“ரைட்டர்” திரை விமர்சனம்
ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனி மெயின் ரோலில் நடித்துள்ளார். ஹரி, இனியா, மகேஸ்வரி, கவிதா பாரதி, போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’96’ படப் புகழ் இசையமைப் பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காவல்துறையில் புரையோடி இருக்கும் அதிகாரப் போக்கு மற்றும் சாதிய பாகுபாடுகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளது ரைட்டர் திரைப்படம். முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சிக்கலான வழக்கில் சிக்கிய மூத்த காவலராக சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார்.
ரைட்டர் திரைப்படம் நல்ல எழுத்து மற்றும் உணர்ச்சிகரமான சவாரிக்கு நல்ல உதாரணம். ஆனால் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம். நடிகர்களின் நடிப்பு நேர்த்தியாக உள்ளது.
கதை என்னவென்றால் திருச்சி காவல் நிலையமொன்றில் ரைட்டராகப் பணி செய்யும் சமுத்திரக்கனி காவலர்களுக்கு சங்கம் அமைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அதனாலேயே அவர் மேலதிகாரிகளின் தாக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார். காவலர்களுக்கான சங்கம் அமைக்க தீவிரமாகச் செயல்படும் சமுத்திரக்கனி சென்னைக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். அங்கு போலி வழக்கில் கைது செய்யப்படும் ஹரியும், சமுத்திரக்கனியும் ஒரு புள்ளியில் சந்திக்க வேகமெடுக்கும் திரைக்கதையே ரைட்டர்.
தேவகுமாராக வரும் ஹரி பி.எச்டி. படிக்கும் மாணவர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அவர் திரட்டும் தகவல்கள் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நெருக்கடியைத் தருகிறது. அதன் காரணமாக அப்பாவி இளைஞன் தேவகுமார் காவல்துறையினரால் கார்னர் செய்யப்பட்டு அவரது வாழ்க்கை வேட்டையாடப்படுகிறது.
காவல்துறைக்கு இருக்கும் கட்டற்ற அதிகாரம், கடைநிலை காவலர்கள் மீது மேலதிகாரிகள் செலுத்தும் அடக்குமுறை, காவல்துறை பதியும் போலியான வழக்குகள், காவல்துறைக்குள் இருக் கும் சாதிய பாகுபாடு அனைத்திலும் முக்கியமாக காவலர்களுக்கு சங்கம் அமைக்க வேண்டும் என்பது குறித்த இயக்குநர் தரப்பு வாதம் என பல கிளைகளில் இந்தக் கதை மிக அழுத்தமான விவாதத்தை முன்னெடுக்கிறது.
பணி ஓய்வு பெறும் வயதில் இருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பு மிக அருமை. அந்த வயதுக்கான உடல்மொழி, முகபாவனைகள் என சமுத்திரக்கனி ஒரு நடிகராக அசத்தியிருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருது பெற அனைத்து தகுதிகளும் தனக்கு உண்டு.
கடைநிலை காவலர்கள் தனது மேலதிகாரிகளின் அதிகார மிரட்டலால் தற்கொலை செய்து கொள் வது குறித்தும் பேசுகிறது.
பாதிக்கப்படும் இளைஞனின் ஊர் குறித்த ப்ளாஸ் பேக் காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்திருக்க லாம். ப்ளாஸ் பேக் காட்சிகளைப் பொறுத்தவரை அதன் நீளம் ரொம்பவே அவசியம்.
காவல்துறையில் பணிபுரியும் இனியா குதிரை ஏற்றத்தில் ஆர்வமுடன் இருக்கிறார். ஹார்ஸ் ரைடராக அவர் விண்ணப்பிக்கிறார். அது வடமாநில மேலதிகாரியால் நிராகரிக்கப்படுகிறது. அதற் கான காரணம் சாதியாக இருப்பதே அவலம். அதனினும் மேலாக ஒன்றை கவனிக்கலாம் மேலதிகாரி இனியாவை அடிக்கும்போது “உன் சாதியில ஆம்பளயவே குதிரை மேல ஏற விடமாட்டேன், நீ ஒரு பொம்பள…” என்கிறார்.
அதாவது சாதி ஒரு அடுக்கு அடக்குமுறை என்றால் அதற்கு மேல் ஆணாதிக்கம் என்பது அடுத்த நிலை அடக்குமுறையாக இருக்கிறது. இப்படியாக படம் முழுக்க பல்வேறு தரப்பின் நியாயங்களை நியாயமான நிலையில் நின்று விவாதிக்கிறார் இயக்குநர்.
பொதுசமூகத்திற்கு சற்றும் அறிமுகமில்லாத அதிகார வர்க்கம் குறித்த கறுப்புப் பக்கத்தை நமக்கு அறிமுகம் செய்து புதிய விவாதத்தை உருவாக்கியதில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவன மான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படமாக வெளியாகியுள்ள ரைட்டர் ஃப்ராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.