பத்துமலை பந்தம் | 44 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 44 | காலச்சக்கரம் நரசிம்மா

44. தரையில் இறங்காத விமானம்

னது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..!

குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே சார்ந்து நின்றாள்..! இப்படிக் கழுத்தை அறுத்து விட்டானே..!

வேதனையுடன் நடந்தவளை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது.

“தண்டனை நிறைவேற்றப்பட்டது..!” –தனக்குப் பரிச்சயமான குரலைக் கேட்டு, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மயூரி..!

சஷ்டி சாமிதான் சிரித்தபடி நின்றிருந்தார்.

“சாமி..! நீங்களா..? இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தீங்க..?” –மயூரி பரபரப்புடன் கேட்டாள்.

“நீ தங்கியிருந்த அதே குகன்மணி மாளிகையிலதான் நானும் தங்கியிருந்தேன். மூன்றாவது நவபாஷாணச் சிலையைக் காக்கிறதுக்காக, குகன்மணி, நான் எல்லோரும் மும்முரமா இருந்தோம்.” –சஷ்டிசாமி கூறினார்.

“சாமி..! குகன்மணி என் குடும்பத்தினரை அழைச்சுக்கிட்டு மூன்றாவது சிலையை எடுக்க தகான் மலைக்குப் போறாரு..! என்னைப் பலவந்தமா விமானத்துலேருந்து இறங்கச் சொன்னாரு..!” –கண்களில் கண்ணீர் வழிய மயூரி சொன்னாள்.

“உன்னை மட்டும் இறங்க சொன்னான் இல்லே..? அப்பவே நீ புரிஞ்சுக்கிட்டு இருக்கணும். தண்டனை கொடுப்பதற்காக அவங்களை ஏத்திச் சென்ற விமானத்துல நீ எப்படி ஏறலாம்..?”

சஷ்டி சாமி கேட்க, உறைந்து போனாள் மயூரி..!

“என்ன சாமி சொல்றீங்க..?” –மயூரி அலறினாள் .

“காணாமல் போன எம்.எச்.370 விமானம் மாதிரி, உன் குடும்பத்தினரை அழைச்சுக்கிட்டு குகன்மணி ஓட்டிய விமானம் எங்கேயும் இறங்கப் போறதில்லை. அது காணாம போகப் போகுது. உன் குடும்பத்தாரோட கதி அதோகதியாகப் போறது..! அவங்களைப் பத்தி இனிமே இந்த உலகத்துக்கு எதுவும் தெரிய போறதில்லை..!” –சஷ்டி சாமி சொல்ல, கல்லாய்ச் சமைந்து நின்றாள், மயூரி.

“தண்டனை கொடுக்கப்பட்டதா..? அப்படினா தண்டனை கொடுத்தது யார்..? குகன்மணிக்கு ஏன் தண்டனை கிடைச்சது..? அவரு என்ன தப்பு செஞ்சார்..?”

“எல்லாக் கேள்விகளுக்கும், இன்னைக்கு மாலை பதில் கிடைக்கும். பேசாம என்னோட நீ பத்துமலைக்கு வா..!” –சஷ்டி சாமி கூற, மௌனமாக அவரைப் பின்தொடர்ந்தாள்.

கேப் ஒன்றில் இருவரும் பத்து மலையைச் சென்று அடைய, முருகனைத் தரிசித்துவிட்டு, படிகளில் ஏறத் தொடங்கினர்.

“அம்மா மயூரி..! நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன். நீ மட்டும் மேலே ஏறி வௌவால் பாறைக்குப் போ..! நீ வர்ற வரைக்கும் இங்கேயே இருக்கேன்..!” –என்று சஷ்டி சாமி உட்கார்ந்துவிட்டார்.

எதற்காகத் தன்னை வௌவால் குகைக்குப் போகச் சொல்கிறார் ?

முன்பு, வௌவால் பாறைக்கு இவளைக் குகன்மணி அழைத்துச் சென்றது நினைவில் வந்தது. எவ்வளவு அக்கறையுடன் இவள் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றான். அவ்வளவு அக்கறை செலுத்தியவன் எதற்காக திடீரென்று இவளை நட்டாற்றில் விட்டுவிட்டுச் சென்றான்..?

ஆயிரம் கேள்விகள் இதயத்தில் எதிரொலிக்க, சிரமப்பட்டு ஏறி, வௌவால் குகையை அடைந்தாள். மாலை வேளையில் அந்தப் பக்கம் மனித நடமாட்டமே இல்லை. கால்போன போக்கில் நடந்தவள், நீலி வேல் இருந்த குகைப் பக்கமாக வந்தவள், திகைத்துப் போய் நின்றாள்.

வௌவால் குகையின் நுழைவாயில் மீது அமர்ந்து, அன்று போகர் பள்ளியின் வாயிலில் காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது போல அமர்ந்திருந்தான், குகன்மணி.

“குகன்மணி..! நீங்களா..? என் குடும்பத்தினர் எங்கே..?” –மயூரி கதறினாள்.

“அன்னைக்கு கனிஷ்கா மட்டும் திரிசங்குல ஊசலாடினாள்..! இப்ப உன் குடும்பம், அமீர், அபி எல்லாரும் திரிசங்குல ஊசலாடிக்கிட்டு இருக்காங்க. எம்.எச்.370 விமானம் காணாம போனது போல, இனிமே அந்த விமானமும் திருப்பிக் கிடைக்காது. அந்த விமானம் எங்கேயும் தரை இறங்காது..! எம்.எச்.370 கிளம்பிப் போனது ரிகார்டுல இருக்கு. ஆனா உன் குடும்பம் பயணிச்ச விமானம் டேக் ஆஃப் ஆனதுகூட பதிவாகலை. உன்னைப் பொறுத்தவரைக்கும் உனது பிரார்த்தனை நிறைவேறிடுச்சு. போகர் பள்ளியில மூன்றாவது சிலைக்கு முன்னாடி என்ன வேண்டிகிட்டே..? உன் குடும்பத்துக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டியதுதான். ஆனால அது கோரமா இருக்கக் கூடாது. அவங்க பிணங்களை கூடப் பார்க்கக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டே இல்லே… அதைத்தானே நிறைவேத்தி இருக்கேன். உன்னைப் பொறுத்தவரைக்கும், உன் குடும்பத்தினர் இறந்து போகலை. ஆனால் இனிமே அவங்க உன் கண்ணுலபட மாட்டாங்க..! அவங்க தண்டிக்கப்பட்டாச்சு..! பிரபஞ்ச சக்தியோட மோதினால் அவங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அது கிடைச்சாச்சு..!” –குகன்மணி கூறினான்.

“குகன் மணி..! நீங்க யாரு..?” –மயூரியின் குரல் கம்மியது.

“முதன்முதலா என்னை விமானத்துல சந்திச்சப்பவே நான் யாருன்னு நீ யூகிச்சிருக்கணும்..! நீ யூகிக்காம இருந்ததற்குக் காரணம் உன்னோட கண்மூடித்தனமான குடும்பப் பாசம். உன்னோட பக்தியையும் கடந்து அந்தப் பாசம் அலாதியானதா இருந்தது. அதைத்தான் உன் குடும்பத்தினர் தங்களுக்குச் சாதகமா உபயோகிச்சாங்க. சேத்துல முளைச்ச செந்தாமரை நீ..! பிரகலாதனுக்காக இரணியனைப் பொறுத்துக்கிட்டாரு நரசிம்மன். ஆனா அவன், பிரகலாதன் மேலே கை வச்ச உடனே பொங்கி எழுந்தார் இல்லே. உன் விஷயத்துலயும் அப்படிதான் நடந்தது. உனக்கு எதிரா அவங்க வேலை செய்ய போறாங்கன்னு தான் உன்னைச் சுத்தி வந்தேன். மூணாவது சிலையைக் காப்பாத்த நானும், போகரும், சஷ்டி சாமியும் செஞ்ச ஏற்பாடுதான் எல்லாமே..! போகர்தான் உன் கூடவே பயணம் செஞ்சாரு…”

“என் கூடவா..?”

“ஆமா..! போகர் தன்னையே இரண்டு உருவமாக்கி உன் கூடவே வந்தாரு..! போதினி, சுபாகர் யாருன்னு நினைக்கிறே..? போதினி-யில போ-வையும், சுபாகர்ல கர்-ரையும் சேர்த்து இணைச்சுப் பார்த்தா போகர்ன்னு வரலியா..? அதையும் நீ கண்டுபிடிப்பேன்னு நினைச்சேன். மொட்டைமாடியில நீ நின்னப்ப, ரெண்டு ஒளிக் கீற்று எஸ்டேட் குன்றுல இறங்கினதை நீ பார்த்தேன்னு சொன்னே இல்லே… போகர்தான் அப்படி வந்தார். வந்து திரும்பவும் போதினி, சுபாகர்ன்னு ரெண்டு ரூபம் எடுத்தார். உனக்கு மூன்றாவது நவபாஷாணச் சிலைய தரிசிக்கணும்னு விதி இருக்கு. அதனால எங்க நாடகத்துல உன்னையும் சேர்த்துக்கிட்டோம். மூணாவது சிலை இருக்கிற இடம், இப்ப உனக்கு மட்டும்தான் தெரியும். நீ யாருக்கும் சொல்ல மாட்டேன்னு நாங்க உறுதியா நம்பறோம்..! இப்ப சொல்றேன்..! என் மேல அவ்வளவு பக்தி செலுத்திய உன் மேல அக்கறை செலுத்தினேன். அதுக்காகத்தான் நான் வந்தேன்.”

குகன்மணி கூற, உணர்ச்சிவசப்பட்டவளாக அழ ஆரம்பித்தாள் மயூரி.

“இந்தக் கருணைக்கெல்லாம் எனக்கு அருகதை இருக்கான்னு தெரியலை..! போகர் பள்ளிக்கு போகறப்ப உங்க முதுகுல தொத்திக்கிட்டு காலமெல்லாம் அப்படியே இருக்கணும்ணு ஆசைப்பட்டேன். இப்பக்கூட எனக்கு அந்த ஆசைதான்..! இப்படியே நீங்க என்னைக் கொண்டு போயிடுங்க, தெய்வமே..! எனக்கு இப்ப உங்களைத் தவிர வேற நாதி இல்லை. நான் உங்ககூடவே வந்துடறேன்.!” –மயூரி இறைஞ்சினாள்.!

“உனக்கு நிறையப் பணிகள் காத்திருக்கு, மயூரி..! சமயம் வரும்போது உனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். அதுவரையில், மூன்றாவது சிலையை ஆராதிக்கும் பொறுப்பு உனக்குத்தான்.” –குகன்மணி கூற, பரவசத்துடன் அவனையே பார்த்தபடி நின்றாள்.

“அப்ப எங்க பள்ளங்கியில இருக்கிற இரண்டாவது சிலை..?” –மயூரி கேட்டாள்.

“சஷ்டி சாமி அந்த பொறுப்பை உண்மையான நல்லமுத்து மற்றும் தேவசேனா கிட்டே கொடுப்பாரு..! அதாவது இப்போ அஞ்சையா, ராஜகாந்தமா இருக்கிறவங்க கிட்டே, அந்த ஆராதனைப் பொறுப்பைத் தருவார்..! இரண்டாவது நவபாஷாணச் சிலையோட கட்டுத் தளரலை. அந்தச் சிலையை வச்சு உன் குடும்பம் துஷ்ப்ரயோகம் செஞ்சதால அது பலன் அளிக்கலை..! அவ்வளவுதான்.! அவங்க பள்ளங்கி சிலையை பார்த்துப்பாங்க..! நீ தகான் மலையில இருக்கிற சிலையைப் பார்த்துக்க..!” –குகன்மணி கூறியபடி எழுந்து நின்றான்.

“இன்னும் சந்தேகம் ஏதாவது இருக்கா..?” –குகன்மணி கேட்க, அவனை ஏக்கத்துடன் பார்த்தாள் மயூரி.

“தெய்வமா உங்க மேல பக்தி செலுத்தினேன். நீங்க தெய்வமாவே என் முன்னாடி வந்திருக்கலாம். மனுஷ ரூபத்துல வந்து என் மேல அக்கறை செலுத்தினதால, அந்த மனித ரூபத்தை நான் நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்ப நான் தெய்வம்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போயிடலாம்..! நான் நேசிச்ச அந்த உருவத்தை நான் இனி எப்ப பார்க்கிறது..?” –மயூரி கேட்க, அவளைப் புன்சிரிப்புடன் பார்த்தான், குகன்மணி..!

“உருவங்கள் மாறலாம்..! ஆனால் இதயங்கள் மாறாது, மயூரி..!” –குகன்மணி கூற, அவனைக் குழப்பத்துடன் நோக்கினாள் மயூரி.

“புரியலையே..!”

“நான் வாழ்ந்த பத்துமலை எஸ்டேட்டுக்கு உன்னை அழைச்சுக்கிட்டு போவார், சஷ்டி சாமி..! அங்கே உனக்கு எல்லாம் புரியும்..!” –குகன்மணி கூறிவிட்டு, அவளை நோக்கிச் சிரித்தபடி கை அசைத்துவிட்டு, வௌவால் குகையின் மீது ஏறி காணாமல் போனான்.

கனத்த இதயத்துடன், மயூரி கீழே இறங்கினாள். சஷ்டி சாமி அவளுக்காக, இருந்த இடத்திலேயே காதித்திருந்தார்.

“போலாமா மயூரி..? உன்னை ஒப்படைக்க வேண்டிய இடத்துல ஒப்படைச்சுட்டு, நான் பள்ளங்கி போக வேண்டும். அடுத்த சஷ்டிக்குள்ளே, உண்மையான நல்லமுத்துக்கிட்டே இரண்டாவது நவபாஷாணச் சிலையை ஒப்படைக்கணும்..!” –சஷ்டி சாமி கூறிவிட்டு நடக்க, அவரைப் பின்தொடர்ந்தாள், மயூரி.

இவளை யாரிடம் ஒப்படைக்கப் போகிறார், சஷ்டி சாமி..?

45. டுவானின் புவான்..!

த்து மலை எஸ்டேட் உள்ளே நுழைந்த்து அவர்கள் கேப். குகன்மணியைப் பற்றிய நினைவுகள் நெஞ்சை அறுக்க, பனித்த கண்களுடன் மௌனமாகப் பயணம் செய்தாள் மயூரி. இனிமேல் குகன்மணியை எங்கே காணப் போகிறாள்..?

போர்டிகோவில் வண்டி நிற்க, சஷ்டி சாமி, தான் காரை விட்டு இறங்காமல், மயூரியை மட்டும் இறங்கச் சொன்னார்.

“நீ வாசம் செய்யப் போற இடம் இனிமே இதுதான். உன்னோட பொறுப்புலதான் இனி மூன்றாவது நவபாஷாணச் சிலை இருக்கப் போறது. நான் பள்ளங்கிக்குக் கிளம்பறேன். முருகன் அருள் உனக்குப் பரிபூரணமா இருக்கு. அதனாலதான் உனக்கு அவன் தரிசனமே கிட்டியிருக்கு..! சந்தோஷமா இரும்மா..! நான் வரேன்..!” என்றபடி, அதே கேப்பில் புறப்பட்டு போனார்.

தயக்கத்துடன், மாளிகையின் பெல்லை அடித்தாள்..! சரியாக மணி மாலை 6.06.!

யாரோ நடந்து வந்து கதவைத் திறந்தார்கள்.

கதவைத் திறந்தவனைப் பார்த்தவுடனேயே அதிர்ச்சியுடன் நின்றாள், மயூரி..!

அங்கே… குகன்மணி நின்றிருந்தான்.

“ஹலோ..! வாங்க..! என் பெயர் குகன்மணி..! சஷ்டி சாமியோட சீடன்..! சஷ்டி அன்னைக்கு, சரியா சாயந்திரம் 6.06 மணிக்கு உன் வீட்டுக் கதவை ஒரு பெண் தட்டுவா. அவள்தான், உன்னோட வருங்கால மனைவின்னு சொல்லியிருந்தார்..! சரியா 6.06க்கு பெல் அடிச்சிருக்கீங்க..! உங்களைப் பார்த்தாலே, எனக்கு புதுசாத் தோணலை. உங்களுக்கு என்னைத் திருமணம் செஞ்சுக்க விருப்பம் இருந்தால், உள்ளே வாங்க..! இல்லேன்னா நீங்க திரும்பிப் போகலாம்.” –குகன்மணி கூற, விடுவிடுவென்று உள்ளே சென்று சோபாவில் சரிந்து கொண்டாள் மயூரி.

“குனோங்..! குமுதினி கிட்டே சொல்லி எனக்கு ஏலக்காய் டீ ஒண்ணு தயாரிக்கச் சொல்லு..!” –என்றபடி குகன்மணியைப் பார்த்துச் சிரித்தாள்.

“இன்க்ரீடிப்பில்..! எப்படிங்க என்னோட பணியாட்கள் பெயர் எல்லாம் உங்களுக்குத் தெரியும்..?” –குகன்மணி மலைத்தான்.

“இந்த டுவான் (Mr) குகன்மணியோட புவான் (Mrs) நான்..! எனக்குத் தெரியாத விஷயங்களா..?” –என்று சிரித்தாள் மயூரி.

–நிறைவு–

ganesh

5 Comments

  • அற்புதமான சம்பவங்கள்.
    அருமையான நிகழ்வுகள்.
    போகர் சிலைகளை பற்றிய தெளிவான விளக்கங்கள். டுவான், புவான் நீடூழி வாழ்க.

  • கற்பனைக்கு எட்டாத கற்பனை. ஆனாலும் நிஜம் போல் தொடர வைத்த விறுவிறுப்பு. சிம்ப்ளி சூப்பர். கதாசிரியர் துவான் நரசிம்மருக்கும் துவான் கணேஷ் பாலா சாருக்கும் புவான் மங்களகெளரியின் நன்றி

  • Excellent writing. Looking forward to see more novels from you (sir) in minkaithadi.

  • இந்த தொடர் நாவல் சமீபத்திய காலங்களில் சிறந்த ஒன்றாகும். காலச்சக்கரம் நரசிம்மா சார் அவர்களின் டைனமிக் எழுத்து. அனைத்து அத்தியாயங்களும் த்ரில்லாக உள்ளன.

    This serial novel is one of the best in recent times. Dynamic writing by Kalachakram Narasimha Sir. All episodes are thrilling.

  • அருமையான கதை, மெய் சிலிர்க்க வைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...