
கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் மிக மிக ஆபத்தானது உடனடி யாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளருமான சுப.உதயகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரிடம் அது குறித்துப் பேசினோம்.
என்ன நடக்கிறது அணுமின் நிலையத்தில்?
“இரண்டு அணுஉலைகளே எதிர்காலத்தை அழித்துவிடும் என்று தமிழக மக்கள் தீர்க்கமாகப் போராடியதைப் புறந்தள்ளி, இன்று கூடங்குளத்தில் 3, 4, 5, 6, என மென்மேலும் அணுஉலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அனைத்துமே 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மிகப் பெரிய அணுஉலைகள்

இவற்றுள் முதலிரண்டு உலைகளுமே இன்றுவரை திறம்பட இயங்கவில்லை; முழு அளவில் மின்சாரம் தயாரிக்கவில்லை. பல்வேறு குளறுபடிகளாலும், தொழிற்நுட்பக் கோளாறுகளாலும் அவை திணறிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
இந்த நிலையில் மேலும் 7, 8 அணுஉலைகளும், அணுக்கழிவு மையமும், அணுக்கழிவு மறுசுழற்சி மையமும் (reprocessing center) அமைக்கப்படவிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன.”
உலக அளவில் அணுமின் நிலையங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?
“உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் அணுஉலைகளில் ஏப்ரல் 26, 1986 அன்று 4-வது அலகு வெடித்தபோது, அது 2,225 டிகிரி செல்ஷியஸ் அளவு வெப்பநிலைக் கொண்டிருந்தது (தண்ணீர் கொதிப்பதற்கு 100 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் போதுமானது).
செர்னோபில் விபத்தில் வெளிப்பட்ட கதிர்வீச்சு 1945-ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டு களிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சைப் போன்று 200 மடங்காக இருந்தது.

செர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை துல்லியமாக அறிய முடியவில்லை. ஆனால் ஐரோப்பா முழுவதுமுள்ள ஒரு கோடி பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகிலுள்ள பெலரூஸ் நாட்டில் மட்டும் 21 விழுக்காடு நிலம் மாசுபட்டு மலடாகிப் போனது.
ஓரிரு ஆண்டுகளில் முறையே உலை-2, உலை-1, உலை-3 ஆகியவற்றை மூட வேண்டியத் தேவை எழுந்தது. இதற்கு 4 பில்லியன் டாலர் தேவைப்படும் என்பதால், உக்ரைன் அரசு தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தது.
இந்த அணுஉலைகளால் தங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் வருகின்றன என்பதை உணர்ந்த ஐரோப்பிய நாடுகளும், பணக்கார G-7 நாடுகளும் பணஉதவி செய்ய முன்வந்தன. ஆனால் அவர்களாலுமே முழு உதவியும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையே ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே முதல் உலையின் மீது கட்டப்பட்டிருந்த ‘சார்கொஃபகஸ் (Sarcophagus) எனும் கவிழ்த்துவைக்கப்பட்ட கறிச்சட்டி வடிவிலானக் கட்டிடத்தில் கீறல்களும், வெடிப்புக்களும் ஏற்பட்டு, தூண்களும், உத்திரங்களும் சிதைந்து மொத்தமாக உடையும் நிலையை எட்டியது.
எனவே பிரான்சு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் உதவியோடு முதல் உலையின் அருகேயிருந்த வெற்றிடத்தில் 300 x 350 x 800 அடி அளவுகொண்ட 37-மாடிக் கட்டிடம் அளவுக்கு ஒரு மாபெரும் எஃகுப் பெட்டியை உருவாக்கி, அதனை அப்படியேக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, முதல் உலையை மூடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency) உலை-1 மற்றும் உலை-3 ஆகியவை ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவித்தது. செர்னோபில் துயரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதற்கிடையே ஜப்பான் நாட்டிலுள்ள ஃபுகுஷிமா அணுஉலைப் பகுதியில் மார்ச் 11, 2011 அன்று ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளி அளவுக்கு ஒரு மாபெரும் நிலநடுக்கம் நடந்தது. அதன் உடனடி விளைவாக, 46 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்து கோரத்தாண்டவம் ஆடின.
நிலநடுக்கத்தாலும், கடலின் வெள்ளப்பெருக்காலும் உலை-1 மார்ச் 12 அன்று வெடித்தது. உலை-4 மார்ச் 15 அன்று வெடித்தது. அதன் பிறகு உலை-3 உருகிச் சிதைந்தது.
ஃபுகுஷிமா விபத்து நடந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், பணபலம், உயர் தொழிற்நுட்பம், கட்டுக்கோப்பான அரசு, கடமையுணர்வு கொண்ட மக்கள் என அனைத்தையும் பெற்றிருக்கும் ஜப்பான் நாடு இன்றளவும் கையறுநிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.
செர்னோபில் மற்றும் ஃபுகுஷிமா அணுஉலைகளில் ஏற்பட்ட விபத்துக்கள் பெரும் தீங்குகள் விளைவிக்க முக்கியமானக் காரணமே ஒரே இடத்தில் ஏராளமான அணுஉலைகளைக் கட்டியதுதான்.
பிறர் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து பாடம் பெற விரும்பாத ஒன்றிய அரசு, குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், மித்தி விரதி எனுமிடத்தில் திட்டமிடப்பட்ட அணுஉலைப் பூங்காத் திட்டத்தை மட்டும் உடனடியாக நீக்கியுள்ளது.
அணுஉலைதான் ஆபத்து அணுக்கழிவு மையம் எப்படி ஆபத்தானது?
அணு உலையிலிருந்து உயர்தரக் கழிவு (high-level waste), நடுத்தரக் கழிவு (intermediate-level waste), கடைத்தரக் கழிவு (low-level waste) என்று மூன்று வகைக் கழிவுகள் உருவாகின்றன.
அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனிய எரிகோல்கள் முதல் பணியாளர்களின் கையுறைகள், காலணிகள் வரை, அனைத்துமே கதிர்வீச்சுக்குள்ளாகி இருப்பதால், கதிர்வீச்சை வெளியிடுவதால், அவற்றை பிற திடக்கழிவுகள்போல கண்ட இடங்களில் வீசியெறியாமல், பல்லாண்டு காலம் கண்ணும்கருத்துமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

அணுஉலைகளிலிருந்து வெளிவரும் திரவக்கழிவுகளைப் பெரும்பாலும் கடலுக்குள்ளேயே விட்டுவிடுகிறார்கள். எனவே கடற்கரையில் அணுஉலைப் “பூங்கா” நிர்மாணித்தால், கடலுக்குள் “பாலைவனச் சோலை” தானாகவே உருவாகும். மீன்வளம் அருகிப் போகும்.
கூடங்குளத்தில் ஓர் அணுஉலையில் 163 எரிகோல்கள் வைக்கப்படுகின்றன. ஓர் அணுஉலையிலிருந்து மட்டுமே ஆண்டொன்றுக்கு 30,000 கிலோ எடையுள்ள எரிக்கப்பட்ட எரிகோல்கள் வெளிவரும். இவை அதிக வெப்பமும், கதிர்வீச்சும் கொண்டவை.
இவற்றைப் பாதுகாக்க ‘எரிகோல் சேமிப்புத் தேக்கம்’ (Spent Fuel Pool) ஒன்று அணுஉலைக் கட்டிடத்துக்குள்ளேயே அமைக்கப்படுகிறது. அதில் ஏழு இயங்கு வருடங்களில் (operation years) எரிக்கப்பட்ட எரிகோல்களை மட்டுமே சேமித்து வைக்கமுடியும்.
பின்னர் இந்த எரிகோல் கழிவுகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியாக வேண்டும். அதற்காக ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor — AFR) எனும் அமைப்பு அணுஉலை வளாகத்துக்குள்ளேயேக் கட்டப்படுகிறது. கடந்த 2018 சூலை மாதமே தயாராக வேண்டிய இந்த அமைப்பு இன்னும் கட்டப்படவேயில்லை. இதனைக் கட்டுவதற்கான தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்து, 2022 மே மாதம் வரை கூடுதல் காலஅவகாசம் கேட்டுப் பெற்றிருக்கிறது.
இம்மாதிரியான அணுஉலைகளின் உயர்தரக் கழிவுகள் தங்களின் கதிர்வீச்சுத் தன்மையில் பாதியை இழப்பதற்கே 24,000 ஆண்டுகள் ஆகும். ஏறத்தாழ 48,000 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயர்தர அணுக்கழிவுகளை ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository – DGR) ஒன்றில் மட்டுமே பத்திரமாகப் பாதுகாக்க முடியும். இது உறுதியானப் பாறையும், தரைதள அமைப்பும் கொண்ட இடத்தில் சுமார் 500–600 மீட்டர் ஆழத்தில் நிறுவப்படுகிறது. இந்த ‘ஆழ்நிலக் கருவூலம்’ ஒன்று இதுவரை இந்தியாவில் உருவாக்கப் படவேயில்லை.

2011-2014 காலக்கட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரைப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, கூடங்குளம் அணுக்கழிவு களை கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பழைய தங்கச் சுரங்கங்களில் புதைப்போம் என்று 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணுசக்தித் துறை அறிவித்தது.
ஆனால் அப்போதைய பாஜக முதல்வர் திரு. ஜெகதீஷ் ஷெட்டரும், காங்கிரசுக் கட்சியின் மத்திய அமைச்சர் திரு. வீரப்ப மொய்லியும் கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்கேயும் புதைக்க விடமாட்டோம் என்று போர்க்கொடித் தூக்கினார்கள். உடனே மத்திய இணை அமைச்சராக இருந்த திரு. நாராயணசாமி கூடங்குளம் அணுஉலைக் கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்று அறிவித்தார்.
‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவதற்காக 2020 மார்ச் மாதம் இராதாபுரத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடக்கப்போகிறது என்று அறிவித்து விட்டு, மக்கள் எதிர்ப்பால் அதனைக் கைவிட்டார்கள். ரூ. 538 கோடி செலவாகும் இதனைக் கட்டிமுடிக்க 29 மாதங்கள் ஆகும் என்றும், இந்த அமைப்பை 75 ஆண்டுகள் பயன்படுத்தமுடியும் என்றும், 4,328 எரிகோல்களை இங்கே சேமித்து வைக்கலாம் என்றும் திட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது. ஆனாலும் இதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை இதுவரை மக்களோடுப் பகிரவில்லை.
வெறும் 13.5 சதுர கி.மீ. பரப்பு கொண்ட கூடங்குளம் அணுஉலை வளாகத் தின் நெருக்கடியானச் சூழலில், ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பையும் கட்டுவது ஆபத்தானது. ஓர் அணுஉலையில் எழும் ஆபத்துக்களைவிட ‘அணு உலைக்கு அகலே’ அமைப்பிலிருந்து மாபெரும் அபாயங்கள் எழுகின்றன.

இதிலிருந்து கசியும் தண்ணீரும், வெளியேறும் காற்றும் அதிகமான கதிரியக்கம் கொண்டவையாக இருக்கும். எனவேதான் கதிர்வீச்சைக் கண்காணிக்க, பராமரிக்க சிறப்பு அறைகள் அமைக்கப்படுகின்றன. நீண்டகால கதிர்வீச்சு பாதிப்புக்கள், வெடி விபத்துக்கள், நிலத்தடிநீர் நஞ்சாதல், காற்று மாசுபாடு, சாகடிக்கும் நோய்கள் என அணுக்கழிவு மையங்களால் பற்பல பாதிப்புக்கள் உருவாகின்றன.
நாற்பது ஆண்டுகள் இயங்கும் அணுமின் நிலையங்களையே குஜராத், ஹரியானா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் 48,000 ஆயிரம் ஆண்டுகள் அணுக்கழிவுகளைப் புதைத்து வைக்கும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ தற்போது ‘நியூட்ரினோத் திட்டம்’ என்ற பெயரில் தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் தோண்டப்படும் குகைகளில் அமைக்கப்படும் என்றறிவித்து, பின்னர் அது “எழுத்தர் பிழை” (clerical error) என்று மழுப்பினார்கள்.”

சரி அணுஉலை நிரந்தரமாக மூட என்ன செய்ய வேண்டும்?
“கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலை களில் நடைபெற்றிருக்கும் மாபெரும் ஊழல்கள், முறைகேடுகள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும்வரை, விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்.
ரஷ்யாவோடான 1997 அக்டோபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங் குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேத் திருப்பி அனுப்பவேண்டும்.
இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கேக் கட்டப்போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும். மேற்படி இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை, கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா, மத்தியப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தேவாரம் நியூட்ரினோத் திட்டம் போன்றவற்றைக் கைவிட்டு, நம் மாநிலத்தை “அணுத்தீமையற்றத் தமிழ்நாடு” (Nuclear-free Zone Tamil Nadu) என்று அறிவிக்க வேண்டும்.
ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் போன்ற வெளிநாடுகளின் தரமற்ற அணுஉலைகளை, தளவாடங்களை வாங்கி, அந்நாடுகளின் பொருளாதாரங் களைத் தூக்கி நிறுத்த உதவாமல், இந்திய மக்களும், தமிழர்களும், எங்களின் வழித்தோன்றல்களும் நலமாய், பாதுகாப்பாய் வாழ வழிவகை செய்யவேண்டும்.”
