அஷ்ட நாகன் – 8| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 8| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

உலகிலுள்ள மனிதனின் ஆசைகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசை ஆகும். இந்த பட்டியலில் பதவி ஆசையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவி ஆசையால் என்னென்ன நிகழ்ந்து வருகின்றது என்பது நான் சொல்லாமலே உங்கள் புரியும்.மண்ணாசை மற்றும் பொன்னாசை என்பது மனம் சார்ந்த ஆசைகளாகும்‌.இவற்றைக் கூட நாம் நினைத்தால், இவ்வாசைகளை விட்டு விட முடியும். ஆனால், பெண்ணாசை என்பது உணர்வு சார்ந்தது.கவசக் குண்டலத்தோடு பிறந்த கர்ணனைப் போல, மனிதனின் உடலோடு ‘ஆசை’ என்னும் உணர்வு பின்னிப்பிணைந்து. கணவன் – மனைவியின் ஆசையில் பிறந்த குழந்தை ஆசைப்படுவதில் ஆச்சர்யமில்லை. ஒரு வகையில் இந்த ஆசை உலக இயக்கத்திற்கு முக்கியமும் கூட ! உலகமே ‘ஆசை’ என்ற சக்கரத்தில் தான் சுழல்கிறது. திருமண பந்தத்தில் இணைந்த கணவன் தன் மனைவியுடன் மாதம் இரண்டு முறை தான் கூட வேண்டும் ‘தேரையர் சித்தர்’ கூறுகிறார். ஏனெனில், அதிகமான சுக்கில விரயம் ஒரு ஆணின் ஆயுளை குறைத்து நோய் மற்றும் பிணிகளை உண்டாக்கிவிடும். இதைத்தான் சித்தர்கள் ‘ஒன்றை விடேல், இரண்டை அடக்கேல்’ என்றனர். அதாவது, ஒன்று என்கிற சுக்கிலத்தை விரயம் செய்யுக்கூடாது. அதைப்போல, இரண்டு என்கிற மலம் மற்றும் ஜலத்தை (சிறுநீர்) அடக்கக் கூடாது என்கின்றனர். ‘ஆசை நமக்குள் இருக்கலாம். ஆனால், ஆசைக்குள் நாம் இருக்கக் கூடாது’. பாம்புகள் அடிக்கடி நம் கனவில் வந்தால் பாலுணர்வு மிகுந்து காணப்படும். 

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

காய கங்கை நீர் வீழ்ச்சி !

கொல்லிமலையில் உள்ள ஐந்து நீரோடைகள் ஒன்றாக கலந்தோடி வந்து இந்த நீர் வீழ்ச்சியில் கலப்பதால் ‘பஞ்சநதி’ என்றும் பெயர் பெறுகிறது.இந்நீர்வீழ்ச்சி அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு கிழக்கில் அமைந்துள்ளது. ஆயிரமாயிரம் மூலிகைகளுடன் வற்றாத நதியாய் பாய்ந்தோடி வரும் இந்நீர்வீழ்ச்சி சுமார் நூற்று ஐம்பது அடி உயரம் உடையது.

கொல்லிமலை பழங்குடி மக்கள் இந்நீர்வீழ்ச்சியில் குளித்தால் மலட்டுத்தன்மை நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று நம்புகின்றனர்.

நடராஜன் தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் நந்தனும் அரவிந்தனும் தாத்தாவின் அஸ்தியை எடுத்துக் கொண்டு,தங்களுடன் யோகினியை உடன் அழைத்துக் கொண்டு ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

மூவரும் டி-சர்ட் மற்றும் ட்ராக் ஆடையில் இருந்தனர். பாதுகாப்பு கருதி ‘ஷூ’ அணிந்திருந்தனர். அரவிந்தன் மட்டும் கொஞ்சம் ‘உப்பை’ எடுத்து ஒரு பேப்பரில் மடித்து வைத்திருந்தான்.காடுகளில் இரத்தம் உறிஞ்சும் ‘அட்டைப்பூச்சி’யிடமிருந்து தப்பிக்க உப்பு மிக அவசியமானது.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு ‘கொய்யா மரம்’ காணப்பட்டது.அதில் சில கொய்யாக் கனிகளும் காணப்பட்டது.ஒரு சின்னஞ்சிறிய அணில்,தன் பிஞ்சுக் கைகளில் ஒரு கொய்யா பழத்தை வைத்துகொண்டு கொய்துக் கொண்டு இருந்தது.அந்த காட்சியைக் கண்டவுடன் யோகினி வியப்புடன் நின்று ரசிக்க ஆரம்பித்தாள்.

“ஹேய் ! யோகினி ஏன் நின்னுட்ட?என்னாச்சு? ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியை பார்க்க வேண்டாமா?” என்று அரவிந்தன் கேட்டான்.

“அரவிந்த்… இங்க பாருங்க.அந்த அணில் எவ்வளவு அழகாக அந்த கொய்யா மரத்துல உட்கார்ந்து கொய்யாப் பழத்தை சாப்பிடுது. என் கேமராவுல ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்.ப்ளீஸ் வெயிட் எ மினிட்” என்று கொஞ்சலாக கூறினாள்.

“யோகினி, அணில் கொய்யா மரத்துல உட்கார்ந்து கொய்யாப்பழம் சாப்பிடாம மாம்பழமா சாப்பிடும்?” என்று கிண்டலடித்தான் அரவிந்தன்.

யோகினி சிரித்துக் கொண்டே அரவிந்தனின் கையில் செல்லமாக கிள்ளினாள்.

மூவருக்குள்ளும் சிரிப்பலை பொங்கியது.

பின்னர்,தன் கேமராவில் அந்த அணிலை ‘கிளிக்’கிக் கொண்டாள்.

மனிதர்கள் தன்னை கவினிக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்த அணிலும்,தன் வாலைத் தூக்கிக்கொண்டு ‘விசில்’ அடிப்பதுபோல் ஒருவித ரசமான ஓசையை எழுப்பியது.

யோகினி அந்த காட்சியை வைத்தக்கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.

அரவிந்த் கொய்யா மரத்திற்கு அடியில் கிடந்த, ஒரு கொய்யா பழத்தை எடுத்து ‘ஃப்பூ…ஃப்பூ’ என்று ஊதி விட்டு உண்ண ஆரம்பித்தான்.

“எனக்கு கொய்யாப் பழம் கிடையாதா?” என்று சிணுங்கலாகக் கேட்டாள் யோகினி.

அரவிந்த் தலையை சொறிந்துக் கொண்டே யோகினியை மலங்க மலங்க பார்த்தான்.

“யோகினி,நான் உனக்கு கொய்யா பழம் பறிச்சு தரேன்” என்று கூறிவிட்டு கொய்யா மரத்தை உலுக்க ஆரம்பித்தான் நந்தன்.

நந்தன் மரத்தை உலுக்க ஆரம்பித்ததும், கொய்யா மரத்திதிலிருந்த அணில் தாவி குதித்து அருகிலிருந்த ‘நாவல்’ மரத்திற்கு சென்றது.

நந்தனின் வலுவான குலுக்கலால் அணில் கடித்த பழம் உட்பட, மூன்று பழங்கள் தரையில் விழுந்தன.

நந்தன் கீழே விழுந்த பழங்களை எடுத்து சுத்தம் செய்துவிட்டு யோகினிக்கும் அரவிந்திற்கும் கொடுத்துவிட்டு, தானும் உண்ண ஆரம்பித்தான்.

“நந்தன்,எனக்கு அணில் கடிச்ச பழத்தைக் கொடுங்க.அணில் கடிச்ச பழத்தை சாப்பிட்டு பார்க்கணும்னு ரொம்ப ஆசையாக இருக்கு” என்றாள் யோகினி.

நந்தன் அணில் கடித்த பழத்தை யோகினியிடம் கொடுத்தான்.அவளும் கிளிபோல கொய்யா பழத்தை ரசித்து புசிக்க ஆரம்பித்தாள்.

மூவரும் மரத்திற்கு கீழே அமர்ந்துக் கொண்டு கொய்யா பழத்தை உண்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்.

“டேய் நந்தா… நேத்து ராத்திரி அறப்பளீஸ்வரர் கோயில்ல கொல்லிமலையை சேர்ந்த முருகேசன் அப்டிங்குற மலைப்பளியன் அஞ்சு தலை நாகத்தை பார்த்ததாக பேசிக்கிட்டாங்களே அதை பற்றி என்ன நினைக்குற?” என்று கேள்வி எழுப்பினான் அரவிந்தன்.

“என்னால அஞ்சு தலை நாகம் இருக்குற விஷயத்தை நம்ப முடியலடா.அதுவெல்லாம் புருடா ! அறிவியல் ரீதியாக ரெண்டு தலை பாம்பு மட்டும் தான் இருக்குன்னு நிரூபணம் ஆகியிருக்கு.”

“யோகினி…இந்த விஷயத்தைப் பற்றி நீ என்ன நினைக்குற?”என்று யோகினியை நிமிண்டினான் அரவிந்தன்.

“இந்த விஷயத்துல என்னால ஒரு முடிவுக்கு வர முடியல அரவிந்த் ! ஆனா,கார்நாடகாவுல ஒரு விவசாயியோட தோட்டத்துல அஞ்சு தலை நாகத்தோட சட்டை கிடைச்சதாக ஒரு ஆர்டிக்கல் படிச்சிருக்கேன்” என்று தனக்கு தெரிந்த தகவலை யோகினி கூறினாள்.

“நீ சொல்றதை வச்சு பார்த்தால் அஞ்சு தலை நாகம் உண்மையாக இருக்குமோன்னு தோணுது.”

“போடா ஃபூல் ! சில வருஷத்துக்கு முன்னாடி இலங்கையில அஞ்சு தலை பாம்பை பார்த்ததாக ஒரு அஞ்சு தலை பாம்போட ஃபோட்டோ சோஷியல் மீடியாவுல வைரல் ஆச்சு.”

“அப்புறம்…அப்புறம்” என்று ஆவலோடு கேட்டான் அரவிந்த்.

அடுத்து நந்தன் என்ன கூற போகிறான் என்பதை கேட்க யோகினியும் தன் செவிகளை கூர்மையாக்கிக் கொண்டாள்.

“புடலங்கா…அப்புறம் என்ன…அந்த அஞ்சு தலை பாம்பு கிராஃபிக்ஸ்னு புரூப் பண்ணீட்டாங்க.”

“எப்படிடா கிராஃபிக்ஸ்னு கண்டுபிடிச்சாங்க?” என்று ஆவேசமாக கேட்டான் அரவிந்தன்.

“அஞ்சு தலை பாம்புன்னு சொல்லப்பட்ட அந்த பாம்பை பகல் நேரத்துல ஃபோட்டோ எடுத்துருக்காங்க.அந்த பாம்போட நிழலை பார்த்த போது,(உண்மையில் இந்த விஷயத்தை இந்த தொடரை எழுதும் நான் யதார்த்தமாக அந்த அஞ்சு தலை நாகத்தின் புகைப்படத்தை பார்த்த போது கண்டுபிடித்தேன்)அதுல ஒரு படமெடுத்த பாம்போட நிழல் மட்டும் தான் பதிவாகி இருந்துச்சு.இதை வச்சு தான் அது அஞ்சு தலை பாம்பு இல்லை,ஒரு தலை பாம்புன்னு கண்டுபிடிச்சாங்க” என்றான் நந்தன்.

“அப்போ அந்த கர்நாடக விவசாயி தோட்டத்துல கண்டுபிடிக்கப்பட்ட அஞ்சு தலை நாகத்தோட சட்டை?” என்று இடையிட்டுக் கேட்டாள் யோகினி.

“எதையும் அலசி ஆராயாமல் இது உண்மை-பொய்ன்னு சொல்ல முடியாது.என்னை பொறுத்தவரை அந்த கர்நாடக விவசாயி தோட்டத்துல கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்ற அஞ்சு தலை பாம்போட சட்டை பொய்யாக தான் இருக்கும்.இது என் கருத்து.”

நந்தனின் பேச்சைக் கேட்டு யோகினி குழப்பம் அடைந்தாள்.

“நந்தா… ஒருவேளை இந்த காட்டுல அஞ்சு தலை நாகத்தை பார்த்ததாக சொல்ற முருகேசனை பார்த்து நாம பேசுனாக்க நமக்கு உண்மை தெரிய வாய்ப்பு இருக்கு” என்று ஒரு புது வழியை அரவிந்தன் காண்பித்தான்.

“ஆமாண்டா ! நீ சொல்றதும் சரி தான். முதல்ல நடராஜன் தாத்தாவோட அஸ்தியை ஆகாய கங்கை அருவியில கரைச்சிட்டு வருவோம்”என்றான் நந்தன்.

“சரிடா.போகலாம்.”

மூவரும் எறும்பைப் போல அணிவகுத்து நடக்க தொடங்கினர்.

ஆகாய கங்கை !

வானிலிருந்து வெள்ளி உருகி அருவியாக கொட்டுவதுப் போல இருந்தது.அருவியின் சப்தமும் ! சாரலும் யோகினியை பரவசமூட்டியது.அருவியை அண்ணாந்து பார்த்தவாறே அரவிந்தனும் நந்தனும் கொல்லிமலையில் வாழ்ந்த தங்கள் கடந்த கால வாழ்க்கையை அசைபோட ஆரம்பித்தனர்.

ஆங்காங்கே, சில சுற்றுலா பயணிகளும்,உள்ளூர் வாசிகளும் குறித்துக் கொண்டிருந்தனர்.

“அரவிந்தா…நம்ம சின்ன வயசுல எத்தனை முறை இந்த அருவியில குளிச்சிருப்போம்” என்று மன நெகிழ்வோடு கூறினான் நந்தன்.

“ஆமாண்டா ! நந்தா.. இந்த கொல்லிமலையை விட்டு நாம ஓடினதுக்கு அப்புறம் இப்பதான் திரும்பி வந்திருக்கோம்.ரொம்ப சந்தோஷமா இருக்குடா.”

அடுத்த சில நிமிடங்களில் ஒரு மண் கலயத்தில் இருந்த நடராஜன் தாத்தாவின் அஸ்தியை கரைப்பதற்கு இருவரும் ஆயத்தமாகினர்.

“யோகினி…நீ இங்கையே வெயிட் பண்ணு.நாங்க ரெண்டு பேரும் தாத்தாவோட அஸ்தியை அருவியில கரைச்சிட்டு வந்துடுறோம்” என்று கூறிவிட்டு இருவரும் அருவி நீரை நோக்கி சென்றனர்.

யோகினி அருவிக் கரை ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்துக் கொண்டாள்.

அரவிந்தும் நந்தனும் மண் கலயத்தின் மேலிருந்த துணியை நீக்கிவிட்டு நடராஜன் தாத்தாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அருவியில் தாத்தாவின் அஸ்தியை கரைத்தனர்.அவர்கள் தங்களை அறியாமேல கண்ணீர் சிந்தினர்.அவர்களின் கண்ணீர்… அருவி நீரோடு கலந்து வழிந்தோடியது.ஆகாயத்தில் இருந்து நடராஜன் தாத்தாவின் ஆன்மா சந்தோஷல்த்தில் அவர்களை ஆசிர்வதிப்பது போல இருந்தது.

அப்போது தான் அந்த அதிர்ச்சியான சம்பவமும் அரங்கேறியது.

அருவிக்கரையில் அமர்ந்திருந்த யோகினியை ஒரு பாம்பு தீண்டி விட்டது. “ஆ” என்ற அலறிய அவளின் அலறல் சப்தம் கொல்லிமலை முழுக்க எதிரொலித்தது.

யோகினி என்ன ஆனாள் ?

– தொடரும்…

< ஏழாம் பாகம் | ஒன்பதாம் பாகம் >

கமலகண்ணன்

4 Comments

  • Learnt a lot sir

    • Thanks my friend Usha.

  • திகில்தொடர்கிறது.அருமை

    • மிக்க நன்றி நண்பரே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...