வாகினி – 22| மோ. ரவிந்தர்

 வாகினி – 22| மோ. ரவிந்தர்

கடிகாரத்தில் சின்ன முள்ளானது 11 இலக்கு எண்ணை காதலித்துக் கொண்டிருக்க, பெரிய முள்ளானது 07 எண்ணில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. நொடி முள்ளானது தன்னைச் சுற்றி இருந்த 12 காவல் வீரர்களை மெல்ல வட்டமிட்டு விழித்துச் சென்றுகொண்டிருந்தது. தற்போது நேரம் காலை 11.07 மணி இருக்கும்.

தன் தங்கை கவிதாவிற்கு இன்றைக்கு மாலை நிச்சயதார்த்தம் என்பதால், தாய்வீடு செல்ல தன் குழந்தை இலக்கியாவிற்கு முகத்தில் பவுடர் அடித்து, பொட்டு வைத்துப் புதுத் துணி உடுத்தி அவசரமாக அலங்கரித்துக் கொண்டு இருந்தாள், மீனா.

அவளுக்குப் பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த தனஞ்செழியன், அன்றைய செய்தித்தாள் ஒன்றை பிரித்துப் புரட்டிக் கொண்டிருந்தார்.

குழந்தைக்கு அலங்காரம் பலமாக நடந்து கொண்டிருந்ததால் மீனாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தனஞ்செழியனுக்குத் தோன்றியது.

“ஆமா மீனா, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னா மட்டும் இப்படி வரிஞ்சு கட்டிட்டு போறியே. என்ன கவனிக்கிறது யாரு? உன்ன விட்டா அந்த வீட்டில் வேலை செய்ய வேற ஆளே இல்லையா என்ன?” எனக் கேட்டார்.

“அதைப்பற்றி எல்லாம் நீங்க கேக்காதீங்க. நியாயமா பார்த்தா மூத்த மருமகனா இருந்து உங்க மச்சினிச்சிக்குச் செய்ய வேண்டிய நல்லது கெட்டது எல்லாம் நீங்கதான் பக்கத்துல இருந்து பாக்கணும். ஆனா, நீங்க என்னடான்னா எங்க வீட்ல ஒரு விசேஷமுன்னு சொன்னா போதும் கட்சியில மீட்டிங் இருக்கு, வெளியில வேலை இருக்குன்னு சிட்டா பறந்துடுரிங்க?” என்றாள், மீனா.

“நான் ஒரு அரசியல்வாதி மீனா. மக்களுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவன். வெள்ளை வேட்டி கரையோடு நாலு பேரு துணையோடு கெத்தா போகணும்னு ஆசைப்படுறவன். ஆனா, உங்க அப்பன் என்னோட மாமனாரு என்ன வீட்டுக்கு வந்தா ஒரு மருமகனா மட்டும் வாங்க இப்படிக் கட்சிக்காரங்கள வீட்டுக்குள்ள கூட்டிட்டு வராதீங்கன்னு சொல்லிட்டாரு. அப்புறம் எப்படி அந்த வீட்டுக்குள்ள நான் வருவேன், எப்படி என் கால் படும்?” என்று கவி பாடினார், தனஞ்செழியன்.

“ஆமா! அந்தக் கதர் வேட்டி, கதர் சட்டை உங்களுக்கு ஸ்கூல் யூனிபார்ம் எப்ப பார்த்தாலும் இவர் வெள்ளை கலர்லதான் வெளியில வருவாராம். ஏன்? அரசியல்வாதிங்க அந்தக் கதர் சட்டை, கதர் வேட்டியிலிருந்து வெளியே வரக்கூடாதுன்னு ரூல்ஸ் ஏதாவது இருக்கா என்ன?” என்று நக்கல் அடித்தாள், மீனா.

“கதர் வேட்டி மகிமையைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அதை எப்படிச் சொல்லி புரிய வைப்பேன். அண்ணல் காந்தியடிகள் இந்தக் கதர் துணியை மக்கள் உடுத்துவதற்கு எவ்வளவு பாடுபட்டு இருக்கிறாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார், தனஞ்செழியன்.

“எதைப் பத்தியும் நான் தெரிஞ்சிக்கத் தேவை இல்லை. எங்கப்பா, உங்க மாமனார்… உங்கள வீட்டுக்குள்ள வராதன்னு சொன்னா அப்படியே காலம் பூராவும் இருந்துடுவீங்களா என்ன? ஒரு மூத்த மருமகனுக்கு உண்டான சில கடமைகள் இருக்கு அதைப் பத்தி யோசிங்க, அவ்வளவுதான்” என்றாள், மீனா.

“எப்படியும் கவிதாவுக்குக் கல்யாணம், மண்டபத்தில் தான் நடக்கப்போகுது. அப்ப, ஒரு அரசியல்வாதியா செம கெத்தா கல்யாண மண்டபத்துக்கு நான் வருவேன். அப்ப கூட, உங்க அப்பன பார்த்து ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேன் பாத்துக்கோ” என்று மீனாவின் தந்தை கேசவனை வஞ்சிக்கத் தொடங்கினார், தனஞ்செழியன்.

“போதும்… போதும்… உங்க தற்பெருமை எல்லாம். காதுல கேட்க முடியல? மத்தியானத்துக்கு வத்த குழம்பு, அப்பளம் பொரிச்சி வச்சிருக்கேன். நைட்டுக்கு மட்டும் வெளியே சாப்பிடுங்கங்க” என்று கூறிவிட்டு, தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தரையிலிருந்து எழுந்தாள், மீனா.

“வெளிய வேற ரேடியோ பாடிட்டு இருக்கே, என்ன விசேஷம்?” எனக்கேட்டார், தனஞ்செழியன்.

“இன்னைக்கு முகூர்த்த நாளுங்க. மகாலட்சுமியையும் இன்னைக்குப் பொண்ணு பார்க்க வராங்களாம். இன்னைக்குன்னு பார்த்து என்னோட தங்கச்சிக்கும் நிச்சயதார்த்தம். இவளோட நிச்சயதார்த்தத்திற்குப் போக முடியல” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தாள், மீனா.

அந்த நேரம் மகன் பவித்ரன் “அம்மா இந்தச் சட்டையை சரியா மாட்ட முடியல. கொஞ்சம் மாட்டி விடு…” என்று ஓடிவந்தான்.

“அதோ… உங்க அப்பா சும்மா தானே உட்கார்ந்து இருக்காரு. அவர்கிட்ட போய் மாட்டிக்கடா” என்று கூறிவிட்டு, தன் தலை முடியை இடதுகையால் பிரித்துவிட்டாள். அந்தக் கருப்பு அருவி இரவு நேரத்தில் பெருக்கெடுத்து படர்ந்து ஓடுவதைப் போல். அவள் பின்னங்கழுத்தை அலங்கரித்துத் தன் ஆதிக்கத்தைப் பெரிதாக நிலைநாட்டியது.

“வாடா…வாடா…வருங்காலச் சட்டமன்ற உறுப்பினரே…” என்று தன் ஐந்து வயது மகனை அன்புடன் தன் பக்கத்தில் அழைத்தார், தனஞ்செழியன்.

மீனா தனது தலை முடிக்கு வகிடு எடுப்பதை விட்டுவிட்டு, அப்படியே திரும்பி தனஞ்செழியனை ஒரு முறை முறைத்துவிட்டு… “அவனையாவது உருப்படியா இருக்க விடுங்க, உங்களைப் போலக் கட்சி கிட்சின்னு இருக்கிறதுக்கு, அவனாவது நிம்மதியா இருக்கட்டும்?” என்று கூறிவிட்டு, கையில் வைத்திருந்த சீப்பினால் தலைமுடிக்கு வகிடு எடுக்கத் தொடங்கினாள்.

“அம்மா ! நீ சும்மா இரும்மா, நான் சட்டமன்ற உறுப்பினர் எல்லாம் ஆக மாட்டேன். ஸ்ட்ரைட்டா சீப் மினிஸ்டர் தான் ஆகுவேன்” என்று கூறினான் பவித்ரன்.

“வாடா, வாடா என் செல்ல மகனே! பார்த்தியாடி என் பிள்ளை என்னை மாதிரியே இருக்கான்” என்று மீனாவிடம் கூறிவிட்டு, மகனை கட்டி அணைத்து அவன் சட்டையைச் சரி செய்யத் தொடங்கினார், தனஞ்செழியன்.

“ஆமா! உன்பிள்ளை உன்னை மாதிரி தானே இருக்கும்” என்று கூறிவிட்டு. “இருவருக்கும் வேற வேலை இல்லை. இப்படியே பகல் கனவு கண்டுக்கிட்டே இருக்கீங்க” என்று கண்ணாடி இருந்த திசை பக்கம் திரும்பி தான் செய்து கொண்டிருந்த வேளையில் மும்முரம் காட்ட தொடங்கினாள், மீனா.

தொடரும்…

< இருபத்தி ஒன்றாம் பாகம் | இருபத்தி மூன்றாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • தனஞ்செழியன் நல்லவரா? கெட்டவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...