எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 9 | இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 9 | இந்துமதி

சித்ராவை மணலில் படுக்கவைக்க மனமில்லை, மதுவிற்கு. கெஸ்ட் ஹவுஸ் வரை தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று தான் நினைத்தான். அவனது உடலை அழுத்திய பெண்மையின் சுகத்திலிருந்து விடுபட மனது மறுத்தது. இதுவரை அறிந்திராத அனுபவித்திராத சுகமாகப்பட்டது.

ஷைலஜாவிடம் சின்னச் சின்னதாய் விஷமங்கள் செய்திருக்கிறான். கைகளால் விளையாடி இருக்கிறான். அதிக பட்சமாய் முத்தமிட்டிருக்கிறானே தவிர, இப்படி உடலோடு அழுத்தினதில்லை… தோளில் சரித்து ஒட்டிக் கொண்டதில்லை. காதருகில் உதடுகள் வருட, குரல் குழைந்து உருக, ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை.

இதில் புது சுகம், புதுமையான அனுபவம். புது வகையான இன்பம். இதைத்தான் கோவலன், மாதவியிடம் பெற்றிருப்பானோ..? கண்ணகியையும் புறக்கணித்துவிட்டு ஓடியதற்கு இதுதான் காரணமோ… அதெல்லாம் கிடக்கட்டும். தான் இப்போது கோவலனா? அப்படியானால், ஷைலஜா கண்ணகி, சித்ரா மாதவியா? கண்ணகி மாதிரி ஷைலஜாவிற்கு விட்டுக்கொடுக்கிற மனசு வருமா..?

ஷைலஜா விட்டுக் கொடுப்பது இருக்கட்டும். முதலில் தான் கோவலனாக மாறிவிட்டோமா… ஷைலஜாவை நினைத்து இத்தனை நாள் உருகியவன், சடாரென்று இப்போது சித்ராவை நினைப்பது ஏன்.? அதுவும் இந்த மாதிரியெல்லாம் தோன்றுவது ஏன்..? ஒருவேளை தான் சித்ராவையும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறோமோ…? என்ன இது… நம் மனசு நமக்கே பிடிபடாததாக, கட்டுக்கு அடங்காததாக இருக்கிறதே!

அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே. ஷைலஜா தன் அழுத்தமான குரலில் அவனைக் கலைத்தாள்.

“இன்னும் எத்தனை நேரம் அவளை இப்படி சுமந்துக்கிட்டே நிற்கப் போறீங்க? சுகமான சுமைன்னு நினைப்பா..?”

சட்டென்று தன் நினைவுகளிலிருந்து விடுபட்டு.
அவளை ஏறிட்டான்.

“இல்ல ஷைலு… டிரஸ் ஈரமாக இருக்கே. மணல்ல படுக்க வைத்தால், ஈரத்துல மண் ஒட்டிக்குமேன்னு தயங்கறேன்…”

“மண் ஒட்டிக்குமேன்னு தயங்கறீங்களா…. இல்லை, மனசு ஒட்டிக்குமேன்னு தயங்கறீங்களா..?”
“ஷை… லு…” என்றவன், சடாரென்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

‘இயற்கை பெண்களுக்கு இந்த விஷயத்தில் நிறைய புத்திசாலித்தனத்தைத் தந்திருப்பதாகத் தோன்றியது. ஒரு சாதாரண, அதிக புத்திசாலித்தனமற்ற பெண்கூட கணவனை அல்லது காதலனை மோப்பம் பிடிக்கிறபோது, அதி புத்திசாலியாகி விடுகிறாள். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்சாக் மாதிரி துப்பறிவதில் இறங்குகிறாள். ஜேம்ஸ்பாண்ட் மாதிரி புது விதத்தில் சிந்திக்கிறாள். ஆராய்கிறாள். இந்தத் திறமையை எங்கிருந்து தான் அவர்கள் பெறுகிறார்களோ?’
“என்ன… இன்னும் கூட கீழே இறக்க மனசு வரலியா..? பெரிய ஆபத்திலிருந்து அவளைக் காப்பாற்றின நினைப்பா..? எம்.ஜி.ஆர்ன்னு எண்ணமமா..?”

“இல்ல ஷைலு… கெஸ்ட் ஹவுஸுக்குப் போய்…”

“அதுவரை இவளை இப்படியே தூக்கிக்கிட்டு வரப் போறீங்களா..?”

“அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியலை.”

“அவளுக்கா… உங்களுக்கா..?”

“நீ ரொம்ப அதிகம் பேசற ஷைலஜா.”

“நீங்க அதிகமா நடந்துக்கிட்டதால் தானே நான் அதிகம் பேச வேண்டிவருது…”

அதற்கு மேல் மயங்கின மாதிரி நடிக்க சித்ராவால் முடியவில்லை. கஷ்டமாக இருந்தது. அதனால், மெல்ல கண்களைத் திறந்தாள். கனவிலிருந்து விழித்துக் கொண்ட மாதிரி ஷைலஜாவைப் பார்த்தாள்,

“நான் எங்கே இருக்கேன் ஷைலு…?”

“ம்… அவர் தோள்மேல..! எங்க தெருவுக்கு, ஒரு குரங்காட்டி வருவான். அவன் இப்படித்தான் குரங்கைத் தூக்கிகிட்டு வருவான்…”

அப்போதுதான் மதுவின் தோள் மீது கிடப்பதை உணர்ந்த மாதிரி கீழே இறங்கினாள். அதுவும் தன் உடல் முழுவதும் அவன்மீது படுகிற மாதிரி வழுக்கிக்கொண்டு தரையில் இறங்கினாள்.

குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, மதுவைப் பார்த்தாள்.

“ஐயம் ஸாரி மது… என்ன ஆச்சு எனக்கு..?”

“ஒண்ணும் ஆகலை. பெரிசாக ஒரு அலை வந்தது…”

“அடிச்சுக்கிட்டுப் போயிட்டேனா..?”

“அடிச்சுக்கிட்டுப் போறவளைப் பாரு… ஐந்தடி நாலங்குல உயரம், எழுபது கிலோ வெயிட். நீயா அடிச்சுக்கிட்டுப் போவ..?”

“பின்ன… மது ஏன் என்னைத் தூக்கிட்டு நின்னார்..?”

“சின்னக்குழந்தை பாரு… அலைக்கு பயந்து மயக்கம் போட்டுட்ட. அதனால உன்னைக் கரை சேர்க்க தூக்கிக்கிட்டு வந்தார்.”

“தாங்க்யூ மது… எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால், உங்களை இன்னும் தாங்க்ஸ் பண்ணுவாங்க.”

“ஒரு டமாரம் வாங்கித் தரேன். அடிச்சு ஊர் முமுசும் சொல்லு. என்ன…”

“அதுக்கு ஏன் ஷைலு இப்படி கோவிச்சுக்கற..?”

“கோபமுமில்லை… ஒண்ணுமில்லை. வாங்க, கெஸ்ட் ஹவுஸிற்குப் போகலாம். இன்னிக்கும் காலைல கிளம்பினம்பின நேரமே சரியில்லை போல இருக்கு…”

“எல்லாம் சரியாகத்தான் இருக்கு. எதுக்கு ஷைலு கவலைப்படற..? நான் தான் சரியாயிட்டேன் இல்ல…”
“சரி, போகலாமா..?” என அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் மது.

மூவரும் நடந்து கெஸ்ட் ஹவுஸிற்குத் திரும்பினார்கள். பேச்சே இல்லாத மவுனத்தில் வந்து சேர்ந்தார்கள். அறைக்குள் நுழைந்ததும் சித்ரா, மதுவிடம் சொன்னாள்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் ஒரே நிமிஷத்தில் குளிச்சு, டிரஸ் மாத்திக்கிட்டு வந்துடறேன். அப்புறம் நீங்க குளிக்கப் போகலாம்…”

அவள் போனதும், ஷைலஜா சடாரென்று திரும்பி மதுவை முறைத்தாள்.

“என்ன ஷைலு, அப்படிப் பார்க்கற..?”

“நீங்க செய்தது உங்களுக்கே நல்லா இருக்கா…?”

“நல்லா இல்லாத அளவு நான் என்ன தப்பு செய்துட்டேன் ஷைலு..?”

“அவள் என்ன குழந்தையா… தூக்கித் தோள்ல சுமக்கிறதுக்கு..?”

மது மென்மையாகப் புன்னகைத்தான்.

“என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது..? ஒருவேளை அந்தக் காட்சியின் லயிப்பில் சிரிப்பு வருதோ..?”

“டோண்ட் பி ஸில்லி ஷைலஜா. நீ சொல்றதைக் கேட்கிறபோது இரண்டு சந்யாசிகள் ஆற்றைக் கடந்த கதை தான் நினைவுக்கு வருது…”

“அது என்ன புதுக் கதை..?”

“புதுக் கதை இல்லை, பழைய கதை. புத்த சந்யாசிகள் கதை. சொல்றேன் கேளேன்…”

“வேணாம். கதை கேட்கிற மூடில் நான் இல்லை.”

“ம்மம்….. நீ அவசியம் தெரிஞ்சுக்கணும், இரண்டு சந்யாசிகள் குளத்தங்கரைக்கு வந்தார்களாம். ஆற்றில் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போக வேறு மார்க்கம் இல்லாததால், நீந்திக் கடக்க முடிவு செய்தார்களாம். அப்போது ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண். மூத்த சந்யாசியிடம், தன்னையும் மறு கரையில் சேர்த்துவிடச் சொல்லி கெஞ்சினாளாம். அந்த சந்யாசியும் அவளைத் தோளில் தூக்கிச் சென்று, மறுகரையில் விட்டுவிட்டு, தன் வழியில் நடக்க ஆரம்பித்தாராம். அப்போது கூட வந்த இளம் சந்யாசி மூத்த சந்யாசியிடம், ‘எப்படி ஒரு பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம்..?’ என்று சண்டைபோட ஆரம்பித்தாராம். அதற்கு அந்த மூத்த சநியாசி சொன்னாராம். ‘அப்பனே…. நான் அப்போதே அவளைக் கரையில் இறக்கி விட்டு மறந்து போய்விட்டேன். நீதான் இன்னமும் சுமந்து கொண்டு வருகிறாய்…’ என்றாராம். அப்படி இருக்கிறது நீ சொல்வது. நான் அவளை அப்போதே இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீதான் இன்னமும் நினைவால் சுமந்து கொண்டிருக்கிறாய்..!”

அதற்குப் பின்னரே ஷைலஜாவிற்குள் ஒரு நிம்மதி ஏற்பட்டது. முகம் லேசாக மலர ஆரம்பித்தது. உதட்டோரம் சிரிப்பு ஓடிற்று.

“விட்டுவிட்டால் சரி…” என்று அவனை எல்லையற்ற காதலுடன் ஏறிட்டபோது, பாத்ரூமிலிருந்து வெளியில் வந்தாள் சித்ரா. முட்டி தொட்ட மிடியில் கால்கள் மழமழவென்று மின்ன, தலையைத் துவட்டிக் கொண்டே கேட்டாள்.

“யாரை விட்டுட்டால் சரின்னு சொல்ற ஷைலு. என்னையா..? அது தான் நடக்காது. நீங்க விட்டாலும், நான் உங்களை விடறதாக இல்லையே..!” என்று சிரித்தாள்.

‘என்ன பெண் இவள்..! எல்லாவற்றிற்கும் சிரிப்புதானா..? கோபிக்கவே தெரியாதா இவளுக்கு?’

மது நினைத்துக் கொண்டபோதே அவனை ஏறிட்டாள்.

“நான் பாட்டிலில் இருந்து வெளிப்பட்ட பூதம் மாதிரி. அத்தனை சுலபமாக உள்ளே போகமாட்டேன், தெரியுதா..? அதனால் என்னை உதறலாம்ன்ற நினைப்பில் நேரத்தை வீணாக்காமல், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. கொஞ்ச நேரம் சீட்டு விளையாடலாம் என்ன…?”

அவன் குளித்து, உடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்ததும், சித்ரா கண்ணகலப் பார்த்தாள்.

“என்ன பார்க்கறீங்க..?”

“காலை டிரஸ்ஸைவிட இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப ஜோராப் பொருந்தி இருக்கு. வெள்ளையாக இருக்கிறவங்க லைட் கலர்ல டிரஸ் பண்ணினால் அழகாகத்தான் இருக்கு…”

“தாங்க் யூ…”

“உங்களைப் பார்க்கிறபோது, எனக்கு இந்தி நடிகர் சஞ்சீவ் குமார் ஞாபகம் வருது. அந்த மாதிரி இருக்கீங்க.”

“வயசானவனாகவா..?”

“இல்லை, அழகானவனாக…”

இரண்டு பேர் சிரித்ததும், ஷைலஜாவின் வயிற்றில் பெட்ரோல் கொட்டின மாதிரி இறங்கிற்று. இன்னும் இந்த மாதிரி பேசினார்களானால், தீக்குச்சி கிழித்த மாதிரி பற்றிக் கொள்ளும் என்று தோன்ற, பேச்சை மாற்றினாள்.

“சீட்டு விளையாடலாம்னு சொன்னாயே சித்ரா…”

“என்ன விளையாடறது… பிரிட்ஜ் விளையாடணும்னால் நாலு பேர் வேணுமே..?”

“எனக்கு சீட்டே விளையாடத் தெரியாது. ஸ்பேடுக்கும் கிளாவருக்கும் வித்தியாசம் தெரியாது.”

“பின்ன எப்படி விளையாடறது.? நானும், மதுவும் மட்டுமா..?”

“விளையாடுங்க. நான் பார்த்துக்கிட்டிருக்கேன்.”

“ம்ஹும்.. நீ வரலேன்னால் விளையாட வேணாம்.” என்ற சித்ரா, கால் வினாடி யோசித்துக் கேட்டாள்.

“அப்படின்னால் லஞ்ச் சாப்பிடறதுக்கு முன்னால் கொஞ்சம் ஹொய்னகன் குடிக்கலாமா..?”

“ஹொய்னகன்னால்..?” ஷைலஜா புருவம் சுருக்கினாள்.

“பியர், டின்ல வர்ற பியர்…”

“ஐயயோ… நீ பியர்லாம் குடிப்பியா..?”

“பியர் தண்ணி மாதிரிடி, பிரான்ஸக்குப் போனால் தண்ணி வாங்கிக் குடிக்கிறதைவிட பியர் வாங்கிக் குடிக்கிறது இன்னும் சீப்னு எல்லாரும் பியர்தான் குடிப்பாங்க.”

“நீ குடிச்சிருக்கியா சித்ரா..?”

“வெறும் பியருக்கே இப்படிப் பதர்ற..? பிளாக் லேபிள் விஸ்கிகூட எடுத்துட்டிருக்கேன். வீட்ல பார்ட்டி நடக்கிற போது இதெல்லாம் சகஜம்…”

ஷைலஜா அவளை அருவருப்பாகப் பார்க்க, மது ஆச்சரியமாகப் பார்த்தான்.

-தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...