திருக்குறளார் எனும் ஆன்றவிந்த சான்றோர்

 திருக்குறளார் எனும் ஆன்றவிந்த சான்றோர்

“சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்” – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தன் பேச்சின் ஊடாக, திருக்குறளார் வீ.முனிசாமி அடிக்கடிச் சொல்லும் வார்த்தை இது.

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை – வீரம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். தங்கள் குலதெய்வ மான முனீஸ்வரன் பெயரையே இவரது பெற்றோர் இவருக்குச் சூட்டினர்.

திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்திருந்தார்.

1935ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய குறளாரின் குறள் பரப்பும் பணி அரை நூற்றாண்டையும் கடந்தது.

அக்காலத்தில் புராண, இதிகாச நூல்கள் சோறு, குழம்பு போலவும் திருக் குறளை ஊறுகாய் போலவும் வைத்திருந்தனர். இதனை மாற்றவேண்டும் என்பதை தம் அடிப் படை நோக்கமாகக் கொண்ட திருக்குறளார், இதில் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன் பாட்டில் இருக்கவேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். பாமரர் களும் புரிந்துகொள்ளும் வகையில் இவரது பேச்சில் நகைச்சுவை இழை யோடியது.

“இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும். ரொம்ப வருடங் களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது. இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே பத்து வருடங்களுக்கு முன்பு அவர் லட்சாதிபதியாக இருந்தார். இப்போது, எல்லாம் செலவழித்து ஏழையாகிவிட்டார். இது அழியும் செல்வம். ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் பத்து வருடங் களுக்கு முன்பு எம்.ஏ. பாஸ் செய்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகி எஸ்.எஸ். எல்.சி. ஆகிவிட்டார். என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.”

‘கேடில் விழுச்செல்வம்’ எனும் குறளுக்கு, திருக்குறளார் அளித்த எளிய விளக்கம் இது.

அதே போல், “எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக் கூடாது. எந்த வருடத்தில் பிறந்தீர்கள் என்று கேட்கலாம். எத்தனை வருடங்கள் இருக் கலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாது. நீங்க எப்போது போறதாயிருக் கீங்க என்றும் கேட்டுவிடக்கூடாது.”

திருக்குறளாரின் பேச்சு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இலக்கியம், இலக்கணம் என்றாலே முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட திருக்குறளாரின் பேச்சின் ரசிகரானார்கள். வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது.

ஈ.வெ.ராமசாமி , பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர், மு.கருணாநிதி, மு.வ., கி.ஆ.பெ.விசுவநாதம், இரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி, உ.வே.சா., தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, விபுலானந்த அடிகளார், சர். பி.டி.இராசன், சி.பா.ஆதித்தனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணன் உள்ளிட்ட வர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.

1941ஆம் ஆண்டு, முதன் முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக் கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்திய போது அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார்.

‘குறள் மலர்’ (1948-1952) இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். 1949ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப் பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார்.

தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற இடங் களிலும், கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் குறளாரின் குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.

குறளாரின் பணியை ‘குறட்பயன் கொள்ள நம் திருக்குறள் முனிசாமி சொல் கொள் வது போதுமே’ என புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப் பிடத்தக்கது.

23.1.1951இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறுநில மன்னர் கச்சியுவ ரங்க காளாட்க தோழ உடையாரால் ‘திருக்குறளார்’ பட்டம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்மறைக் காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் எனப் பல்வேறு இடங்களில் ஏராளமான பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், முதன்முதலில் வழங்கப்பட்ட பட்டம்தான் இவரது வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது.

எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரால் தொடங்கப்பட்ட உழைப்பாளர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட திருக்குறளார் தீவிரமாகச் செயல்பட்டார். 1952இல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், எக்ஸ்பிரஸ் பத்திரிகை அதிபர் இராம்நாத் கோயங்கா. தேர்தலில் வெற்றிபெற அத்தனை பலங் களையும் பிரயோகித்தார். ஆனால் இறுதி வெற்றி, அதுவும் நேருவுக்கு அடுத்த படியாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி, மண்ணின் மைந்தர் சாமானியரான திருக்குறளாருக்கே கிடைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஐந்தாண்டு காலத்தையும் குறள் பரப்பும் பணிக்கே இவர் பயன்படுத்தினார். டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார்.

தொடர்ந்து 60களில் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய ‘நாம் தமிழர்’ இயக்கத்திலும் பொதுச்செயலாளர் பொறுப்பினையேற்று திறம்பட செய லாற்றினார் திருக் குறளார்.

1981ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குற ளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்குத் தொடர்ந்து நான்குமுறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக் குறளார். அப்போது முதல் தமிழக அரசுப் பேருந்து களில் திருக்குறள் வலம்வரத் தொடங்கியது.

“அரண்மனைகளில் மட்டுமே மன்னர்கள் முன்னிலையில் தவழ்ந்து கொண் டிருந்த திருக்குறளை ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்து பாமர மக்களின் முன்னிலையில் நடமாடச் செய்தவர் திருக்குறளார் ஆவார்” என நாவலர் நெடுஞ்செழியன் ஒருமுறை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பேருந்து மற்றும் ரயில் பயணங் களிலேயே கழித்தார். அவரது பயணம் முழுவதும் திருக்குறளை நோக்கியே இருந்தது.

குறளுக்காக வாழ்நாள் முழுவதும் இயங்கிய திருக்குறளார் எனும் எக்ஸ்பிரஸ் 4.1.1994இல் சென்னையில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. 5.1.1994இல் விழுப் புரம் கன்னியாகுளம் இடுகாட்டில் திருக்குறளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்)

விழுப்புரம் கோ.செங்குட்டுவன் பதிவிலிருந்து…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...