பேய் ரெஸ்டாரெண்ட் – 14 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 14 | முகில் தினகரன்

தான் தங்குமிடத்திற்கு வந்த சிவா, நேரே வாஷ் பேஸினருகே சென்று அவசரமாய் வாயைக் கொப்பளித்தான்.

தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்திருந்த குள்ள குணா அரைக் கண்ணால் அவனது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருந்தான். “எதுக்கு இந்த நேரத்துல வந்து வாய் கொப்பளிக்கிறான்?”

சட்டையைக் கழற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்த சிவா, சரியாக மூன்றாவது நிமிடம் பெரும் குறட்டை சத்தத்தோடு உறங்க ஆரம்பித்தான்.

அவன் விஷயத்தில் பல முரண்பாடுகளைக் கண்டுபிடித்த குள்ள குணா பெரும் குழப்பமானான். “என்னது… இவன்கிட்டேயிருந்து சிகரெட் வாசமடிக்குது… சிவா சிகரெட் குடிக்கற ஆளில்லையே!… அதே மாதிரி வழக்கமா மல்லாக்கப் படுத்துத்தான் தூங்குவான்… இப்பக் குப்புறப் படுத்து தூங்கறான்!… படுத்த உடனே தூங்காம அரை மணி நேரமாவது ஹெட் போனைக் காதுல செருகிக்கிட்டு பாட்டுக் கேட்டுட்டு அப்புறம்தான் தூங்குவான்… இப்பெல்லாம் படுத்த உடனே தூங்கிடறான்…. அதுவும் எப்போதும் இல்லாத ராட்சஸக் குறட்டையோட…! “என்னாச்சு இவனுக்கு?”

சிவா உறங்கி விட்டதை உறுதி செய்தபடி மெல்ல எழுந்த குள்ள குணா வாஷ் பேஸினருகே சென்று பார்த்தான்.

அடுத்த விநாடியே “உவ்வேய்ய்ய்ய்” என்று வாயைப் பொத்திக் கொண்டு தன் படுக்கைக்கே திரும்பினான்.

“கடவுளே… இதென்ன வாஷ் பேஸினெல்லாம் ரத்தக் களறியாயிருக்கு?… என்ன பண்ணிட்டு வந்திருக்கான் தெரியலையே?… என்னைக் கழுத்தைக் கடிச்ச மாதிரி… எலி…. பெருச்சாளி… பூனை…ன்னு எதையாச்சும் பிடிச்சுக் கடிச்சிட்டானோ?”

விடிய விடியத் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்த குள்ள குணா விடியற்காலை நேரத்தில அவனையுமறியாமல் தூங்கிப் போனான்.

காலை ஏழு மணி,

வழக்கமாய் ஐந்தரை மணிக்கே எழுந்து விடும் குள்ள குணா, விடியல் வரை விழித்தே கிடந்ததன் பலனாய் இன்று இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.

ஜன்னல் வழியே உள்ளே புகுந்த காலை வெயில் அவன் காலில் பட்டு சூட்டைக் கொடுக்க, உதறினான்.

அப்போது அவன் காதுகளில் யாரோ சிலர் “காச்…மூச்ச்”சென்று கத்தியபடி பேசிக் கொண்டிருக்கும் ஓசை கேட்க, எழுந்து படுக்கையில் அமர்ந்தவாறே கூர்ந்து கவனித்தான். நடு நடுவே ஆனந்தராஜ்…. விஜயசந்தர்… திருமுருகன்… ஆகியோரின் குரலும் வந்து போக, “என்னது மூணு முதலாளிகளும் இன்னேரத்துக்கே வந்திட்டாங்க?” யோசித்தவாறே திரும்பி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவன் நொந்து போனான். “அடக் கடவுளே…மணி ஏழே காலா?”

“படக்”கென்று அவசர அவசரமாய் சட்டையணிந்து கொண்டு, சிவாவின் படுக்கையைப் பார்த்தான்.

அங்கே அவன் இல்லை.

மெல்ல வெளியே வந்து சுற்றும்முற்றும் பார்த்தான் குணா. சற்று தூரத்தில் ஒரு கும்பல் நின்று கொண்டிருப்பதும், அதில் மூன்று முதலாளிகளும், இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் நின்று கொண்டிருக்க, “அடக் கடவுளே!…என்னமோ விபரீதமா ஆயிடுச்சு…போலிருக்கே?” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

அவன் வருவதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “இந்தாளு யாரு?” கேட்க,

“இவரும் இங்க ஒரு ஈவெண்ட் பண்ற ஆளுதான் சார்” என்றான் ஆனந்தராஜ்.

இன்ஸ்பெக்டருக்கும், தனது மூன்று முதலாளிகளுக்கு பவ்யமாய் ஒரு விஷ் பண்ணி விட்டு, மெல்லக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து பார்த்த குணா, அரண்டு போனான். அவன் கை காலெல்லாம் “வெட…வெட”வென நடுங்கின.

அங்கே, கழுத்திலிருந்த வடிந்த ரத்தம் உறைந்து போயிருக்க, விழிகளைத் திறந்தபடியே பிணமாய்க் கிடந்தான் செக்யூரிட்டி. “ஆண்டவா…இது அந்த சிவாவின் வேலையோ?” அவன் மனதில் லேசாய் சந்தேகம் எட்டிப் பார்த்தது.

கும்பலில் யாரையோ தேடினான். அவன் தேடிய சிவாவும் கூட்டத்தோடு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது, இன்ஸ்பெக்டர் குணாவைப் பார்த்து, “இந்தாப்பா…இங்க வா…” என்று கட்டைக் குரலில் அழைக்க,

வந்து நின்றான்.

“உன்னோட ரூம் எங்கிருக்கு?” கேட்டார்.

கை காட்டினான்.

“ராத்திரி இங்க இப்படியொரு சம்பவம் நடந்திருக்கு…உனக்கு எந்த சத்தமும் கேட்கலையா?”

“இல்லைங்களே அய்யா” நடுங்கும் குரலில் சொன்னான்.

அப்போது இன்ஸ்பெக்டர் அருகில் வந்த தடயவியல் நிபுணர், “சார்…கழுத்துல கடி பட்டிருக்கு சார்!…பெரிய பற்களால் கடித்து ரத்தம் உறிஞ்சப் பட்டிருக்கு” என்றார்.

மேவாயைத் தேய்த்தபடி யோசித்த இன்ஸ்பெக்டர், “மிஸ்டர் ஆனந்தராஜ்…இந்த ஏரியாவுல ஏதாச்சும் விலங்குக நடமாட்டம் இருக்கா?..சிறுத்தை…நரி…செந்நாய்…மாதிரி?” கேட்டார்.

யோசித்த ஆனந்தராஜ் தன் பார்ட்னர்களைப் பார்க்க, திருமுருகன் முன் வந்து, “இல்லை சார்…இதுநாள் வரையில் அப்படியொரு மிருக நடமாட்டம் இருந்ததா தகவலே இல்லை சார்” என்றான்.

“ஒருவேளை…இப்ப…வந்திருக்கலாம்! ஏன்னா?… மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதியில் நடமாடிக்கிட்டிருந்த சிறுத்தை மெல்ல மெல்ல பெரியநாய்க்கன்பாளையம்…துடியலூர் வரைக்கும் வந்திட்டுதே?…அதே மாதிரி…இந்தப்பக்கம்…ஆனைமலை…மதுக்கரை…பக்கத்திலிருந்து வந்திருக்கலாம்!…”

இடையில் புகுந்த தடயவியல் நிபுணர், “சார்…போஸ்ட் மார்ட்டத்துல…ஓரளவுக்கு இன்ன மிருகம்தான் கடிச்சிருக்கு!”ன்னு கண்டுபிடிச்சிடலாம்…அதுக்கப்புறம் ஃபாரெஸ்ட் டிப்பார்ட்மெண்ட்ல காண்டாக்ட் பண்ணினா…தெளிவாகவே கண்டுபிடிச்சிடலாம் சார்” என்றார்.

குள்ள குணா மெல்லத் திரும்பி சிவாவைப் பார்த்தான். அவனோ, “இங்கு நடக்கற இந்த நிகழ்ச்சிகளுக்கும் எனக்கும் துளிக் கூட சம்மந்தமில்லை” என்று சொல்வது போல் எங்கோ பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

“கான்ஸ்டபிள்…பாடி ரிமூவ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டீங்களா?” இன்ஸ்பெக்டர் கேட்க,

“வேன் வந்திட்டிருக்கு சார்” கான்ஸ்டபிள் சொல்லி வாய் மூடும் முன் வந்து நின்றது கறுப்பு நிற வேன்.

அதிலிருந்து குதித்திறங்கிய ஆட்கள், “மள…மள”வென்று ஸ்ட்ரக்சரை இழுத்து வெளியே போட்டு, பாடியைத் தொடப் போக, எங்கிருந்தோ ஓடி வந்த போட்டோகிராபர், “இருங்க…இருங்க…இன்னும் நாலஞ்சு எடுத்துக்கறேன்” என்று சொல்லியவாறே அவசர அவசரமாய் அந்தப் பிணத்தை புகைப்படம் எடுத்தான்.

சவம் சென்றதும். ஆனந்தராஜை அருகில் அழைத்த இன்ஸ்பெக்டர், “ஓனர்ஸ் யார் யாரோ…அவங்க மூணு பேரும் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ரிட்டன் கம்ப்ளைண்ட் குடுத்திடுங்க” என்று சொல்லி விட்டு தன் ஜீப்பில் ஏறிப் பறந்தார்.

எல்லோரும் அங்கிருந்து சென்றதும், ஆனந்தராஜ் தன் நண்பர்களைப் பார்த்து, “என் ரூமுக்கு வாங்க” என்று சொல்லி விட்டு நடந்தான்.

*****
அந்த அறைக்குள் அசாத்திய அமைதி, அநியாயத்திற்கு நிறைந்திருந்தது.

ஏ.சி.யின் சத்தம் மட்டும் “ம்ம்ம்ம்ம்” என்று கேட்டுக் கொண்டிருந்தது. ரூம் ஸ்பிரே நெருடலாய் உலா வந்து கொண்டிருந்தது.

பேய் ரெஸ்டாரெண்டின் பார்ட்னர்ஸ் மூவரும் பேயறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்.

ஆனந்தராஜ் அந்த அமைதியைக் கலைத்தான், “இதுவரைக்கும் இந்த ரெஸ்டாரெண்ட்டுல என்னென்னமோ நடந்திருக்கு…ஆனா சாவு நடந்ததில்லை!…முதல் முறையா இன்னிக்கு ஒரு சாவு விழுந்திருக்கு…இந்த இடத்துல நாம சுதாரிச்சுக்கணும்!…இல்லேன்னா…இது தொடர ஆரம்பிச்சிடும்”

“ஆமாம் ஆனந்து….நீ சொல்றது கரெக்ட்தான்!…” என்றான் விஜயசந்தர்.

“சொல்லுங்க…என்ன பண்ணலாம்?…இதைப் பெரிசா எடுத்துக்காம ஒரு விபத்தா நெனச்சுகிட்டு நம்ம ரொட்டீன் வேலைகளுக்குப் போயிடலாமா?…இல்லை இதை துருவலாமா?…” ஆனந்த் கேட்க,

“அது நம்ம வேலையில்லை!…அதான் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணப் போறோமல்ல?…அதுக்கப்புறம் அவங்க பார்த்துக்கட்டும்…நாம நம்ம வேலையைப் பார்ப்போம்!…சப்போஸ் அந்த செக்யூரிட்டி சைடுல இருந்து யாராவது வந்து நஷ்டஈடு கேட்டா…மனிதாபிமான அடிப்படைல ஏதாவது குடுத்து பிரச்சினையை முடிச்சுக்கலாம்!” என்றான் விஜயசந்தர்.

ஆனந்தராஜ் திருமுருகனைப் பார்த்து, “நீ என்ன சொல்றே முருகா?” கேட்டான்.

“ம்ம்ம்..விஜய் சொல்றதும் சரிதான்!…நாம நம்ம வேலையைப் பார்க்கலாம்” என்றான் முருகன். சொல்லி விட்டு கீழே குனிந்து தன் தலையை “பூம்…பூம்”மாடு மாதிரி அவன் ஆட்ட,

“என்ன முருகா?…எதையோ சொல்ல வர்றே?…ஆனா…சொல்ல முடியாம தவிக்கறே…எதுவானாலும் சொல்லு” என்றான் ஆனந்தராஜ்.

“வந்து…சொல்றதைப் பத்தியில்லை…சொன்னா நீங்க நம்புவீங்களா?ன்னுதான் சந்தேகமாயிருக்கு” என்றான் திருமுருகன் தயங்கித் தயங்கி,

“டேய்…அதான் அந்த சங்கரன் விஷயத்துல நீ காணாமல் போன நகைகளையெல்லாம் கண்டுபிடிச்சுக் குடுத்ததிலிருந்தே…நாங்க ரெண்டு பேரும் நீ எது சொன்னாலும் நம்பறது!ன்னு முடிவு பண்ணியிர்ர்கோமே?…அப்புறமென்ன சொல்லு” என்றான் ஆனந்தராஜ்.

“முந்தா நாளு ராத்திரி சங்கீதா என் ரூமுக்கு வந்திருந்தா…” என்று முருகன் ஆரம்பிக்க,

“சங்கீதா”ன்னு சொல்லாதே… “சங்கீதாவோட ஆவி”ன்னு சொல்லு” திருத்தினான் விஜயசந்தர்.

“சரி…சங்கீதாவோட அவை வந்திச்சு…வந்து என்ன சொல்லிச்சு தெரியுமா?… “நம்ம ரெஸ்டாரெண்ட்டுக்குள்ளார ஒரு துர் ஆவி புகுந்திருக்கு”ன்னு சொல்லிச்சு”

“துர் ஆவியா?…அப்படின்னா…”இருவரும் ஒரேகுரலில் கேட்டனர்.

“கெட்ட ஆவிடா…அது மனிதர்களுக்கு நிறைய கெடுதல் செய்யுமாம்!…எனக்கென்னமோ சங்கீதா ஆவி சொன்னது நிஜமோ?ன்னு தோணுது!…ஏன்னா…இதுவரையில் இல்லாத நிகழ்வாய் இன்னிக்கு இங்க ஒரு சாவு விழுந்திருக்கே?” என்றான் திருமுருகன்.

ஆனந்தும், விஜயசந்தரும் அவன் சொன்னதை யோசித்தனர்.

“அப்ப…அந்த சங்கீதா ஆவி கிட்டேயே சொல்லி அந்த துர் ஆவியை விரட்டச் சொல்லேன்” என்றான் ஆனந்தராஜ்.

“அதுலதான் சிக்கலே!…பொதுவா ஒருத்தர் உடம்புல இன்னோரு ஆவி இறங்கிடுச்சுன்னா…அவங்க வித்தியாசமா ரெண்டு குரல்ல பேசுவாங்களாம்…ரெண்டு மாதிரி நடந்துப்பாங்களாம்…ஆன இங்க யாருமே அப்படி வித்தியாசமா நடந்துக்கலையே?…எல்லோரும் ஒரே மாதிரித்தானே இருக்காங்க!…அதனாலதான் சங்கீதா ஆவியாலேயே அந்த துர் ஆவியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியலையாம்”

“ம்ம்ம்…நீ சொல்றது எப்படியிருக்கு தெரியுமா?…ஒரு படத்துல எஸ்.ஜே.சூர்யா, ”இருக்கு…ஆனா…இல்லே!…இல்லே….ஆனா…இருக்கு”ன்னு சொல்ற மாதிரி இருக்கு…” எண்ரான் விஜயசந்தர்.

“டேய் விஜய்…முருகனை நக்கலடிக்காதே…அவன் சொல்ற விஷயங்களுக்கு நாம முக்கியத்துவம் குடுத்தே ஆகணும்!” என்ற ஆனந்தராஜ், முருகன் பக்கம் திரும்பி, “அப்ப…அந்த துர் ஆவி யார் உடம்புல புகுந்திருக்கு!ன்னு எப்படிக் கண்டுபிடிக்கறது?…யாராச்சும் மந்திரவாதியைக் கூட்டிட்டு வரலாமா?” கேட்டான்.

திருமுருகன் பதில் சொல்ல யோசித்த அதே நேரத்தில், அந்த அறையின் கதவு தட்டப்பட, “யெஸ் கம் இன்” என்றான் ஆனந்தராஜ்.

உள்ளே வந்த கேஷியர் ராம், “சார்…உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்” என்றார்.

“ஒருத்தர்”ன்னு மொட்டையா சொன்னா எப்படி ராம்?”

“வந்து நம்ம சிவா இருக்காரில்ல?…அவரோட அண்ணனாம்” என்றார் கேஷியர்.

“அவர் எதுக்கு என்னைய?…போய் சிவாவைப் பார்த்திட்டு…அப்புறமா…அவனையும் கூட்டிக்கிட்டு இங்க வரச் சொல்லு” என்றான் ஆனந்தராஜ்.

சில நிமிடங்கள் அமைதியாயிருந்த கேஷியர், “சார் அப்படித்தான் சார் நான் சொன்னேன்…அதைக் கேட்டதும் அந்த ஆள் “பொசுக்”குன்னு அழுவ ஆரம்பிச்சிட்டார் சார்…அதான் சார்…உங்க கிட்டே வந்தேன்” என்று சொல்ல,

பார்ட்னர்ஸ் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

திருமுருகன் சட்டென்று, “அந்த ஆளை உள்ளே அனுப்பு” என்றான்.

சில நிமிடங்களில் அந்த அறைக்குள் வந்த மனிதருக்கு, ஐம்பது வயதிருக்கும். முகத்தில் சிவாவின் ஜாடை இருந்தது. வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டைதான் ஆனால் அழுக்கோ அழுக்கு. தலை முடிகளில் பாதி வெள்ளை!…பாதி கருப்பு!..மீதி பிரவுன்!

வந்தவுடன் “வணக்கம்” சொல்லிய அந்த மனிதரை உட்காரச் சொன்னான் ஆனந்தராஜ்.

“சொல்லுங்க” என்றான் விஜயசந்தர்.

“என் பேரு கோவிந்தன்…நான் சிவாவோட அண்ணன்” சிவாவின் குரல் அப்படியே இவரிடமும் இருந்தது.

“சரி…”

“அவனோட கடைசி மாச சம்பளத்தை வாங்கிட்டுப் போகலாம்!னு வந்தேன்” என்று அந்த நபர் சொல்லியதும்,

இவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, விஜயசந்தர் கேட்டான். “என்ன இது புதுப் பழக்கமாயிருக்கு?…எப்பவும் சிவா கிட்டேதானே அவனோட சம்பளத்தைக் குடுப்போம்”

“என்ன பண்ணறது சார்…விதி இப்படி விளையாடிடுச்சே?” அந்த நபர் கரகரத்த குரலில் சொல்ல,

“த பாருங்க கோவிந்தன்.,..நீங்க என்ன பேசறீங்க?ன்னு எங்களுக்குப் புரியலை…உங்களுக்கு சிவாவிற்கும் நடுவுல ஏதாச்சும் பிரச்சினைன்னா சொல்லுங்க…இப்பவே சிவாவை இங்க கூப்பிட்டு நாங்க பேசறோம்!…” என்றான் ஆனந்தராஜ் நிதானமாய்.

புருவங்களை நெரித்துக் கொண்டு அவர்களை வினோதமாய்ப் பார்த்தவன், “சார்…நீங்க என்ன சொல்றீங்க?…“சிவாவைக் கூப்பிட்டுப் பேசலாம்”ன்னா சொல்றீங்க?..” கேட்டான்.

“ஆமாம்”

“எப்படி சார்?…எப்படி சார் முடியும்?…அவன் செத்துப் போய் பதிமூணு நாளாச்சு…பதிமூணாம் காரியங்களை முடிச்சுட்டுத்தான் நானே இங்க வந்திருக்கேன்” என்று அந்த நபர் சொல்ல,

“விருட்”டென்று மூவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர்.

அதற்கான காரணம் புரியாத அந்த நபரும் உடனே எழுந்து நின்றார்.

மூவரும் மீண்டும் அமர, அவரும் அமர்ந்தார்.

“அவனோட சம்பளத்தையும்…ஏதாவது எக்ஸ்ட்ரா தொகையும் குடுத்தீங்கன்னா…ரொம்ப உதவியாயிருக்கும்” அந்த ஆள் காரியத்திலேயே குறியாயிருந்தான்.

“ஒரு நிமிஷம்” என்று சொல்லி, தன் மொபைலை எடுத்து ரெஸ்டாரெண்ட் கல்லாவில் அமர்ந்திருக்கும் கேஷியர் ராமிற்கு போன் செய்த ஆனந்தராஜ், “என்ன ராம்…ஈவெண்ட்டெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” சாதாரணமாய்க் கேட்டான்.

“ம்…நல்லாவே போயிட்டிருக்கு சார்”

“வாஷ் பேஸின் ஈவெண்ட்டுக்கு அவங்க ரெடியாயிருக்காங்களா?” வேண்டுமென்றே கேட்டான் ஆனந்தராஜ்.

“ம்…சிவா அந்த மேக்கப் போட்டுட்டு வெய்ட் பண்ணிட்டிருக்கான்…குள்ள குணாவும் தயாரா இருக்கான்” என்றான் கேஷியர்.

“ஓ.கே…நீ வெச்சிடு” என்று சொல்லி மொபைலைக் கட் செய்த ஆனந்தராஜ் அந்த நபரைப் பார்த்து, “நீங்க ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க…நாங்க கொஞ்சம் பர்ஸனலா பேசிட்டு வந்து உங்க கூடப் பேசறோம்” என்றான்.

“இவங்கெல்லாம்…யாரு?” சிவாவின் அண்ணன் முருகனையும், விஜயசந்தரையும் காட்டிக் கேட்க,

“இவங்க என்னோட பார்ட்னர்ஸ்…நாங்க மூணு பேரும்தான் இந்த ரெஸ்டாரெண்டை நட்த்திக்கிட்டிருக்கோம்..அதனால நாங்க கூடிப் பேசிட்டு வந்து உங்களுக்கு எவ்வளவு தர முடியும்!னு சொல்றோம்”

மூவரும் அந்த அறையை விட்டு வெளியேறி, அடுத்த அறையான கான்ஃப்ரென்ஸ் ஹாலுக்குச் சென்றனர். உள்ளே நுழைந்ததும், “கீழே சிவா இருக்கானாம்” என்றான் ஆனந்தராஜ்.

சப்த நாடியும் ஒடுங்கிப் போயினர் திருமுருகனும், விஜயசந்தரும்.

– தொடரும்…

< பதிமூன்றாம் பாகம் | பதினைந்தாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • ♥️♥️♥️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...