், பிரான்சு, வடஅமெரிக்கா போன்றவை அயல் நாடுகளைப் பிடிக்கும் கொடிய வடிங்களிலும், அகப்பட்டுக் கொண்ட தேசிய இனங்களை ஒடுக்கும் இரசிய, இந்திய, பாக்கித்தான் வடிவங்களிலும் ஏகாதிபத் தியங்கள் இருக்கின்றன. “ஏகாதிபத்தியம் என்றால் போர்” என்றார் லெனின்.

உலகத்தில் இன்று நடக்கும் பெரும் போராட்டங்கள் – போர்கள் இன ஒடுக்கு முறைகளுக்கு எதிரானவையே! எனவே, புதிய புதிய தேசங்கள் பிறந்து கொண்டே உள்ளன.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் உரிமைக்குப் போராடும்போது, ஆதிக்க இனங்கள் படைகொண்டு தாக்குகின்றன. அத்தாக்குதலை எதிர்க்கப் போர்கள் வெடிக் கின்றன. அவ்வாறு மாட்டிக் கொண்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்களுக்கு ஆதரவு தர முன்வரும் ஏகாதிபத்தியங்களையும் ஆதரிக்கின்றன. இப்போக்கை குறைகூற முடியாது. எதிரியிடம் அடிபடுபவன் தன்னை எவன் மீட்டால் என்ன என்று நினைப்பான். எலிக்கு நேரடிப் பகை பூனையே தவிர, புலியல்ல!

இப்படிப்பினைகளிலிருந்து வடஅமெரிக்கா – இரசியா – உக்ரைன் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்ல வேண்டும்.

உக்ரைன் மீது இரசியா போர் தொடுத்தால் இரசியாவை எதிர்த்து, நேட்டோ போரி டும் என்பதுபோல் பாச்சா காட்டிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ ஷிபைடன், போரில் இறங்காமல் இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துவிட்டு, உக்ரைனைப் பலியிடுகிறார். ஏன்?

வியட்நாம், ஈராக், ஆப்கானித்தான் நாடுகளில் படையெடுத்து, மாட்டிக் கொண்டு, ஏராளமான அமெரிக்கர்களை பலியிட்டு, தோல்வியுடன் திரும்பிய சூடு கண்ட கரடி – அமெரிக்கா!

இதே அமெரிக்கா, கியூபா, ஈரான் நாடுகளுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடைகளால் அந்நாடுகள் அழிந்து விடவில்லை. அமெரிக்காவிடம் சரணடைய வும் இல்லை!

இந்தியா வட அமெரிக்காவைவிட இரசியாவுக்குக் கூடுதலாகக் கடமைப்பட் டுள்ளது. காசுமீர், காலிஸ்தான் விடுதலைப் போராட்டங்களில் – உரிமைச் சிக்கல் களில் ஐ.நா.வின் பொது அவையிலும், பாதுகாப்பு மன்றத்திலும் இரசியா இந்தியாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளது. வங்காள தேச விடுதலைப் போரில் இந்தியப் படையெடுப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டது. இப்போது, சீனாவுடன் உள்ள முரண்பாட்டில் இரசியாவின் உதவி இந்தியாவுக்குத் தேவை. எனவே, இந்தியா அமெரிக்கா பக்கம் சேராமல் நடுநிலை வகிக்கிறது.

சனநாயகக் கடமையை உணர்ந்தோர், மனிதநேய உரிமையாளர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைக்க வேண்டும்.

1. அமெரிக்காவே, நேட்டோவைக் கலை!

2. இரசியாவே, உக்ரைனைவிட்டு வெளியேறு!

3. ஆதிக்க இனங்களே, அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு!

  • தோழர் பெ. மணியரசன்,

தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!