நகைச்சுவையின் இனிப்பு நடிகர் தேங்காய் சீனிவாசன்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தனி முத்திரை பதித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர் வசன உச்சரிப்பு தமிழ்த்திரை காமெடியில் கவனத்தைப் பெற்றது. காமெடி நடிகர்களில் குள்ளமான, வித்தியாசமான தோற்றம், காமெடி குரல் மாற்றம் என்ற எந்த காமெடிக்கான அடையாளமும் இல்லாமல் உண்மையான, கதாபாத்திரத்திற்கு ஏற்ற, ஆபாசமில்லாத நகைச்சுவையைத் தந்து ரசிகர்கள் மத்தியில் நின்றவர் தேங்காய் சீனிவாசன்.
தேங்காய் சீனிவாசன் ‘கல் மனம்’ என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார். அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த அப்போது பிரபலமாக இருந்த நடிகர் கே.ஏ.தங்கவேலு, இவரை இனிமேல் ‘தேங்காய் ஸ்ரீநிவாசன்’ என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார் தேங்காய் ஸ்ரீநிவாசன்.
சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் திருவைகுண்டம் சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் பிறந்தார் தேங்காய் சீனிவாசன். இவருடைய தந்தை ராஜவேல் ஒரு நாடக நடிகர். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சியுடன் இருந்தார். அவருடைய தந்தை எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ மேடை நாடகத்திலேயே அறிமுகமானார்.
தேங்காய் சீனிவாசன் ‘இரவு பகலும்’ என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமாகி இருக்க வேண்டியது. அந்தப் படத்தில் சில காட்சிகளில் நடித்த பிறகு, வியாபார காரணங்களுக்காக அவரை நீக்கிவிட்டு அப்போது பிரபலமாக இருந்த நாகேஷை படக்குழு ஒப்பந்தம் செய்தது. பிறகு தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாகத் திரைத்துறையில் அறிமுகமானார்.
காமெடி நடிகர்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு, அழகான கிராப் வைத்த தலைமுடி, வசீகரிக்கும் அழகு என அப்போது அனைத்து அம்சங்களுடன் வலம் வந்தவர் தேங்காய் சீனிவாசன்.
ஜிஞ்சக்கு ஜக்கா.. ஜக்கா.. மங்ளோத்திரி.. தீர்த்தாய’, ‘ஆசிர்வாத அமர்க்களா’ என தேங்காயின் வாயின் வழியாக வெளியே வரும் டயலாக்கு களுக்கு அர்த்தமே கிடையாது என்றாலும் அதை அவர் உச்சரித்த விதம் ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு கைத்தட்டல்களை தியேட்டர்களில் அள்ளிக் கொடுத்தது. பிறகு வந்த நடிகர்கள் வெண்ணிறஆடை மூர்த்தி சின்னி ஜெயந்த், வடிவேலு வரை அவரது ஸ்டைலைத்தான் பின்பற்றினார்கள். ‘அம்மா பால்’ என்பதையே தேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் சொன்னார். ஒரு பால்காரர் உச்சரித்தால்கூட அவ்வளவு ராகமாக வராது. அந்தளவுக்கு வசனத்தில் பாடிலாங்வேஜில் கவனம் செலுத்தினார் தேங்காய் சீனிவாசன்.
ஏ.வி.எம்.மின் “காசேதான் கடவுளடா” படத்தில் நடித்த தேங்காய் சீனிவாசனுக்கு தியேட்டர்களில் தனியாக கட்அவுட்கள் வைக்கப்பட்டது. அந்தப் படத்தில் நடித்த ஹீரோக்களைவிட ஒரு காமெடி நடிகருக்கு கட் அவுட் வைக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பாகும்.
என்.எஸ்.கிருஷ்ணன், டணால் தங்கவேலு, நாகேஷ், சந்திரபாபு போன்ற நகைச்சுவை ஜாம்பவான்கள் கொடிகட்டி ஆண்ட நகைச்சுவை திரையுலகில் தனக்கென தனி பாணியையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்த தேங்காய் சீனிவாசன்.
இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஜெயசங்கர் – தேங் காய் சீனி வாசன் காம்பினேஷன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். திரை யில் மட்டு மல்லாது நிஜத்திலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி யுள்ளனர். ரஜினியுடன் நடித்த தில்லுமில்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் நடிப்ப பேசப்பட்டது. கமல்ஹாசனுடன் சட்டம் என் கையில் படத்தில் சென்னைத் தமிழில் பேசி கலக்கியிருப்பார்.
தேங்காய் சீனிவாசன் நடிப்பில் சிவாஜி கணேசன் பாதிப்பு இருக்கும். எம்.ஜி.ஆர். படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் விசுவாசியாக வும் மாறி எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவருக்காகப் பிரச்சாரம் செய்தார்.
இறுதியாக தேங்காய் சீனிவாசன் ‘கிருஷ்ணன் வந்தான்’ என்கிற படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். அதில் சிவாஜி கணேசன், நடிகர் மோகன், கதாநாயகனாக நடித்தனர். நல்ல கதையாக அமைந்தது. இருந் தாலும் படம் தோல்விப் படமாக அமைந்தது. அதனால் தேங்காய் சீனி வாசனுக்குப் பெரிய பணநஷ்டம் ஏற்பட்டது. மிகவும் நொந்து போனார்தேங்காய் சீனிவாசன். இதனால் எம்.ஜி.ஆருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதினார். அதன்பிறகு எம்ஜிஆர் அவருக்கு வேண்டிய உதவியைச் செய்தார்.
தேங்காய் ஸ்ரீநிவாசன் தன் உறவினரின் ஈமச்சடங்கிற்காக பெங்களூரு விற்குச் சென்றபோது, மூளை ரத்தப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 1987-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் 51-ம் வயதில் உயிரிழந்தார்.
அவர் இடத்தை நிரப்ப தமிழ்த்திரை நகைச்சுவை இடத்தில் யாரும் இல்லை.