தேசிய மொழி இந்தி: சொமேட்டோவின் பதிலால் சர்ச்சை!
இந்தியாவின் தேசிய மொழி இந்தி; அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என சொமேட்டோ நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டார்.
அப்போது ‘மொழி பிரச்னையால் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்க முடியவில்லை’ என சொமேட்டோ சேவை மையம் கூறியுள்ளது.
விகாஷ், ‘தமிழ்நாட்டில் சொமெட்டோ செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை அறிந்தவர் வேலைக்கு அமர்த்த வேண்டும்’ என கூறியுள்ளார்.
‘இந்தியாவின் தேசிய மொழி இந்தி. அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்’ என சொமேட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அந்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் தற்போது இணையத்தில் பலரால் பதிவிடப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியை தேசிய மொழி என்று வாடிக்கையாளருக்கு பதிலளித்த சொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக கண்டனம் வலுத்து வந்த நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மொழி சர்ச்சையை ஏற்படுத்திய அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக சொமோட்டோ நிறுவனம் விளக்கம்.
