பயணங்கள் தொடர்வதில்லை | 15 | சாய்ரேணு
14. கோவணம்
“ஏதோ ஒரு ஊரில் கோவணம் கட்டியவன் முட்டாள்னு சொல்வாங்க. நான் அப்படி ஒரு முட்டாள்” என்று ஆரம்பித்தார் சந்திரசேகர்.
ஏனோ தன்யாவுக்கு அவரிடம் கேள்விகள் போடத் தோன்றவில்லை. மௌனமாகவே இருந்தாள், அவராகவே பேசட்டும் என்று.
“சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்க்கும் முன்னால், சங்கருடைய அப்பா நடத்திட்டிருந்த காம்-கெம்ஸில் நான் முதன்முதலா ட்ரெய்னியா சேர்ந்தேன்… அந்த ஃபாக்டரி மூடப்படறதைப் பார்க்கற துரதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அப்புறம் கொஞ்சநாள் கெம்ஃபாப் ஆல்கலீஸ்ல வேலை பார்த்தேன். சங்கரும் ஸ்ரீனியும் சேர்ந்து இண்டஸ்ட்ரி ஆரம்பிச்சப்போ என்னை வந்து சேர்ந்துக்கச் சொன்னாங்க. சொந்தக்காரன்ங்கறதால எந்தச் சலுகையும் நான் எதிர்பார்க்கல. க்வாலிட்டி அஷ்ஷுரன்ஸ் டிபார்ட்மெண்ட்ல அஸிஸ்டெண்ட் மானேஜரா சேர்ந்தேன். இன்னிக்கு டி ஜி எம் – க்வாலிட்டி கன்ட்ரோல்” அவர் குரலில் பெருமை எதுவும் காணப்படவில்லை. சாதாரணமாகப் பேசுவது போலவே இருந்தது.
“என்னோடு வேலைக்குச் சேர்ந்தவங்க பலபேர் என்னைவிட உயரத்துக்குப் போனாங்க. லஞ்சம், ரெகமெண்டேஷன், மேலிடத்தைக் குழையடிக்கறது… பார்த்தும் பார்க்காத மாதிரிப் போயிடுவேன். சங்கர் என் ரிலேட்டிவ்தான், ஆனா அதைவெச்சு எனக்கு எந்தச் சலுகையும் காட்டக் கூடாது என்பதில் உறுதியா இருந்தேன், இன்னும் இருக்கேன். என் உழைப்பை வெச்சுத்தான் வளரணும்னு நினைப்பேன், இன்னும் நினைக்கறேன்…”
இந்தப் பேச்சு வேறு ஏதோ விஷயத்துக்குப் பூர்வ பீடிகைதான் என்று உணர்ந்தவர்களாக, தர்மா-தன்யா-தர்ஷினி மௌனமாகவே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அவருடைய பேச்சை வெகு கவனத்துடனே கேட்கிறார்கள் என்பது புரிந்தது. தர்ஷினி குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது.
“என்னுடைய இந்தக் குணங்களையெல்லாம் மீறி, சுப்பாமணி எனக்கு எப்படி நண்பரானார்னு கம்பெனில பலர் ஆச்சரியப்படுவாங்க. என்னுடைய கொள்கைகளுக்கு நேர்-எதிரா நடந்துக்கறவர் சுப்பாமணி. வேலைக்குச் சேர்ந்த பத்தாவது வருடத்தில் அவர் ஈவண்ட்ஸ் மேனேஜர் – இத்தனைக்கும் எந்த க்வாலிஃபிகேஷனும் இல்லாம! இதேபோல் மற்றவர்களுக்கும் ஏதேதோ சாதிச்சுக் கொடுத்திருக்கார்!
“பல வருஷங்களுக்கு முன்னால் ஒருமுறை என்னைப் பார்க்கச் சுப்பாமணி வந்தார். கம்பெனியுடைய ஏஜண்ட்ஸ் மீட்டிங் ஒண்ணு கம்பெனிக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு ஹாலில் வெச்சு நடக்கறதாயிருந்தது. ஆனா அதே நாளில் ஒரு தலைவரோட பிறந்தநாள் விழா அந்த ஹாலில் ஏற்கெனவே ஏற்பாடாகிடுத்து. அதில் அரசியல்வாதிகள் கலந்துக்கறதால புரோகிராமைக் கான்சல் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சுப்பாமணி களத்தில் இறங்கினார். எங்க ஆபீஸ்ல இருக்கற ஒருத்தர், விழா நடத்தற கட்சியில் மிக முக்கியமானவருக்குத் தம்பி. அவருக்கு ஒரு இன்க்ரிமெண்ட் ஏற்பாடு பண்ணித் தரதா சொல்லி, விழாவை வேறு இடத்துக்கு மாற்ற வைத்தார். அதனால் எனக்குக் கிடைக்க வேண்டிய இன்க்ரிமெண்ட் அவருக்குப் போச்சு. அதைச் சொல்லி மன்னிப்புக் கேட்க வந்தார்…”
இந்த இடத்தில் தன்யா, தர்ஷினிக்குத் தூக்கிவாரிப் போட்டது. தர்மாகூட அதிர்ச்சியடைந்தான். சுப்பாமணிக்குக் கூட வருத்தம், மன்னிப்பு எல்லாம் தெரியுமா?
“எனக்குச் சுப்பாமணி மேல கோபம் வரலை. அப்புறம் அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்தார். என்னோடு பேசிட்டிருப்பார். என் மனைவியைப் பாடச் சொல்லுவார். எனக்கும் அவரோடு பேசறது பிடிக்கும். கம்பெனியில் என்ன நடக்கறதுன்னு தெரிஞ்சுப்பேன், டிடாச்டா, வம்பு கேட்கிற மாதிரி…”
“உங்களுக்காக நீங்க எதுவும் சுப்பாமணியைச் செய்யச் சொல்லி…” முதன்முதலாக வாய்திறந்தாள் தன்யா.
“அப்படிச் செய்திருந்தா எங்க பரஸ்பர மதிப்பு, நட்பு எல்லாமே முறிஞ்சிருக்கும். நான் அவரிடம் எதுவும் கேட்க மாட்டேன், இதுவரை அவரும் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. நட்பு என்ற நிலையிலேதான் நாங்க ரெண்டுபேரும் பழகினது.”
“நீங்க கேட்கலை, சுப்பாமணிகூடக் கேட்கலியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் தர்ஷினி.
அவள் பக்கம் திரும்பினார் சந்திரசேகர். “வெல்… சில சமயம் ஆஃபர் பண்ணியிருக்கார்” என்றார் மெதுவாக. “‘இப்படியே எத்தனை நாளைக்கு சார் இருக்கப் போறீங்க? டி ஜி எம், ஜி எம் இதுமாதிரிப் பதவிகளுக்கு வரவேண்டாமா? நான் வேணும்னா சங்கர் சார் காதில் போடவா?’ – இப்படில்லாம் ஏதாவது சொல்வார். வேண்டவே வேண்டாம்னு சொல்லிடுவேன். அதோடு அந்தப் பேச்சு நின்னுடும். ஏன்னா, நான் சரின்னு சொன்னா, அதுக்குச் சுப்பாமணிக்கு ஏதாவது விலைகொடுக்க வேண்டியிருக்கும்…
“மூணு வருஷத்துக்கு முன்னால், எனக்கு வரவிருந்த ஒரு முக்கியமான ப்ரமோஷன் தட்டிப் போச்சு. காரணம், என் கம்ப்யூட்டரில் இருந்த ப்ராஜக்ட் ஃபைல் ஆக்ஸிடெண்டலா டெலிட் ஆகிடுச்சு. இதைக் கேள்விப்பட்டுச் சுப்பாமணி ரொம்ப வருத்தப்பட்டார். எனக்காக சங்கர், ஸ்ரீனி ரெண்டுபேர் கிட்டயும் பேசறதாகவும் சொன்னார். நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். என் தப்பு, என் விதி – அதன் பலனை நாந்தான் அனுபவிக்கணுமே தவிர… தெய்வத்திடம்கூட எனக்கு ரெகமண்டேஷன் பிடிக்காது” என்றார் சந்திரசேகர்.
தன்யா, தர்ஷினி கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
“நாங்க ஸ்டேஷனுக்கு வந்தபோது நீங்கதானே சுப்பாமணியோடு பேசிட்டிருந்தீங்க?” தொடர்ந்தாள் தன்யா.
“ஆமா, எனக்குச் சுப்பாமணியோடு பேசறது பிடிக்கும்.”
“அவர் மேல உங்களுக்குக் கோபமே வந்ததில்லையா சார்?” மெதுவாகக் கேட்டான் தர்மா.
திடுக்கிட்டுத் திரும்பினார் சந்திரசேகர். “எ… என்ன?” என்றார் குழப்பமாக.
“சார், சுப்பாமணி எப்படிப்பட்டவர்னு உங்களுக்குத் தெரியும். ஒருவருக்குத் தேவையானது கிடைக்க, இன்னொருத்தருக்கு அவருக்குத் தேவையானதைக் கொடுத்து, சைடில் தனக்குத் தேவையானதைச் சாதித்துக் கொண்டு… இவ்வளவு நேர்மையானவரா இருக்கீங்க, இது தப்புன்னு உங்களுக்குத் தோணலையா?”
சந்திரசேகர் சற்று யோசித்தார். “லுக். என் வரையில் சுப்பாமணியுடைய சர்வீஸஸ் எனக்குத் தேவைப்பட்டதில்லை. ஆனா, எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க. நீங்க சுப்பாமணிக்குச் சொன்ன டெஃபினிஷனுக்கும் ஒரு வீட்டுப் புரோக்கரோட வேலைக்கும் என்ன வித்தியாசம்?” என்றார்.
“வீட்டுப் புரோக்கர் வீடு வாங்கிக் கொடுப்பான் சார், யார் வீட்டையும் அழிக்க மாட்டான்” என்றான் தர்மா.
“ஆல்ரைட். ட்ரெயினில் வந்திருக்கற சங்கரோட ரிலேட்டிவ்ஸோட பேசியிருக்கீங்க. சுப்பாமணி தலையிட்ட எல்லா விஷயங்களிலும் அவங்க பக்கம் தப்பிருக்கும், அதைக் கரெக்ட் பண்ணிக் கொடுக்கச் சுப்பாமணி செய்த உதவிக்கு அவங்க அவருக்கு ஏதாவது திரும்பச் செய்திருப்பாங்க. ப்ரிஜேஷை எடுத்துக்கோங்க – அந்த ராஸ்கல் செய்த தப்பால்தானே எல்லாமே நடந்தது? இதில் சுப்பாமணி தப்பு என்ன? சார், போலீஸ் லஞ்சம் வாங்கறாங்கன்னு ஈஸியா சொல்லிடறாங்க. தப்பு செய்வானேன், அப்புறம் அதை மறைக்க லஞ்சம் கொடுப்பானேன்? லஞ்சம் கொடுக்கிறவனுடைய குற்றம் வாங்குகிறவனைவிட ரொம்பப் பெரிசு சார்!” ஆவேசமாகச் சொன்னார் சந்திரசேகர்.
இப்படிப் பேசும் இவர், தன் சொந்த வீட்டில் நடந்த பிரச்சனைகள் அறிந்தால் என்ன செய்வார்? அப்போதாவது அவருக்குச் சுப்பாமணிமீது கோபம் வருமா, அல்லது ட்ரக்ஸ் சார்ஜில் மாட்டிக் கொண்டது அவர் மகனுடைய தப்பு, அதை அப்படியே விடாமல் அவனை மீட்கப் பார்த்தது அவர் மனைவியின் தப்பு, தன் பாஸ்வேர்டைச் சொன்னது அவர் மகள் செய்த பெரிய குற்றம் என்பாரா?
ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், இவருக்குச் சுப்பாமணிமீது கோபம் வராது, வந்தாலும் மனதிற்குள் அழுத்திக் கொண்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. திட்டமிட்டு, சுப்பாமணியைச் சுட்டு, ட்ராக்கில் தள்ளி… ஊஹும். குடும்பத்தினரைப் பொறுத்தவரை… மன்னிக்க மாட்டார். சுரீர் சுரீரென்று சொல்லிக் காட்டலாம், அல்லது ஆண்டுக்கணக்கில் பேசாமலே இருக்கலாம்.
வெயிட்… இவர் தன் குடும்பத்தோடு பேசி நாம் எங்கே பார்த்தோம்? இவர் மற்றவர்களோடுதான் வந்ததிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்படியானால், இவருக்கு விஷயம் தெரிந்துவிட்டதா? பின்னே சுப்பாமணி…
சிந்தனையில் இந்த இடத்தைத் தர்மா அடைந்திருந்தபோது, “நீங்க இப்படிச் சொல்றீங்க, பாதிக்கப்பட்டவங்க சொல்றதைக் கேட்டா, அதுவும் நியாயமா இருக்கே! இப்போ நம்ம கிருஷ்ணகுமார் சாரையே எடுத்துக்குங்க” என்றாள் தன்யா.
“என்ன? என்ன கிருஷ்ணகுமாரோட நியாயம்? இராணியோட மகளை அவருடைய மகன் லவ் பண்ணினான். இராணி அப்போ கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த ஒரு விடோ. இராணியோட ஹஸ்பெண்டுக்கும் கிருஷ்ணகுமாருக்கும் ஏதோ பூர்வப் பகை. இந்த பித்ஸாத் காரணங்களுக்காக அந்த லவ்வுக்குத் தடை சொன்னார் கிருஷ்ணகுமார். அதான் பையனும் பொண்ணும் ஓடிப் போயிட்டாங்க! அதுக்குச் சுப்பாமணி உதவிசெஞ்சா, அது அவர் தப்பா?”
இப்போது புரிய ஆரம்பிக்கிறது.
“அவங்க கல்யாணம் பண்ணிக்கச் சுப்பாமணி ஹெல்ப் பண்ணினாராக்கும்?” என்று கேட்டாள் தன்யா.
“கல்யாணம் வரைக்கும்லாம் எங்கேம்மா போச்சு? இவங்க ஊட்டிக்குப் போனாங்க, அங்கே யாரோ ரவுடிக் கும்பல் கிருஷ்ணகுமார் மகனைத் தாக்கி, இராணி மகளைக் கடத்திட்டுப் போயிட்டாங்க.”
“ஐயையோ அப்புறம்?”
“போலீஸ் ‘பத்தோடு பதினொண்ணு; அத்தோடு இது ஒண்ணு’ன்னு இந்தக் கேஸை அலட்சியம் பண்ணிட்டாங்க. அப்போ கிருஷ்ணகுமார் பத்திரிகைத் துறையில் வேலை பார்த்துட்டிருந்தார். அவரோட இன்ஃப்லூயன்ஸை வெச்சு, போலீஸை இன்னும் தீவிரமா இந்தக் கேஸில் ஈடுபடச் சொல்லிக் கெஞ்சினா இராணி. ‘என் மகன் ஹாஸ்பிடலில் கிடக்கும்போது என்னால் வேறு எதையும் கவனிக்க முடியாது’ன்னு சொல்லிட்டார் கிருஷ்ணகுமார்.
“பாவம் இராணி. ஒற்றைப் பெண்ணா போராடினா. சுப்பாமணி அவளுக்கு அந்த ரௌடிங்க இருக்கற இடத்தைக் காட்டிக் கொடுத்தார்…”
“வாட்? அவருக்கு எப்படித் தெரியும்?”
“உங்களை மாதிரி அவரும் ஏதோ துப்பறியும் வேலை செய்திருக்கணும்!”
மண்ணாங்கட்டி! ரௌடிகளை ஏற்பாடு பண்ணினதே சுப்பாமணிதான்!
“பெண்ணைக் காப்பாற்றிக் கூட்டி வந்துட்டாங்க. சுப்பாமணி தான் சொல்ற பையனுக்கு இராணி பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு கேட்டார். இராணி, அவ மகள் ரெண்டு பேருக்குமே இஷ்டம் இல்லை… இதற்கிடையில் இந்த விஷயம் ஹாஸ்பிடல்ல இருந்த கிருஷ்ணகுமார் மகனுக்குத் தெரிஞ்சு, அவன் தற்கொலை பண்ணிக்கிட்டான்… இராணி வேற பெரிய இடத்தில் மகளைக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க.
“கிருஷ்ணகுமார் மனசுடைஞ்சு போயிட்டார். ‘என் மகன் செத்ததுக்கே உன் மகள்தான் காரணம்’னு இராணிகிட்டச் சண்டை போட்டார். இராணி ‘ஆபத்துக் காலத்தில் என் மகளைக் காப்பாற்ற வராத உங்களையோ, உங்க மகனையோ மதிக்கணும்னு எங்களுக்கு அவசியம் இல்லை’ன்னு நிர்த்தாக்ஷண்யமா சொல்லிட்டாங்க.
“அப்புறம் கிருஷ்ணகுமார்… இது ரகசியம்… யார்கிட்டயும் சொல்லிடாதீங்க… அவருடைய தம்பியும் தம்பி மனைவியும் அக்ஸிடெண்ட்ல இறந்து போயிட்டாங்க. அவங்களோட இரட்டைக் குழந்தைங்க அப்போ கைக்குழந்தையா இருந்தாங்க. அவங்களை எடுத்து வளர்த்தார்…”
“ஐ ஸீ!” என்றாள் தன்யா. கிருஷ்ணகுமாருக்கும் மாயா, சாயாவுக்கும் இருந்த அதீத வயது வித்தியாசத்தின் காரணம் இப்போது புரிந்தது.
“எனக்கு ஒரு சந்தேகம் சார்” என்றாள் தர்ஷினி. “உங்க பேச்சில் சங்கர்தான் அடிக்கடி அடிபட்டார். தேவா சார் பேச்சிலும் கவனிச்சேன். ஸ்ரீனி சார்க்கு அத்தனை முக்கியத்துவம் கிடையாதோ உங்க கம்பெனில?” என்று கேட்டாள்.
“என்னம்மா இப்படிக் கேட்டுட்டீங்க? அவர்தான்மா எம் டி! இப்போ சங்கர் சார் வீட்டுக் கல்யாணத்துக்கே ஸ்ரீஜா ஏற்பாடு பண்ண வேண்டியிருக்கு பாருங்க! அவருக்குத் தெரியாம அணுகூட அசையாதே! அவர் நேரடியாகத் தலையிடாத விஷயங்களிலும் அவருக்கு நாலட்ஜ் இருக்கும். ஸர்வவியாபி!” என்றார்.
“சார், உங்களுக்கு யாருடைய நிர்வாகம் பிடிக்கும்? சங்கரா ஸ்ரீனியா?” என்று தொடர்ந்தாள் தர்ஷினி.
சந்திரசேகர் புன்னகைத்தார். “கோவணாண்டி காசு போடறவன் யாருன்னா ஆராய்ச்சி பண்ணிட்டிருப்பான்? எல்லாரும் ஒண்ணுதான். கம்பெனியில் ஆயிரம் எம்ப்ளாயிகளில் நான் ஒரு எம்ப்ளாயி. சங்கர், ஸ்ரீனி ரெண்டுபேருமே அது நல்லா நடக்கணும்னு உழைக்கறவங்க. நான் சங்கருடைய ரிலேட்டிவ் என்பதற்கும், கம்பெனிக்கு சம்பந்தமே கிடையாது” என்றார்.
•
படபடவென்று தேவா உள்ளே நுழைந்தார். “நீங்க கொஞ்சம் உடனே வரணும்” என்றார் மூச்சு வாங்கிக் கொண்டு.
“எங்கே சார்? என்ன விஷயம்?” என்றாள் தன்யா துள்ளி எழுந்தவளாய்.
“இராணி கந்தசாமி… அவங்க… இறந்துட்டாங்க…” என்றார் தேவா இரைப்புகளுக்கு நடுவில்.
“நான் சொல்லலை… சுப்பாமணி கொலையைப் பற்றி அவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருந்ததுன்னு” என்றாள் தர்ஷினி.