பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா

32. நாலு பக்கம் ஏரி..! ஏரியில தீவு..!

யூரி அந்த ஒற்றையடிப் பாதையில் தொடர்ந்து நடந்தாள். சற்றுத் தொலைவில் குமுதினியும், குனோங்கும் பின்தொடர குகன்மணி அந்தப் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். தொலைவில் இருந்த சிறு குன்றின் உச்சியில், விண்ணில் மிதந்து வந்த ஒளிவட்டங்கள் இறங்கியதன் அடையாளமாக ஒருவித ஒளி பரவியிருந்தது. குகன்மணிக்கும் அவற்றிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்..? குமுதினி, குனோங் இருவரையும் அழைத்து கொண்டு, இந்த இரவு வேளையில் எங்கே அவசரமாக செல்கிறான்..?

சிறிது தொலைவே சென்றிருப்பாள். திடீரென்று, வானில் மழை மேகங்கள் திரள்வது போல, எங்கிருந்தோ வெண்ணிறப் பனி புகையாகப் பரவி வந்து அந்தப் பாதையில் திரையை அமைக்கத் தொடங்கியது. இருளும் அந்தப் பனிப்போர்வையை எடுத்துத் தனது உடலில் சேலையாகச் சுற்றிக்கொள்ள, அதனால் எங்கும் பனி, புகையாக பரவிக்கொண்டிருந்தது.

மயூரி தொடர்ந்து நடக்க, அவளைச் சுற்றியும் பனி, திரை ஒன்றை எழுப்பியது. அனார்கலியைச் சுற்றி கல்திரை எழுப்பப்பட்டது போல, இவளைச் சுற்றி பனிப்புகை வியாபிக்க அதனால், முன்னால் சென்று கொண்டிருப்பவர்களை அவளால் காண இயலவில்லை. பனித்திரையின் ஊடே, அவர்களைக் காண முயற்சி செய்தபடி, கைகளைத் தனக்கு முன்பாகத் துழாவியபடி நகர்ந்து கொண்டிருந்தாள் மயூரி.

அப்படி அவள் கைகளை தனக்கு முன்பாக வீசியபடி, சில அடிகளே எடுத்து வைத்திருப்பாள். திடீரென்று, பரந்து, விரிந்த, உறுதியான, கல்லைப் போன்று எதிரே அவளது பாதையை ஏதோ வழிமறிக்க, திகைப்புடன் அதனை வருடினாள்.

அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“மயூரி..! நீ வருடிக்கொண்டிருப்பது, என்னோட மார்பை..!” –கணீரென்று வெண்கல மணியாய், அந்த நள்ளிரவில் ஒலித்த குகன்மணியின் குரலைக்கேட்டு திடுக்கிட்டு எதிரே பார்த்தாள். அமானுஷ்யமாக மிதந்து கொண்டிருந்த பனிப்புகையும், இவளைச் சுற்றி எழும்பியிருந்த பனித்திரையும் திடீரென்றுப் பதிந்தது போன்று, மயூரியால் தன்னைச் சுற்றி காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

எதிரே கம்பீர குகன்மணி சிறு குன்றைப் போன்று உயரமாக நிற்க, இவள் தனது கைகளால் அவனது மார்பை வருடிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்ன வேணும்..? எதுக்கு இந்தக் காட்டுப்பாதையில் தனியா நடந்துகிட்டு இருக்கே..?” –குகன்மணி கண்களில் லேசாகக் கோபம் தெரிந்தது.

“நீங்க, குமுதினி, குனோங் யாருமே பங்களாவில் இல்லை. நீங்க மூணுபேரும் இந்தப் பாதையில நடந்து போறதைப் பார்த்தேன். தனியா பங்களாவில் இருக்க பயமா இருந்ததது. அதுதான் உங்க பின்னாடியே வந்தேன்.!” –தான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள் என்று கூறினால், அவனது சந்தேகம் நீங்கி, இவள் மீது பச்சாதாபம் கொள்வான் என்று நினைத்துத்தான் மயூரி அந்த பதிலைக் கூறினாள்.

”எனக்குப் பின்னாடியே வந்து, நான் என்ன செய்யறேன்னு பார்க்க வந்திருக்கே.! எனக்கு இதுகூடத் தெரியாதா..? என்ன இருந்தாலும், நீ அஞ்சையா, அதுதான் அந்த போலி நல்லமுத்து குடும்பத்தைச் சேர்ந்தவள்தானே… உன் முருக பக்தியைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு உனக்கு மூன்றாவது நவபாஷாண சிலையைக் காட்டலாம்னு இருந்தேன். ஒருவேளை, நீ விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, உன் குடும்பத்துகிட்டே போட்டுக் கொடுத்திடுவே போல இருக்கே. உன்னை நம்ப முடியாதுனு நினைக்கிறேன்.” –குகன்மணி காட்டமுடன் கூற, மயூரிக்கு ‘பகீர்’ என்றது.

‘ஐயோ..! அவன் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பினை உணர்ந்து நேற்றுதான், தனது மனதிடம் அதைக் காதலாக மாற்றச் சொல்லியிருந்தாள். அவனிடம் காதல் கொண்டிருக்கும் வேளையில், இப்படி அவன் சந்தேகப்படும் அளவுக்கு நடந்து கொண்டு விட்டோமே. என்ன இருந்தாலும் நீ அந்த சதிகாரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தானே, என்று எந்த ஒரு வார்த்தையை அவள் கேட்கக்கூடாது என்று இருந்தாளோ, அதையே கூறி விட்டானே..!

படபடப்புடன் அவனைப் பார்த்தாள்.

“தப்பா நினைச்சுக்காதீங்க, குகன். என் ரூம் பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போ இரண்டு ஒளிவட்டங்கள் தென்மேற்கிலிருந்து மிதந்து வந்து, உங்க எஸ்டேட் பக்கத்துல இருக்கிற குன்றுல இறங்கறதைப் பார்த்தேன். அது என்னனு பார்க்கத்தான் நான் வந்தேன்.” –மயூரி சொன்னாள்.

“நான்தான் சொல்லியிருக்கேன் இல்லே… இங்கே என்ன நடந்தாலும், நீ எதை பார்த்தாலும், கமுக்கமா அதை மனசோடு வச்சுக்கணும். புரிஞ்சுதா..! மலேசியா மர்ம பூமி. இங்கே விளக்க முடியாத பல மர்மங்கள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. மலேஷியா விமானம் எம்.எச்.370 காணாமப் போனதுகூட, உலக நாடுகளுக்குத்தான் ஆச்சரியம். இங்கயே பிறந்து வளர்ந்தவங்களுக்கு இது ஒரு சாதாரண விஷயம்தான். மலேசியாவுல இம்மாதிரி மர்மங்கள் நடக்கிறதை நாங்க கண்கூடாப் பார்த்துக்கிட்டேதான் இருக்கோம். இதையெல்லாம் யாருமே கண்டுக்க மாட்டாங்க. அந்த ஒளிவட்டம் விண்வெளிக் கற்களா இருக்கலாம். இல்லை, வேற ஏதாவதா இருந்தாத்தான் என்ன..? அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லேன்னு தங்களோட வேலையைப் பார்த்துகிட்டு இருப்பாங்க. மலேசியாவுல இருக்கிற வரைக்கும் நீயும் அப்படி இருக்கிறதுதான் உனக்கு நல்லது. மூக்கை அப்படி இப்படினு, ஏதாவது நீட்டி பார்த்தே… அப்புறம், எம்.எச்.370 மாதிரி நீயும் காணாம போயிடுவே..! பேசாம உன்னோட அறையில போய் படுத்து நிம்மதியாத் தூங்கு..!” – என்று அவளது தோள்களை தனது இரும்புக் கரங்களால் பற்றி, அவளை திருப்பி, நடந்து வந்த பாதையிலேயே திருப்பித் தள்ளினான்.

அதன் பிறகு மயூரிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மீண்டும் நினைவு வந்தபோது, தனது அறையின் பிரம்மாண்டக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். தோட்டத்தில், சுள்ளென்று வெயில் அடித்துக் கொண்டிருந்தது. பறவைகள் காலை நேர இசைப்பாட்டை முடித்துக் கொண்டு, இரை தேடிவரப் புறப்பட்டுக்கொண்டிருந்தன.

முந்தைய இரவுச் சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, திகைப்புடன் கட்டிலில் படுத்திருந்தாள். இவளது தோள்களைப் பிடித்து அவன் தள்ளியது நினைவுக்கு வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது. எப்படி அவள் அங்கிருந்து தனது அறைக்கு நடந்து வந்தாள்..? இவள் ஒருவேளை கனவு ஏதாவது கண்டிருந்தாளோ..? இல்லையே..! பால்கனியில் ஒளி வட்டங்களைப் பார்த்ததும், “குமுதினி, குமுதினி” என்று அழைத்தபடி தோட்டத்தில் நுழைந்தபோது, குகன்மணி, குமுதினி மற்றும் குனோங் மூவரையும் பார்த்திருந்தாளே..?

அறைக்கதவு திறக்க, கையில், ட்ரேயில் ஏலக்காய் டீ மற்றும் பிஸ்கட்டுகளுடன் உள்ளே வந்தாள், குமுதினி.

“நல்ல தூக்கமா..!” –என்றபடி தான் சுமந்து வந்த ட்ரேயை மேஜையில் வைத்துவிட்டு, அறையின் கர்டென்களை விலக்கினாள், குமுதினி.

“எழுந்து fresh-அப் பண்ணிக்கங்க, மேடம்..! டீ சாப்பிடலாம்..!” –குமுதினி கூற, கட்டிலில் எழுந்து அமர்ந்தபடி அவளையே வெறித்தாள்.

வழக்கமாக, பல் தேய்ப்பதற்கு முன்பாகப் பேச மறுப்பாள் மயூரி. ஆனால் மனதில் ஆயிரம் கேள்விகள் எதிரொலிக்க, குமுதினியைக் கேட்டால் என்ன என்று நினைத்தாள்.

“குமுதினி..! நேத்து ராத்திரி குகன்மணி, நீ, உன் கணவன் குனோங் மூணு பேரும், அந்த ஒத்தையடிப் பாதையில நடந்து போறதைப் பார்த்தேன். எங்கே போனீங்க..?” –மயூரி துணிந்து கேட்க, அவளைப் புன்சிரிப்புடன் நோக்கினாள் குமுதினி.

“அதுதான் ஐயா சொல்லிட்டாரு இல்லே..! இங்கே என்ன நடந்தாலும், நீங்க எதை பார்த்தாலும், கமுக்கமா அதை மனசோடு வச்சுக்கணும்..! மலேசியா மர்ம பூமி. இங்கே விளக்க முடியாத பல மர்மங்கள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. நீங்களும் அப்படியே இருங்க.” –என்றாள்.

“ஏலக்காய் டீ ஆறிப்போயிட்டா நல்லா இருக்காது. சீக்கிரம் குடிங்க..!” –என்றபடி அறைக்கதவை நோக்கி நடந்தவள், கதவைப் பற்றியபடி இன்னும் கட்டிலில் அமர்ந்திருந்த குமுதினியைப் பார்த்தாள்.

“மேடம்..! நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லுவேன். இதுவரைக்கும் எங்க பாஸ் இந்த வீட்டுக்கு யாரையும் அழைச்சுக்கிட்டு வந்தது கிடையாது. உறவுக்காரங்க, மிக நெருங்கிய சிநேகிதங்க வந்தால் கூட, அவங்களைக் கோலாலம்பூர் ஹோட்டல்ல தான் தங்க வைப்பார். சீனா டவுன்ல கூட ஹோட்டல் இருக்கு. ஆனால் அவர் அங்கே கூட புக் செய்ய மாட்டார். தன்னோட ப்ரைவேசி கெட்டுப் போறதை அவர் விரும்பவே மாட்டார். முதன்முறையா, ஒருத்தரை, அதுவும் ஒரு அழகான பெண்ணை, அழைச்சுக்கிட்டு வந்து, அவளுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாத்தையும் செய்யறார்னா, அவர் மனசுல உங்க மேல ஏதோ ஈர்ப்பு இருக்குனு அர்த்தம். உங்க நடவடிக்கைகளால் அவருக்கு உங்க மேல ஏற்பட்டிருக்கிற ஈர்ப்பைக் கெடுத்துக்காதீங்க. அவ்வளவுதான் சொல்வேன்.” –என்றபடி வெளியே சென்றாள்.

பல் தேய்த்து, முகம் கழுவி, தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, ஏலக்காய் டீயை அருந்திவிட்டு, அறையை விட்டு வெளியேறி, மாடிப்படிகளில் இறங்கத் தொடங்கியபோது, கீழே பேச்சுக் குரல்கள் கேட்டன. படிகளில் இறங்கிச் சென்றதும், சோபாவில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் திகைத்து நின்றாள்.

சோபாவில் அமர்ந்து குகன்மணியுடன் பேசிக்கொண்டிருந்தது, போதினியும், சுபாகரும்.

“ஹலோ..! மயூரி மேம்..!” –இருவரும் அவளை நோக்கிக் கையை அசைக்க, குகன்மணி புன்முறுவல் ஒன்றைச் சிந்தியபடி அவளை வெறித்துக் கொண்டிருந்தான்.

லாய் ஹெவன்–

பெயருக்குப் பொருத்தமாக, ஒரு சொர்க்கத்தை போன்றுதான் இருந்தது. ரிசார்ட் என்பதால் மிக நெருக்கமான கட்டடங்கள் இல்லை. அடர்ந்த காட்டின் நடுவே, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய ஏரிகளின் நடுவே, சிறிய தீவுகள் காணப்பட, அவற்றில் பங்களாக்கள் அமைக்கப்பட்டிருந்தன. செயற்கை ஏரியில், ப்ருந்தாவன் கார்டனைப் போன்று வண்ண வண்ண நீரூற்றுகள் தண்ணீரைப் பாய்ச்சிக் கொண்டிருக்க, அவற்றில் நனைத்து விளையாடியபடி, மிதந்து கொண்டிருக்கும் நீர்ப் பறவைகள் என்று மிக ரம்யமாகக் காட்சியளித்தன.

உண்மையிலே கனிஷ்காவும், தேஜஸும் பிரமித்துதான் போயிருந்தார்கள். அவர்கள் இவ்வளவு பெரிய ராஜ உபச்சாரத்தை எதிர்பார்க்கவில்லை.

“ரொம்ப காஸ்ட்லியாக இருக்குமோ உங்க ரிசார்ட்..?” –முதன்முறையாக பணத்தைப் பற்றித் தனது வாழ்நாளில் கவலைப்பட்டாள், கனிஷ்கா.

“என்னோட பாஸுக்கு இது பெரிய இன்சுலேட். உங்களைத் தன்னோட விருந்தினர்களாத் தங்க வச்சிருக்கார். நீங்க கஸ்டமர் இல்லே. ஜஸ்ட் என்ஜாய் அண்ட் டோன்ட் திங்க் அபுவுட் தி டாரிப்.” –என்றபடி செயற்கை ஏரியில் அமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்தில் அபி நடந்தான். அவனை கனிஷ்காவும், தேஜஸும் பின்தொடர்ந்தனர்.

ஓரிடத்தில் பாலம் இரண்டாகப் பிரிந்தது.

“மிஸ்டர் தேஜஸ்..! இடதுபுறப் பாலத்தில் நடந்தீங்கன்னா, நீங்க உங்க காட்டேஜுக்குப் போகலாம். மிஸ் கனிஷ்கா..! Women are always right..! So, you keep right..! உங்க காட்டேஜ் ரைட் சைட்ல இருக்கு. உங்க ரூம்ல ரெண்டு பேருக்குமே ப்ரத்யேகமா இண்டர்காம் லிங்க் இருக்கு. கனிஷ்கா! உங்க ரூம் நம்பர் 332. தேஜஸ் நம்பர் 333..! நீங்க ராணுவ ரகசியங்களைக் கூடப் பேசிக்கலாம். யாராலயும் ஒட்டு கேட்க முடியாது..! ஓகே..? ரெஸ்ட் எடுங்க. உங்க தீவுக்கு மட்டும் ரெண்டு பேரு ரூம் சர்வீஸ் ஆளுங்க இருப்பாங்க. நீங்க zero நம்பரை அழுத்தினா உடனே வருவாங்க..! ஓகே..! நீங்க ரெஸ்ட் எடுங்க,,! விரைவில் சந்திப்போம்..!” –என்றபடி அபி அங்கிருந்து அகன்றான்.

இருவரும் தத்தம் காட்டேஜுகளுக்குச் சென்றனர். காட்டேஜா அது..? சென்னை க்ளப் சாலை பங்களாக்கள் மாதிரி ஒவ்வொன்றும் இருந்தன. இவ்வளவு பிரம்மாண்ட காட்டேஜ் தான் ஒருத்தி தங்குவதற்கா..? வரவேற்பு அறை, நூலகம், அதை அடுத்து உணவு அருந்த சிறு ஹால், அதில் பீரோ சைஸ்-சுக்கு பிரிட்ஜ், பின்பாக கிச்சன், வளைந்து செல்லும் மரப்படிகள், மேலே படம் பார்க்க மினி தியேட்டர், அருகே மினி பார், அதன் பக்கத்தில் சுற்றிலும் கண்ணாடிச் சுவர்களைக் கொண்ட பெரிய படுக்கையறை. படுக்கையில் படுத்தபடியே வெளியே செயற்கை ஏரியில் விளையாடிக் கொண்டிருக்கும் பறவைகளைப் பார்க்கலாம், தேவையில்லாத போது கண்ணாடிச் சுவர்களை மறைப்பதற்கு பிரமாண்ட திரைகள், அதனை இயக்குவதற்கு ரிமோட்..! ஆஹா..! இதுவல்லவோ வாழ்வு..! பகட்டும் படாடோபமும் கொண்ட சினிமா நடிகையான, கனிஷ்காவே அமீரின் செல்வத்தையும், அவன் அதனை அனுபவிக்கும் விதத்தையும் பார்த்த பிறகு பிரமிப்புடன் நின்றாள்.

அருகிலிருந்த போனை எடுத்து, தேஜஸின் காட்டேஜூக்கு போன் செய்தாள்.

“தேஜஸ்..! காட்டேஜைப் பார்த்தியா..?” –குரலில் பிரமிப்புக் குறையாமல் கேட்டாள், கனிஷ்கா.

“பார்த்தேன்… இட்ஸ் ரியலி ஆன் ஹெவென் ஆன் எர்த்..!” –தேஜஸ் சொல்லிக்கொண்டே எதையோ விழுங்க, அவன் குடிக்கிறான் என்பதை யூகித்தாள், கனிஷ்கா.

“என்ன… ட்ரிங்க் பண்ணறியா..? காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி நடந்துக்காதே, பிரதர்..! கொஞ்சம் நாசூக்கா நடந்துக்க. பிளேன் ஜர்னியில நீ ஏர் ஹோஸ்டஸ் கிட்டே வழிஞ்சதைப் பார்த்தே மிதுன் ரெட்டி உன்னை எச்சரிச்சான்… நினைவு இருக்கு இல்லே.” –கனிஷ்கா கூற, தேஜஸ் சிரித்தான்.

“அவன் சினிமா ஹீரோவா எப்படி ஆனான்னு எனக்குத் தெரியலை..! அவனை நீ ஏன் கட்டிக்கிட்டு அழறே..? அமீர் மாதிரி ஒரு பணக்காரனைக் கட்டிக்கிட்டா, இந்த மாதிரி ஒரு தீவுல நிரந்தரமா நான் செட்டிலாயிடுவேன்.” –தேஜஸ் சிரிக்க, கனிஷ்காவும் சிரித்தபடி போனை வைத்தாள்.

குளிப்பதற்காகக் கீழே இருந்த பாத்ரூமின் கதவைத் திறக்க, திகைத்துப் போய் நின்றாள். கதவைத் திறந்ததும், ஒரு மேடை. இரு பக்கங்களும் படிகள் இறங்கிப் போயின. படிகளில் இறங்கிப் போனால், ஒரு பக்கம் டாய்லெட். மையத்தில் ஒரு பெரிய பாத் டப். பாத்ரூமைச் சுற்றி கண்ணாடி சுவர்கள். கண்ணாடிச் சுவருக்கு அப்பால், பல வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருக்க, ஒரு பெரிய டால்பின் ஒன்று மிதந்து வந்து, கண்ணாடி சுவற்றில் தனது வாயை மோதி, இவளை நோட்டம் விட்டது.

பளிங்குத் தரையில், ஆங்காங்கே பூந்தொட்டிகள். எங்கிருந்து வீசுகிறது என்று அறியாதபடி, அருமையான நறுமணம் பாத் ரூமில் வீசிக் கொண்டிருந்தது.

அவள் நடித்த திரைப்படங்களில் கூட இம்மாதிரி அரங்கங்கள் அமைக்கப்பட்டதில்லை. தனது பார்வையைச் சுற்றிலும் படர விட்டாள். ஒரு கம்பியில் பல வண்ண நீராடும் ஆடைகள் அழகாக ஹேங்கரில் ஊசலாடிக்கொண்டிருந்தன. படிகளில் இறங்கிச்சென்ற, கனிஷ்கா, தனது பிடித்த கிரிம்சன் ரெட் நீராடும் ஆடையில் புகுந்துகொண்டு, பாத் டப்பில் புகுந்தாள். மிதமான சூட்டில், டப்பில் பொங்கிக்கொண்டிருந்த நீர், இவளது மேனியை இதமாக வருடிக்கொடுத்தது.

‘போகம்… சுகபோகம்..! ஆனந்தம், பரமானந்தம்..!’ –என்று படம் ஒன்றில் தான் பாடிய பாடலை முணுமுணுத்தபடியே, பபுள் சோப் ஒன்றை பாத் டப்பில் நழுவ விட, நீர் நுரைத்துக்கொண்டு பொங்கியது. மெய்மறந்து கண்களை மூடிக் குளித்துக்கொண்டிருந்த போது…

பெரிய நிலைக்கண்ணாடி ஒன்றின் அருகே வைக்கப்பட்டிருந்த போன் சிணுங்கியது. வேறு யார் அவளை அழைப்பார்கள்..? தேஜஸ்தான் காட்டேஜ் 333-ல் இருந்து அழைக்கிறான்.!

பாத்டப்பிலிருந்து இறங்கி கண்ணாடியை நோக்கி நடந்து போனை எடுத்தாள், கனிஷ்கா.

“சொல்லுடா தேஜஸ்..!”

“தேஜஸால ஒண்ணும் சொல்ல முடியாது. அவன் வாயில துணியைக் கட்டியிருக்கேன். நீ குளிச்சுட்டு, காட்டேஜ் 333க்கு வா..! அதுக்காக அவசரமாக் குளிச்சுட்டு வரவேண்டாம். நிதானமா, குளிச்சுட்டு வா..! நான் காத்திருக்கேன்.” –அபியின் குரல் கேட்டது.

கனிஷ்கா உறைந்து போய் கையில் ரிஸீவரோடு நின்றாள். கண்ணாடியில் தனது முகத்தையே பார்க்க, அவளது கண்களில் தெரிந்த பீதியை அவளாலேயே காண முடிந்தது.

-தொடரும்…

ganesh

2 Comments

  • ஜெட் வேகத்தில் பறக்கிறது!

  • Very nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...