இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் ஷியாமலா கோபாலன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம்.
கமலா ஹாரிஸின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாயாரால் வளர்கப்பட்ட கமலா ஹாரிஸ், இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்துள்ளார்.
கமலா ஹாரிஸின் தாய் தன்னை கருப்பின கலாசாரத்திற்கு மாற்றிக் கொண்டு தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்துள்ளார். “நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்” என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.
துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதுமே அவரது உறவினர்கள் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். பதவியேற்பையொட்டி, கமலா ஹாரிஸ் தாயாரின் சொந்த ஊரான துளசேந்திபுரத்தில் கிராமத்தினர் பூஜை செய்து, பட்டாசு வெடித்து, விளக்கு ஏற்றி கொண்டாடினர்.
இவர் அமெரிக்க வரலாற்றில், இத்தகைய அதியுயர் பதவி ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்ணும் ஆவார்.
கலிபோர்னியா மாகாணத்தின் , ஆக்லாந்தில் பிறந்த கமலா ஹாரிஸ், அவார்டு பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்று சட்டக் கல்வியில் பட்டம் பெற்றார். இவர் தனது பணியை அலமேடா கவுண்டி உள்ளூர் அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் ஆரம்பித்து, பின்னர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட, மற்றும் சான் பிரான்சிசுக்கோ நகர அரசு வழக்குரைஞர் அலுவலகத்திலும் பணியாற்றினார். 2003 இல், சான் பிரான்சுக்கோ மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 இலும், பின்னர் 2014 இலும் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 அமெரிக்க மேலவைத் தேர்தலில் லொரெட்டா சான்செசைத் தோற்கடித்து கலிபோர்னியாவுக்கான மேலவை உறுப்பினரானார். இதன் மூலம், கலிபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க மேலவைக்குத் (மாநிலங்களவை) தெரிவான முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண், மற்றும் முதலாவது தெற்காசிய-அமெரிக்கர் என்ற சிறப்புகளையும் பெற்றார். மேலவை உறுப்பினராக, சுகாதார சீர்திருத்தம், கட்டுப்பாட்டுப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குதல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான வழிவகைகள், தாக்குதல் ஆயுதங்களுக்கு தடை, மற்றும் வளர்விகித வரி சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரட் கவானா என்பவரை குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத் இணை நீதிபதி பதவிக்கு வேட்பாளராக அறிவித்த போது, இவர் அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தது மூலம் நாட்டளவில் அறியப்பட்டார்.
2020 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்கான மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக உட்கட்சி தேர்தலில் கமலா போட்டியிட்டார். 2019 டிசம்பர் 3 இல் தொடர் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனது பிரச்சாரத்தை முடிப்பதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகளில் சில காலம் இவர் முன்னணியில் இருந்தார். 2020 ஆகஸ்ட் 11 அன்று 2020 தேர்தலில் ஜோ பைடனின் துணைக் குடியரசுத் தலைவர்- வேட்பாளராக கமலா அறிவிக்கப்பட்டார். 2020 நவம்பர் 3ஆம் நாள் குடியரசு தலைவர், துணைத் தலைவருக்கான பொது தேர்தல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்கு பின் நவம்பர் 7 ஆம் நாள், பிடென்-ஹாரிஸ் இணை 306 இடங்களையும், அப்போது பதவியிலிருந்த டிரம்ப்-பென்சு இணை 232 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர். மொத்தம் 538 இடங்கள் கொண்ட தேர்தல் சபையில் பெரும்பான்மையை வென்ற பிடென்-ஹாரிஸ் இணை முறையே குடியரசு தலைவராகவும், குடியரசு துணை-தலைவராகவும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்க தேசிய சபையும் இந்த தேர்தல் முடிவை அங்கீகரித்தது. அமெரிக்க மாநிலங்கள் சபை உறுப்பினர் பதவியை விட்டு ஜனவரி 18 2021 அன்று கமலா ஹாரிஸ் விலகினார்.
2021 ஜனவரி 20ஆம் நாள், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை-குடியரசு தலைவராக வாஷிங்டனில் பதவி ஏற்றார். ஐரோப்பியரல்லாத வம்சாவளியைச் சேரா ஒருவர் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும், முன்னதாக 1929 முதல் 1932 வரை சார்லசு கேர்ட்டிசு அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். குடியரசு துணை தலைவர் என்ற முறையில், அவர் முன்பு பதவி வகித்த அமெரிக்க மாநிலங்கள் சபையின் (பகுதி நேர ) தலைவராகவும் கமலா பணியாற்றுவார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் ஜனநாயகக் கட்சியின் உள்கட்சிப் போட்டியில் களமிறங்கிய பிறகுதான், உலக அளவில் இவர் மீது அதிக ஊடக வெளிச்சம் பாயத் தொடங்கியது.
அந்தப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும், இப்போது ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றி மூலம் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகியிருக்கிறார் கமலா.
தான் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக்கப்படுவார் என்று பைடன் அறிவித்தபோது, கமலா மீது இவ்வளவு கவனம் விழக் காரணம் அமெரிக்க துணை அதிபர் பதவியில் இதுவரை ஒரு பெண்ணோ, ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியினரோ, ஆசிய-அமெரிக்க வம்சாவளியினரோ இருந்ததில்லை.
“எனக்கும் குடும்பம்தான் எல்லாம். அமெரிக்கா, என் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் மற்றும் எங்கள் அருமையான குழந்தைகள் கோல் மற்றும் எல்லா எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வரை என்னால் காத்திருக்க முடியாது,” என தன் ஆதரவாளர்கள் முன் வெளிப்படையாகச் சொன்னார்.
என் வேலை நிமித்தமாக எனக்கு பல பட்டங்கள் கிடைத்து இருக்கின்றன. அதில் அமெரிக்க துணை அதிபர் என்கிற பட்டம் பெருமிதமான ஒன்றுதான். ஆனால் மொமலா (Momala) என்கிற பட்டம் எனக்கு எப்போதும் நெருக்கமான ஒன்று என கமலா ஹாரிஸே சொல்லி இருக்கிறார்.
அம்மா ஷியாமளா
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், கடந்த 10 மே, 2020 அன்று, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் தாய் ஷியாமளாவின் படம் ஒன்றைப் பதிவு செய்து இருந்தார்.
அந்தப் பதிவில் “எல்லா விதமான தடைகளையும் உடைத்து எறிந்த ஒரு தாயின் மகள் நான். ஷியாமளா ஹாரிஸ் ஐந்து அடி உயரத்துக்கு மேல் இருக்கமாட்டார். ஆனால் எப்போதாவது அவரை சந்தித்து இருந்தால், அவர் ஏழு அடி உயரமானவர் என நீங்கள் நினைத்து இருப்பீர்கள். அவருக்கு அப்படி ஓர் உற்சாகமும், விடாமுயற்சியும் இருந்தது. அவர் என்னை வளர்த்ததற்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்” என அன்னையர் தின வாழ்த்து சொல்லி இருந்தார் கமலா ஹாரிஸ்.
1971-ம் ஆண்டில், கமலா ஹாரிஸ்-க்கு ஏழு வயதாக இருக்கும் போது, டொனால்டு ஹாரிஸ் மற்றும் ஷியாமளா, விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
விவாகரத்துக்குப் பிறகும், இவர்களது வாழ்கையில் டொனால்டு ஹாரிஸ் தொடர்ந்து இருந்தார். இருப்பினும், தங்களின் வாழ்கையை வடிவமைத்ததில், பெரும் பகுதி, தன் தாய் ஷியாமளாவைத்தான் சேரும் எனச் சொல்லி இருக்கிறார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எமோஃப், தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தில், கோட் சட்டப் புலத்தில் சட்டம் பயின்றவர். 1990-களின் கடைசி காலம் வரை, பல்வேறு சட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். 2000-ம் ஆண்டில் சொந்தமாக சட்ட நிறுவனத்தை தொடங்கினார். 2006-ம் ஆண்டு, இந்த நிறுவனத்தை வெனபிள் என்கிற நிறுவனம் வாங்கி தம்முடன் இணைத்துக்கொண்டது
ஹாலிவுட் வீடியோ என்கிற நிறுவனத்துக்கும், ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான கணக்கு வழக்கு பிரச்சனையில், ஹாலிவுட் வீடியோ சார்பாக வாதாடினார். இதனால் பொழுதுபோக்கு தொடர்பான சட்ட விவகாரங்களில் இவருக்கென ஒரு பெயர் கிடைத்தது. இந்த வழக்குக்குப் பின், பல தயாரிப்பு நிறுவனங்கள் சார்பாக க்ளாஸ் ஆக்ஷன் எனப்படும் வழக்குகளில் ஆஜரானார் எம்ஹாஃப்.
2017-ம் ஆண்டு வெனபிள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். டி.எல்.ஏ ஃபைபர் என்கிற நிறுவனத்தில் கூட்டாளியாக சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். பொழுதுபோக்கு சார்ந்த வழக்குகள் மற்றும் அறிவுசார் சொத்து விவகாரங்களில் நிபுணர்.
2013-ம் ஆண்டு, க்ரிசெட்டி ஹட்லின் என்பவர் ஏற்பாடு செய்த Blind Date-ல் தான் கமலா ஹாரிஸ் மற்றும் டக்ளஸ் எம்ஹாஃப் சந்தித்தார்கள்.
ஒரு வருடம் கழித்து, ஒரு சிறிய நிகழ்ச்சியில், மனதுக்கு நெருக்கமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தின் போது, இருவரும், தங்களின் கலாசாரங்களை மதிக்க முடிவு செய்து இருந்தார்கள்.
கமலா ஹாரிஸின் இந்து கலாசாரத்தை ஏற்கும் விதத்தில் டாக் எம்ஹாஃப் பூமாலையை அணிந்து இருந்தார். டக்ளஸ் எம்ஹாஃப்-ன் யூத கலாசாரத்தை மதிக்கும் விதத்தில், கமலா ஹாரிஸ் கண்ணாடியை உடைத்தார்.
“என் மனைவியின் அரசியல் வேலைகள், என்னை மிகவும் கவர்கிறது. என் மனைவியின் தேர்தல் வேலைகளின் போது, என்னை நிறுத்தி, என்னோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.” என கடந்த ஆண்டு, ஹாலிவுட் ரிப்போர்டருக்குச் சொல்லி இருந்தார் டக்ளஸ் எம்ஹாஃப்.
டாக் எம்ஹாஃப்-க்கு, முதல் திருமணத்தின் வழியாக, இரண்டு குழந்தைகள். அந்த குழந்தைகள் பெயர் தான் கோல் மற்றும் எல்லா. இந்த குழந்தைகள், கமலா ஹாரிஸை அன்பாக மொமலா என்று அழைக்கிறார்களாம். இந்த பட்டம்தான் தனக்கு நெருக்கமான பட்டம் என கமலா ஹாரிஸே சொல்லி இருக்கிறார்.
கமலா ஹாரிஸ், எலே (Elle) என்கிற பத்திரிகையில் “கோல் மற்றும் எல்லா, என்னை இதை விட சிறப்பாக வரவேற்க முடியாது. அவர்கள் அறிவான, திறமையான, நகைச்சுவை உணர்வு மிக்க குழந்தைகள். தற்போது குறிப்பிடத் தகுந்த விதத்தில் பதின் பருவ இளைஞர்களாக வளர்ந்து இருக்கிறார்கள். நான் ஏற்கனவே டக்ளஸால் கவரப்பட்டுவிட்டேன். ஆனால், எல்லாவும் கோலும்தான் என்னை இந்த குடும்பத்துக்குள் இழுத்து வந்து இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” என எழுதி இருக்கிறார்.
இந்த அளவிற்கு புகழ் பெற்ற கமலா ஹாரிஸ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்…
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கமலா ஹாரிஸ்