எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதெமி விருது
24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத் தாக்கங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மத்தியில் சாகித்ய அகாடமி விருது உயரிய விருதாக காணப்படுகிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது 77 வயதாகும் எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை யிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் அம்பை ஆவார். அம்பையின் “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருதுடன் ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.
சி.எஸ். லட்சுமி என்கிற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் அம்பை தென்னகத்துத் திராவிடர் பெண் தெய்வமாம் அம்பையின் பெயரைச் சூடிக்கொண்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். கோவையில் 1944ம் ஆண்டு பிறந்தவர். தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சிறுகதைகள் மற்றும் புனைவுகளை அம்பை எனும் புனை பெயரில் எழுதிவருகிறார். கட்டுரைகளை சி.எஸ்.லட்சுமி என்ற பெயரிலேயே எழுதி வருகிறார்.
1960-களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர், திரைப்பட இயக்குநர் விஷ்ணு மாத்தூரைத் திருமணம் செய்துகொண்டார்.
‘நந்திமலைச் சாரலிலே’ என்ற நூலின் மூலம் எழுத்துலகில் நுழைந்த அம்பையின் முதல் தீவிர இலக்கிய ஆக்கம், 1966-ல் ‘அந்திமழை’ என்ற பெயரில் வெளிப்பட்டது. 1967-ல் ‘கணையாழி’ இதழில் வெளியான ‘சிறகுகள் முறியும்’ சிறுகதை அம்பையின் வருகையை அறிவித்தது. 1976-ல் இதே பெயரில், அம்பையின் முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. 1988-ல் வெளியான அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘வீட்டில் மூலையில் சமையலறை’ தவிர்க்க முடியாத இடத்துக்கு அவரைக் கொண்டுசென்றது. அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நூல், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்திய மொழிகளில் புனைவு மொழிபெயர்ப்புக்கான Vodafone Crossword Book Award-ஐ லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமுடன் இணைந்து 2016-ல் பெற்றார் அம்பை.
தமிழிலக்கியத்துக்கான அம்பையின் பங்களிப்புகளுக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2008-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 2005ல் விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது, 2008ல் டொராண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது, 2011ல் தமிழக அரசியன் கலைஞர் பொற்கிழி 2011ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்கிற இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதுவதும் உண்டு.
1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதி களையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இத்தொகுப்பில் அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000) ஆகிய தொகுப்புகளிலுள்ள கதைகள் அனைத்தும் – 42 சிறுகதைகளும் – ‘ஆற்றைக் கடத்தல்’ ‘முடிவில்லா உரையாடல்’ ‘பயங்கள்’ ஆகிய மூன்று நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.
இவர் பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர்.
எண்பதுகளில் அம்பை பெண் எழுத்தாளர்கள் பெண்ணியக் கோட்பாட்டை அடியொற்றி உரத்த சிந்தனையோடு எழுதத் தொடங்கினர். அம்பையின் ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்புகள் இக் கோட்பாட்டை அடியொற்றியன.
“பெண் உடைமைப் பொருள் அன்று; அவளும் ஓர் உயிரி; தனக்கு என்று தனி விருப்பங்களும், சுய மரியாதையும் உடையவள்” என்பதை அவர் படைப்புகள் வற்புறுத்திக் கூறுகின்றன. பெண், கணவன் என்ற உறவுக்காகத் தன்னை அழித்துக் கொள்வதோ, எல்லாவற்றையும் முழுமையாகத் தியாகம் செய்வதோ, அடங்கிப் போவதோ தேவையில்லை என உரிமைக் குரல் எழுப்புகிறார் அம்பை.
மேலும் அவரின் சிறுகதைகளும், “உணர்வுகள் ஒடுக்கப்பட்டு வாழ வேண்டிய நிர்பந்த நிலைய” எதிர்த்துக் குரல் கொடுக்கின்றன. இவரது ‘இலக்கியப் பார்வை’ உறுதியான தெளிவான அசைவிலாப் பாதையாக அமைந்துள்ளது.
பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாகப் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
இதனிடையே விருது பெற்ற எழுத்தாளர்களை முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் வாயிலாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட் பதிவுகளில்.. தனது ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்! தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக் கட்டும்.