வாகினி – 15| மோ. ரவிந்தர்

 வாகினி – 15| மோ. ரவிந்தர்

பள்ளி விடுமுறைக்குச் சென்றிருந்த தனது பிள்ளைகள் இருவரையும் தாய் வீட்டில் இருந்து திரும்பி தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள், மீனா.

தனஞ்செழியன் காலையிலேயே தனது வெள்ளை சட்டைக்குத் தீவிரமாக இஸ்திரிப் போட்டுக்கொண்டிருந்தார்.

மீனா வீட்டை சுத்தம் செய்துகொண்டே கணவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள்.

“என்னங்க, பசங்களுக்கு லீவு விட்டு ஒரு மாசம் முடியப்போகுது. இன்னும் ஒரு வாரத்துல ஸ்கூலும் திறக்க போறாங்க. ராஜி வேற நான்காம் வகுப்பு {சி.பி.எஸ்.சி} என்பதால் இந்த முறையும் பீஸ் கொஞ்சம் அதிகமாய் இருக்கும். எதுக்கும் கையில கொஞ்சம் பணத்தை முன்னாடியே அதிகமா பொரட்டி வையுங்க” என்றாள், மீனா.

தனஞ்செழியன் தனது வெள்ளை சட்டையை இஸ்திரிப் போட்டுக்கொண்டே அவளிடம் பேசினார்.

“மீனா, பசங்களுக்கு அடுத்த வாரம் தானே ஸ்கூல் திறக்கப் போறாங்க அதுக்குள்ள என்ன அவசரம். அதப் பத்தி அப்புறம் பாத்துக்கலாமே” என்றார், தனஞ்செழியன்.

“என்ன சொல்றீங்க? இப்ப பணத்தைப் புரட்டி வச்சாத்தான். அப்போதைக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும். இந்த வேலையை மறந்துட்டு என்ன திட்டுற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க, சொல்லிட்டேன்” என்றாள்.

“சரி சரி ரொம்ப அலட்டிக்காத. ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடியே எனக்கு ஞாபகப்படுத்து பேங்க்ல இருந்து பணத்தை எடுத்துட்டு வந்து கொடுக்கிறேன்” என்றார், தனஞ்செழியன்.

“சரிங்க, இந்தத் தொகுதியிலேயே உங்களுக்குச் சீட்டு வேணுன்னு. தலைவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்னு போனீங்களே. அது என்ன ஆச்சு?” என்றாள், ஆவலுடன் மீனா.

“ஆமா, போய்ப் பார்த்துட்டுதான் வந்தேன். இந்த முறையாவது நம்ம தொகுதியிலேயே எனக்குச் சீட்டுத் தருவாங்கன்னு நினைக்கிறேன். பார்க்கலாம், இந்த முறை எனக்குச் சீட்டு தரலன்னா வேற எதாவது கட்சியில போய்ச் சேர்ந்திட வேண்டியது தான்” என்று கூறினார், சற்று வருத்தத்துடன்.

“நீங்க எதுக்காக இப்படி வருத்தமா பேசுறீங்க? வேணும்னா பாருங்க இந்த முறை அந்தச் சீட் உங்களுக்குத்தான்” என்றாள்.

“பார்க்கலாம்?” என்று ஒரே வார்த்தையில் முடித்தார், தனஞ்செழியன்.

அதே நேரம், மீனா வீட்டுக்கு திரும்பியதை அறிந்த கஸ்தூரி மீனா வீட்டுக்குள் நுழைந்தாள்.

“மீனா… ஊரிலிருந்து எப்ப வந்த?” என்று கூறிக்கொண்டே…

“வாக்கா, காலையிலத்தான் வீடுவந்து சேர்ந்தேன்” என்று கூறிக்கொண்டே கஸ்தூரியை வீட்டுக்குள் அழைத்தாள், மீனா.

“எங்க மீனா, பிள்ளைகளே காணும்” என்று கூறிக் கொண்டே சுற்று முற்றும் திரும்பி பார்த்தாள், கஸ்தூரி.

“அவங்க இங்க எங்க நா தான் விளையாடிட்டு இருப்பாங்க” என்றாள், மீனா.

“அப்புறம் மீனா, உங்கம்மா எப்படி இருக்காங்க?”

“அவங்களுக்கு என்ன? நல்லாதான் இருக்காங்க அக்கா” என்றாள், மீனா.

மீனா, கஸ்தூரியிடம் பேசிக் கொண்டிருப்பதைத் தனஞ்செழியன் தனது வேலையைப் பார்த்துக்கொண்டே இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

“மீனா, உன்ன பார்த்து ஒரு உதவி கேட்டுட்டு போகலாமுன்னு வந்தேன்” என்றாள், கஸ்தூரி.

‘காசு எதாவது கேட்டு வந்திருக்காங்களா அப்படி வந்திருந்தா இல்லையென்று கூற வேண்டும். இப்போதுதான் நானே ஊருக்கு போய்ட்டு கஷ்டத்துல திரும்பி வந்திருக்கேன். என் கையில காசு எதுவும் இல்லை கடவுளே! காசைப் பத்தி எதுவும் கேட்கக்கூடாது’ என்று மீனாவின் மனதில் ஓடியது.

“சொல்லுக்கா, என்ன விஷயம்?” என்றாள், மீனா.

“மீனா, இப்பதான் நீ ஊருக்கு போயிட்டு திரும்பி வந்திருக்க. இப்போ போய் இப்படிக் கேக்கறேன்னு என்ன தப்பா நினைக்கக்தே. உன்ன விட்டா எனக்கு இப்போதைக்கு யாரையும் தெரியாது. அதான், கேட்குறேன் தப்பா நினைக்காத?”

“என்னக்கா, திடீர்னு இப்படி எல்லாம் பேசுற. என்ன விஷயம் சொல்லுக்கா?”

“மீனா, என் வீட்டுக்காரு சென்னையில் புதுசா கடை ஒண்ணு வைக்கப் போறாரு. அதுக்கு என் கிட்ட கொஞ்சம் பணமும் நகையும் இருக்கு. அது மட்டும் இப்போதைக்குப் பத்தாதுன்னு நினைக்கிறேன். உங்கிட்ட ஒரு 30,000 இருந்தா வட்டிக்கு கொடு. இன்னும் இரண்டு மாசத்தில ஒரு சீட்டு எடுக்க வேண்டியிருக்கு. அது வந்ததும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடறேன்” என்றாள், கஸ்தூரி.

‘அப்பவே நெனச்ச இவங்க என்ன நலம் விசாரிக்க வரல. பணம் விசாரிக்க வந்திருக்காங்கன்னு. நான் நெனச்சது சரியாப்போச்சு’ என்று மனதில் எண்ணிக்கொண்டே, “அக்கா, நானே இப்ப தான் ஊருக்கு போயிட்டு வந்திருக்கேன். நூறு இருநூறு கைமாத்தா கேட்டா தந்திடுவேன். இப்ப ஏதுக்கா என்கிட்ட அவ்வளவு பணம்” என்று தனது பேச்சை முன்வைத்தாள், மீனா.

அவள் கூறியதை கண்டு கஸ்தூரியின் முகம் சற்று மாறியது.

வேறு யாரிடம் போய் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்பது. கேட்டாலும் எல்லோரும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்’ என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.

‘சரி பாக்கலாம். கடவுள் வேறு வழி ஏதாவது காட்ட மாட்டாரா என்ன?’ என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது.

“இருந்தா, கொடுன்னு தான் கேட்டேன் மீனா. பரவாயில்ல விடு. வேற எங்கனா கேட்டு பார்த்துக்குறேன்.” என்றாள், கஸ்தூரி.

“அக்கா, என்ன தப்பா நினைச்சுக்காதீங்க. அவ்வளவு பெரிய தொகை இப்ப என் கையில் இல்லை, அதான்” என்றாள், மீனா.

“பரவாயில்லை மீனா” என்று கூறிவிட்டு. கஸ்தூரி அங்கு இருந்து புறப்பட்டாள்.

கஸ்தூரி சென்றவுடன் மீனா பெருமூச்சு ஒன்றை பெரிதாக விட்டுக்கொண்டாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தனஞ்செழியன், மீனாவிடம் கேட்டார்.

“மீனா, உன்கிட்ட இருக்குற நகைல ஒண்ண அவங்ககிட்ட கொடுத்து அனுப்பி இருக்கலாமே, இப்படியா, நீ இல்லன்னு ஒரே வார்த்தையில சொல்லி அனுப்புவ” என்று கேள்வியை எழுப்பினார், தனஞ்செழியன்.

“அது எல்லாம் எனக்கு நல்லா தெரியும், நீங்க இதுயெல்லாம் தலையிடாதீங்க. அவங்களுக்கு நகையைக் கொடுத்துட்டு அவங்க பின்னாடியே போறது யாரு” என்று கூறிக் கொண்டே வேறொரு அறைக்கு வேகமாகச் சென்றாள், மீனா.

தனஞ்செழியன், ஏதோ ஒரு தீவிர யோசனையுடன் மீனா போய்க்கொண்டிருந்த திசையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

– தொடரும்…

< பதிநான்காவது பகுதி

கமலகண்ணன்

6 Comments

  • குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு பாரம் இருக்கிறது என்று அனு அனுவாக இங்கே பதிவிடப்படுகிறது. இந்தக் கதை என் குடும்பத்தின் பின்னணியாக கூட இருக்கும் போது என்று யோசிக்கத் தோன்றுகிறது. இதைக் கற்பனை என்பதை விட ஒரு வாழ்க்கையில் புகுந்து அவர்களுடைய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றுதான் மோ. ரவிந்தர் அவர்களை நான் சொல்ல வேண்டும். வாழ்க்கைக்கு கண்ணீரின் கடிவாளம் இது!!💐💐💐

  • மரகதம், மூர்த்தி வாழ்க்கையில் ஒரு மர்மம் உடைக்கப்பட்டது. அடுத்து கபிலன், மகாலட்சுமி காதலில் ஒரு விடை கிடைக்கப் பெற்றது. மீனா, தனஞ்செழியன் வாழ்க்கையில் என்ன காத்திருக்கிறது? விடைகளைக் காண ஆவலாக உள்ளேன்.

    • ஒன்றுபோல் இருப்பிடம் அது புதுமையாகத் தான் இருக்கும்

  • மிக அற்புதம் நண்பரே ! கஸ்தூரி கதாபாத்திரம் இயல்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...