பத்துமலை பந்தம் | 38 | காலச்சக்கரம் நரசிம்மா
38. தகான் மலை உச்சியில்..!
பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த மலைச்சரிவுகளில், சிதறியிருந்த விளக்குகள் பொருத்தப்பட்ட காட்ஜெகள், மலைமகள் அணிந்திருந்த ஹாரம் போல மின்ன, அதை ஜன்னல் வழியாக ரசித்தபடி நீண்டிருந்தான் மிதுன். அவன் அருகில் நின்றிருந்த கனிஷ்கா, அந்தக் காட்சிகளை ரசிக்கும் மனநிலையில் இல்லை.
காதலன் மிதுன்ரெட்டியுடன் தங்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, குகன்மணி எஸ்டேட்–டில் இருந்து கிளம்பி வந்திருந்தாள் கனிஷ்கா. மிதுன் மற்றும் நட்சத்திர இரவு விழாக் குழுவினருடன், சனிக்கிழமை இரவே டாமன் தேசியப் பூங்காவில் வந்து தங்கியிருந்தாள்.
மயூரியும், குகன்மணியும் எப்போது வரப்போகிறார்கள் என்பதை யோசித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் ட்ரெக்கிங் கிளம்புவதற்குள், இவர்களும் தயாராகி அவர்களைப் பின்தொடர்ந்து தகான் மலையில் ஏற வேண்டும்..!
தனக்கே உரிய புத்திசாலித்தனத்தோடுதான், இங்கே, ஸ்டீப் ஸ்லோபஸ் ரிசார்ட்டில் இடம் போட சொல்லியிருந்தாள். பாகங் மாகாணத்திலே மிகவும் காஸ்டலியான ரிசார்ட் இதுதான் என்பதால், குகன்மணி இங்கேதான் வந்து தங்குவான் என்று யூகித்திருந்தாள். தகான் மலைக்குச் செல்பவர்கள், டாமன் நெகாரா தேசிய பூங்கா வழியாகத்தான் செல்ல முடியும். இரவை இங்கே கழித்துவிட்டு, காலையில்தான் ட்ரெக்கிங் புறப்பட முடியும். எனவே, குகன்மணியும், மயூரியும் நிச்சயம் அங்கேதான் வருவார்கள் என்று ஸ்டீப் ஸ்லோபஸ்சில் இடம் போடச் சொல்லியிருந்தாள்.
அறைக்கு வந்தவுடன், மிதுனிடம் வாக்கிங் போவதாகச் சொல்லிவிட்டு, ரிசப்ஷனில் சென்று விசாரித்தாள். தனது கசின் மயூரி என்பவளுக்காகத் தாங்கள் காத்திருப்பதாகச் சொல்ல, ரிஷப்ஷனிஸ்ட் சிஸ்டெமில் பார்த்துவிட்டு, மயூரி, குகன்மணி என்கிற பெயரில் இரு காட்டேஜ்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூற, தனது அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து போனாள் கனிஷ்கா.
குளிர்க் காற்று மலைச்சரிவுகளில் மோதி காட்டேஜுகளில் தங்கியிருந்தவர்களை நடுங்க செய்தது. தனது முகத்தில் மோதிய குளிர் காற்றை கண்களை மூடி உள்வாங்கினான் மிதுன்ரெட்டி. அறையின் அழைப்பு மணி ஒலிக்க, மிதுன் சென்று கதவைத் திறந்தான். வெளியே மங்கி கேப் அணிந்து மார்த்தாண்டம் நின்றிருந்தார்.
“நாளை விடியலில் ஐந்து மணிக்கு நாம ட்ரெக்கிங் கிளம்பறோம், மிதுன் சார். கரெக்டா ரெடியாயிடுங்க..! நம்மளோட கெய்டு ரெண்டு பேரும், காவலர்கள் ரெண்டு பேரும் வராங்க..!” —ஓரக்கண்ணால் உள்ளே நின்றிருந்த கனிஷ்காவைப் பார்த்தார், மார்த்தாண்டம். அவளோ அவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
“திமிர் பிடிச்சவ..!” –என்று முணுமுணுத்தபடி அங்கிருந்து அகன்றார்.
“அந்தாள் இஷ்டப்படி எல்லாம் கிளம்ப முடியாது..! மயூரியும், குகன்மணியும் கிளம்பின பிறகு நாம் அவங்க பின்னாடியே போகணும்..!” —கனிஷ்கா கூறிய அதே சமயம், ரெசார்ட்டின் உள்ளே ஒரு கரிய நிறக் கார் நுழைந்தது.
ப்ரோடான் சாகா..!
குகன்மணியின் ஆடம்பரக் கார்..! 666 என்கிற அந்த வண்டியின் நம்பரைப் பார்த்ததுமே, அவளுக்கு புரிந்து போனது. குகன்மணியும், மயூரியும் வந்து விட்டார்கள். சட்டென்று, ஜன்னல் பக்கத்தில் இருந்து விலகி திரைக்குப் பின்பாக நின்று வெளியே நோட்டம் விட்டாள். காரை விட்டு இறங்கிய குகன் மறுபக்கம் வந்து, மயூரிக்குக் கதவைத் திறந்துவிட, சட்டென்று திரும்பி இவர்கள் தங்கியிருந்த அறையின் பக்கமாக நோக்கினான்.
தான் நின்றிருந்த இடத்திலிருந்து இன்னும் சற்றுப் பின்வாங்கினாள் கனிஷ்கா. மிகவும் எச்சரிக்கையான் பேர்வழி இந்த குகன்மணி..! இவளைப் பார்த்தாலே, இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்கு செய்துவிடுவான். அவன் இவளைப் பார்த்து விட்டால் காரியம் கேட்டு விடும்.
“மிதுன்..! நீயும் மயூரி கண்ணுலயும், அந்த குகன்மணி கண்ணுலயும் படாம வரணும். காரணம் நான் உன்கூட இருக்கேன்னு அவங்களுக்கு தெரியும். அவங்க உன்னை பார்த்தல், நானும் இஙகேதான் இருக்கேன்னு யூகிச்சுடுவாங்க..!” —கனிஷ்கா கூறினாள்..!
“Whatever யு சே, ஸ்வீட்ஹார்ட்..!” —மிதுன் கூறினான்.
டைனிங் ஹால் சென்றால், ஒருவேளை குகன்மணியையும், மயூரியையும் பார்க்க நேரிடுமோ, என்று இருவரும் தங்கள் அறைக்குள் காட்டேஜினுள் முடங்கி கொண்டு இருந்தனர். இரவு உணவையும் அறைக்கே வரவழைத்து விட்டார்கள்.
விடியல் நான்கு மணிக்கே எழுந்து, அவசரமாகத் தயாராகிவிட்டு, மிதுனையும் எழுப்பி தயாராகச் செய்தாள் கனிஷ்கா! இதுவரை இவள் நினைத்தபடியே அனைத்துமே நடக்கிறது. இனி மயூரியும், குகன்மணியும் இவர்கள் புறப்படும் அதே நேரத்தில் ட்ரெக்கிங் கிளம்பினால், இவளுக்கு வசதியாக இருக்கும். ஜீன்ஸ், டாப்ஸ் மற்றும் ஒரு துப்பட்டாவை தலையின் மீது போர்த்திக்கொண்டிருந்த, கனிஷ்கா ஜன்னலின் பக்கமாக சென்று மூடியிருந்த கதவை திறந்தாள்.
சரியாக பனிபடர்ந்த விடியலில் குகன்மணியின் புரோட்டான் சாகா கார் தனது ஹெட்லைட்டில் இருந்து வெளிச்சத்தை உமிழ, காரில் மயூரி, குகன் பக்கத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
“மிதுன்..! நாமும் கிளம்பலாம்..! மயூரியும் குகன்மணியும் புறப்படறாங்க.” —என்று பதட்டத்துடன் கிளம்பினாள், கனிஷ்கா.
“நீ கவலைப்படாதே, கனிஷ்கா..! யார் எப்போ கிளம்பினாலும், மேரோபாங்கிற இடத்துல எல்லோரும் காத்திருக்கணும். கொடிய மிருகங்களும், வழுக்குப்பாறைகளும் இருக்கிறதால, பேட்ச் பேட்ச்சாத்தான் ட்ரெக்கிங் போக அனுமதிப்பாங்க. எப்படியும், நாம் மயூரியை அவளுக்குத் தெரியாம எளிதா பின்தொடரலாம்” —என்று மிதுன் அவளை ஆஸ்வாசப்படுத்த, சரியாக மார்த்தாண்டம் சார் எட்டிப்பார்த்தார்.
“கிளம்பலாமா..?”
மிதுன்ரெட்டியும், கனிஷ்காவும் அவசரமாகப் புறப்பட்டனர்.
மிரோப்பா—
குனுங் தகான் மலையின் சிகரத்திற்குப் பயணிப்பவர்கள் இங்கேதான் குழும வேண்டும். இங்கிருந்து ட்ரெக்கிங் செல்பவர்கள், அணி அணியாகப் பிரித்து அனுமதிக்கப்படுவார்கள். புதிதாக வருபவர்களுக்கு மட்டும் கெய்டு கிடைக்கும்.
தங்கள் காரிலிருந்து இறங்கியதுமே, பார்க்கிங் பகுதியில் குகன்மணியின் ப்ரோடான் சாகாவை பார்த்துவிட்டாள்.
அவள் கண்களில் வரிசையின் முன்பாக நின்றிருந்த குகன்மணியும், மயூரியும் தென்பட்டனர்.
“மிதுன்..! அதோ, அங்கே நிக்கிறாங்க…! நாம எப்படியாவது அந்த அணியில் சேர்ந்துக்கணும்… ப்ளீஸ், ஏற்பாடு செய்யேன்..!” —என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, இவர்களுக்கு முன்பாக வரிசையில் நின்ற நான்கு பேர்கள், அந்த அணியில் இணைந்து கொள்ள விரைந்தனர்.
அவர்களை ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினான்.
“இந்த அணியில இன்னும் ரெண்டு பேர்தான் போக முடியும்..!” —என்றவுடன், நண்பர்களாக வந்திருந்த நான்கு பேரும் பின்வாங்கினர்.
“யாரவது இரண்டு பேர் வாங்க..!” —என்று டாமன் நெகாரா தேசிய வன அதிகாரி அழைக்க, சட்டென்று மிதுன்ரெட்டியின் கையை பற்றி இழுத்தபடி அந்த அணியில் சேர்ந்து கொண்டாள். முன்னால் நின்றிருந்த மயூரியும், குகன்மணியும் இவளைப் பார்க்கவில்லை. அவர்கள் திரும்பிப் பார்க்கக்கூடும் என்பதால், தனது துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக்கொண்டு முகத்தைக் கூடிய வரையில் மறைத்தாள். கனிஷ்காவின் விழிகள் அவர்களது ஒவ்வொரு செய்கையையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன.
அதிகாரி பச்சைக் கொடியை ஆட்டியதும், முன்னால் நின்றிருந்த மயூரியும், குகன்மணியும் நடக்க தொடங்கினர்.
அவர்களைச் சற்று முன்னேறவிட்டு, பிறகு கழுத்தில் ஊசலாடிய பைனாகுலர்ஸ் மூலம் அவர்களை கண்காணித்தபடி நடந்தாள், கனிஷ்கா.
*
முன்னால் சென்று கொண்டிருந்த குகன்மணி, மயூரியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
“மயூரி..! நாம் தகான் மலை உச்சிக்குப் போக வேண்டியதில்லை. இங்கிருந்து சுங்கை ரேலான்னு ஒரு இடம் வரும். தொடர்ந்து கோலா ஜுராம், கோலா லூயி, லதா லூயி, கேம் கோர், பெர்மாத்தாங், குபாங், பெலுமுட்ன்னு வரிசையா இடங்களை பாப்போம். அடுத்தது வர போகர் சாலையை இப்ப போன்சாய்ன்னு கூப்பிடறாங்க. அங்கேதான், நாம யாருக்கும் தெரியாம, ட்ரெக்கிங் பாதையின் வலது பக்கம் திரும்பி நடக்கணும். நாம போற பாதையில பெரிய பள்ளத்தாக்கு இருக்கு. வழுக்கு பாறைகள் வேற நிறைய உண்டு. பார்த்து நடக்கணும். பயப்படாதே..! நான் கூட இருக்கேன்..!” — குகன்மணி கூறினான்.
“பள்ளங்கி மலையில இருந்து இவ்வளவு தூரம் போகர் வந்து மூன்றாவது சிலையை ஒளிச்சு வச்சிருக்கார்ன்னா அவருக்கு எவ்வளவு எச்சரிக்கை உணர்வு இருந்திருக்கணும்..!” —மயூரி வியந்தாள்.
“என்ன பிரயோஜனம்..? இங்கேயும், சதிகாரங்க காலடி வச்சிருக்காங்களே..!” —குகன்மணி கூறியபடி திடீரென்று திரும்பி பார்த்தான். கண்களில் பைனாகுலரைப் பொருத்தி அவர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த கனிஷ்கா, சட்டென்று திரும்பி, மலைக்காட்சிகளை பார்ப்பது போன்று பாவனை செய்ய, மிதுன்ரெட்டியும், அவளுக்காக இருந்த இடத்திலேயே நின்றான்.
“போன்சாய்ங்கிற போகர் சாலை வந்ததும், நடக்க முடியாம களைச்சுப் போய் உட்காருவதைப் போல, நாம் உட்காருவோம். நம்ம பின்னாடி வர பதினாறு பேரும், நம்மளைக் கடந்து போனதும், நாம போகர் சாலை பாதையில நடப்போம்.” —குகன் கூற, தலையசைத்தாள் மயூரி.
மூன்றாவது நவபாஷாணச் சிலையை பார்க்கப் போகிற பரவசம் அவள் முகத்தில் நன்கு தென்பட்டது.
“குகன்..! எனக்கு ஒரு சந்தேகம்..! போகர் ஏன் ரகசியங்களை மறைக்க இம்மாதிரி மலைப்பிரதேசங்களைத் தேர்ந்தெடுத்தார்..?” —மயூரி வினவினாள்.
“வீட்டுல தவழுகிற குழந்தைகள் கிட்டேருந்து, பினாயில், ஆசிட் போன்ற பாதாளப் பொருட்களை உயரே வைக்கிறதில்லையா..? எனவேதான் சித்தர்களும், ஆபத்தான ரகசியங்களை மக்கள் கைக்குக் கிடைக்காதபடி உயரே, மலை மேல வச்சாங்க. மனுஷங்க காலடி படாத இடம், மலை உச்சிகள் தானே…! இந்த மலேசிய மலைகள் எல்லாம் இன்னும் மனுஷன் காலடி படாமத்தான் இருக்கு… இந்த ட்ரெக்கிங் பாதையை தவிர. 1802வுக்கு பிறகுதான், சைனாக்காரன் முதன்முதலா இந்த மலைகளில் என்ற ஆரம்பிச்சான். அதுவரையில்,இங்கே யாருமே வந்தது கிடையாது..!” —குகன் சொல்ல, மயூரி ஆச்சரியத்துடன் அவன் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் .
நீண்ட நடைக்குப் பிறகு, போகர் சாலை என்கிற போன்சாய் பகுதிக்கு வந்தார்கள்.
“மயூரி..! இதோ வரப்போற முகாம்தான் போகர் சாலை என்கிற போன்சாய். போகர் நடமாடிய இடம். அவர் தங்கிய இடம் எல்லாம் இதுதான். மூணாவது நவபாஷாணச் சிலை இங்கேதான் இருக்கு. !” — குகன் கூற, மயூரி பரபரப்படைந்தாள்.
“என்னால நடக்கவே முடியலை..! My legs are finding me too heavy to carry..!” —என்று அரற்றியபடி பாறை ஒன்றில் அமர்ந்துகொண்டாள், மயூரி. அவள் அருகில் அமர்ந்துகொண்ட குகன்மணி, அவளிடம் கிசுகிசுத்தான்.
“நம்ம பின்னாடி வர பதினாறு பேரும் நம்மைத் தாண்டிப் போனதும், நாம் புறப்படலாம்..!” —என்றபடி தன்னைப் பின்தொடர்ந்து நடப்பவர்களைக் கவனித்தான். அவர்கள் தொடர்ந்து நடக்க, குகன்மணி தலைகளை எண்ணத் தொடங்கினான்.
வரிசையில் கடைசியாக வந்துகொண்டிருந்த, கனிஷ்கா இதைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.
1 Comment
கற்பனை புதினமாக இருந்தாலும், இடங்களின் பெயர்கள் சரியாக அமைந்தால் கூடுதல் சிறப்பு. Taman Negara இதை தாமான் நெகாரா என்று எழுத வேண்டும். Gunung என்பதை குனோங் என்றே உச்சரித்து எழுத வேண்டும். கூடுதல் தகவல்கள் சில: பகாங் மாநிலத்தில் இருக்கும் தாமான் நெகாராவின் குனோங் தகானுக்கு செல்ல வேண்டுமானால் முதலில் காவல் நிலையத்தில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தாமான் நெகாராவில் இருக்கும் வன காவலர் நிலையத்தில் பெயர்கள், கொண்டு செல்லும் உடமைகள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும் (கொண்டு செல்லும் அத்தனைப் பொருட்களையும் கீழே கொண்டு வர வேண்டும். குப்பைகளையும் ப்ளாஸ்டிக் பொருட்களையும் வனத்தில் வீசி விட்டு வந்தால் அபராதம் உண்டு). அடுத்து தனியே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. கட்டாயம் பழங்குடி வழிகாட்டிகள் உடன் வருவார்கள். அவர்களுக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். சுமார் 5-6 நாட்கள் வரை நீடிக்கும் பயணத்தில் காட்டினுள் தொலைந்து போகாமல் இருக்கவும், யானைகளின் வழிதடம் அறிந்து சொல்லவும் பழங்குடி இனத்தவர்களான வழிகாட்டிகள் அவசியம் தேவை. கீழே இறங்கிய பின்னரும் வன காவலர்களிடம் முறையாக அறிவித்து பின்னரே அங்கிருந்து கிளம்ப முடியும்.