பயணங்கள் தொடர்வதில்லை | 16 | சாய்ரேணு
15. படுக்கை
கீழ்ப் பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இராணி கந்தசாமியின் முகம் அமைதியாக, தெளிவாக இருந்தது. அவள் நெஞ்சில் தெரிந்த செந்நிற ஓட்டையை விட்டுவிட்டால், அவள் நிம்மதியாகத் தூங்குவது போலவே தோன்றும்.
“டேம் யூ, இடியட்ஸ்” என்றாள் ஸ்ரீஜா, தன்யாவும் தர்ஷினியும் உள்ளே நுழைந்ததும்.
குனிந்து இராணி கந்தசாமியின் உடல்மீது பார்வையைப் போட்டிருந்த தன்யா “வாட் டு யூ மீன்?” என்றாள் அமைதியாக.
“உங்களைத்தான் சொன்னேன். நியாயமா பார்த்தா நான் என்னைச் சொல்லிட்டிருக்கணும்! உங்களை நம்பி இவ்வளவு பெரிய இன்வெஸ்டிகேஷனை ஒப்படைச்சேனே!” என்றாள் ஸ்ரீஜா.
தன்யா நிமிர்ந்தாள். “மிஸ் ஸ்ரீஜா! குறை சொல்லிட்டிருக்கறதில் அர்த்தமில்லை. இந்த மாதிரியான இன்வெஸ்டிகேஷனில் போலீஸை இன்ஹிபிட் பண்ணாதீங்கன்னு எவ்வளவோ சொன்னேன், நீங்க கேட்கல. இத்தனை பேரோட ஒரு கொலையாளியையும் சேர்த்து வெச்சிருக்கறது ரிஸ்க்னு உங்களுக்குத் தெரியாதா?…”
“புல்ஷிட்!” என்று கத்தினாள் ஸ்ரீஜா. “உங்களுக்கில்லை அது தெரிஞ்சிருக்கணும்? எல்லாரையும் சோதனை போட்டு, யார்கிட்டத் துப்பாக்கி இருக்குன்னு தேடியிருக்க வேண்டாமா நீங்க? அதை விட்டுட்டு, டைனிங் கார்ல வந்து உட்கார்ந்துக்கிட்டீங்க! உங்க பைத்தியக்காரத்தனமான விசாரணையால் என்ன கிடைக்கப் போகிறதுன்னு எனக்குப் புரியல…”
“ப்ளீஸ்! நாங்க செய்த முதல் வேலையே, எல்லா கேபினையும் சோதனை போட்டதுதான்! நீங்க எங்களோட விசாரணையைப் பற்றி எல்லோரையும் கூப்பிட்டுச் சொல்லி, காலையுணவு சாப்பிட்டிட்டிருந்த நேரத்திற்குள் உங்க கேபின்கள் எல்லாம் சோதனை போடப்பட்டாச்சு! அதோட உங்க பர்ஸன்ல நீங்க துப்பாக்கியோ, வேறு ஆயுதங்களோ வெச்சிருக்கீங்களா என்பதும் செக் பண்ணப்பட்டாச்சு!”
ஸ்ரீஜா அதிர்ந்தாள். “எப்படி? ஹவ் டிட் யூ டூ இட்?” என்று கேட்டாள்.
“நாங்க கல்யாணத்தில் கிஃப்ட்ஸ் காணாமல் போகாம பார்த்துக்கணும்ங்கறதுக்காகக் கொண்டுவந்த உபகரணங்கள் பயன்பட்டது. இவ்வளவு சொன்னா போதும்னு நினைக்கறேன்” என்றாள் தன்யா, இராணி கந்தசாமியின் கேபினைப் பரிசோதித்தவாறே.
ஸ்ரீஜா உள்ளே நுழைந்ததுமே கேபினுக்கு வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோருமே விலகிவிட்டார்கள். தேவா மட்டும் சற்றுத் தயங்கி நின்றவர் ஏதோ சண்டை ஆரம்பிக்கிறது என்று புரிந்ததும் அவர் கேபினுக்குப் போய்விட்டார்.
“ஸோ, இப்போ என்ன ரெகமண்ட் பண்றீங்க? இப்ப போலீஸைக் கூப்பிட்டுடலாமா?”
“கூப்பிடுங்க, உங்களால் முடிஞ்சா” என்று தர்ஷினி சொல்லவே, குழப்பத்துடன் அவள் பக்கம் திரும்பினாள் ஸ்ரீஜா.
“வெளியில் மழை வானத்தை உடைச்சுட்டுப் பெய்துட்டிருக்கு. மொபைல் சிக்னல் இல்லை. எப்படிச் சொல்லப் போறீங்க?” என்றாள் தர்ஷினி.
“என்ன, கேலி பண்றீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள் ஸ்ரீஜா.
“மேம், எங்களோட அட்வைஸ் ஆரம்பத்திலிருந்தே போலீஸை இன்வால்வ் பண்ணணும்ங்கறதுதான். இப்போ நீங்க சொன்னதைக் காலையிலேயே செய்திருக்கணும். நீங்க நாற்பத்தியெட்டு மணிநேரம் டைம் கேட்டுட்டு வந்திருக்கீங்க! எங்கமேல நம்பிக்கை வெச்சுத்தானே அதைப் பண்ணினீங்க? அந்த நேரத்தைக் கொடுங்க” என்று தொடர்ந்தாள் தர்ஷினி.
“நீங்க இருந்தும் இங்கே இந்தக் கொலை நடந்துடுச்சே, அதுதான் வருத்தம் எனக்கு” என்றாள் ஸ்ரீஜா, குரல் இறங்கி.
“அண்டர்ஸ்டாண்டபிள். ஆனா பகல் வேளையில், ஏற்கெனவே ஒரு கொலை நடந்து, கொலைகாரன் இந்தக் கோச்லயே இருக்கறதா சந்தேகம் இருக்கும்போது, எல்லோரும் தாங்களே கேர்ஃபுல்லா இருப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்… அதோடு இராணி கந்தசாமி இருக்கற கேபின்ல மேலும் மூணு பேர் இருக்காங்கன்னு நினைச்சேன். ஆக்சுவலா, நான் பயந்தது உங்களை நினைச்சுத்தான்!”
“வாட்?” அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸ்ரீஜா.
“நீங்கதான் கூப்பேல இருக்கீங்க. உங்க செகரட்டரி, அட்டெண்டர்… அவங்க பேரென்ன? அவங்களைக் கொஞ்சநேரம்… நகர்த்திட்டு, உங்களை அணுகறது சுலபம்.”
ஸ்ரீஜாவுக்குத் தலை சுற்றியது. “என்னை… என்னை ஏன்…” என்று குழறினாள்.
“வெல், நீங்க இராணி கந்தசாமி செய்த தப்பைச் செய்திருந்தா, உங்க உயிருடைய நிலையும் இப்போ கேள்விக் குறிதான்.”
“…….”
“அதைப் பற்றி அப்புறம் பேசலாம். மீன்வைல், மிஸ்டர் கிருஷ்ணகுமார், அவரோட டாட்டர்ஸ் கிட்ட நாங்க பேசணும்.”
*
கிருஷ்ணகுமாரின் கண்கள் கலங்கியிருந்தன. மாயா, சாயாவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.
“தட் ஃபேட்டல் 30 மினிட்ஸ். அந்த அபாயகரமான முப்பது நிமிடங்கள்” என்றாள் தன்யா. “இராணி கந்தசாமியுடைய மரணத்தை ஏற்படுத்தியவனுக்கு அந்த 30 நிமிடங்கள் வேண்டும், தனிமை வேண்டும். அதை நீங்க எப்படிக் கொடுத்தீங்கங்கறதுதான் கேள்வி!”
“ப்ளீஸ்! எங்களுக்கு ஒண்ணும் தெரியாது” என்றாள் மாயா.
“ஆனா உங்கப்பா எங்களோடு பேசும்போது வந்து தடங்கல் பண்ணத் தெரியும், இல்ல?”
“ப்ளீஸ், அது… என் அப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கு. நீங்க எங்க அண்ணனுடைய மரணத்தைப் பற்றி விசாரிச்சு, தேவையில்லாம அதை இந்தக் கொலையோட கனெக்ட் பண்றதா…”
“மிஸஸ் இராணி கந்தசாமி சொன்னாங்க, இல்லையா?”
“நீங்க திரும்பி வந்ததும்…”
“’தயவுசெய்து வேறு ஏதாவது கேபின்ல கொஞ்சநேரம் இருக்கீங்களா?’ன்னு கேட்டுக்கிட்டாங்க. ஏன்னு கேட்டதுக்கு உங்க விசாரணைகளால அவங்க ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்கறதாகவும் அவங்களுக்குக் கொஞ்சநேரம் தனிமை தேவைன்னும் சொன்னாங்க…”
“ஷிட்! அவங்க வாழ்க்கையில் பண்ணின மிகப் பெரிய முட்டாள்த்தனம்! சரி, உங்களுக்குத்தான் எங்கே போச்சு புத்தி? உடனே எங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணியிருக்க வேண்டாமா?”
“சாரி, இப்படில்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல…”
“நாங்களே எதிர்பார்க்கலையே…” என்றாள் தன்யா உதட்டைக் கடித்துக் கொண்டு. “ஓகே, அபாலஜீஸ், உங்கமேல கோபப்பட்டதுக்கு. இவ்வளவு நேரம் நீங்க எங்கே இருந்தீங்க?”
“தேவா சார் கேபின்ல” என்று முதன்முறையாய்த் திருவாய் மலர்ந்தார் கிருஷ்ணகுமார். “நாங்க பெரியவங்க எல்லோரும் ஒரு கேபின்ல இருந்தோம். இவங்க ரெண்டுபேர், தேவா குழந்தைங்க – இவங்க நாலுபேரும் அடுத்த கேபின்ல இருந்தாங்க. அட்டெண்டர் வந்து விஷயம் சொல்லுகிறவரை நாங்க யாரும் வெளியே போகலை…”
தன்யா உள்ளுக்குள் எரிச்சல்பட்டாள். இவர்கள் யாரைக் கேட்டாலும் மற்றவர்கள் யாரும் வெளியே போகவில்லை என்றுதான் சொல்லப் போகிறார்கள்.
“மிஸஸ் இராணி உங்ககிட்ட வேறு ஏதாவது சொன்னாங்களா? ப்ளீஸ், நினைவுபடுத்திப் பாருங்க” என்றாள்.
மாயாவும் சாயாவும் யோசித்தார்கள். “நாங்க அப்பாவைக் கூட்டிட்டுக் கேபினுக்குள் நுழைஞ்சோம். ‘வெரிகுட்’னாங்க. ‘உங்களை மாதிரி எனக்கும் இன்னொரு பிள்ளையோ பெண்ணோ இருந்திருக்கலாம்… எத்தனையோ பிரச்சனை ஸால்வ் ஆகியிருக்கும்’ அப்படின்னாங்க. அப்புறம் ‘சில சமயம் அப்படி இருக்கறதே ஆபத்தாகிடுது! குடும்பத்துக்குக் கெட்ட பெயர் வந்தா, அவங்களும்தானே அஃபெக்ட் ஆவாங்க? ஸ்ரீனியைப் பாரு, எவ்வளவு கஷ்டம் அவனுக்கு! ஆன் த ஹோல், ஒரு குழந்தை இருக்கறதே போதும்… இந்த ஜென்மத்துக்குப் போதும்’ அப்படின்னு யோசனையா சொல்லிக்கிட்டாங்க.”
“ஸ்ரீனி? நிச்சயமா தெரியுமா அந்தப் பெயர்தான் சொன்னாங்களான்னு?” என்று கேட்டாள் தன்யா.
“ஐ… திங்க் ஸோ…” என்றாள் மாயா.
*
“ஓகே, நீங்க சொன்னபடி செய்துட்டேன். எல்லோரும் இப்போ டைனிங் கார்ல இருக்காங்க. அட்டெண்டர்கள் எல்லோரும் உள்பட. யாரும் வெளியே போகாம பார்த்துக்கறாங்க” என்று சொல்லி தன்யாவின் எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தாள்.
இடம்: லவுஞ்ச்
தர்ஷினி இரு நாற்காலிகளுக்கும் சற்றுத்தள்ளி அமர்ந்திருந்தாள். கையில் அவளைவிட்டு ஒருநாளும் பிரியாத டேப்லட்.
தர்மா ஜன்னலை நோக்கித் தன் முகத்தைத் திருப்பி நின்றிருந்தான். இராணியின் மரணம் அவனை அசைத்துவிட்டது.
“ஓகே, ஸ்ரீஜா, தாங்க்ஸ். உங்க உதவியால் நாங்க எல்லாரையும் விசாரிச்சாச்சு…”
“ரியலி? குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா?
“ஆல்மோஸ்ட் நெருங்கிட்டோம். உங்களையும் விசாரிச்சுட்டா, கேஸ் முடிவுக்கு வந்துடும். இப்போ சொல்லுங்க ஸ்ரீஜா, சுப்பாமணி உங்களை என்ன விஷயமா ப்ளாக்மெயில் பண்ணிட்டிருந்தார்?”
“அது… வாட்? என்னை ஏன் அவர் ப்ளாக்மெயில்…”
“ப்ளீஸ்! உண்மையைச் சொல்லிடுங்க. அது என்ன ஆக்ஸிடெண்ட்?”
“ஆக்ஸிடெண்ட்…”
“கார் ஓட்டிட்டிருந்தீங்க இல்லையா? யூ வேர் இன்டாக்ஸிகேடட்…”
“ஐ ஸீ… என்னைப் பற்றி விசாரிச்சிருக்கீங்க” என்றாள் ஸ்ரீஜா.
தன்யா பேசவில்லை. ஸ்ரீஜாவையே பார்த்தாள்.
“இனி மறைச்சுப் பிரயோஜனம் இல்லை. மூன்று – நாலு வருஷம் இருக்கலாம் இது நடந்து… ஐந்து வருஷம் கூட ஆகப் போறதுன்னு நினைக்கறேன்…
“எனக்கு எப்படியோ குடிப்பழக்கம் வந்துடுச்சு. என் ஆபீஸ்ல அப்போ ஒரு லோ-பொசிஷன்ல சுப்பாமணி இருந்தார். அவர்தான் எனக்கு…”
“லிக்கர் வாங்கித் தருவார்?”
“ஆமா. குடிச்சுட்டு ட்ரைவ் பண்ணக் கூடாதுன்னு அவர், ஸ்ரீனி எல்லாரும் அட்வைஸ் பண்ணுவாங்க, நான் கேட்கவேயில்லை. இதுக்கிடையில் ஸ்ரீனியோட காம்படிடர் ஒருத்தரோட எனக்கு… பழக்கம்… உண்டாச்சு.
“ஒருநாள் ராத்திரி ஈஸிஆர் ரோட்டில் பார்ட்டி முடிஞ்சு வந்துட்டிருந்தோம்… லாரி ஒண்ணு மோதி… எனக்கு மல்ட்டிபிள் ஃப்ராக்சர்… அவர்… என் கூட வந்தவர்… காலில் அடிபட்டு ஒரு மாசம் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டியதா போச்சு… அதனால் அவரோட பிஸினஸ் கொஞ்சம் கொஞ்சமா சரிய ஆரம்பிச்சது…
“இந்த ஸ்டேஜில்தான் சுப்பாமணி என்னை வந்து பார்த்தார். அவர்கிட்ட சில ஃபோட்டோஸ்… பார்ட்டில எடுத்தது, ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்ல… போலீஸ் ரிப்போர்ட்… காரைக் கண்ணுமண்ணு தெரியாம ஓட்டி, பக்கத்தில் இருப்பவருக்கு ஆபத்து ஏற்படுத்தும் எண்ணத்தோட லாரியில் மோதி… என்… ஃப்ரெண்ட்… என்மீது கேஸ் போடும் எண்ணத்தில் இருக்கறதாகச் சொன்னார்… ஸ்ரீனியும் ஆடிப் போயிட்டான். அவருக்குப் பெரிய அமவுண்ட் காம்பன்ஸேஷன் கொடுத்து, அவருக்கு நான் லிஃப்ட் கொடுத்ததா வாக்குமூலம் கொடுக்க வெச்சாங்க. எப்படியோ கேஸ்லேர்ந்து தப்பிச்சேன்…
“ஆனா என் ப்ரெண்டால அவருடைய பிஸினஸில் கவனம் செலுத்த முடியவில்லை. கொஞ்ச நாள்ளயே கம்பெனியை மூடிட்டு அப்ராட் போயிட்டார்.”
தர்மா அவளைத் திரும்பிப் பார்த்தான். இதில் எவ்வளவு சுப்பாமணியின் ஏற்பாடு? யாருக்காக? ஸ்ரீஜாவுக்காகவா அல்லது ஸ்ரீனிக்காகவா?
“ஸ்ரீனி தன் கேரக்டரை ரொம்ப உயர்வா நினைக்கிறவன். அப்பழுக்குச் சொல்ல முடியாத அவனுடைய குணம்தான் அவனுக்குப் பிஸினஸ்லயும் சோஷியலாகவும் இத்தனை வெற்றியைக் கொடுத்திருக்குன்னு சொல்வான். அவன் பிஸினஸ் எதிரிகளைக்கூடக் கஷ்டப்படுத்த மாட்டான். அவன் பாவம், எனக்காக, இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதா போச்சு. ஆக்ஸிடெண்ட் பற்றி விஷயம் வெளியே தெரிஞ்சு, அதுவேற எனக்கும் அவனுக்கும் பெரிய அவமானமாகிடுச்சு” என்றாள் ஸ்ரீஜா, அவனுக்குப் பதிலளிப்பவளைப் போல.
“சரி, இது முடிஞ்சுபோன விவகாரம்…”
“முடியலை. சுப்பாமணி இருக்கறவரை அதை முடிக்க விடமாட்டான். ராஸ்கல்! அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னை மிரட்டிட்டே இருந்தான்…”
“ஆஃப்டர் ஆல் சுப்பாமணி… உங்களை…” என்று இழுத்தாள் தன்யா.
“மேக்ஸ் சென்ஸ்” என்றாள் தர்ஷினி. “ஸ்ரீனிக்கு வாரிசு கிடையாது. ஸ்ரீஜாதான் அவருக்கு வாரிசு. கம்பெனியிலும் ஸ்ட்ராங்கான பொசிஷனில் இருக்காங்க. அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, சுப்பாமணி ஒரு ராஜாவுக்குச் சமானமா ஆகிடுவாரு!”
“அப்பப்போ அவன் வாயை அடைக்க, பணம், பதவின்னு கொடுத்துட்டிருந்தேன்… மூணு வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு அடுத்த பதவில வந்து உட்கார்ந்தான்… சங்கர் ரெகமண்டேஷன் – எதுவும் செய்ய முடியல” என்றாள் ஸ்ரீஜா.
“மிஸ்டர் ஸ்ரீனி நினைத்தால் சுப்பாமணியை ஒண்ணுமில்லாம ஆக்கிட முடியுமே!!”
“அவனுக்கு நான் அவன் காம்படிடரோடு க்ளோஸா பழகிட்டிருந்தது தெரியாது. அந்த ஃபோட்டோஸ் அவன் கண்ணுக்குப் போச்சுன்னா என்னையும் கொன்னுட்டு அவன் தற்கொலை பண்ணிப்பான். அதான், ஒண்ணும் சொல்லல” என்றாள் ஸ்ரீஜா. “நடுவில்கூட, ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி, அவனுக்கு டவுட் வந்து என்னை விசாரிச்சான். அவனுக்கு என்ன சந்தேகமோ, அதுக்கப்புறம் நான் ஷான் இல்லாம எங்கேயும் போகக் கூடாதுன்னு உத்தரவு போட்டுட்டான்.”
“ஐ ஸீ. துப்பாக்கி இல்லாம வெளியே போகக்கூடாதுங்கறது அவருடைய உத்தரவா, உங்களுடைய முடிவா?” – மென்மையாகக் கேட்டாள் தன்யா.
“து… துப்பாக்கி…”
“உங்களுடைய பேர்ல்-ஹேண்டில்ட் பிஸ்டல்.”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“தெரியும்.”
“அது… காணாம போயிடுச்சு.”
“பொய் சொல்லாதீங்க. ரிலேட்டிவ்ஸ் மீட் வரை உங்ககிட்ட துப்பாக்கி இருந்தது.”
“உண்மை. அப்புறம் எங்கே போச்சுன்னு எனக்குச் சத்தியமா தெரியாது.”
தர்ஷினியின் கரங்கள் டேப்லட்டைக் குப்புறப் படுக்கப் போட்டன. தர்மா ஸ்ரீஜாவை நெருங்கி நின்றுகொண்டான். அவர்களின் சந்தேகப் பார்வையை உணர்ந்ததும் “என்னை நம்புங்க, ப்ளீஸ்! சத்தியமா எனக்கு அது எங்கேன்னு தெரியாது” என்றாள் ஸ்ரீஜா.
தன்யாவின் முகத்தில் மென்சிரிப்பு விளையாடியது. “எனக்குத் தெரியும்” என்றாள்.