அவ(ள்)தாரம் | 6 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 6 | தேவிபாலா

பாரதி வெளியே வர, சிதம்பரம் மட்டும் சற்றே கவலையுடன் காத்திருந்தார்!

“என்னம்மா சொன்னார் உங்கிட்ட..? கோவப்பட்டாரா..?”

“கோவப்பட என்ன இருக்குப்பா..? வேண்டாம்னு சொல்றது என் உரிமை..! அதை கேள்வி கேக்கற அதிகாரம் அவருக்கு இல்லையேப்பா..! நான் கிளம்பறேன்..! சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்..!”

சிதம்பரத்தை, பூதம் அழைத்தார். சிதம்பரம் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார்.

“ஒக்காருங்க சிதம்பரம்..! உங்க மகள் ரெண்டாவது முறையா என்னை அவமானப்படுத்தறா..!”

சிதம்பரம் பேசவில்லை.

“உங்களை பற்றி ரொம்ப உயர்வான அபிப்ராயம் வச்சிருக்கா உங்க மகள்..! பெண்களோட கற்புக்கு ஒரு பங்கம் வந்தா ‘ஆம்பளை கண்ணகி’யா மாறி சென்னையை நீங்க எரிச்சிடுவீங்கனு உங்க மகள் நம்பறா..!”

சிதம்பரம் இப்போதும் மௌனத்தை தொடர…

“விடுங்க! பாரதி பற்றி பேசினது போதும்..! முப்பது வருஷமா உங்க வாழ்க்கை வேற..! இனிமே அது மாறும் சிதம்பரம்..!”

“சார்..! பாரதியை இந்த வேலை உனக்கு வேண்டாம்னு நான் சொல்லலை..! ஆனா அவ இதை நிராகரிச்சதுல எனக்கு பரம சந்தோஷம்..!”

“ஏன் வேண்டாம்னு சொல்லலை..? அவ திருப்பிக் கேள்வி கேட்டா, பதில் இல்லையா உங்க கிட்ட..?”

“சார்..! கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல் வீச, நான் முட்டாள் இல்லை.! நான் என்ன சொன்னாலும் ஏன்னு கேக்காம தலையாட்டற அளவுக்கு நான் பெற்ற பெண்கள் தற்குறியும் இல்லை..! இது தொடர்பா நாம பேசினது போதும்னு நான் நினைக்கறேன் சார்..!”

பூதம் தலையாட்டினார்.

“நீங்க போய் உங்க வேலையை பாருங்க சிதம்பரம்..!”

அவர் போனதும், பூதம் ஃபோனில் பசவப்பாவை அழைத்தார்! சில உத்தரவுகளை உடனடியாக பிறப்பித்தார்!

“என் கோட்டைக்குள்ள வந்து என்கிட்ட தைரியமா பேசிட்டு போன முதல் பெண் நீதான் பாரதி..! இதுக்கான விளைவுகளை நாளை முதலே நீ சந்திக்கப்போறே..!”

பாரதி எந்த ஒரு சலனமும் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு நேராக வெளியே வந்தாள்..! ஒரு ஆட்டோவை பிடித்து தன் வீனஸ் கம்பெனியின் விலாசம் சொன்னாள்..! சாய்ந்து உட்கார்ந்தாள்..! தைரியமாக பூதத்திடம் பேசிவிட்டு வந்தாலும் அப்பா பற்றிய ஒரு கவலை இருந்தது..!

‘நான் இத்தனை அவசரப்பட்டிருக்க கூடாதோ..? ஆயிரம்தான் ஆனாலும் பூதம் சமூகத்தில் செல்வாக்குள்ள ஒரு மனிதன்..! அவரது பணம் பாதாளம் வரை பாயும் வல்லமை உண்டு..! அதை வைத்து அப்பாவிடம் விளையாடினால்..? அருளைச் சந்திக்க வாய்ப்புண்டா..? ஃபோன் நம்பரும் அருளிடம் கேட்கவில்லை..! அருள் அடுத்த சந்திப்பை விரும்பவும் இல்லை..! எப்படி அருளைச் சந்திப்பது..?’

யோசனையுடன் தன் அலுவலகம் வந்து சேர்ந்தாள்..! பத்து நிமிஷ தாமதம்..!

“பாரதி..! நீ லேட்டு..! ஜி.எம். பயங்கர டென்ஷன்ல இருக்கார்..!”

“தோ வந்துட்டேன்..!”

அவசரமாக மேலாளர் சம்பத் அறைக்குள் நுழைந்தாள்..!

“என்ன பாரதி? சோஷல் மீடியால பாப்புலர் ஆன கெத்துல ஆஃபீசுக்கு லேட்டா வர்றியா..?”

“சார்..! அதெல்லாம் இல்லை சார்..!”

“பூதம் பெரிய மனுஷன் தான்..! உங்கிட்ட கோயில்ல வச்சு மன்னிப்பு கேட்ட காரணமா நீ பெரிய மனுஷி ஆயிட முடியாது..!”

“அந்த மாதிரி எந்த எண்ணமும் எனக்கில்லை சார்..! இன்னிக்கு பேமென்ட் ட்யூட்டினு தெரியும் சார்..! நான் ரெடி..!”

“சீக்கிரம் புறப்படு..! நீ பேங்க் போய் பணம் எடுத்துட்டு வந்து வொர்க்கர்சுக்கு சம்பளம் தரணும்..! லேட்டானா தொழிலாளிகள் டென்ஷன் ஆயிடுவாங்க..!”

நேராக தன் இருப்பிடம் வந்து ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பட்டியலைச் சரிபார்த்து அதற்கான காசோலையை எழுதி மேலாளரிடம் கையெழுத்துக்குச் சென்றாள்..! கம்பெனி தொழிலாளிகளுக்குக் குறைந்த சம்பளம் என்பதால் ரொக்கமாகத் தரும் பழக்கம்..! பத்தாம் தேதி பட்டுவாடா..! ஆறு லட்ச ரூபாய் ரொக்கமாக எடுத்துவர வேண்டும்..! அவர் கையெழுத்திட்டுத் தர, அதை வாங்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தாள்..! கம்பெனிக் கார் காத்திருந்தது..! சாதாரணமாக செக்யூரிட்டியும் வருவான்..! இன்று அவன் லீவு..! சின்னத் தொகை என்பதால் பாரதி மட்டுமே புறப்பட்டாள்..!

கார் வங்கியை அடைய, கூட்டம் இருந்தது. நேராக மானேஜர் அறைக்கு வந்து விட்டாள். செக்கை தந்தாள்.

“கன்கிராட்ஸ் பாரதி..! ஒரே நாள்ள ரொம்ப பாப்புலர் ஆயிட்டீங்க..! சோஷல் மீடியா கதாநாயகி..!”

“அதெல்லாம் இல்லை சார்..! இயல்பான சங்கதி..! பெரிசு பண்ணிட்டாங்க..!”

“என்னம்மா நீங்க..? லைக்ஸ் வாங்கணும்னு ரொம்ப மலிவான சங்கதிகளை கூடக் கூசாம செய்யறாங்க..! ஃபோன் இல்லாம உயிர் வாழ முடியாதுங்கற நிலை வந்தாச்சு..!”

“சார்.! வழக்கம் போல ஆறு லட்சத்துக்கும் ஐநூறு, நூறு, அம்பதுன்னு தொழிலாளிகள் கேப்பாங்க..! டினாமினேஷன் பார்த்துக் குடுங்க..!”

பதினைந்து நிமிஷங்களில் அவள் கொண்டு வந்த மீடியம் பெட்டியில் தொகை அடுக்கப்பட்டது. பாரதி புறப்பட்டாள்..! ட்ராஃபிக் உச்சத்தில் இருந்தது..! நேரமாகிக் கொண்டே வந்ததால் பாரதியிடம் படபடப்பு அதிகமானது..!

“மேடம்! பைபாஸ்ல நுழைஞ்சு போனா பத்து நிமிஷம் முன்னால போக முடியும்..! போகட்டுமா..?”

டிரைவர் கேட்க, “எப்படி வேணும்னாலும் போங்க..! தொழிலாளிகளை காக்க வைக்கக்கூடாது..!”

கார் குறுக்கே புகுந்து ஓடத்தொடங்கியது..! ஒரு திருப்பத்தில் கார் வர, சின்னதாக ஒரு கூட்டம் இருந்து, சாலையை மறித்துக் கொண்டிருந்தது..! கார் போக முடியவில்லை..! கூச்சலாக இருந்தது..! சாலையும் அகலமாக இல்லாமல் கொஞ்சம் ஒற்றையடி பாதையாக இருக்க, வண்டி நின்றது..! டிரைவர் இறங்கிப் போனான்..! ஒரு பெண், ஒரு ஆளை பிடித்து சரமாரியாக அடித்துக் கொண்டிருக்க, காரணம் கேட்க, அவன் தன்னிடம் தவறாக நடந்தான் என புகார் சொல்ல, ஆட்கள் கூட, களேபரம் ஆக, டிரைவர் வந்து இதைச் சொல்லி,

“இப்போதைக்கு கூட்டம் கலையும்னு எனக்கு தோணலைம்மா..!”

வேறு வழியில்லாமல் பாரதி இறங்கி வந்து, அந்த பெண்ணை நெருங்கி, விவரம் கேட்டு அவளைச் சமாதானப்படுத்தி, காருக்கு வர, மேலும் பத்து நிமிஷங்கள் பிடித்தது..! கார் புறப்பட்டது..!

பாரதி கம்பெனிக்கு வர, தொழிலாளிகள் சம்பளம் வாங்கத் தயாராகக் காத்திருக்க, பாரதி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கேஷ் கவுன்டருக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்! வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்..! பணப்பெட்டியைத் திறந்தாள்..! தூக்கிவாரிப் போட்டது..! அதிர்ச்சியில் இதயம் நின்றது..! பணப்பெட்டி காலியாக இருந்தது..! கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளை அடுக்கியது பாரதி தான்..! பெட்டியில் எதுவும் இல்லை..! பாரதிக்கு மயக்கமே வந்து விட்டது..!

‘எப்படி இது நடந்தது..? எங்கே போச்சு ஆறு லட்சம் பணம்..?”

ஒரு நொடியில் மின்னல் வெட்டியது..! அந்த களேபரம் நடந்த இடத்தில், நான் பஞ்சாயத்து செய்யப்போன சமயம், யாரோ விளையாடி விட்டார்கள்..! பெட்டியை நான் கையோடு எடுத்துப் போயிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது..! என் முட்டாள்தனம், ஆறு லட்சத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறேன்..!

நொடியில் விவரம் பரவ, ஜி.எம். ஆக்ரோஷமாக வந்து விட்டார்! பாரதி நடந்ததை சொல்ல, சங்கதி பரவி,

“அய்யோ! இந்த மாசம் சம்பளம் இல்லையா..?” எனக்கேட்டு தொழிலாளிகள் பதட்டமாக,

“யாரும் பதட்டப்பட வேண்டாம்..! ஒரு நாள் பொறுங்க..! நாளைக்கு இதே நேரம் உங்க எல்லாருக்கும் சம்பளம் கிடைச்சிடும்..!”

அவர்கள் கோபமாக அவநம்பிக்கையுடன் கலைந்து போக, பாரதி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டாள்..!

“பொறுப்பில்லாம, சர்வீஸ் பண்றேன் பேர்வழினு யார் உங்களை காரை விட்டு இறங்கச் சொன்னது? அதுவும் ஆறு லட்சம் பணத்தைக் கார்ல வச்சிட்டு..? எதுக்குக் குறுக்கு வழியால வந்தீங்க..? இதப்பாருங்க..! கம்பெனிக்குக் கெட்ட பேரை உண்டாக்கிட்டீங்க..! நாளைக்கு காலை பத்து மணிக்கு ஆறு லட்சம் பணத்தோட நீங்க வரலைனா போலீஸ்ல புகார் தான்..! நீங்க பதில் சொல்லியே ஆகணும்..!”

சரமாரியான திட்டுகள்..!

“போங்க..! பணத்தை ஏற்பாடு பண்ணிட்டு வாங்க..!”

பாரதி நொந்து போய் வெளியே வந்தாள்.

‘ஆறு லட்சம் பணம்..? அதுவும் ஒரே நாளில்..? எப்படி முடியும்..? ஆனால் தராவிட்டால் இவன் விட மாட்டான்..! போலீஸ் வரும்..! இந்தத் தகவலும் மீடியாவில் வரும்..! நேற்று புகழ் மாலை..! இன்று அவமானமா..? ஒரே நாளில் தலைகீழாகி விட்டதே..!’

வீட்டுக்கு வந்து விட்டாள்..! அம்மாவிடம் விவரம் சொல்ல, அம்மா துடித்துப் போனாள்..! உடனே அப்பாவுக்கு தகவல் தர, அவர் புறப்பட்டு வந்தார்..!

“நீ ஏண்டீ சமூக சேவை செய்யப்போறே..?”

“இல்லைம்மா..! கூட்டத்தை விலக்கி, காரை எடுக்கணும்னுதான் போனேன்..!”

“பணத்தை கார்ல ஏன்மா வச்சிட்டு போனே..? கார்ல பெட்டி இருக்கறதும் அதுல பணம் இருக்கறதும் யாருக்கு தெரியும்மா..?”

“எனக்கும் எங்க டிரைவருக்கும் மட்டும் தான் தெரியும்..!”

“என்னங்க..! இப்ப ஆறு லட்சம் பணத்துக்கு எங்கே போறது..? கட்டலைன்னா போலீஸ் வந்து புடிக்குமே இவளை..! இந்த அவமானம் நமக்குத் தேவையா..? நகைகள் லாக்கர்ல இருக்கு..! காலைல பேங்க் திறந்து அதை எடுத்து அடமானம் வச்சு, அப்பக்கூட ஆறு லட்சம் தேறாதே..! வாசுகி கல்யாணத்துக்கு கடன் வாங்கின காரணமா, சேமிப்பும் இல்லை..! உங்க முதலாளி மனசு வச்சாத்தான் பாரதி தப்பிக்க முடியும்..!”

சுருக்கென ஒரே நேரத்தில் சிதம்பரம், பாரதி இருவரும் நிமிர்ந்தார்கள்..!

“என்னை வசமாக மாட்டவைக்க இது பூதம் நடத்தும் நாடகமா..? எப்படி இதைச் செய்ய முடியும்..? ஏன் முடியாது..? ஒரு பணக்காரன் திட்டமிட்டு ஒரு செயலைச் செய்ய முடியாதா.? நிரூபிக்க என்ன ஆதாரம் என் கிட்ட இருக்கு..?”

சிதம்பரத்துக்கும் இதே எண்ண ஓட்டம் இருந்தது..! அதை மனைவி, மகளிடம் காட்டிக்கொள்ள முடியவில்லை..!

“என்னங்க! கௌரவம் பாக்காதீங்க..! உங்க முதலாளி கால்ல விழறது தான் சரி..! அத்தனை பெரிய தொகையை தர அவரால தான் முடியும்..! அப்புறமா போலீஸ்ல புகார் தரலாம்..!”

“போலீஸ்ல புகார் கம்பெனில ஏற்கனவே தந்தாச்சும்மா..!”

“நீங்க பேசுங்க..! அப்புறமா உங்க சம்பளத்துல அதைக் கழிச்சுக்கட்டும்..! நீங்க உடனே அவருக்கு தகவல் குடுங்க..!”

“என்னம்மா பாரதி..? நீ என்ன சொல்ற..?”

“அவர் உடனே வந்து என்னை வேலைல சேரச்சொல்லுவார்பா…!”

“நீ சேரேன்..! உனக்கு எதுக்கு இத்தனை வீம்பு..? பெரிய சம்பளமும் தந்து உன்னை ராணி மாதிரி நடத்த அவர் தயாரா இருக்கும் போது அதை அலட்சியப்படுத்தினதுக்கு இது கடவுள் குடுத்த தண்டனை..!”

“வாயை மூடு கௌசல்யா..! பாரதி யாரையும் அலட்சியப்படுத்தலை..! இதை விட்ரு..! நாளைக்கு நான் எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்..! நீ தைரியமா இரம்மா பாரதி..!”

அப்பா மகள் ஒரே சிந்தனையில் இருந்தாலும் உடைத்துப் பேசிக்கொள்ள முடியவில்லை..! அப்பா பலருக்கும் ஃபோன் செய்து பேசினார்..! இரவு முழுக்க யாரும் அந்த வீட்டில் உறங்கவில்லை..! காலை ஏழு மணிக்கு சிதம்பரத்தால் அதிக பட்சம் இரண்டு லட்சங்களுக்கு மேல் ஏற்பாடு செய்ய முடியவில்லை..! அதுவும், பத்து மணிக்கு மேல்தான் கிடைக்கும் என்றார்கள்..!

காலை எட்டரை மணிக்கு பூதம் ஃபோன் செய்தார்..!

“என்ன சிதம்பரம்..? பாரதி ஆறு லட்ச ரூபாய் பணத்தை தவற விட்டுட்டாளா..?”

“ஆமா சார்..! உங்களுக்கு எப்படீ..?”

“வீனஸ் கம்பெனி, நம்ம க்ளையன்டுதானே..? பிரச்னை எதுவும் இல்லை..! பாரதிகிட்ட ஃபோனைக் குடுங்க..!”

அது கை மாற, “அம்மாடீ..! ஆறு லட்சத்தை நான் ஏற்பாடு பண்றேன்..! நீ திருப்பிக்கூடத் தர வேண்டாம்..! நாளைக்கே அங்கே ராஜினமா தந்துட்டு எங்கிட்ட வந்து ஜாயின் பண்ணு..! நீ இப்பவும் மறுத்தா, நிச்சயமா போலீஸ் வரும்..! இது சின்ன கேஸ்தான்..! ஆனா ஸ்டேஷன்ல காலை வச்சிட்டா நீ வெளில வராம இருக்க என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன்..! ரெண்டு தடவை உங்கிட்ட அவமானப்பட்டவன் இதைக்கூட செய்யலைனா எப்படீம்மா..? முதல்ல நம்ம ஆஃபீசுக்கு வந்து வேலைல சேர்ந்துட்டு பணத்தை வாங்கிட்டு போய் அங்கே கட்டு..! உங்கப்பாவையும் கூட்டிட்டு வா..!”

அப்பாவைத் தனியாக அழைத்து இதைச் சொன்னாள்..! சிதம்பரம் நொந்து போனார்..! ஆனால் பூதம் விளையாடத் தொடங்கி விட்டது என்பது புரிந்தது..!

“நீ என்னம்மா சொல்ற..?”

“நான் தனி மனுஷியா இருந்தா, போராடத் தயார்ப்பா..! ஆனா ஒரு குடும்பத்தை வச்சிட்டு ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்லை..! அவர் சொல்றபடி நான் கம்பெனில ஜாயின் பண்றேன்பா..! புறப்படுங்க..! நாங்க வர்றோம்னு அவர் கிட்ட சொல்லிடுங்கப்பா..!”

அவர் கண்களில் வேதனை இருந்தது..!

இருவரும் கம்பெனிக்கு வந்து விட்டார்கள்..! ஏற்கனவே பூதம் வந்திருந்தார்..! முகத்தில் வெற்றி புன்னகை..! அவரது அறைக்குள் நுழைந்தார்கள்..!

பாரதியை நேருக்கு நேராக பார்த்தார் பூதம்..!

“யார் கிட்ட சவால் விடறேம்மா..?”

–தொடரும்…

ganesh

1 Comment

  • Very interesting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...