தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன்

குடிவந்த ஒரே வாரத்தில் தனலட்சுமியும், அம்ரிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். அம்ரிதாவின் கணவர் சர்வேஷ் டெல்லிக்குக் கிளம்பிவிட, அம்ரிதா குழந்தையுடன் தனியாக இருக்க, தனலட்சுமியும் அவளுக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்யவே இருவருக்குமான நட்பு மேலும் பலப்பட்டு விட்டது.

குழந்தை ஷ்ரதா பெரும்பாலும் முகேஷின் வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருப்பாள். சில நேரத்தில் அவளை திரும்ப அழைத்துச் செல்லும் போதும், காபித்தூள், சர்க்கரை என அவசரத் தேவைகளின் போதும் அம்ரிதா அடிக்கடி வீட்டுற்கு வந்து போகும் தருணங்களிலும் முகேஷைப் பார்த்து சிரிப்பை உதிர்ப்பாள். முகேஷூம் சம்பிரதாயமாக, தயக்கத்துடனே சிரித்து வைப்பான்.

அன்று அம்ரிதா… “ஆன்ட்டி உங்ககிட்ட பால் பேக்கட் இருக்கா..? தீர்ந்திடுச்சி..”

“அடடா இல்லியேமா..! இப்ப தான் காய்ச்சி தயிருக்கு உறை ஊற்றி வைச்சேனே.”

“சரிங்க ஆன்ட்டி..! ஷ்ரதா தூங்குறா..! கொஞ்சம் பாத்துக்கறீங்களா..? நான் போய் வாங்கிட்டு வந்திடுறேன்.”

“ஏம்மா தூங்குற கொழந்தையைத் தொந்தரவு பண்ணனும்..? டேய் முகேஷ்… ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றீயாடா..?” என உள்ளே நோக்கிக் கத்தினாள்.

“ஏம்மா சும்மாச் சும்மாக் கத்துற..? இரு வரேன்..!” என வெளியே வந்தவன், அம்ரிதாவை கண்டு அமைதியாகி விட்டான்.

“டேய்..! கொழந்த தூங்குது.. கொஞ்சம் வாங்கிட்டு வந்து குடேன்டா..” என்று ஸ்டவ்வை அணைக்க உள்ளே போக…

“சரி.. குடுங்க..” என கையை நீட்டியவன்.. அவள் கையில் இவன் கை மோதிவிட, சட்டென தடுமாறி காசை வாங்கிப் பாக்கெட்டில் வைத்து கொண்டு திரும்பிப் பார்க்காமல் கடையை நோக்கி ஓடினான்.

முகேஷின் மனம் வழியெங்கும் யோசித்து கொண்டேயிருந்தது கை வேண்டுமென்றே பட்டிருக்குமா? அல்லது தெரியாமல் பட்டிருக்குமா? ஆனால் அந்த குறுகுறுப்புப் பார்வை.. என குழம்பி போனான்.

பால் பாக்கெட் வாங்கி கொண்டு திரும்பியவன், அம்ரிதாவின் வீட்டு கேட்டருகே நின்று குரல் கொடுத்தான்.. பதிலேயில்லை. கதவும் திறந்தேயிருந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஹால் சோபாவில் அமர்ந்து மொபைலில் யாரிடமோ சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

முகேஷைப் பார்த்ததும் சோபாவில் அமரும்படி சைகை காட்டினாள். தயங்கியபடி நுனியில் அமர்ந்தவன் சுற்றிலும் வேடிக்கைப் பார்வையை சுழற்றினான். அம்ரிதா அவ்வப்போது சிரித்தபடியே பேசி கொண்டிருநதாள். சிகப்பு நிற நைட்டியும்.. விரித்து போட்ட அலைஅலையான கூந்தலும் அவள் அழகை மேலும் கூட்டி, தேவதையாகக் காட்டியது.

சிறிது நேரத்தில் போனை வைத்தவள் முகேஷைப் பார்த்துச் சிரித்தாள். பால் பேக்கெட்டை நீட்டியபடி எழுந்தவனை…

“இரு, காபி போடறேன்.. குடிச்சிட்டுப் போ..” என்றாள்.

“இல்லை..! வேணாம்..!” எனத் தயங்கியவனை.. “அட இருப்பா..!” என்றபடி உள்ளே சென்றாள்.

முகேஷிற்கு சீக்கிரம் அங்கிருந்து போய்விடவேண்டும் என்று தோன்றியது.
கையில் இரு காப்பிக் கோப்பையுடன் வந்தவள்… ஒன்றை அவனிடம் நீட்டி..


“அப்புறம்… என்ன படிக்குற..?” என்றாள்.

“பர்ஸ்ட் இயர்… இன்ஜினியரிங்”

“ஓஓஓ…” என்றாள் அவனின் தயக்கத்தை ரசித்தபடி..

காபியை ஒரே முழுங்கில் குடித்து… “வரேன்..” என பதிலுக்குக் காத்திராமல் வேகமாக நடந்தான்.

கேட்டைத் திறந்து வெளியே வர… எதிரில் கல்லூரி நண்பன் ஹரிஷ் வந்துவிட்டான்.

“என்னடா… இங்கேயிருந்து வர்ற..?”

“டேய், இங்க புதுசா குடி வந்திருக்காங்கடா.. பால் பாக்கெட் வாங்கி கொடுத்துட்டு வரேன்.”

“ஆமாடா..! கேள்விபட்டேன்… செம்ம பிகராமே..”

“சே..! வாயை மூடுறா… அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு.”

“இருந்தா என்ன? அழகு எங்கிருந்தாலும் ரசிக்க வேண்டியது தான்..” என கபகபவென சிரித்தான்.

ஹரிஷ் எப்போதும் அப்படித்தான். கலகலப்பான பேர்வழி. எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டான்.

பேச்சினிடையே, “சரிடா..! ஒருநாள் அந்த ஆன்ட்டியை எனக்கு அறிமுகம் செய்து வையேண்டா..” என்று கலாய்த்தான்.

“சும்மா இருடா..! நீ வேற…” என பேச்சைத் தொடர்ந்தபடி நடந்தனர்.

தன்பிறகு அம்ரிதா அடிக்கடி ஏதாவது சாக்குப்போக்கு வைத்து முகேஷ் வீட்டிற்கு வருவதும் போவதும் சகஜமாகிப் போனது. வேதமூர்த்தி மற்றும் தனலட்சுமியை ஆன்ட்டி, அங்கிள் என அழைத்து நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள்.

ன்று வந்தவள்… “முகேஷ் எங்க..? காலேஜ் போயிருக்கானா..?” என்றாள் உரிமையுடன்..

“இல்லம்மா.. ! எக்ஸாம் ஹாலிடேஸ்… உள்ளேதான் படிக்குறான்..”

“சரிங்க ஆன்ட்டி.. பேபி சோப் தீர்ந்திடுச்சி. அப்புறம் அவன் வெளியே போகும்போது வாங்கிட்டு வர சொல்றீங்களா..?” என்று காசை நீட்டினாள்.

“சரிம்மா..!” என்று காசை வாங்கி மேஜையில் வைத்தாள்.

தனலட்சுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஷ்ரதாவை தூக்கிக் கொண்டே, “வரேன் ஆன்ட்டி…” என்றபடி கிளம்பினாள்.

சாயந்தரமாக.. “அம்மா.. ஹரிஷ் பார்த்துட்டு வரேன். கொஞ்சம் நோட்ஸ் வாங்கணும்” என்றபடி செருப்பை மாட்டியவனை..

“சரிடா..ஷ்ரதா குட்டிக்கு ஜான்ஸன் சோப் வாங்கிட்டு வந்துரு வரும்போது…”

“ம்மா.. அவன் நாலு வீடு தள்ளி இருக்கான். கடை அடுத்த தெருவில் இருக்கே..” என அலுத்தவனை…

“அதனாலென்னடா… கைக்கொழந்தையை வைச்சிகிட்டு சிரமப்படுறா.. நாமதான ஒத்தாசையா இருக்கணும். பாவம்டா..” என்று கெஞ்ச..

“சரி குடும்மா..!” என்று வேண்டாவெறுப்பாகக் காசை வாங்கிகொண்டு கிளம்பினான்.

ஹரிஷிடம் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. “சரிடா.. ஏழரை மணியாச்சு. நான் கிளம்புறேன்.. அம்மா சத்தம் போடுவாங்க…” எனக் கிளம்பினான்.

ஜான்ஸன் சோப்பை வாங்கிக் கொண்டு நடந்தவன்.. எதிர் வீட்டைப் பார்த்தான்.. கதவு சாத்தியிருந்தது. மெல்லிய விளக்கொளி மட்டும் வெளியே கசிந்திருந்தது.

காலிங்பெல்லை அழுத்த… கதவு திறந்தது. மெல்லிய நைட்டியில் விளக்கொளியில் தேவதையாக தெரிந்தாள்.

முகேஷைப் பார்த்ததும் சிரித்து, “வா முகேஷ், உள்ளே வா..” என அழைத்தாள்..

“இல்லை பரவால்லை..” என்று திரும்பியவனை…

“நான் என்ன பேயா பிசாசா..? ஏன் இப்படி நடுங்கற..? அட உள்ளே வா..” என கைகளைப் பிடித்து இழுத்து சோபாவில் அமரவைத்தாள். அம்ரிதாவின் மொபைல் ஒளிர கூச்சத்துடன் அமர்ந்தவனை குறுகுறுப்புடன் பார்த்தவாறு… போனை ஆன் செய்து “வர்ஷனி ஹியர்..!” என கொஞ்சி கொஞ்சி பேசி கொண்டே முகேஷ் அருகில் அமர்ந்தாள்.

முகேஷூக்கு வியர்த்துக் கொட்டியது.

அவள் போனை வைத்ததும்.. “உங்க பேரு அம்ருதான்னு அம்மா சொன்னாங்களே..”

“ஆமா.. அம்ரிதா… அமிர்தவர்ஷினி.. சிலருக்கு அம்ரிதா… நெருக்கமானவங்களுக்கு வர்ஷினி… நீ வர்ஷினின்னே என்னை கூப்பிடேன்…” எனக் கொஞ்சியபடி நெருங்கி வந்தவளை வேகமாகத் தள்ளி விட்டு வீட்டிற்கு ஓடினான்.

முகேஷிற்கு இரண்டும்கெட்டான் வயது. புரிந்தும் புரியாத பருவம். ஆனாலும் அம்ரிதாவின் நோக்கம் ஏதோ ஒருவாறு புரிவது போலத் தோன்றியது. அவள் ஆபத்தானவள் என மனம் எச்சரிக்கை செய்து கொண்டேயிருக்கிறது.

‘இனிமேல் இங்கே வரவே கூடாது..’ என மனம் எச்சரிக்கை மணி அடிக்க, ‘இவள் சகவாசமே நமக்கு வேண்டாம். இவளை எப்படி வீட்டிற்கும் வரவிடாமல் செய்வது?’ என யோசித்துக் குழம்பினான்.

‘அம்மாவிடம் சொல்லலாமா..? ஐய்யைய்யோ… வேறு வினையே வேண்டாம்..! ஏதாவது கத்தி, கலாட்டா செய்தால் இத்தெருவில் நமது வீட்டு மானமே போய்விடும். இதை பொறுமையாகத்தான் கையாள வேண்டும்’ என முகேஷ் யோசிக்கத் தொடங்கினான்.

ஆனால் வர்ஷினி ஜாலக்காரி.. அவன் விதி அவள் கையில் மாட்டி, சிக்கிச் சீரழிய இருந்ததை அவனால் யூகிக்கக்கூட முடியவில்லை. மனதுக்குள் ஏதோ இனம்புரியா கலக்கம் ப்ளஸ் தயக்கத்துடன் வீட்டுக்குள் ஓடினான்.

-தொடரும்…

ganesh

1 Comment

  • கதை ஒரு மாதிரி செல்கிறதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...