பத்துமலை பந்தம் | 43 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 43 | காலச்சக்கரம் நரசிம்மா

43. வசியமானான் வசீகரன்..!

குகன் மணியின் பத்துமலை எஸ்டேட்..!

“மயூரி..! தேஜஸை அமீர் ஆட்கள் கிட்டேருந்து மீட்டு, நம்மளைத் திருப்பி அழைச்சுக்கிட்டுப் போக தாத்தா வராரு..! நாம இனி ஒத்துமையா இருக்கணும்னு சொல்றாரு..! உன் அப்பா அம்மா கூட வராங்க..! அவங்க எல்லாரையும் தங்க வைக்க, ஏதாவது ஹோட்டல்ல ரூம் போடணும். நீ குகன்மணி கிட்டே சொல்லி, ஏற்பாடு செய்யறியா..?” –மிகவும் நல்ல பெண்ணாக, மெல்லிய குரலில் கனிஷ்கா பேச, மயூரி அவளை உற்சாகத்துடன் பார்த்தாள்.

“தாத்தா வரப்போறாரா..? நல்ல விஷயம்தான்..! குகன்கிட்டே சொல்லி நான் ஏற்பாடு செய்யறேன்..!” –என்று சொன்னவள் குகனின் அறையை நோக்கி நடந்தாள். தாத்தா, அப்பா, அம்மா இங்கே இருக்கும்போதே, குகன்மணியுடன் திருமணத்தை நிச்சயித்து விட்டால் என்ன..?

குகன்மணியின் அறைக்குள் நுழைந்தபோது, அவன் தனது எஸ்டேட் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருக்க, குனோங் அவன் அருகில் நின்று ஏதோ குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். மயூரி உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டு, குனோங் புன்னகையுடன் குகன்மணியைப் பார்த்தான்.

“டுவான்..! புவான் டதங்..!” (சார்..! மேடம் வராங்க.) என்று மலேயா மொழியில் கூற, புன்னகையுடன் மயூரியைப் பார்த்தான் குகன்மணி.

“சொல்லு மயூரி..!”

“என்னோட தாத்தா, அம்மா, அப்பா எல்லோரும் வராங்க. அவங்களுக்கு மில்லினியம் ஹோட்டல்ல ரூம் போடப்போறேன்..! உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லலாம்னுதான். அப்பா, அம்மா வர்றதால, நம்ம விஷயத்தை அவங்ககிட்டே பேசப்போறேன்..!” –மயூரி சற்றே வெட்கத்துடன் கூறினாள்..!

“உனக்கு அந்த தொந்திரவே வேண்டாம்..! உன் தாத்தா என்னோட வருங்கால தாத்தா. உன் அப்பா, அம்மாவும் என்னோட வருங்கால மாமனார், மாமியார். அதனால அவங்க ரைட் அண்ட் ராயலா என்னோட பத்துமலை எஸ்டேல தங்கலாம். எல்லாருக்கும் ரூம் இருக்கு. நான் என் மேனேஜர் கிட்டே சொல்லி, அவங்களை கோலாலம்பூர் ஏர்போர்ட்ல ரிஸீவ் செஞ்சு நேரா இங்கே அழைச்சுட்டுவர ஏற்பாடு செய்யறேன்… அவங்க இங்கே தங்கறதுதான் முறை. காரணம், உறவே இல்லாம வாழ்ந்துட்டு வர்ற எனக்கு நிறைய உறவுகள் ஏற்படப் போறது. என்னோட மைத்துனி கனிஷ்கா எப்படி இருக்கா..? கண்ணுலயே படலையே..! ரொம்ப திருந்திட வேண்டாம்ன்னு சொல்லு..! அப்புறம் நமக்கு போர் அடிக்கும்..!” –குகன் கிண்டலடித்தான்.

மயூரி, பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

“குனோங்..! நான் புவான் (மேடம்) அப்பா கிட்டே, அவங்களைப் பொண்ணு கேக்கப் போறேன்..! நீ, குமுதினி, தான் எனக்கு அப்பா, அம்மா..! போதினி என் தங்கை..! சுபாகர் என் தம்பி..! நாம குடும்பமா அவங்களை வரவேற்று மயூரியைப் பொண்ணு கேட்போம்..!” –குகன் சொன்னதும், குனோங் உற்சாகத்துடன் அகன்றான்.

றுநாள் காலை..!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்து இறங்கினர், நல்லமுத்து குடும்பம். நல்லமுத்து, அவர் மகள் குணசுந்தரி, அவள் கணவர் சரவணபெருமாள், தனது மகன் கார்த்திக்குடன் அத்தை தேவசேனா, நல்லமுத்துவின் மகன் பாண்டிமுத்து, அவன் மனைவி சத்தியவதி ஆகிய ஏழு பேரும் வந்து இறங்கியவுடன், குகன்மணியின் மானேஜர், அவர்களை இரு கார்களில், பத்து மலை எஸ்டேட்டுக்கு அனுப்பி வைத்தான்.

குகன்மணி அவர்களைத் தடபுடலாக வரவேற்றான். குகன்மணியை மயூரி அனைவருக்கும் அறிமுகம் செய்வித்தாள்.

“தாத்தா..! குகன்மணி எனக்கு மாமா..! மயூரி அக்காவை அவர் கட்டிக்கப் போறாரு..!” –கனிஷ்கா அனைவரிடமும் அறிவிப்புச் செய்ய, அங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

“நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நாளைக்கு நல்ல நாள்..! நான் முறைப்படி நாளைக்குப் பெண் கேட்கிறேன்.! இப்ப லஞ்ச் சாப்பிட்டுட்டு எல்லோரும் ஓய்வு எடுங்க. வேணுமின்னா, பத்துமலை கிட்டே தான் இருக்கு. நீங்க போயி தரிசனம் செஞ்சுட்டு வாங்க..! மயூரி அவங்களை அழைச்சிட்டுப் போ..!” –குகன்மணி கூற, கனிஷ்கா குறுக்கிட்டாள்.

“நீங்க மயூரியோட ஜாலியா பேசிட்டு இருங்க. நான் அவங்களை அழைச்சுக்கிட்டு பத்துமலைக்குப் போயிட்டு வரேன்..!” –கனிஷ்கா கூற, மயூரி அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

“சிரிக்கிறியாடி மயூரி..? உனக்கு ஆப்பு வைக்கத்தான், நான் அவங்களை அழைச்சுக்கிட்டுப் போறேன்..!” –தனக்குள் கூறிக்கொண்டாள்.

திய உணவுக்குப் பிறகு, அனைவரும் பத்துமலைக்குப் புறப்பட்டார்கள். இரண்டு காரில் எட்டுப் பேரும் கிளம்ப, தேஜஸ் மட்டும் இல்லாதது அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.

பத்துமலையை அடைந்தவுடன், தரிசனத்திற்குப் புறப்பட்டவர்களை கனிஷ்கா தடுத்தாள்.

“தாத்தா..! உங்களை இங்கே அழைச்சுக்கிட்டு வந்தது, பத்துமலை தரிசனத்திற்காக இல்லை. மூன்றாவது நவபாஷாணச் சிலை இருக்கிற இடத்தை நான் கண்டுபிடிச்சுட்டேன். அது இங்கேதான் ‘தகான் மலைங்’கிற மலையோட உச்சில, ஒரு குகையில் இருக்கு. மயூரியை அழைச்சிக்கிட்டு போய் குகன்மணி அவளுக்குக் காட்டினான். நாம விடக்கூடாது..! நாம எப்படியாவது அந்தச் சிலையைக் கைப்பற்றி பள்ளங்கிக்கு எடுத்துப் போகணும்.” –கனிஷ்கா கூறினாள்.

“சிலையைக் கொடுத்தாத்தான், மயூரியைக் கட்டித் தருவேன்னு கண்டிஷன் போடலாமா..?” –மயூரியின் அப்பா பாண்டிமுத்து கேட்டார்.

“நீங்க பெத்திருக்கிறது ரொம்ப நேர்மை மாமா..! அதுக்கெல்லாம் ஒத்துக்காது. நான் வேற ஒரு ஐடியா வச்சிருக்கேன்.” என்றவள் குணசுந்தரியைப் பார்த்தாள்.

“அம்மா..! அலங்காரிகிட்டே நான் கேட்ட அந்த வசிய மருந்து கிடைச்சுதா..?” –கனிஷ்கா கேட்க, தலையசைத்தாள் குணசுந்தரி.

“என்னோட ஹாண்ட் பாக்ல தயாரா இருக்கு..!” –தனது ஹாண்ட் பாகைத் தட்டிக் காட்டினாள் குணசுந்தரி.

“எல்லோரும் கேளுங்க..! என்னோட பிளான் இதுதான்..! இந்த வசிய மருந்தை இன்னைக்கு நைட் குகன்மணி குடிக்கப் போற பால்ல கலந்துடுவேன். நாளைக்கு என்னையே சுத்திச் சுத்தி வருவான். நான் சொல்றதைக் கேட்பான். அவன் கையாலேயே சிலையை பேக் பண்ணிக் கொடுப்பான். அதைக் காட்டி, அபி கிட்டேருந்து தேஜஸை மீட்கணும். அப்புறம் குகன்மணியை வச்சே அபி கதையை முடிக்கிறோம்..! கொலைப்பழி குகன் மேல..! நாம சிலையோட பள்ளங்கி மலைக்குக் கம்பி நீட்டறோம். கொஞ்ச நாளைக்கு மயூரி, குகனை நினைச்சுக் கண்ணீர் சிந்துவா. அப்புறமா அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வச்சிடலாம்..!” –கனிஷ்கா கூற, சரவணபெருமாள் அவளை பிரமிப்புடன் பார்த்தார்.

“கனிஷ்கா..! நீ சினிமாவுக்குப் பதிலா அரசியலுக்குப் போயிருக்கலாம்..!” –சரவணபெருமாள் கூற, தாத்தா நல்லமுத்து சிரித்தார்.

”இப்பக்கூட அவள் சேரலாம்..! பாண்டிமுத்துவவிட வேகமா முன்னேறுவா..!” –என்றார் நல்லமுத்து.

“எல்லோரும் பேசாம தரிசனம் செஞ்சுட்டு, எஸ்டேட்ல போய் ஒண்ணுமே நடக்காத மாதிரி இருங்க. என்னோட திட்டம் தன்னால நிறைவேறும்..!” –கனிஷ்கா கூற, அனைவரும் தலையசைத்தனர்.

ன்றிரவு..!

குமுதினி ஒரு குவளையில் பாதாம் பாலை ஊற்ற, தற்செயலாக அந்தப் பக்கம் வருபவள் போல, அங்கே தோன்றினாள் கனிஷ்கா..!

“குமுதினி..! எனக்குக் கொஞ்சம் வெந்நீர் வேணும்..! ஜலதோஷமா இருக்கு..!” –கனிஷ்கா கேட்க, குமுதினி கெட்டிலை ஆன் செய்து அதில் தண்ணீரை ஊற்றினாள்.

அந்த நொடிப்பொழுதில் குணசுந்தரி கொண்டு வந்திருந்த, ‘சம்போக கோரை’ வசிய மருந்தை, குகனுக்காக வைத்திருந்த பாதாம் பாலில் கலந்தாள் கனிஷ்கா. சம்போக கோரை ஒரு மனிதனின் சித்தத்தைக் கலக்கி, ஒரு குறிப்பிட்ட நபரின் மீது அதீத மையலை ஏற்படுத்தும். இம்மாதிரி வசியங்களைச் செய்வதில் அலங்காரி மிகவும் திறமைசாலி. அவள் கொடுத்த சம்போக கோரைத் துகள்கள் பாலில் கரையும் வரை, அங்கேயே இருந்த கனிஷ்கா, குமுதினி கொடுத்த வெந்நீரை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்றாள். ஆவலுடன் தத்தம் அறைகளில் இருந்து எட்டிப் பார்த்த தனது குடும்பத்தினரை நோக்கி வலதுகை கட்டை விரலை உயர்த்தினாள்.

இரண்டு வெள்ளிக் குவளைகளில், பாதாம் பாலை நிரப்பி, ஒரு tray-யில் வைத்த குமுதினி, அந்த பக்கமாக வந்து போதினியை அழைத்தாள்..!

“போதினி..! முதலாளி அறைக்கு இந்த பாதாம் பாலைக் கொண்டு போய்க் கொடு..!” –குமுதினி கட்டளையிட, பால் குவளைகள் இருந்த டிரேயுடன் போதினி, குகனின் அறைக்குள் நுழைவதை குரூரத் திருப்தியுடன் பார்த்தாள் கனிஷ்கா..!

“நாளை முதல் குகன்மணி இவளது செல்ல நாய்க்குட்டி..!” –சிரித்தபடியே தனது அறைக்கதவை மூடிக்கொண்டாள் கனிஷ்கா.

“நல்லமுத்து தாத்தா..! நான் உங்கள் பேத்தியைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்..!” –குகன் மணி கூற, மயூரி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“அதற்கு எங்க மயூரி கொடுத்து வைத்திருக்கணும்..!” –நல்லமுத்து கூற, குகனோ ஆசையுடன் கனிஷ்காவையே பார்த்தான்.

“நான் மயூரியைச் சொல்லலை..! உங்க பேத்தி கனிஷ்காவைச் சொன்னேன்..! எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு..! நான் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்..!” –குகன்மணி கூறியதும், திடுக்கிட்டுப் போனாள் மயூரி.

“குகன்..! என்னாச்சு உங்களுக்கு..? ஜோக் அடிக்கிறீங்களா..?”

“உன்கிட்டே நான் எதுக்கு ஜோக் அடிக்கணும்..? எனக்குக் கனிஷ்காவத் தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்..!” –குகன்மணி கூற, விக்கித்துப் போய் நின்றாள்.

‘பரவாயில்லை..! இந்த அலங்காரி பலே கைகாரிதான்..!’ –மகிழ்ந்து போனாள், கனிஷ்கா..!

“குகன்மணி டார்லிங்..! நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே… எனக்கு மூணாவது நவபாஷாணச் சிலை வேண்டும். அதை வச்சு என்னோட தம்பி தேஜஸைக் காப்பாத்தணும். அதுக்கப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“ஷ்யூர் டார்லிங்..! உனக்கில்லாத சிலையா..? சிலையை உனக்குத் தராம யாருக்குத் தரப்போறேன்..? முதல்ல என் மச்சானைக் காப்பாத்திட்டு அப்புறமா, நாம கல்யாணம் கட்டிக்கலாம்.” –குகன் கூற, அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல், கண்ணீர் மல்க, தனது அறையை நோக்கி ஓடினாள், மயூரி..!

“ஓடிப்போடி..!” –தனக்குள் கூறிய கனிஷ்கா, அபியை போனில் அழைத்தாள்.

“அபி..! சிலை இருக்குமிடத்தைக் கண்டுபிடிச்சுட்டேன். நீ தேஜஸை அழைச்சுக்கிட்டு வந்தால், அந்தச் சிலைக்கு உண்டான பணத்தை உனக்குக் கொடுக்கறேன். இப்ப கோடீஸ்வரன் குகன்மணி என்னோட கஸ்டடியில். நாளைக்கு மதியம் நாம் தனி விமானத்துல தகான் மலைக்கு போறோம். அதுக்குள்ள நீ தேஜஸோட இங்கே வந்து சேரு..!” –கனிஷ்கா ஏற்றத்துடன் பேச, அபி, சரி என்று சொல்லிவிட்டு போனைக் கட் செய்தான்.

குகன்மணியின் சொந்த விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. விமானத்தைச் செலுத்துவதற்கு முன்பாக, ஒருமுறை வெளியே வந்து, விமானத்தில் நோட்டம் விட்டான்.

நல்லமுத்து, தேவசேனா, பாண்டிமுத்து, சத்தியதேவி, குணசுந்தரி, சரவணபெருமாள், கனிஷ்கா, தேஜஸ், கார்த்திக், அபி, மற்றும் அமீர் ஆகியோர் அமர்ந்திருக்க, மயூரி தனியாக பின்பாக அமர்ந்திருந்தாள்.

மயூரியைப் பார்த்ததும், தேஜஸின் முகம் கடுமையாகியது.

“கனிஷ்கா..! நம்மோடு எதற்கு அந்த மயூரி வரணும்..? அவளை இறக்கி விடு..! அவள் வந்தால் நான் பிளேனை ஓட்ட மாட்டேன்..!” –காட்டத்துடன், கூற, மனது கனமாக, மயூரி தான் இருந்த அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து விமானத்தை விட்டு இறங்கினாள்.

‘குகன்மணி ஏன் என் விஷயத்தில் இப்படிக் கடுமை காட்டுகிறான்..? நான் என்ன தவறு செய்தேன்..? போகர் பள்ளியில் என் மீதுள்ள காதலைத் தெரிவித்தவன், என்னைக் காலமெல்லாம் தனது இதயத்தில் சுமப்பேன் என்று வாக்குக் கொடுத்தவன், எதற்காக என்னைத் திடீரென்று வெறுக்கிறான்..?

விமான நுழைவாயிலை நெருங்கியவள், ஒரு கணம் தனது குடும்பத்தினரைத் திரும்பி பார்த்தாள். அனைவரின் முகத்திலும் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பார்க்கப் போகும் பேராசை தெரிந்தது. இவளது அப்பா, அம்மாகூட இவள் போவதைப் பொருட்படுத்தவில்லை. மூன்று மாணவிகள் கேவலப்படுத்தப்பட்டு இறப்பதற்குக் காரணமாக இருந்த அம்மா சத்யவதியின் முகத்தைப் பார்ப்பதற்கே மயூரிக்கு அருவருப்பாக இருந்தது. விமானத்தை விட்டு இறங்கியவள், வேகமாக நடக்கத் தொடங்கியவள், தனக்கு பின்பாக விமானம் டேக் ஆஃப் ஆவதைக் கண்டு திரும்பி பார்த்தாள்.

இவளது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் மயூரி..!

-அடுத்த சனிக்கிழமை நிறைவடையும்….

ganesh

1 Comment

  • Wow… Great writing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...