• தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 15 | முகில் தினகரன்

பேய் ரெஸ்டாரெண்ட் – 15 | முகில் தினகரன்

1 month ago
710
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 15 | முகில் தினகரன்

ஆனந்தராஜ் சொன்னதைக் கேட்டு, வாயடைத்துப் போய் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த திருமுருகனையும், விஜயசந்தரையும் உசுப்பினான் ஆனந்தராஜ். “டேய்….இப்படி உட்கார்ந்திருந்தா என்ன பிரயோஜனம்?…ஏதாச்சும் பேசுங்கடா”

முதலில் சுதாரித்துக் கொண்ட விஜயசந்தர், “வேற வழியில்லை…இந்த தடவையும்…முருகன் கிட்டச் சொல்லி அந்த ஆவியோட உதவியைக் கேட்க வேண்டியதுதான்” என்றான்.

மெல்ல சுயநினைவிற்கு வந்த திருமுருகனும் அதை ஆமோதித்தான்.

“அப்ப உடனே அந்தப் பெண்ணோட ஆவி கிட்டப் பேசு….இப்பவே பேசு” அவசரப்பட்டான் ஆனந்தராஜ்.

“இப்பவேவா?” தயங்கினான் திருமுருகன்.

“ஏண்டா…நாங்க இங்க இருந்தா அந்த ஆவி வராதுன்னா சொல்லு நாங்க வெளிய போயிடறோம்…நீ பேசிட்டு வா”

“தெளிவாக் கேளு…சிவாவோட அண்ணன் அவன் செத்துப் பதிமூணு நாளாயிடுச்சு”ன்னு சொல்லிட்டு அவனோட சம்பள பாக்கியை வசூல் பண்ண இங்க வந்திருக்கான்!…ஆனா…கீழே அந்த சிவா தன்னோட ஈவெண்ட்டை செஞ்சிட்டிருக்கான்!…இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?னு கேளு” எடுத்துக் கொடுத்தான் விஜயசந்தர்.

சில நிமிடங்கள் யோசித்த முருகன், “பொதுவா…ஆவிங்க பகல் நேரத்துல கண்ணுக்குத் தெரியாதுக!…சங்கீதா ஆவியே ராத்திரி நேரத்துலதான் வரும்…அதான் யோசிக்கறேன்” என்றான்.

“எதுக்கும் முயற்சி பண்ணிப் பாருடா….ஆவிக எல்லாம் இருபத்து நாலு மணி சர்வீஸ்தாண்டா” விஜயசந்தர் சொல்ல,

“ஓ.கே.முயற்சி பண்றேன்” என்றபடி கண்களை மூடிக் கொண்டு சங்கீதாவின் முகத்தை தன் புருவங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து நிறுத்தி, “சங்கீதாம்மா…கொஞ்சம் உருவம் காட்டும்மா!…ஒரு முக்கியமான விஷயம் பேசணும்மா” வேண்டினான்.
சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அறைக்கதவு அதுவாகவே திறக்க, சங்கீதாவின் ஆவி உருவம் மெல்ல நடந்து உள்ளே வந்து திருமுருகன் அருகே நின்றது.

அவள் உருவம் முருகனுக்கு மட்டுமே தெரியுமானதால், கதவு தானாகத் திறந்து தானாக மூடுவதாக எண்ணிக் கொண்டு பீதியாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் ஆனந்தராஜும், விஜயசந்தரும்.

தன் அருகில் வந்து நின்ற சங்கீதா ஆவியைப் பார்த்துப் புன்னகைத்தான் முருகன்.

“என்னப்பா?…எதுக்கு என்னைய இந்த நேரத்துல கூப்பிட்டே?” ஆவி கேட்க,

“ஒரு பிரச்சினை….அதான்….”இழுத்தான் முருகன். அவன் வெற்றிட்த்தைப் பார்த்துப் பேசிக் கொண்டிருப்பதை வினோதமாய்ப் பார்த்தனர் அவன் இரு நண்பர்களும்.

“என்ன பிரச்சினை?”

திருமுருகன் விவரித்தான்.

மொத்தத்தையும் கேட்டு முடித்த ஆவி, “அப்ப அன்னிக்கு நான் யூகிச்சது சரியாய்ப் போச்சு!…அந்த துர் ஆவி அந்த சிவா உடம்புலதான் பூந்திருக்கு!…அப்படின்னா சிவா செத்திட்டான்!…” என்றது.

“அவங்க அண்ணனும் அதைத்தான் சொல்றார்!…என்ன பண்ணலாம் இங்கிருக்கற டூப்ளிகேட் சிவாவை?” கேட்டான் முருகன்.

“ம்ம்ம்ம்….”என்று தன் தாடையைச் சொறிந்தவாறே யோசித்த சங்கீதாவின் ஆவி, “முருகன்…எனக்கு ஆவியுலகத்துல ஒரு ஆவி நண்பர் இருக்கார்…நண்பர்ன்னா உடனே சின்ன வயசு நண்பரோ?ன்னு நெனச்சு நீ சந்தேகப் படாதே!…இவரு வயசானவர்…பார்த்தா பழைய நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருப்பார்!…வாழ்ந்த காலத்துல நல்ல பக்திமானாகவும்…சிறந்த முறைல “கல்யாண மாலை” மாதிரி ஒரு நிகழ்ச்சியை டி.வி.லே நடத்தி…பல ஜோடிகளை சேர்த்து வைத்தவர்!…அவர் கிட்டே கேட்டா…அந்த சிவா ஊருக்குப் போனப்ப என்ன நடந்தது?….சிவா எப்படி செத்தார்?…இப்ப சிவாவுக்குள்ளே இருப்பது யாரோட ஆவி?…எல்லா விஷயத்தையும் புட்டுப் புட்டு வெச்சிடுவார்!…கூப்பிடவா அவரை?” கேட்டது.

“த பாரு சங்கீதா…எனக்கு இந்தப் பிரச்சினை தீரணும்!…அவ்வளவுதான்…அங்க பாரு என்னோட பார்ட்னர்ஸை…ஏ.டி.எம்.மிஷினுக்குள்ளார கார்டை சிக்க வெச்சவனுகளாட்டம் எப்படி முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கானுக!ன்னு” என்று நண்பர்களைக் காட்டிச் சொன்னான் முருகன்.

“சரி…சரி…இப்பவே அவரைக் கூப்பிடறேன்” என்று சொல்லி விட்டு, கண்களை மூடிக் கொண்டு ஏதோ முணுமுணுப்பாய் சங்கீதாவின் ஆவி சொல்ல,

அடுத்த ஐந்தாவது நிமிடம் அறைக்கதவு மீண்டும் திறந்தது.

பூர்ணம் விஸ்வநாதன் தோற்றத்தில் பக்திப்பழமாய் ஒருத்தர் உள்ளே வர கதவு மீண்டும் சாத்திக் கொண்டது.

அந்தப் பெரியவர் உருவமும் ஆனந்தராஜ் மற்றும் விஜய்சந்தர் கண்களுக்கு தெரியாததால், வெறுமனே திறந்து மூடும் கதவை அவர்கள் முகத்தில் பெரிய கேள்விக் குறியோடு பார்த்தனர்.

வந்த பெரியவரிடம், “இவர்தான்…என்….அவர்” என்று முருகனை அறிமுகப்படுத்தியது சங்கீதாவின் ஆவி.

அவர் வணக்கம் வைக்க, முருகனும் வணக்கம் வைத்தான்.

வெற்றிடத்தைப் பார்த்து அவன் வணக்கம் சொல்வதை வெறித்த பார்வை பார்த்தனர் அவன் நண்பர்கள்.

பெரியவர் ஆவி பேசியது, அப்படியே பூர்ணம் விஸ்வநாதன் குரல், “தம்பி உங்களோட வாழ இந்தப் பொண்ணு குடுத்து வைக்காமப் போயிட்டா!…அடுத்த ஜென்மத்துல உங்க கூட சேர…காத்திட்டிருக்கா!…”

“நானும் காத்திட்டிருக்கேன் அய்யா” என்றான் திருமுருகன்.

சங்கீதா இடையில் புகுந்து அவர்களின் பிரச்சினையை பெரியவரின் ஆவியிடம் சொல்ல, “அப்படியா விஷயம்…கொஞ்சம் இருங்க…எல்லாத்தையும் உங்களுக்கு விலாவாரியா சொல்றேன்” என்ற பெரியவர் ஆவி, சில நிமிடங்கள் கண்களை மூடி சிவாவின் ஊரில் நடந்த காட்சிகளை தன் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து விட்டு, மெல்லக் கண்களைத் திறந்தார்.

“ஒண்ணுமில்லை தம்பி…இது “ஆன்மாவின் கூடு மாற்றம்”தான்” என்றார்.

“என்னங்க சொல்றீங்க?…கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்”

“சொல்றேன்…சொல்றேன்!…இந்த பூமில அரசு உத்தியோகம் பாக்கறவங்களுக்கு அப்பப்ப…டிரான்ஸ்பர் ஆகுதல்ல?…அதே மாதிரி எப்போதாவது ஒரு தரம்…ஆன்மாவுக்கு கூடு மாற்றம் நிகழும்!…ஆனா இந்தக் கூடு மாற்றம் இயற்கையானதென்றாலும்…இயற்கைக்கு புறம்பானது!…தெய்வ இஷ்டங்களுக்கு எதிரானது!… எப்படின்னா… “இந்தக் கூட்டுக்கு இந்த ஆன்மா தான்”னு ஆண்டவன் ஃபிக்ஸ் பண்ணி அனுப்பியதை விதி இந்த மாதிரி மாற்றும்….ஆனா அது நிரந்தரமல்ல…தற்காலிகம்தான்!…”

“அப்படின்னா….?” முருகன் கொக்கி போட,

“சாகாமற்றாண்டி தனிவழி போவோர்க்கு
ஏகாந்தமேதுக்கடி…. குதம்பாய்
ஏகாந்தமேதுக்கடி?…
காலனைவென்ற கருத்தறிவாளர்க்குக்
கோலங்களேதுக்கடி…. குதம்பாய்
கோலங்களேதுக்கடி?”ன்னு

குதம்பைச் சித்தர் பாடியதே இதுக்குத்தான்!…ஆயிரம் வருஷத்துக்கொருதரம்…லட்சம் வருஷத்துக்கொருதரம் இந்த மாதிரி அதிசயம் நிகழும்…இதை முறையா பயன் படுத்தினா நல்ல காரியங்கள் செய்யலாம்!…முறையில்லாமல் போனால் தீமைகள்தான் நடக்கும்!…”

பூர்ணம் ஆவி சொல்லிக் கொண்டே போக, பொறுமையிழந்த முருகன், ”பெரியவரே…அந்த சிவா ஊர்ல என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க அது போதும்” என்றான் சற்றுக் காட்டமாக,

பொதுவாக வயதில் மூத்தவர்கள், அதுவும் கல்யாணத் தரகராய் கொடிகட்டிப் பறந்தவர்கள் எப்படி இழுவையாய்ப் பேசுவார்கள் என்பதை உணர்ந்திருந்த சங்கீதாவின் ஆவி, “அய்யா…அவங்களுக்கு நீங்க சொல்றதெல்லாம் தெரியாது…புரியாது…அதனால விஷயத்தை மட்டும் சொல்லுங்க.,..சித்தர் பாட்டெல்லாம் வேணாம்” என்றது.

“சரி…சொல்லிட்டாப் போச்சு” என்றவர், “இந்த சிவாவை அவனோட அண்ணா ஊர்ல நிலத் தகராறை சரி பண்ணக் கூப்பிட்டிருக்கார்!…இவனும் போயிருக்கான்!…போன இடத்துல பேச்சு வார்த்தையின் போது வார்த்தைகள் முற்றி, கைகலப்பாயிடுச்சு!…இந்த சிவா கைல கிடைச்ச கட்டையைத் தூக்கி பங்காளி சுடலை தலைல ஓங்கி அடிச்சிட்டான்…அவன் பொறி கலங்கி அப்பவே செத்துட்டான்…ஆனா போறதுக்கு முன்னாடி இவனைக் கொல்லாமல் போகக் கூடாது!ன்னு தன் இடுப்புல மறைச்சு வெச்சிருந்த கத்தியை எடுத்து சிவா வயித்துல பாய்ச்சிட்டான்!…இவனும் அடுத்த நிமிஷமே செத்துட்டான்!…” சொல்லி விட்டு பெரியவர் ஆவி நிறுத்தியது.

“ம்…மேலே சொல்லுங்க…இப்பத்தான் கொஞ்சம் புரியுது…”என்றான் முருகன்.

“இந்த இடத்துல ஏன் நிறுத்தினேன் தெரியுமா?…ரெண்டு உசுரும் ஒரு சேர போக வேண்டிய வினாடியில்…அது நிகழாமல்…ஆன்மாவின் கூடு மாற்றம் நிகழ்ந்திடுச்சு!…அதாவது…சிவாவின் உடம்புக்குள்ளார அந்த சுடலையோட ஆன்மாவும், அந்த சுடலையோட உடம்புக்குள்ளார இந்த சிவாவோட ஆன்மாவும் புகுந்திடுச்சு!…இரண்டு பிணங்களுமே மண்ணைப் பறிச்சுக்கிட்டு வெளிய வந்திடுச்சுக!…குழிக்குள் போனவன் ஊருக்குள் மீண்டு வந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற எண்ணத்தில் சிவா உருவத்திலிருந்த சுடலை இங்கேயும்!…சுடலை உருவத்தில் இருக்கும் சிவா…எங்கோ கண் காணாத இடத்துக்கும் போயிட்டாங்க” பெரியவர் தன் பெரிய விழிகளை உருட்டிக் கொண்டு சொல்ல,

காத்திருந்த ஆனந்தராஜும், விஜயசந்தரும் பொறுமையை மொத்தமாய் இழந்தனர். “டேய் முருகா…என்னாச்சு?…அங்க அந்த சிவாவோட அண்ணன் வெய்ட் பண்ணிட்டிருக்கார்” ஆனந்தராஜ் கூவினான்.

கையைக் காட்டி அவனை அடக்கிய முருகன், “ஆக…இப்ப இங்க சிவா உருவத்துல இருப்பது சுடலை!…அப்படித்தானே?”

பெரியவர் ஆவி தலையை மேலும் கீழும் ஆட்ட,

“அப்படின்னா அந்தச் சுடலைக்கு இந்த ரெஸ்டாரெண்ட்டுக்கு எப்படி வழி தெரியும்?…அந்த சிவா இங்க செய்யற வித்தைகளெல்லாம் எப்படித் தெரியும்?…கன கச்சிதமா சிவா மாதிரியே செய்யறானே?”

“தம்பி…நல்லாப் புரிஞ்சுக்கங்க!…மூளை வேற!…ஆன்மா வேற!…மூளையில் பதிஞ்ச விஷயங்கள் சரீரம் சம்மந்தப்பட்டவை….எப்போதுமே மறக்கவே மறக்காது!…ஆன்மா மாறினாலும் அந்த சரீரமும்…அதன் உறுப்புக்களும் அதில் பதிந்த பழைய விஷயங்களை மறக்காமல் வைத்திருக்கும்….அதையே செய்யும்!….உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா…. “கடவுள் பாதி மிருகம் பாதி”ங்கற மாதிரி…இங்கே… “சிவா பாதி….சுடலை பாதி”…போதுமா?….புரிஞ்சுதா?”

“ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு…புரியாத மாதிரியும் இருக்கு!” என்ற முருகன், “சரிங்க பெரியவரே…இதை எப்படி சரி செய்யலாம்?…அதைச் சொல்லுங்க!” என்று கேட்டான்.

“செய்யலாம்…ஆனா அது பெரிய ரிஸ்க்!…சக்சஸ் ஆயிட்டா சந்தோஷம்…ஒருவேளை ஃபெயிலியர் ஆயிட்டுதுன்னா…ரெண்டு பேர் உசுரும் போயிடும்…” என்றார் பெரியவர்.

யோசித்த முருகன், சங்கீதாவின் ஆவியைப் பார்த்து, “சங்கீதா நீ சொல்லு…என்ன செய்யலாம்?” கேட்டான்.

“ரிஸ்க் எடுப்போம்!….அந்த சிவாவோட அண்ணன் கிட்டே இந்த விஷயத்தை அப்படியே சொல்லுவோம்..சொல்லி முதலில் அவரை நம்ப வைப்போம்!…அவர் நம்பியதும்…பெரியவர் கல்யாணசுந்தரம் சொல்லுற முறையை செஞ்சு பார்ப்போம்”

“சரி…சங்கீதா…அப்படியே செய்வோம்…என் நண்பர்கள் கோவத்தோட உட்கார்ந்திருக்காங்க…நான் போய் அவர்களுக்குச் சொல்லி…எடுத்த ஏற்பாட்டைச் செய்யறேன்!” என்றான் முருகன்.

“வீடு விட்டுப் பாய்ந்து வெளியில் வருவார் போல…
கூடு விட்டுப் பாயும் குறிப்பறிவதெக்காலம்?”…

இது நான் சொல்லலை….”பத்திரகிரியார்”ங்கற சித்தர் சொன்னது…சரி நான் கிளம்பறேன் சங்கீதா” சொல்லி விட்டு கதவருகே செல்வது போல் சென்று மறைந்தது கல்யாணசுந்தரம் என்னும் அந்தப் பெரியவரின் ஆவி.

அடுத்த சில நிமிடங்களிலேயே சங்கீதாவின் ஆவியும் அங்கிருந்து புறப்பட, தன் நண்பர்களிடம் வந்த திருமுருகன், எல்லாவற்றையும் ஒப்பித்தான்.

“டேய்…இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?…நாம போய் அந்த சிவாவோட அண்ணன் கிட்டே சிவா இங்க இருக்கான்…ஆனா அவன் உடம்புக்குள்ளார உங்க பங்காளி சுடலையோட ஆவி இருக்கு”ன்னு சொன்னா நம்புவானா?” ஆனந்தராஜ் கேட்க,

“நம்ப வைக்கணும்” என்றான் முருகன்

“எப்படி?”

“ம்ம்ம்… அதை இங்க சொல்ல மாட்டேன்…அங்க வாங்க செஞ்சே காட்டறேன்” என்று சொல்லி விட்டு நம்பிக்கையோடு முருகன் முன்னே செல்ல, நண்பர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.

அங்கே சென்றதும், சிவாவின் அண்ணன் கோவிந்தனுக்கு நேர் எதிரே சென்றமர்ந்த திருமுருகன் நிதானமாய் கேட்டான். “ஏதோ பணம் கேட்டாயாமே?…என்ன பணம்?”

தலையைத் திருப்பி ஆனந்தராஜைப் பார்த்தார் அவர், “அங்க என்ன பார்க்கறே?…நான் கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு” அதட்டினான் முருகன்.

“சார்…செத்துப் போன என் தம்பியோட கடைசி சம்பளம் பாக்கியிருக்கு…அதைத்தான் வாங்கிட்டுப் போக வந்திருக்கேன்” அவனும் கடுப்படித்தான்.

“செத்துப் போன தம்பியா?…யாரு சிவாவையா சொல்றீங்க?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டான் திருமுருகன்.

“ஆமாம் சார்…சிவாவைத்தான் சொல்றேன்…அவன் செத்துப் போய் இன்னியோட பதினாலு நாளாச்சு,…நேத்திக்குத்தான் பதிமூணாம் நாள் காரியத்தை முடிச்சிட்டு வர்றேன்!” கோபமாய்ச் சொன்னான் அந்த கோவிந்தன்.

“ஆமாம்…அவ்வளவு தூரத்திலிருந்து…இப்படியொரு பொய் சொல்வதற்காகவே வந்தீங்களா?” சிரித்தபடி திருமுருகன் கேட்க,

“விருட்”டென எழுந்தான் அவன். “பொய்யா…நான் சொல்றது பொய்யா?” கத்தினான்.

“ஆமாம் பொய்தான்!” என்ற முருகன், “ஆமாம்…செத்துப் போன சிவாவோட பொணத்தை எரிச்சீங்களா?…இல்லை பொதைச்சீங்களா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்க,

“பொதைச்சோம்!…எங்க குல வழக்கப்படி….ஆண்களை எப்போதுமே புதைப்போம்”

“நாங்க சொல்றோம்…சிவா சாகலை” ஆணித்தரமாய்ச் சொன்னான் முருகன்.

“ஹும்… என் பங்காளி சொடலை சிவா வயித்துல கத்தி பாய்ச்சியதையும்..நான் பார்த்தேன்!…அதே மாதிரி சிவா பொணத்தைக் குழில இறக்கறதையும்…நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்” அவன் சொல்ல,

“அந்த சொடலை…எங்கே இருக்கான்?”

“அவனைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது!…சிவா கட்டைல அடிச்சதுல அவனும் செத்துட்டான்!னு கேள்விப்பட்டேன்!…அவனையும் சிவாவை பொதைச்ச அதே இடுகாட்டுலதான் பொதைச்சிருப்பாங்க”

“இல்லை நான் சொல்றேன்!…சிவா உயிரோடதான் இருக்கான்!…இங்கதான் இருக்கான்!…ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு…இப்ப இங்க வருவான்” என்று சொன்ன முருகன், இண்டர்காமில் கேஷியரை அழைத்து, “சிவாவைக் கொஞ்சம் நம்ம கான்ஃப்ரன்ஸ் ரூம்ல வந்து வெய்ட் பண்ணச் சொல்லு” என்றான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு பார்ட்னர்ஸ் மூவரும் அந்த கோவிந்தனை கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு அழைத்து வந்தனர்.

அங்கே வந்ததும், அவனை கண்ணாடிக்கு வெளியில் நிறுத்தி, “ம்…உள்ளே பார்” என்றனர்.

கண்ணாடி வழியே உள்ளே பார்த்த கோவிந்தன் அலறினான்.

– தொடரும்…

< பதிநான்காம் பாகம் | பதினைந்தாம் பாகம்>

1 thought on “பேய் ரெஸ்டாரெண்ட் – 15 | முகில் தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930