தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 9 முனை போட்டி

 தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் :   9 முனை போட்டி

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக் கப்பட உள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இதுவரை அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்ட சபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இப்போதும் கூட அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருகிறது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தது 80%, அதாவது 10 ஆயிரம் இடங்களில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. அதேபோல 21 மேயர் இடங்களையும் தானே வைத்துக் கொள்ள தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாகக் கூடுத லாகத் துணை மேயர் பதவிகளைக் கூட்டணிக்குக் கொடுக்க தி.மு.க. மசெக்கள் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ள தாகக் கூறப்படுகிறது. அதேபோல சி.பி.எம். சி.பி.ஐ., வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா 2 வார்டுகளை மட்டுமே ஒதுக்க தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பா.ஜ.க. முதலில் 50 சதவிகித வார்டுகளையும், 5 மேயர் பதவிகளையும் கேட்டது. ஆனால் அ.தி.மு.க. 5 சதவிகித வார்டுகளை மட்டுமே தரத் தயாராக இருந்தது. 30 சதவிகித இடங்கள் வரை பா.ஜ.க. இறங்கி வந்த நிலையில் அ..தி.மு.க. அதிகபட்சம் 10 சதவிகித வார்டுகள் மட்டுமே தருவோம் என்றது. இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்தது.

தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அ.தி.மு.க. கூட்டணி யில் இருந்து பா.ஜ.க. வெளியேறி இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இப்படித் தனித்து போட்டி, கட்சியை பலப்படுத்த இது உதவியாக இருக்கும். மற்றபடி அடுத்த லோக்சபா தேர்தலில் மீண்டும் கூட்டணி தொடரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு இடையே நேரடிப் பலப்பரிட்சை உருவாகி இருக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க. விலகி யிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இந்த இரு கட்சிகளைத் தவிர பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., ஆகிய 6 கட்சிகள் தனித்தனியாகக் களம் இறங்கியுள்ளன. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அமைப்பும் தனியாக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.

இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இது தவிர கட்சிகள் சார்பில் போட்டியிட சீட் கிடைக்காத வர்கள் சுயேட்சையாக களம் இறங்கவும் வாய்ப்புள்ளது.

சில வார்டுகளில் செல்வாக்கு மிக்க சுயேட்சைகள் களம் இறங்கியுள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்குப் பலமுனை போட்டி ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

கட்சி ரீதியாகப் போட்யிடுபவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களைச் சமாளிக்க வேண்டி இருப்பதோடு செல்வாக்கு மிக்க உள்ளூர் சுயேட்சை களையும் சாமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல வார்டுகளில் கட்சி வேட்பாளர்களே கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

பலமுனை போட்டி உருவாகி இருப்பதால் பிரசாரமும் இப்போதே களை கட்ட ஆரம்பித்துவிட்டது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளராகக் களம் இறங்க வாய்ப்பு இருப்பவர்கள் இப்போதே தெருத்தெருவாகச் சென்று ஆதரவு திரட்டச் சென்றுவிட்டனர்.

பலமுனை போட்டி காரணமாக இந்தத் தடவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை  இல்லாத அளவுக்கு வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட் டிருகிறது. சுயேட்சைகள் கணிசமான வாக்குகளைப் பிரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

நோட்டா வாக்குப் பதிவு இல்லாததால் கட்சிகள்மீது அதிருப்தியில் இருப்ப வர்கள் தங்கள் பகுதி சுயேட்சைகளுக்கு வாக்களிக்கவே விரும்புவார்கள். எனவே சுயேட்சைகளுக்குக் கிடைக்கும் வாக்குகள், கட்சி வேட்பாளர்களின் வெற்றியைப் பதம்பார்த்துவிடும் என்று கருதப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் கடைசியாக நடந்த கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. அதிக வெற்றியைப் பெறவில்லை. மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 160க்கு மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மற்ற மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் தற்போது தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் அரசியல் களம் மற்றும் சூழ்நிலைகள் மாறுபட்டுள்ளன. தி.மு.க. சட்டசபை தேர்தலிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும்பாலான வெற்றியை ருசித்திருந்தது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்க தி.மு.க.வில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் வாக்குகள் பிரிவதாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏற்பட்ட குளறுபடியாலும் நாம் வெற்றி பெற்றுவிட முடியும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். என்றாலும் அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க. தரப்பிலும் பதிலடி ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் தீவிரப் போராட்டமாக மாறி இருக்கிறது.

ஒவ்வொரு வார்டிலும் எத்தனை முனைப் போட்டி இருக்கும் என்பது இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும் அப்போதுதான் வாக்குள் எந்தெந்த வார்டில் எவ்வளவு சிதற வாய்ப்புள்ளது என்பது தெரியவரும்.

அதற்கேற்ப பிரசார யுக்திகளை வகுப்பதற்கு தி.மு.க. தரப்பில் திட்டமிடப் பட்டுள்ளது. தீவிர பிரசாரத்துக்கு சுமார் 10 நாட்களே உள்ளன. எனவே அந்தப் பத்து நாட்களும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் அனல் பறப்பதாக இருக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...